அபூபக்ர் (ரலி) வரலாறு – தொடர் – 35
முழுமையடைந்த முன்னறிவிப்பு
எம். ஷம்சுல்லுஹா
நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார்.
உடனே நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது” என்று பதிலளித்தேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய்! ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் ஹீராவிலிருந்து பயணித்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று சொன்னார்கள்.
“அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?” என்று நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன்.
நபி (ஸல்) அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூவலங்கள் வெற்றி கொள்ளப் படுவதைப் பார்ப்பாய்” என்று சொன்னார்கள்.
நான், “(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப் படுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம்(ரலி)
நூல்: புகாரி 3595
ஹீரா வெற்றி கொள்ளப்பட்டதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு இங்கே நிறைவேறி விடுகின்றது. அரபு நாடுகளுக்கு அப்பால் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்த முதல் தலைநகரம் ஹீரா தான்.
இந்தத் தலைநகர் இஸ்லாமிய ஆட்சிக்குக் கீழ் வந்த பிறகு காலித் ஓராண்டு காலம் ஒரே இடத்தில் உறைய நேரிட்டது. இது அவருக்குப் பெரும் சடைவையும் சலிப்பையும் ஏற்படுத்தியது.
வாள் சுழற்றிய வலிமை மிக்க வீரருக்கு ஓராண்டு காலம் வாளாவிருந்தது பெரும் வருத்தத்தை அளித்தது. இதற்குக் காரணம் என்ன?
ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) ஆரம்பத்தில் இரு படைகளை இராக்கிற்கு அனுப்பி வைத்தார்கள். ஒரு படையின் தளபதி காலித் பின் வலீத்! மற்றொரு படையின் தளபதி இயாள் பின் கனம்!
இராக்கின் கிழக்குப் புறமாக காலித் வர வேண்டும்; இராக்கின் மேற்குப் புறமாக இயாள் பின் கனம் வர வேண்டும். இவ்விருவரில் யார் இராக்கிற்கு முதலில் வருகிறாரோ அவர் தான் மற்றவருக்குத் தலைவர் ஆவார். அது மட்டுமின்றி, இயாள் வந்த பின் இருவருமாக இணைந்து பாரசீகத்தின் ஆயுத பலத்தைத் தகர்த்தெறிய வேண்டும்.
பாரசீகப் படை பலத்தை விட்டும் ஹீரா முழுமையாகப் பாதுகாப்புப் பெற்று விட்டது என்ற நம்பிக்கை ஏற்பட்ட பின்னர் தான் பாரசீகத்தின் பிடியிலுள்ள அடுத்த நகரத்தைத் தாக்கத் துவங்க வேண்டும். இது ஆட்சித் தலைவரின் கட்டளை!
கலீஃபாவின் கட்டளைக்கேற்ப காலித் கீழ்ப் புறமாக இராக்கிற்கு வந்து பாரசீகத்தின் பிடியில் இருந்த பல நகரங்களை வென்று விட்டார். அதன் முக்கியக் கட்டமாக ஹீராவையும் கைப்பற்றி விடுகின்றார்.
இது கூஃபாவிற்குத் தெற்கே மத்திய இராக்கின் தென்பகுதியில் அமைந்திருக்கும் நகரமாகும்.
இராக்கிற்கு வராத இயாள்
பாரசீகத்தின் பிடியில் இருக்கும் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மதாயினைப் பிடிப்பது காலிதின் இலக்கு! ஆனால் இயாள் வராததால் காலித், ஹீராவிலேயே அடைந்து கிடக்க வேண்டியதாயிற்று!
இயாள் ஓராண்டு காலமாக இராக் வராமல் போனதற்குக் காரணம், இராக் நோக்கிச் செல்லும் வழியில் தூமத்துல் ஜன்தல் என்ற பகுதியை இஸ்லாத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்படி இயாளுக்கு, கலீஃபா கட்டளையிட்டிருந்தார்கள்.
(ஏற்கனவே நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹிஜ்ரி 5ஆம் ஆண்டில், தூமத்துல் ஜன்தல் இஸ்லாமியக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. நபியவர்கள் மரணித்த பின் அது தடம் மாறியது.)
இயாள், இராக்கிற்கு வரும் வழியில் தூமத்துல் ஜன்தலை முற்றுகையிட்டார்கள். அவ்வளவு தான்! முற்றுகையிட்டது முற்றுகையிட்டது தான்! அந்த முற்றுகையிலிருந்து ஓராண்டு காலம் வெளியேற முடியவில்லை.
இதனால் இயாள், இராக்கிற்கு வர முடியவில்லை. இராக்கில் அவருக்காக ஒதுக்கப்பட்ட பணியைக் கவனிக்க முடியாமல் போனது. அந்தப் பணிகளைக் காலிதே மேற்கொண்டு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
பாரசீகத்தின் பிடியிலுள்ள மதாயின் உள்ளிட்ட பிற நகரங்களைக் காலித் கைப்பற்றுவதற்கு, ஆட்சித் தலைவரின் இந்தக் கட்டளை குறுக்கே வந்து நின்றது.
சிறையில் சிக்குண்ட சிங்கம்
தேனீயாய்ச் சுழன்று, தினவெடுத்த தோள்களில் வாட்கள் ஏந்தி தினந்தோறும் களங்கண்ட அல்லாஹ்வின் போர் வாள், அடலேறு காலித் பின் வலீதுக்கு ஹீரா ஒரு சிறையாக மாறி, அலுப்பை ஏற்படுத்தியது. அதனால் ஏற்பட்ட ஆதங்கத்தில் அந்தச் சிங்கம் உதிர்த்த வேதனை வார்த்தைகள் இதோ:
ஆட்சித் தலைவர் அபூபக்ர் அவர்கள் எனக்கு இப்படி ஒரு கட்டளை இட்டிருக்கக் கூடாது. இதன் காரணத்தால் ஓராண்டு காலமாக முற்றுகையில் முடங்கிக் கிடக்கும் இயாள் பின் கனமை என்னால் காப்பாற்ற முடியவில்லை.
ஹீரா வெற்றிக்குப் பிறகு, பாரசீகத்தின் பிடியிலுள்ள மற்ற நகரங்களை என்னால் கைப்பற்றவும் முடியவில்லை. (காரணம், இயாள் வராமல் அடுத்தக்கட்டத் தாக்குதல் கூடாது என்ற கலீபாவின் கட்டளை தான்) மொத்தத்தில் ஹீராவில் நான் தங்கிய இந்த ஆண்டு, ஒரு போர் வீரனுக்குரிய ஆண்டல்ல! ஒரு பெண்ணுக்குரிய ஆண்டு!
இது வீரர் காலித் பின் வலீதின் வேதனைக்குரிய வரிகள்!
தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஹீரா உடன்படிக்கையின் போது நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு என்று ஒரு சம்பவம் தப்ரீயின் “தாரீக் அல் உமம் வல் மலீக்’, இப்னு கஸீரின் “அல்பிதாயா வந்நிஹாயா’ ஆகிய வரலாற்று நூற்களில் பதிவாகியுள்ளது.
ஹுவைல் அவர்கள் காலித் பின் வலீதிடம் வந்து கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹீராவைப் பற்றிக் கூற நான் செவியுற்றேன். அப்போது நான், “(பேரழகியான) கராமாவை எனக்கு அளியுங்கள்” என்று கோரினேன். “நீ பலவந்தமாக வெற்றி கொள்கின்ற போது அவள் உனக்குத் தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
(எனவே அந்தப் பெண் தமக்கு வேண்டும் என்று ஹுவைல் காலிதிடம் கேட்டார்.)
நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்தச் செய்தியைச் செவிமடுத்த நபித் தோழர்களையும் காலிதிடம் சாட்சியம் அளிக்கச் செய்தார்.
இதனால் ஹீரா ஆட்சியாளர்களிடம் காலித் ஓர் உடன்படிக்கை செய்தார். அதன் அடிப்படையில் அந்தப் பெண்ணை ஹுவைலிடம் ஒப்படைக்கின்றார். அவளுக்கு ஏற்பட்ட இந்தத் துயரம் அவளுடைய ஊராரையும், குடும்பத்தினரையும் பெரிதும் பாதித்தது. இதை அவர்கள் பேரபாயமாகக் கருதினார்கள். ஆனால் அவளோ, “இதை ஒன்றும் நீங்கள் அபாயமாகக் கருத வேண்டாம். பொறுமையாக இருங்கள். 80 வயது நிரம்பிய என் விஷயத்தில் நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இவர் (ஹுவைல்) கடைந்தெடுத்த முட்டாள். என்னை வாலிபத்தில் பார்த்து விட்டு அந்த வாலிபம் இன்னும் நீடிக்கிறது என்று கற்பனை செய்து கொண்டிருக்கிறார்” என்று கூறினாள். அவளை காலிதிடம் கொடுத்தார்கள். காலித் அவளை ஹுவைலிடம் கொடுத்தார்.
“உனக்கே நன்கு தெளிவாகத் தெரிகின்ற ஒரு கிழவியிடம் உனக்கு என்ன நாட்டம் இருக்கப் போகின்றது? என்னிடம் ஈட்டுத் தொகை வாங்கி விட்டு என்னை விடுவித்து விடு” என்று அவள் ஹுவைலிடம் கூறினாள். “நான் ஒரு முடிவெடுத்த பின்னர் தான் விடுவிப்பேன்” என்று ஹுவைல் கூறினார். “சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமை உங்களுக்கு உண்டு” என்று அவள் கூறினாள்.
“ஆயிரம் திர்ஹத்தை விட குறைவாகப் பெற்றுக் கொண்டு உன்னை விடுவித்தால் நான் என் தாய்க்குப் பிறக்கவில்லை” என்று அவர் கூறினார். அதற்கு அவள், “ஆயிரமா?” என்று அவரை ஏமாற்றுவதற்காக அதிர்ச்சியாவது போல் நடித்து விட்டு, ஆயிரம் திர்ஹம் கொடுத்துத் தன்னை விடுவித்து விட்டு, தன் குடும்பத்திடம் திரும்பி விட்டாள்.
இதைக் கேள்விப்பட்ட நபித் தோழர்கள் (அதிகத் தொகை பெறுவற்கு வாய்ப்பிருந்தும் அவர் வேண்டுமென்றே அதை நழுவ விட்டு விட்டார் என்று எண்ணி) அவரைக் கடிந்து கொண்டனர்.
“ஆயிரத்தை விடவும் அதிகமான தொகை இருப்பதாக நான் அறிந்திருக்கவில்லை” என்று ஹுவைல் பதிலளித்தார். மக்கள் அவரிடம் மறுப்பு தெரிவிக்கவே அவர்களிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று எண்ணி ஹுவைல் வாக்குவாதம் செய்தார். “இது தான் அதிகப்பட்சத் தொகை என்றே என்னுடைய எண்ணம் இருந்தது” என்று கூறினார். “தொகை ஆயிரத்தை விடவும் அதிகரிக்கும்” என்று அவர்கள் கூறினர்.
அப்போது காலித் தலையிட்டு, “நீ ஒன்றை நினைத்தால் அல்லாஹ் வேறொன்றை நாடி விட்டான். நாம் வெளிப்படையை எடுப்போம். நீ உண்மை கூறினாலும் சரி! பொய் சொன்னாலும் சரி! உன்னுடைய எண்ணத்துடனே உன்னை விட்டு விடுகிறோம்” என்று கூறினார்.
இந்தச் செய்தி வரலாற்று நூற்களில் மட்டுமின்றி பைஹகீ, தப்ரானீ, இப்னு ஹிப்பான் போன்ற ஹதீஸ் நூற்களிலும் வெவ்வேறு வார்த்தைகளில் பதிவாகியுள்ளது.
இந்தச் சீமாட்டியின் பெயர் கராமா என்று இங்கு கூறப்பட்டுள்ளது. அவளது பெயர் ஷீமா என்றும் குறிப்பிடப்படுகின்றது. அப்துல் மஸீஹின் சகோதரி என்றும் அப்துல் மஸீஹின் மகள் என்றும் இவளைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர். அப்துல் மஸீஹ் என்பவர் ஹீராவின் தலைவர்களில் ஒருவராவார். அஸ்திய்யா என்ற புகைலா கோத்திரத்தைச் சார்ந்தவர் என்பதால் இவர் பின்த் புகைலா (புகைலா மகள்) என்றும் அழைக்கப்படுகிறார்.
நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பெண்ணைக் கோரியவர் ஹுவைல் அல்ல; குரைம் பின் அவ்ஸ் அத்தாயி என்பவர் தான் என்று ஃபுதூஹுல் புல்தான் என்ற வரலாற்று நூலாசிரியர் தெரிவிக்கின்றார்.
இப்படிப் பல்வேறு முரண்பாடுகளை உள்ளடக்கிய இந்தச் சம்பவம் காலிதின் ஹீரா உடன்படிக்கையுடன் வரலாற்று நூற்களில் பதிவாகியுள்ளது. மேலும் பைஹகீ, தப்ரானீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூற்களிலும் இது இடம் பெற்றுள்ளது. அந்தச் செய்தி இது தான்.
“நாயின் கடைவாய்ப் பற்கள் போன்று ஹீரா (கோட்டைகள்) எனக்குக் காட்சியளித்தது. அதை நீங்கள் வெற்றி கொள்வீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! பின்த் புகைலாவை எனக்கு வழங்குங்கள்” என்று கேட்டார். “அவள் உனக்குத் தான் சொந்தம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன்படி (காலிதின் படையினர்) அவளை அவருக்கு வழங்கினர். அவளது சகோதரர் (அப்துல் மஸீஹ்) அவரிடம் வந்து, “அவளை விற்று விடுகிறீர்களா?” என்று கேட்டார். அவர் சரி என்றார். “நீங்கள் நினைத்ததை முடிவு செய்யுங்கள்” என்று அவளது சகோதரர் கூறினார். அதற்கு அவர், “ஆயிரம் திர்ஹம்” என்று கூறினார். “ஆயிரம் திர்ஹம் தந்து அவளை நான் பெற்றுக் கொண்டேன்” என்று அவளது சகோதரர் தெரிவித்தார். “நீ முப்பதாயிரம் என்று சொல்லியிருக்கக் கூடாதா?” என்று படையினர் அவரிடம் கேட்டதற்கு, “ஆயிரத்தை விடவும் அதிகத் தொகை உண்டா?” என்று அவர் திருப்பிக் கேட்டார்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்தம்(ரலி)
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் பல்வேறு முரண்பாடுகளுடன் அறிவிக்கப் படுவதால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் இந்த ஹதீஸின் கருத்தும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.
ஹுவைல் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவே கேட்கிறார். ஆனால் அவர் அப்பெண்ணை அடையும் போது 80 வயதுக் கிழவியாக இருந்தாள் என்றும், அதனால் அவர் அவளை விற்று விட்டார் என்றும் கூறப்படுகின்றது. எனவே இதை ஒரு முழுமையடைந்த முன்னறிவிப்பு என்று கூற முடியாது.
இது போன்ற காரணங்களால் இந்தச் சம்பவத்தை, இந்தத் தொடரில் நாம் கொண்டு வரவில்லை.