அழகாக்கப்பட்ட அமல்கள்

அழகாக்கப்பட்ட அமல்கள்

இதற்கு முன்னர் பல சமுதாயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அழிக்கப்பட்டதற்கு அல்லாஹ் ஒரு முக்கியமான காரணத்தைக் கூறுகின்றான். அந்தச் செயல் நம்மிடத்தில் இருக்கின்றதா என ஒவ்வொருவரும் நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறும் அந்தக் காரணம் என்னவென்று இப்போது பார்ப்போம்.

அல்லாஹ் திடுதிப்பென்று, எடுத்த எடுப்பிலேயே ஒரு சமுதாயத்தை அழித்துவிடுவதிலலை. முதலில் அவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக எச்சரிக்கை மணிகளாக, அபாயச் சங்குகளாக சில சோதனைகளை அவர்களுக்கு அனுப்புகின்றான்.

(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம். அவர்கள் பணிவதற்காக அவர்களை வறுமையாலும், நோயாலும் தண்டித்தோம்.

அல்குர்ஆன் 6:42

இந்த எச்சரிக்கை மணிகளும் அபாயச் சங்குகளும் மாற்றத்தைத் தராத போது, வசதி, வளம், செல்வத்தின் வாசல்களை அபரிமிதமாகத் திறந்து விடுகின்றான்.

அவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் வாசல்களையும் திறந்து விட்டோம். அவர்களுக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்திருந்த போது திடீரென அவர்களைத் தண்டித்தோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தனர். எனவே அநீதி இழைத்த கூட்டத்தினர் வேரறுக்கப்பட்டனர். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

அல்குர்ஆன் 6:44, 45

இதைப் பற்றி அல்லாஹ் கேட்பதைப் பாருங்கள்.

அவர்களுக்கு நமது வேதனை வந்ததும் அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? மாறாக அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான்.

அல்குர்ஆன் 6:43

அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான் என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

ஆது, சமூது சமுதாயங்கள் அழிக்கப்பட்டதற்கும் இதுவே காரணமாகும்.

ஆது மற்றும் ஸமூது சமுதாயத்தினரையும் (அழித்தோம்). அவர்களின் குடியிருப்புக்களிலிருந்து இது உங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. அவர்களது செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். அவர்கள் அறிவுடையோராக இருந்த போதும் (நல்) வழியை விட்டும் அவர்களைத் தடுத்தான்.

அல்குர்ஆன் 29:38

இதுபோன்று அழிக்கப்பட்ட அனைத்து சமுதாயங்களும் அவர்கள் அழிக்கப்படுவதற்கு இதுவே காரணமாக அமைந்திருந்தது.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கிக் காட்டினான். இன்னும் அவனே இன்று அவர்களின் உற்ற நண்பன். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 16:63

ஷைத்தானின் அழகாக்கப்பட்ட செயல்பாடுகள், அமல்கள் தான் மிகவும் ஆபத்தான காரியமாகும். இந்த முக்கியமான காரியத்தை ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய வாழ்க்கையில் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. அனைத்துத் தீமைகளுக்கும் அஸ்திவாரம் ஷைத்தானின் அலங்காரம் தான்.

தனி மனிதனின் வழிகேடு

ஒரு தனி மனிதன் இணைவைப்பில் மூழ்கிக் கிடக்கின்றான். அதற்குக் காரணம் ஷைத்தான் அவனது செயலை அழகாக்கிக் காட்டியது தான். இதற்கு ஃபிர்அவ்ன் ஓர் எடுத்துக்காட்டு.

ஹாமானே! எனக்காக உயர்ந்த கோபுரத்தை எழுப்பு! வழிகளை, வானங்களின் வழிகளை அடைந்து மூஸாவின் இறைவனை நான் பார்க்க வேண்டும். அவரைப் பொய் சொல்பவராகவே நான் கருதுகிறேன்என்று ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. (நேர்) வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது.

அல்குர்ஆன் 40:36, 37

தனக்கு ஏற்பட்ட சோதனையை விட்டும் தன்னைக் காக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் மனமுருகி, மன்றாடுகின்றான். அவனது வேண்டுகோளை ஏற்று அவனது சிக்கலை அல்லாஹ் தீர்த்த மாத்திரத்தில் அந்த அல்லாஹ்வை மறந்து விடுகின்றான்.

இதற்குக் காரணம் ஷைத்தான் அவனது செயல்பாட்டை அலங்கரித்துக் காட்டியது தான். கீழ்க்கண்ட வசனம் இதைத் தெளிவாக நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும் போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன.

அல்குர்ஆன் 10:12

இது தனிமனிதனின் வழிகேட்டிற்குரிய உதாரணமாகும்.

சமுதாயத்தின் வழிகேடு

ஒரு சமுதாயம் வழிகேட்டில் வீழ்வதற்கும் இது தான் காரணமாகும்.

நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது” “அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள்

அல்குர்ஆன் 27:23-24

துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களை அல்லாஹ் புனித மாதங்கள் என அறிவித்து அம்மாதங்களில் போர் புரிவதைத் தடை செய்துள்ளான். ஆனால் மக்காவின் இணைவைப்பாளர்கள் புனித மாதங்களில் போர் செய்துவிட்டு அதற்குப் பதிலாக, அடுத்து வருகின்ற வேறொரு மாதத்தைப் புனிதமாக்கிக் கொண்டார்கள்.

(மாதத்தின் புனிதத்தை) தள்ளிப் போடுவது (இறை) மறுப்பை அதிகப்படுத்துவதே. இதன் மூலம் (ஏக இறைவனை) மறுப்போர் வழிகெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடம் அதன் புனிதத்தை நீக்கி விடுகின்றனர். மறு வருடம் அதற்குப் புனிதம் வழங்குகின்றனர். அல்லாஹ் புனிதமாக்கிய எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் புனிதமற்றதாக்கி விடுகின்றனர். அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 9:37

இந்தச் சமுதாயத்தினர் வழிகெட்டதற்குக் காரணமாக அல்லாஹ் கூறுவது ஷைத்தானால் அலங்கரிக்கப்பட்ட, அழகாக்கப்பட்ட செயல் தான்.

பெண் குழந்தைகளைக் குறி வைத்துக் கொலை செய்வதும், நரபலி என்ற பெயரில் குழந்தைகளைக் கொல்வதும் இணை வைப்பாளர்களின் கொடூரச் செயல்கள். இக்காலத்தில் வாழ்கின்ற இணை வைப்பாளர்களிடமும் இந்தக் கோர, கொடூரச் செயல் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. இதற்கும் ஷைத்தானின் அலங்காரமே காரணம் என அல்லாஹ் கூறுகின்றான்.

இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக்கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!

அல்குர்ஆன் 6:137

ஷைத்தானின் அலங்கரிப்பில் வீழ்ந்து, நாசமாவோருக்காக நபியே நீர் கவலைப்படாதீர் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஆறுதலும் தெரிவிக்கின்றான்.

யாருக்குத் தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாகக் கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 35:8

மொத்தத்தில் இணை வைப்பு முதல் அத்தனை பாவங்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைவது ஷைத்தானால் அழகாக்கிக் காட்டப்படும் செயல்கள் தான்.

நியாயமாகும் தவறுகள்

ஷைத்தான் அலங்கரித்துக் காட்டுதல் என்றால், ஒருவர் செய்யும் பாவத்தை ஷைத்தான் அவருக்கு நியாயப்படுத்திக் காட்டுவதாகும்.

ஒரு கடையில் பணி புரிகின்ற ஊழியர் கல்லாவிலிருந்து பணத்தைத் திருடுவான். அவ்வாறு திருடுவது பாவமாகும். அந்த ஊழியருக்கும் தெரியும். ஆனால் அவனிடம், “ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்க்கிறாய். உன்னுடைய உழைப்பைப் பயன்படுத்தித் தான் உன் முதலாளி சம்பாதிக்கின்றான். ஆனால் உனக்கு மாதச் சம்பளம் வெறும் 3000 தான். ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் உன் முதலாளி உனக்குத் தருவது ஒரு நாளுக்கு நூறு ரூபாய் தான். இது அநியாயம் இல்லையா?’ என்று ஷைத்தான் கேட்கிறான்.

ஷைத்தானின் இந்த வார்த்தைகள் அந்தத் தொழிலாளியின் உள்ளத்தில் நியாயமாகப்படுகின்றது. அவ்வளவு தான். கல்லாவிலிருந்து களவாடவும் கையாடல் செய்யவும் ஆரம்பித்து விடுகின்றான். இதில் உள்ள ஓர் உண்மையான நியாயத்தை அந்தத் தொழிலாளி பார்க்கத் தவறிவிடுகின்றான்.

தன்னை வேலைக்குச் சேர்க்கும் போது முதலாளி தன்னிடம் சொன்ன ஊதியம் என்ன? நாம் அவரிடம் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன? மூவாயிரம் ரூபாய் தான். இஷ்டப்பட்டால் இந்த ஊதியத்திற்கு வேலை பார்க்க வேண்டும். இல்லையென்றால் இடத்தைக் காலி செய்ய வேண்டும். இந்த அடிப்படை நியாயத்தைப் பார்த்தால் ஷைத்தானின் தப்பர்த்தத்திற்குத் தக்க இவன் தாளம் போட மாட்டான். இது ஷைத்தானின் அலங்காரத்திற்கு ஒரு சிறிய நடைமுறை எடுத்துக்காட்டு.

போர் புரிவதற்குத் தடை செய்யப்பட்ட புனித மாதங்கள் விஷயத்தில் ஷைத்தான் இப்படித் தான் ஒரு நியாயத்தைக் கற்பிக்கின்றான். முஹர்ரம் மாதம் போர் செய்யத் தடை இருந்தாலும் அந்த மாதத்தில் போர் செய்ய நேரிட்டால் அதற்குப் பதிலாக ஸபர் மாதத்தைப் புனித மாதமாக ஆக்கிக் கொள்வோம். வருடத்தில் 120 நாட்கள் புனிதமானவை. அது எந்த நாளாக இருந்தால் என்ன? என்ற நியாயத்தை அவர்களிடம் போடுகின்றான். இதற்கு அவர்கள் பலியாகின்றார்கள்.

ஆனால் இங்கு அவர்கள் ஓர் உண்மையான நியாயத்தைப் பார்க்கத் தவறிவிட்டார்கள். அல்லாஹ் தடுத்தது எந்த மாதம்? அல்லாஹ் புனிதமாக்கியது எந்த மாதம்? அந்த மாதத்தின் புனிதத் தன்மையை மாற்றுவதற்கு நாம் யார்? என்று சிந்தித்து விட்டால் இதிலுள்ள உண்மையான நியாயம் புரிந்துவிடும்.

பரேலவிகளின் போலி நியாயம்

இறந்தவர்களிடம் ஏன் கேட்கின்றீர்கள்? அவர்களை ஏன் அழைத்துப் பிரார்த்திக்கின்றீர்கள்? என்று நாம் கேட்டால் அதற்கு, “நாங்கள் என்ன அவ்லியாக்களிடம் நேரடியாகவா கேட்கிறோம்? அவர்களைப் பரிந்துரைக்கத் தானே சொல்கிறோம்” என்று பரேலவிகள் பதில் சொல்கின்றனர்.

ஷைத்தான் இப்படி ஒரு போலி நியாயத்தை அவர்களிடம் எடுத்துக் காட்டுகின்றான். இந்தப் போலி நியாயம் அவர்களிடம் நல்ல விலைக்குப் போகின்றது. அதனால் அதை நம்புகிறார்கள். இந்தக் கொள்கையைத் தான் மக்கா இணை வைப்பாளர்கள் கொண்டிருந்தனர்.

நேரடியாக என்னிடம் கேள்! நான் உயிர் உள்ளவன். உனது கோரிக்கைக்குப் பதில் அளிப்பவன் என்று அல்லாஹ் கூறுகின்றான். அதனால் உயிருடன் இருப்பவனின் பரிந்துரை கூட அவனுக்குத் தேவை இல்லை. இதில் இறந்து போன ஒருவரை பரிந்துரைக்கு அழைப்பதில் எந்த ஒரு நியாயமும் இல்லையே என்று கேட்கும் போது அவர்களது போலி நியாயம் அடிபட்டுப் போகின்றது.

நாம் ஷைத்தான் அழகாக்கிக் காட்டிய செயலில் இல்லை, சத்தியத்தில் தான் இருக்கிறோம் என்பதற்கும், அவர்கள் அசத்தியத்தில் இருக்கின்றார்கள் என்பதற்கும் மேற்கண்ட இந்த ஓர் எடுத்துக்காட்டு போதும்.

தங்களது வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருப்பது தவ்ஹீதுப் பிரச்சாரம் தான் என்று தாங்கள் ஏறி வந்த படிக்கட்டையே தகர்த்தெறிந்து, இன்று அல்லாஹ்வின் சட்டத்திற்கு எதிராகப் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் தமுமுகவுக்குப் பின்னாலும் ஒரு கூட்டம் செல்வதற்குக் காரணம் ஷைத்தானின் அலங்காரம் தான்.

கொடி வணக்கம், சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செய்தல் உள்ளிட்ட இஸ்லாத்தின் அடிப்படையைக் குழிதோண்டிப் புதைக்கின்ற எஸ்டிபிஐ போன்ற இயக்கங்களுக்குப் பின்னால் மக்கள் செல்வதற்கும் இது தான் காரணம்.

ஒரு சொகுசுப் பேருந்தில் 12 மணி நேரம் அன்னியப் பெண்ணுடன் பயணம் செய்து, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தூக்கி எறியப்பட்டவரைக் கூட ஒரு ஜமாஅத்தின் தலைவராக அங்கீகரிக்க சிலரால் முடிகின்றது என்றால் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டும் ஷைத்தானின் வேலை தான் இது.

மக்களுக்கு அவர்கள் செய்கின்ற தீய காரியங்களை ஷைத்தான் எப்படி அழகாக்கி, அலங்கரித்துக் காட்டுகின்றான் என்பதற்கு மேலும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

சொக்கப்பனை ஒரு சோடனை

கார்த்திகை காலங்களில் தீபங்களை ஏற்றுவது, சொக்கப்பனை எரிப்பது எல்லாம் இந்துக்களின் தெய்வ வழிபாடுகள். அந்த வழிபாடுகளை நியாயப்படுத்துவதற்கு அவர்கள் கூறும் அறிவியல் காரணங்களைப் பாருங்கள். நவம்பர் 21, 2013 தினமணி நாளிதழில் வெளியான செய்தி:

திருநெல்வேலி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு.பாலசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது:

பனியும், மழையும் அதிகரித்துக் காணப்படும் ராபிப் பருவம் என்ற பின்பருவத்தில்தான் பூச்சித் தாக்குதல் அதிகம் காணப்படும். பிசானம், தாளடி, சம்பாப் பயிர்கள் இந்தப் பூச்சித் தாக்குதலுக்கு ஆளாகின்றன. வடகிழக்குப் பருவமழை காரணமாக கூட்டுப் புழுக்களில் இருந்து தாய் அந்துப் பூச்சிகள் அதிகளவில் வெளிவரும். இந்த அந்துப் பூச்சிகள் இடும் முட்டையிலிருந்துதான் புழுக்களும், பூச்சிகளும் உருவாகி பயிர்களைத் தாக்கி சேதப்படுத்துகின்றன.

இத்தகைய தாக்குதலுக்கு மூல காரணமாக விளங்கும் தாய் பூச்சிகளை விளக்கு வெளிச்சத்தால் கவர்ந்து அழிப்பதன் மூலம் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். இந்த விளக்குப் பொறியைத் தான் திருக்கார்த்திகை தீபம் என்ற அடிப்படையில் வீடுகளில் ஏற்றி வைத்து முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

முன்னிரவு நேரத்தில்தான் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும். எனவே, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பின் ஒரு பகுதியாக வீடுகள்தோறும் வாயில்களில் விளக்கு வைக்கப்படுகிறது.

திருக்கார்த்திகை நாளிலும், அதன் தொடர்ச்சியாக மூன்று நாள்களிலும் அதிக அளவில் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. மேலும், பலர் கார்த்திகை மாதம் முழுவதுமே வீடுகளில் வாசலில் தீபம் ஏற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்த விளக்கு வெளிச்சத்தில் முன்னிரவு நேரத்தில் வரும் தீமை செய்யும் பூச்சிகள் கவர்ந்து இழுத்து அழிக்கப்படுகின்றன.

சொக்கப்பனை: பெரிய அளவில் பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து அழிக்க சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு பெரிதும் உதவியாக உள்ளது. கார்த்திகையை முன்னிட்டு கோவில்களிலும், வீதிகளிலும் சொக்கப்பனைகள் கொளுத்தப்படுகின்றன. சிவன், முருகன், பெருமாள் கோவில்களில் வெவ்வேறு நாள்களில் இந்த சொக்கப்பனை கொளுத்தப்படுவதால் விடுபட்ட பூச்சிகளும் முழுமையாக அழிக்கப்படுகின்றன என்றார் அவர். – (நன்றி: தினமணி)

தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்துதல் போன்ற தங்களது வழிபாட்டை நியாயப்படுத்துவதற்காக இவற்றில் அறிவியல் இருப்பதாகக் கொண்டு வந்து நிறுவ முயற்சிக்கின்றனர்.

பூச்சிகளைச் சாப்பிட தவளை, தவளையைச் சாப்பிட பாம்பு, பாம்புகளைச் சாப்பிட பருந்து என்று அல்லாஹ் ஒரு சங்கிலியை ஏற்படுத்தி வைத்துள்ளான். இதற்குத் தீபம் ஏற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. சொக்கப்பனை கொளுத்த வேண்டிய அவசியம் இல்லை.

விளக்கு வெளிச்சத்தைக் கண்டு வெறித்தனமாக வந்து விழுகின்ற பூச்சிகள் உடல் மேல் விழுந்து கடித்து உடலில் விஷத்தைப் பரப்புகின்றன. உண்ணும் உணவுகளில் விழுந்து அந்த உணவையும் விஷமாக்கி விடுகின்றன. இந்தப் பூச்சிகளை மக்கள் எப்படி வரவேற்பார்கள்? அதனால் இது ஒரு பொய் நியாயம், போலிக் காரணம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வாதம் இந்தியாவில் மட்டும் தான். உலகில் எத்தனையோ நாடுகளில் விவசாயம் நடைபெறுகின்றது. தீபம் ஏற்றியும், சொக்கப்பனை கொளுத்தியும் அங்குள்ள பூச்சிகள் வயல்வெளியிலிருந்து புறப்பட்டு நிலங்களை நோக்கி வருவதில்லை. அங்கெல்லாம் விவசாயம் சிறப்பான முறையில் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதனால் இது பக்காவாக ஷைத்தானின் பொய்யான ஜோடனை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

வெற்றிலை – அது வெற்று இலை அல்ல (?)

தி இந்து தமிழ் நாளேட்டில் நவம்பர் 25, 2013 அன்று வெளியான தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம் என்ற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.

“குளித்த பின்னர் விபூதி பூசுவதால் சளி பிடிப்பதில்லை என்பதுபோல எழுதப்பட்ட “அர்த்தமுள்ள மத’ விளக்கங்கள் வந்தன. (அதற்கு ஏன் விபூதி? டால்கம் பவுடர் போதாதா என்று கேட்கக் கூடாது.) கோயிலில் பூஜைக்கு வைத்த வெற்றிலையில் மின்னூட்டம் உருவாகியிருக்கிறது, அந்த மின்னூட்டம் கோபுரக் கலசங்கள் வழியாக இறங்கி வந்திருக்கிறது என்பதுபோல போலி நிரூபணச் சோதனைகள் பரப்பப்பட்டன”

விபூதி பூசினால் சளி பிடிக்காது, வெற்றிலை மின்னூட்டம் பெறுகின்றது என்ற பொய்யான கண்ணோட்டம் எல்லாம் மக்களை அசத்திய வழியில் தட்டழிய வைக்கின்ற ஒரு பிதற்றலாகும். தாங்கள் செய்யும் தவறான வழிமுறைகளுக்கு அறிவியல் நியாயம் கற்பிக்கின்றனர். இவ்வாறு தான் ஷைத்தான் அவர்களின் செயல்களுக்குத் தவறான நியாயம் கற்பித்து அந்த மக்களின் உள்ளங்களில் வழிகேட்டைப் புகுத்துகின்றான்.

இதுபோன்ற ஷைத்தானின் அழகாக்கப்பட்ட அசத்திய வழிகளிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக!