அல்லாஹ் உருவமற்றவனா? ஓர் ஆய்வு

அல்லாஹ் உருவமற்றவனா? ஓர் ஆய்வு

உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்;

உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்.

இது நாகூர் ஹனீபாவின் பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகள் தமிழக முஸ்லிம்களின் கடவுள் கொள்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது. தமிழகத்திலுள்ள முஸ்லிம்கள், “அல்லாஹ்வுக்கு உருவமில்லை’ என்ற நம்பிக்கையில் ஆழ்ந்த பிடிமானம் கொண்டிருக்கிறார்கள்.

அரபி மதரஸாக்களில் படிக்கின்ற ஆலிம்களிடமும் இந்தச் சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை. அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று இந்த ஆலிம்களும் முடிவெடுத்து அதில் தீர்மானமாக இருப்பதால், “அல்லாஹ்வுக்கு உருவமிருக்கின்றது’ என்பதற்குக் குர்ஆன் ஹதீஸில் இருக்கும் தெளிவான ஆதாரங்கள் இந்த ஆலிம்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் எண்பதுகளின் துவக்கத்திலிருந்து, தவ்ஹீது பிரச்சாரம் தலைகாட்டத் துவங்கிய மாத்திரத்தில் மக்கள் திருக்குர்ஆனின் தமிழாக்கங்களை அதிகமதிகம் படிக்கத் துவங்கினர். இந்தத் தமிழாக்கங்கள் மக்களிடம் மாபெரும் தாக்கத்தையும் தூய இஸ்லாத்தை அறிய வேண்டும் என்ற தாகத்தையும் அதிகரித்தது.

உண்மையான கடவுள் கொள்கையை அவர்கள் அறியத் தலைப்பட்டனர். அல்லாஹ்வுக்கு உருவமிருக்கின்றது என்ற விளக்கம் அந்த உண்மையான கடவுள் கொள்கையில் உள்ளது தான் என்பதை அவர்கள் நன்கு விளங்கிக் கொண்டனர். அல்லாஹ் அரூபி, உருவமற்றவன் என்ற அசத்திய நம்பிக்கையிலிருந்து அவர்கள் விடுபட்டனர்; வெளியேறினர்.

ஆனால் இந்த பரேலவிஸ ஆலிம்கள் மட்டும் இந்தச் சிந்தனைக்கு வரவில்லை. இது வரை வர மறுத்துக் கொண்டிருக்கின்றனர். அசைந்து கொடுப்பதாக இல்லை.

அண்மையில் சென்னையில் இந்த பரேலவிஸக் கொள்கைவாதியான அப்துல்லாஹ் ஜமாலி என்பவருடன் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் இது தொடர்பாக விவாதம் நடந்தது.

இதில் தவ்ஹீத் அணி சார்பில் “இறைவனுக்கு உருவமுண்டு’ என்ற தலைப்பில் வாதம் புரிந்து. அல்குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரங்களை அள்ளி, அள்ளி வழங்கப்பட்டது.

அல்லாஹ் உருவமற்றவன் என்ற தலைப்பில் பேசிய அப்துல்லாஹ் சமாளி, நாம் எடுத்து வைத்த குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுக்குக் கண்ட கண்ட, கழிவு கெட்ட வியாக்கியானங்களைக் கொடுத்து கடைசி வரைக்கும் மறுத்துக் கொண்டிருந்தார். அல்லாஹ்வின் வசனங்களையும் ஹதீஸ்களையும் கேலியும் கிண்டலும் செய்தார்.

இதற்குக் காரணம் இந்தப் பரேலவிகள், அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று ஏற்கனவே முடிவில் இருந்தது தான். அதனால் தான் அந்தக் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் கடைசி வரை மறுத்தனர்; கேலி செய்தனர்.

அவர்கள் மறுத்த குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் என்னென்ன? என்பதை நாம் பார்க்கின்ற அதே வேளையில், இந்த ஆதாரங்கள் இஸ்லாமியக் கடவுள் கொள்கையின் உயிர் நாடிகள் என்பதைக் கருத்தில் கொண்டு அவற்றை ஒரு தொகுப்பாகவும் ஆக்கமாகவும் இங்கே தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். இப்போது அந்தத் தொகுப்பிற்குள் செல்வோம்.

————————————————————————————————————————————————

இறைவனின் திருவுருவம்

பொதுவாக எல்லா மொழிகளிலும் உறுப்புக்களைப் பற்றி பேசும் போது அது நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டாலும் சில இடங்களில் நேரடியான பொருள் அல்லாத வேறு கருத்திலும் பயன்படுத்தப்படுவதுண்டு.

“தலை வலிக்கிறது’ என்று கூறினால் “தலை’ என்ற வார்த்தை தலை என்ற நேரடி அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்கிறோம். ஆனால் தலைக்கனம் பிடித்தவன் என்று கூறும் போது கர்வம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்கிறோம்.

பயன்படுத்தப்படும் இடத்தையும், அதனுடன் இணைத்துக் கூறப்படும் சொற்களையும் கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருள் கொள்வது தான் சரியான முறையாகும்.

இறைவனின் உறுப்பு பற்றிக் கூறப்படும் வசனங்களிலும் இது போன்ற நிலை உள்ளது. சில இடங்கள் இறைவனின் உறுப்பைக் கூறும் வகையிலும் சில இடங்கள் வேறு கருத்தைக் கூறும் வகையிலும் அமைந்துள்ளன.

இந்த நுணுக்கமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாதது தான் இதில் ஏற்பட்ட குழப்பங்களுக்குக் காரணம்.

இறைவனுக்கு உருவம் உண்டு என்ற கொள்கையில் உறுதியாக உள்ள நல்லறிஞர்கள் கொள்கையில் தெளிவாக இருந்தாலும் அதை நிறுவுவதில் தோல்வி அடைந்துள்ளனர். இவர்கள், இறைவனுக்கு உருவம் உண்டு என்று வாதிடும் போது இறைவனின் உருவம் பற்றிப் பேசும் வசனங்களை மட்டும் ஆதாரமாகக் காட்டாமல் வேறு கருத்தைக் கூறும் வசனங்களையும் ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

பொருத்தமில்லாமல் நம்மவர்கள் எடுத்துக் காட்டும் ஆதாரங்களில் எதிர்க் கேள்வி கேட்டு இறைவனுக்கு உருவம் உண்டு என்ற தவறான கொள்கை உடையவர்கள் தங்கள் நிலையை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:115

இந்த வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே திரும்பினாலும் அல்லாஹ்வின் முகம் உண்டு என்ற சொற்றொடருக்கு நேரடிப் பொருள் கொண்டால் அல்லாஹ் பல திசையில் இருக்கிறான் என்ற கருத்து வந்து விடும். அவன் அர்ஷில் இருக்கிறான் என்ற கருத்துக்கு எதிராகவும் அத்வைதத்தை நிலை நாட்டும் வகையிலும் அமைந்து விடும்.

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

அல்குர்ஆன் 28:88

இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்

அல்குர்ஆன் 55:26, 27

இந்த வசனங்களை எடுத்துக் கொள்ளுங்கள்! உம் இறைவனின் முகம் மட்டுமே மிஞ்சும் என்ற சொற்றொடருக்கு இறைவனின் பண்பு மட்டும் மிஞ்சும் என்று கருத்து கொள்ள முடியாது. இறைவனின் முகம் மட்டும் மிஞ்சும் என்று பொருள் கொண்டு, அந்த முகம் என்பது இந்த இடத்தில் முழு உருவத்தையும் குறிக்கும் என்று புரிந்து கொள்கிறோம்.

சென்னை விவாதத்தில் கூட, இறைவனின் உறுப்புகளைப் பற்றிப் பேசும் எல்லா வசனங்களுக்கும் நேரடிப் பொருள் கொடுத்துத் தான் நாமும் வாதிடுவோம் என்று எதிர்பார்த்து, அப்படி வாதிட்டால் எளிதில் முறியடித்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு ஜமாலி விவாதிக்க வந்தார். ஆனால் சமாளிக்க முடியாத ஆதாரங்களை மட்டுமே எடுத்துக் காட்டுவது என்று நாம் தெளிவாக இருந்ததால் அவரால் தனது தீய கொள்கயைத் தூக்கி நிறுத்த முடியவில்லை.

இறைவனின் முகம் தொடர்பாகத் திருக்குர்ஆன் வசனங்களில் கூறப்பட்டுள்ள ஆதாரங்களைப் பார்த்தோம். இப்போது ஹதீஸ்களில் வரும் ஆதாரங்களைப் பார்ப்போம்.

ஒளிமயமான திருமுகம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச் சொன்னார்கள். (அவை:)

1) வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது.

2) அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.

3) (மனிதன்) இரவில் புரிந்த செயல், பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது.

4) (மனிதன்) பகலில் புரிந்த செயல், இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது.

5) ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். -மற்றோர் அறிவிப்பில் “நெருப்பே அவனது திரையாகும்என்று காணப்படுகிறது.- அத்திரையை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)

நூல்: முஸ்லிம் 263

அவனது முகத் தோற்றம்

உங்களில் ஒருவர் சண்டையிடும் போது முகத்தைத் (தாக்குவதை விட்டும்) தவிர்ந்து கொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹுத் தஆலா ஆதமைத் தன்னுடைய முகத்தோற்றத்திலேயே படைத்திருக்கின்றான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4731, அஸ்ஸுன்னத் லிஅபீ ஆஸிம் 228, தப்ரானி 478

இந்த ஹதீஸ்கள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமில்லாமல், அல்லாஹ்வுக்கு முகம் இருப்பதை உறுதி செய்து கொண்டிருக்கின்றன.

இறைவனின் இரு கண்கள்

தூய்மையான அல்லாஹ்வுக்குக் கண்கள் இருக்கின்றன. அதற்குரிய ஆதாரங்களை திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பார்ப்போம்.

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:58

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படையுங்கள் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்என்ற அல்லாஹ்வின் சொல்லிலிருந்து “செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான்என்ற வசனத்தை அபூஹுரைரா (ரலி) ஓதிக் கொண்டே, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கட்டை விரலை தமது காதின் மீது, அடுத்த விரலை தமது கண் மீது வைத்துக் காட்டியதைக் கண்டேன்என்று தெரிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைராவின் அடிமை அபூயூனுஸ்

நூல்: அபூதாவூத் 4103

அல்லாஹ், தன்னைப் பற்றி திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது, பார்ப்பவன், செவியுறுபவன் என்று அதிகமான இடங்களில் குறிப்பிடுகின்றான். இருப்பினும் இந்த வசனத்தை மட்டும் இங்கு நாம் எடுத்துக் காட்டுவதற்குக் காரணம், நபி (ஸல்) அவர்கள் தமது காதையும், கண்ணையும் கை விரல்களால் காட்டி விளக்கம் கொடுப்பதன் மூலம் அல்லாஹ்வுக்குக் கண்கள், காதுகள் உண்டு என்பதை உணர்த்துகிறார்கள்.

எல்லை இல்லாத இறைப் பார்வை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒளியே அவனது திரையாகும். அத்திரையை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும்.

நூல்: முஸ்லிம் 263

ஒற்றைக் கண் குருடன் அல்லன்

நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள்:

நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 3057

இந்த ஹதீஸ்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குக் கண்கள் இருக்கின்றன; அவை குறைவற்றவை என்பதைத் தெரிவிக்கின்றன.

இறைவனுக்கு இரு கைகள்

எல்லாம் வல்ல அல்லாஹ் தனக்கு இரு கைகள் இருப்பதைத் திருக்குர்ஆனில் தெரிவிக்கிறான்.

எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?” என்று (இறைவன்) கேட்டான்.

அல்குர்ஆன் 38:75

அல்லாஹ்வுக்குக் கைகள் இருப்பதைத் தெரிவிக்கும் வசனமாகும். இப்போது இது குறித்த ஹதீஸ்களைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களைப் பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), “நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்) பார்க்க மாட்டீர்களா?” என்று கேட்பார்கள். மக்கள் சிலர், “உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)என்று கூறுவார்கள்.

ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும் படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களைச் சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்பார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3340

இது ஆதம் நபியிடம் மக்கள் கூறுகின்ற கருத்தாகும். இதில், அல்லாஹ் தன் கையால் உங்களைப் படைத்தான் என்று மக்கள் கூறுவதிலிருந்து இறைவனுக்குக் கைகள் இருப்பதை அறிய முடியும்.

மூஸாவை வென்ற ஆதம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தம் இறைவன் அருகில் தர்க்கம் செய்தார்கள். அப்போது மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள். மூசா (அலை) அவர்கள், “அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்து, உங்களுக்குள் தனது உயிரை ஊதி, தன் வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்து, உங்களைச் சொர்க்கத்தில் குடியிருக்கச் செய்த ஆதம் நீங்கள் தானே! பிறகு நீங்கள் உங்களது பாவத்தின் மூலம் (உங்கள் வழித் தோன்றல்களான) மனிதர்களை பூமிக்கு இறங்கச் செய்து விட்டீர்கள்என்று கூறினார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “அல்லாஹ் தன் தூதுத்துவச் செய்திகளைத் தெரிவிக்கவும் தன்னிடம் உரையாடவும் உம்மைத் தேர்ந்தெடுத்து, அனைத்துப் பொருட்களைப் பற்றிய விளக்கமும் உள்ள பலகைகளை உமக்கு வழங்கி, தன் அருகில் வரச்செய்து இரகசியமாக உரையாடிய மூசா நீர் தானே! நான் படைக்கப்படுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் தவ்ராத்தை எழுதியதாக நீர் கண்டீர்?” என்று கேட்டார்கள்.

அதற்கு மூசா (அலை) அவர்கள், “நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால்என்று பதிலளித்தார்கள். “அதில், ஆதம் தம் இறைவனுக்கு மாறு செய்தார். எனவே, அவர் வழி தவறினார் என்று எழுதப்பட்டிருந்ததா?” என்று கேட்டார்.

அதற்கு மூசா (அலை) அவர்கள், “ஆம்என்றார்கள். “அவ்வாறாயின், என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எதை நான் செய்வேன் என்று இறைவன் என்மீது விதியாக்கி விட்டடானோ அதைச் செய்ததற்காக என்னை நீங்கள் பழிக்கிறீரா?” என்று ஆதம் (அலை) அவர்கள் கேட்டார்கள்.

(இந்தக் கேள்வியின் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4795

இந்த ஹதீஸில் மூஸா (அலை) அவர்கள், ஆதம் நபியைப் பார்த்து, அல்லாஹ் தன் கையினால் உங்களைப் படைத்தான் என்று சிறப்பித்துக் கூறுவதைப் பார்க்கிறோம்.

பாக்கியமிக்க இரு கைகள்

அல்லாஹ், ஆதமைப் படைத்து அவரிடம் உயிரை ஊதினான். அவர் உடனே தும்மி, “அல்ஹம்துலில்லாஹ்என்று கூறி, அவனது அனுமதியுடன் அல்லாஹ்வைப் புகழ்ந்தார். அவரிடம் அவரது இறைவன், “ஆதமே! யர்ஹமுக்கல்லாஹ் – அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக! இதோ அமர்ந்திருக்கின்ற இந்த மலக்குகளின் கூட்டத்திடம் சென்று அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வீராக!என்று கூறினான். (அவ்வாறு அவர் கூறியதும் அம்மலக்குகள்) பதிலளித்தனர். பின்னர் அவர் தன்னுடைய இறைவனிடம் திரும்பியதும், “இது உம்முடைய முகமனும், உமது பிள்ளைகள் தங்களுக்கிடையில் (பரிமாறுகின்ற) முகமனும் ஆகும்என்று இறைவன் கூறினான்.

பிறகு தன்னுடைய இரு கைகளும் பொத்தப்பட்டிருக்கும் நிலையில், “இவ்விரண்டில் நீர் விரும்பிய எதை வேண்டுமானாலும் தேர்வு செய்கஎன்று கூறினான். “நான் என்னுடைய இறைவனின் வலது கையைத் தேர்வு செய்தேன். எனினும் என்னுடைய இறைவனின் இரு கைகளுமே பாக்கியமாக்கப்பட்ட வலது கை தான்என்று ஆதம் கூறினார். பிறகு அதை அல்லாஹ் விரித்தான். அதில் ஆதமும் அவரது சந்ததியினரும் இருந்தனர். “என்னுடைய இறைவா! இவர்கள் யார்?” என்று ஆதம் கேட்டார். “இவர் உன்னுடைய மகன் தாவூத்! அவருக்கு வயது நாற்பதாக எழுதியிருக்கிறேன்என்று பதிலளித்தான். “இறைவா! அவருக்கு வயதை அதிகமாக்கு!என்று கேட்டார். “நான் அவருக்கு எழுதியது அது தான்என்று பதில் சொன்னான். “என்னுடைய இறைவா! அவருக்கு என்னுடைய வயதிலிருந்து அறுபதை வழங்குகிறேன்என்றார். “அது நீ கேட்டது போல் தான்என்று அவன் கூறினான்.

பிறகு அல்லாஹ் நாடியவரை அவர் சுவனத்தில் குடியமர்த்தப்பட்டு, பின்னர் அங்கிருந்து இறக்கப்படுகின்றார். ஆதம் தனக்குள் இதைக் கணக்கிட்டுக் கொண்டே இருந்தார். அவரிடம் மலக்குல் மவ்த் வந்தார். ஆதம் அவரிடம், “நீர் அவசரப்பட்டு வந்து விட்டீர். எனக்கு ஆயிரம் வருடங்கள் எழுதப்பட்டிருக்கின்றதுஎன்று கூறினார். அதற்கு மலக்குல் மவ்த், “சரிதான். ஆனால் உம்முடைய மகன் தாவூதுக்கு நீர் அறுபது வயதைக் கொடுத்து விட்டீர்என்றார். ஆதம் மறுத்தார். அவருடைய சந்ததியும் மறுத்தது. ஆதமும் மறந்தார். அவருடைய சந்ததியும் மறந்தது. அன்றிலிருந்து தான், எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டு விட்டது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 3290

இந்த ஹதீஸிலிருந்து, அல்லாஹ்வுக்கு இரு கைகள் இருக்கின்றன; அவ்விரண்டும் பாக்கியமிக்கவை என்பதை அறிந்து கொள்கிறோம்.

பிடிக்கும் புனிதக் கை

பூமி முழுவதிலிருந்தும் தான் அள்ளிய கைப்பிடி மண்ணிலிருந்து அல்லாஹுத் தஆலா ஆதமைப் படைத்தான். அதனால் தான் மண்ணின் தரத்திற்கு ஏற்ப ஆதமின் மக்கள் வந்து விட்டனர். சிவப்பர், வெள்ளையர், கருப்பர், இந்நிறங்களுக்கு இடைப்பட்டவர்கள், மென்மையானவர், கடினமானவர், கெட்ட குணமிக்கவர், நல்ல குணமிக்கவர் போன்றோர் அவர்களிலிருந்து வந்து விட்டனர்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி (ரலி)

நூல்: திர்மிதீ 2879

கண்ணிய நாயனின் கை விரல்கள்

அல்லாஹ்வுக்குக் கை இருக்கின்றது என்று சொல்லும் போது அதற்கு, அதிகாரம், ஆற்றல், ஆட்சி, ஆதிக்கம் என்று சிலர் மாற்று விளக்கம் கொடுக்கின்றனர். அவர்களது கருத்தை முறியடிக்கும் விதமாகப் பின்வரும் ஹதீஸ்கள் அமைகின்றனர்.

யூத மத அறிஞர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே!அல்லது “அபுல் காசிமே!என்றழைத்து, “அல்லாஹ் மறுமை நாளில் வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், மலைகள் மற்றும் மரங்களை ஒரு விரல் மீதும், தண்ணீர் மற்றும் ஈர மண்ணை ஒரு விரல் மீதும், இதர படைப்பினங்கள் அனைத்தையும் ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு அவற்றை அசைத்தவாறே, “நானே அரசன்; நானே அரசன்என்று சொல்வான்என்றார்.

அவர் கூறியதைக் கேட்டு வியப்படைந்து அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

பிறகு “அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்” (39:67) எனும் வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 4992

இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் கையில் ஐந்து விரல்கள் என்று தெளிவுபடுத்துகின்றன.

வான்மறை கூறும் வலது கை

அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்.

அல்குர்ஆன் 39:67

இது அர்ரஹ்மானின் வலது கை குறித்து திருக்குர்ஆனில் இடம் பெறும் ஆதாரமாகும். இது குறித்து ஹதீஸில் இடம் பெறுவதைப் பார்ப்போம்.

வலது கையில் வானத்தைச் சுருட்டுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வுமிக்க அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தனது வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு “நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?” என்று கேட்பான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6519, முஸ்லிம் 4994

இடது கையால் பூமியைச் சுருட்டுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் வானங்களைச் சுருட்டுவான். பிறகு அவற்றைத் தனது வலக் கரத்தில் எடுத்துக் கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான். பிறகு பூமிகளைத் தனது இடக் கரத்தில் சுருட்டிக் கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4995

விரல்களைப் பொத்தி விரித்தல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தன் வானங்களையும் பூமிகளையும் தன்னுடைய இரு கரங்களிலும் எடுத்துக்கொண்டு, “நானே அல்லாஹ். நானே அரசன்என்று கூறுவான் என்றார்கள். இதைக் கூறிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விரல்களை மடக்கிவிட்டு, பிறகு அவற்றை விரித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4996

மேற்கண்ட ஹதீஸில், “கைகளால் பிடிப்பான்’ என்பதற்கு மக்கள் வேறு அர்த்தம் கொள்ள முடியாத வகையில் நபி (ஸல்) அவர்கள் தமது கைகளால் மூடித் திறந்து காட்டி நேரடிப் பொருள் கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அர்ரஹ்மானின் வலது புறம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேர்மையான ஆட்சியாளர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப் பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக் கரமே (வளமிக்கதே). அவர்கள் தமது நிர்வாகத்திலும், குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக் கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்து கொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்).

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: முஸ்லிம் 3406

ஆதிக்கம் செலுத்துபவன் தன்னுடைய வானங்களையும் தன்னுடைய பூமியையும் தனது கையில் எடுத்து, அதைத் தனது கையில் பிடித்துக் கொண்டு அதைப் பொத்தி விரிப்பான். பிறகு, “நான் ஆதிக்கம் செலுத்துபவன்; ஆதிக்கம் செலுத்துபவர்கள் எங்கே? பெருமையடிப்பவர்கள் எங்கே?” என்று கேட்பான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹ் எவ்வாறு கேட்பான் என்பதை விளக்கும் விதமாகத்) தமது வலப்பக்கமும் இடப் பக்கமும் சாய்பவர்களாக இருந்தனர். நான் மிம்பரைப் பார்த்தேன். அது நபி (ஸல்) அவர்களுடன் சாய்ந்து கீழே சரிந்து விழுந்து விடுமோ என்று நான் கூறுமளவுக்கு அதன் அடிப்பாகத்திலிருந்து அது அசைந்து கொண்டிருந்தது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: இப்னுமாஜா 194

புரோட்டா போல் புரளும் பூமி

நபி (ஸல்) அவர்கள் “மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தமது ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த(இறை)வன் பூமியைத் தனது கரத்தால் புரட்டிப் போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்குத் தங்குமிடமாக்குவான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 6520

இவை அனைத்தும் அல்லாஹ்வுக்குக் கைகள் இருப்பதையும் அவற்றை அவன் பொத்தி விரிப்பதையும் விளக்கமாகக் குறிப்பிடுகின்றன.

இறைவன் எழுதிய இனிய வேதம்

மூஸாவே! எனது தூதுச் செய்திகள் மூலமும், நான் பேசியதன் மூலமும் மக்களை விட உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே நான் உமக்குக் கொடுத்ததைப் பிடித்துக் கொள்வீராக! நன்றி செலுத்துபவராக ஆவீராக!என்று (இறைவன்) கூறினான்.

பலகைகளில் அவருக்காக ஒவ்வொரு விஷயத்தையும் எழுதினோம். அறிவுரையாகவும், அனைத்து விஷயங்களுக்கும் விளக்கமாகவும் அது இருந்தது. “இதைப் பலமாகப் பிடிப்பீராக! இதை மிக அழகிய முறையில் பிடிக்குமாறு உமது சமுதாயத்திற்கும் கட்டளையிடுவீராக! குற்றம் புரிந்தோரின் இல்லத்தை உங்களுக்குக் காட்டுவேன்” (என்று இறைவன் கூறினான்.)

நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழி கேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும், அவற்றை அலட்சியப் படுத்தியதும் இதற்குக் காரணம்.

அல்குர்ஆன் 7:144-146

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்து கொண்டார்கள்.  மூசா (அலை) அவர்கள், “ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள்என்று சொன்னார்கள்.

அதற்கு மூசாவிடம் ஆதம் (அலை) அவர்கள், “நீர் தான் மூசாவா? அல்லாஹ், தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தனது கையால் உமக்காக (வேதத்தை) எழுதினான். (இத்தகைய) நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?” என்று கேட்டார்கள்.

(இந்த பதில் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்; தோற்கடித்து விட்டார்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4793

அள்ளுகின்ற அல்லாஹ்வின் கை

கேள்வி கணக்கில்லாமல் எனது உம்மத்தினரில் எழுபதாயிரம் பேர்களை சுவனத்தில் நுழைவிப்பதை கண்ணியமும் மகத்துவமும் நிறைந்த அல்லாஹ் எனக்கு வாக்களித்துள்ளான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக, உங்களுடைய உம்மத்தில் அந்த எண்ணிக்கையினர் ஈக்களில் ஒரு செம்மஞ்சள் நிற ஈயைப் போல் தானே இருப்பார்கள்?” என்று யஸீத் பின் அல்அக்னஸ் அஸ்ஸலமீ கேட்டதற்கு, “ஒவ்வொரு ஆயிரத்துடனும் எழுபதாயிரம் சேர்த்து, ஓர் எழுபதாயிரத்தை எனக்கு வாக்களித்துள்ளான். மேலும் மூன்று கை அள்ளல்களை அதிகப்படுத்தினான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

நூல்: முஸ்னத் அஹ்மத் 22210

உயர்ந்தவனின் உள்ளங்கை

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (நல்ல மற்றும் கெட்ட) காரியங்கள் (இப்போது தான்) துவங்கப்படுகின்றனவா? அல்லது (ஏற்கனவே) விதி விதிக்கப்பட்டு விட்டதா?” என்று கேட்டார்.

அல்லாஹுத் தஆலா ஆதமுடைய மக்களின் சந்ததியினரை அவர்களுடைய முதுகளிலிருந்து எடுத்து அவர்களையே அவர்கள் மீது சாட்சியாக்கினான். பிறகு தன் இரு உள்ளங்கைகளில் கொட்டி, “இவர்கள் சுவர்க்கத்திற்குரியவர்கள், இவர்கள் நரகத்திற்குரியவர்கள்என்று கூறினான். எனவே சுவனத்திற்குரியவர், சுவனத்திற்குரிய காரியத்திற்கு ஏற்ப எளிதாக இழுத்துச் செல்லப்படுகிறார். நரகத்திற்குரியவர்கள் நரகத்திற்குரிய காரியத்திற்கு ஏற்ப எளிதாக இழுத்துச் செல்லப்படுகிறார்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

நூல்: பைஹகீயின் அஸ்மா வஸ்ஸிபாத் 2/148

கண்ணியத்திற்குரியவனின் கால்கள்

எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்குக் கைகள் இருப்பது போன்றே கால்களும் இருக்கின்றன. அதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

கெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தாச் செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.

அல்குர்ஆன் 68:42

இது மறுமை நாளில் மஹ்ஷரில் நடக்கும் ஓர் அற்புதக் காட்சியாகும். இறைவனின் கால்கள் மறுமையில் வெளிப்பட்டு அதில் நல்லோர் ஸஜ்தா செய்வார்கள் என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.

கால் மிதி வாங்கும் நரகம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்து கொண்டன. அப்போது நரகம், “பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன்என்று சொன்னது. சொர்க்கம், “எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்என்று கூறியது.

அல்லாஹ் சொர்க்கத்திடம், “நீ எனது அருள். உன் மூலமே என் அடியர்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகின்றேன்என்று கூறினான். நரகத்திடம் “நீ வேதனை(க்காகத்) தான். உன் மூலமே என் அடியர்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றுக்கும் வயிறு நிரம்பத் தரப்படும்.

ஆனால், நரகமோ இறைவன் தனது காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும் போது நரகம் “போதும்! போதும்!என்று கூறும். அப்போது தான் அதற்கு வயிறு நிரம்பும்.

மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை; மாறாக,) அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ், சொர்க்கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4850, 2480

இந்த ஹதீஸ்களெல்லாம் அல்லாஹ்வுக்கு முகம், கண்கள், காதுகள், கைகள், கால்கள் இருக்கின்றன என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. அல்லாஹ் உருவமுள்ளவன் என்பதற்கு இவை தெளிவான ஆதாரங்களாக உள்ளன.

அல்லாஹ் ஓர் அழகன்

இவ்வளவு உறுப்புகளும் கொண்ட அல்லாஹ் உருவமுள்ளவன் தான் என்பதற்கு இதை விடச் சான்றுகள் வேறு தேவையில்லை. இத்தனைக்குப் பிறகும் அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்றால் அது, குர்ஆன் ஹதீஸை மறுக்கும் இறை மறுப்பாகும். அல்லாஹ் காப்பானாக!

இத்தனை உறுப்புக்களும் உள்ள அல்லாஹ் அழகானவனா? அவனது உருவம் எப்படிப்பட்டது என்பதற்கும் ஹதீஸ்களில் ஆதாரங்கள் உள்ளன. அல்லாஹ் மாபெரும் அழகானவன் என்பதைக் கீழ்க்காணும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 131

புனித உறுப்புக்களும் மனித உறுப்புக்களும் ஒன்றல்ல

அல்லாஹ்வுக்கு உறுப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அவை நம்முடைய உறுப்புக்களைப் போன்றவை என்று சொன்னால், அல்லது ஒப்பாக்கினால் அல்லாஹ்வுக்கு உவமை கற்பித்த, இணை கற்பித்த பாவத்திற்கு ஆளாக நேரிடும்.

அதே சமயம், அல்லாஹ்வுக்கு உறுப்புக்கள் இல்லை, உருவம் இல்லை என்று சொன்னால் அது இறை மறுப்பாகி விடும். அதனால் இரண்டிற்கும் இடமில்லாத, சரியான வகையில் அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறுவதை அப்படியே நம்ப வேண்டும்.

உண்மையில் அல்லாஹ்வின் உறுப்புக்களின் ஆற்றல் அளவிடவே முடியாதவை. மனித உள்ளத்தில் அறவே எண்ணிப் பார்க்க முடியாதவையாகும். அந்த உறுப்புக்களின் ஆற்றலை இப்போது பார்ப்போம்.

ஒளி வீசும் உயர் முகம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒளியே அவனது திரையாகும். அத்திரையை அவன் விலக்கி விட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும்.

நூல்: முஸ்லிம் 263

வானம், பூமியை வாரும் வலிமை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வுமிக்க அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தனது வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு “நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?” என்று கேட்பான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4994

விரலின் வலிமை

யூத மத அறிஞர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே!அல்லது “அபுல் காசிமே!என்றழைத்து, “அல்லாஹ் மறுமை நாளில் வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், மலைகள் மற்றும் மரங்களை ஒரு விரல் மீதும், தண்ணீர் மற்றும் ஈர மண்ணை ஒரு விரல் மீதும், இதர படைப்பினங்கள் அனைத்தையும் ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு அவற்றை அசைத்தவாறே, “நானே அரசன்; நானே அரசன்என்று சொல்வான்என்றார். அவர் கூறியதைக் கேட்டு வியப்படைந்து அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 4992

காலின் வலிமை

நரகத்திடம் “உனக்கு வயிறு நிரம்பி விட்டதா?” என்று கேட்கப்படும். அது, “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும். அப்போது அருள் வளமிக்கவனும், உயர்ந்தோனுமான அல்லாஹ் தனது பாதத்தை அதன் மீது வைப்பான். உடனே அது “போதும்! போதும்!என்று கூறும்.

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 4849