ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்!
ஒரு முழுமையான அலசல்!
நாட்டின் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டதில் இருந்து இன்று வரை அவரது ஆட்சியை அறிவுப்பூர்வமான காரணங்களை வைத்து மதிப்பிட்டால் பாஜக இத்தேர்தலில் துடைத்து எறியப்பட்டு இருக்க வேண்டும்.
அக்காராணங்களை நினைவுபடுத்திப் பார்ப்போம்.
பலவீனமான பிரதமராக மன்மோகன் சிங் இருப்பதால் தான் பாகிஸ்தான் வாலாட்டுகிறது என்று மோடி பிரச்சாரம் செய்தார். ஆனால் அவர் பிரதமரான பின்னர் முன்பை விட அதிமான இழப்புகளை இந்திய ராணுவ வீரர்கள் சந்தித்து வருகிறார்கள்.
சீனாக்காரன் நமது எல்லைக்குள் நுழைந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் அளவுக்கு மோடி ஆட்சி பலவீனமான நிலையில் உள்ளது.
இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவதற்கும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதற்கும் பலவீனமான மன்மோகன் சிங் தான் காராணம் என்று மோடி சொன்னார். ஆனால் மோடி ஆட்சியில் முன்பை விட இலங்கை அரசால் இந்திய மீனவர்கள் அதிக தொல்லகைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்திய மீனவரை சுட்டுத் த்ள்ளும் அளவுக்கும் நிலமை மோசமாகி விட்டது.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்று மோடி சொன்னார். வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தில் ஒரு பைசாவும் மீட்கப்படவில்லை. ஒருவருக்க்கு கூட பதினைந்து லட்சம் போடப்படவில்லை.
மாறாக மோடியின் நண்பரான அதானிக்கு வெளிநாடுகளில் முதலீடு செய்ய ஆறாயிரம் கோடி ரூபாய்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் கடனாகக் கொடுத்தும், பண முதலைகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்தும் நாட்டின் பொருளாதாரத்தை மோடி நாசமாக்கினார்.
தேசத்தைக் காப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜகவின் முக்கியப் புள்ளிகள் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக கைது செய்யப்பட்டனர். இராணுவ வீரர்களுக்கு காய்ந்த ரொட்டியைக் கொடுத்து உயர் அதிகாரிகள் கள்ளக் கணக்கு காட்டி சுருட்டிக் கொண்டனர். தேச பக்தி என்பது பொய்யான வேஷம் என்று அம்பலமானது.
ஊழலை ஒழிப்போம் என்று சொன்ன மோடி நேரடியாகவே சஹாரா குழுமத்தில் லஞ்சம் வாங்கிய ஆதாரங்கள் வெளியாகின. இதற்கு மோடி வாய் திறந்து எந்தப் பதிலும் சொல்லவில்லை. மேலும் அவரது அமைச்சரவை சகாக்கள் பலர் ஊழலில் சிக்கியுள்ளது அம்பலமானது.
இவை எல்லாவற்றையும் தூக்கி அடிக்கும் வகையில் செல்லாக்காசு அறிவிப்பு அமைந்தது. மக்களை நேரடியாகவே பாதிப்புக்கு உள்ளாக்கி, தினமும் வங்கி வாசலில் மக்களை நிற்க வைத்து மோடி அரசு கொடுமைப்படுத்தியது.
நாட்டைப் பின்னோக்கி நடத்திச் செல்லும் மோடியும், பாஜகவும் தூக்கி எறியப்பட இந்தக் காரணங்களே போதுமாகும்.
எவ்வித பக்கச் சார்பும் இல்லாமல் சிந்தித்தால் மோடி நாட்டை நாசமாக்கி விட்டார்; மக்களை ஏமாற்றி விட்டார் என்று தான் மக்கள் முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
இந்தக் காரணங்களை மீறி பாஜக உத்தரப் பிரதேசத்திலும், உத்தரகாண்டிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மணிப்பூர் மற்றும், கோவாவில் பாஜக தோற்றாலும் அவை மிகச் சிறிய மாநிலங்களாகும். பஞ்சாபில் மட்டும் காங்கிரஸ் வென்றுள்ளது.
முற்றிலுமாக தோற்கடிக்கப்பட நியாயமான எல்லா காரணங்களும் இருந்தும் இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன?
இதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூற முடியாது. பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு காரணத்தினாலும் கனிசமான வாக்குகள் பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி விட்டது.
செல்லாக்காசு அறிவிப்பு
கறுப்புப் பணத்தை ஒழிக்கவே செல்லாக்காசு அறிவிப்பு என்ற காரணம் சொல்லப்பட்டது. ஆனால் கறுப்புப் பணம் ஒழியவில்லை என்பதை அரசே ஒப்புக் கொண்டு விட்டது. ஐந்து மாநிலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டே செல்லாக்காசு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பாஜக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளிடமும் கறுப்புப் பணம் குவிந்து கிடப்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். செல்லாக்காசு அறிவிப்பால் எல்லாக் கட்சிகளும் தங்களது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முடியாமல் வெளிப்படையாக செலவிட முடியாத நிலையைச் சந்தித்தன.
ஆனால் பாஜக மட்டும் செல்லாக்காசு அறிவிப்புக்கு முன்பே தனது கறுப்புப் பணத்தை நாட்டின் பல வங்கிகளில் டிபாசிட் செய்து விட்டது.
ஐந்து மாநிலத் தேர்தல்களை எளிதாக சந்திக்கும் அளவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொண்டது.
ஊடகங்களுக்கு வாரி வழங்கி சாதகமான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தவும், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவும் பாஜகவுக்கு மட்டுமே சாத்தியமாக ஆனது. மற்ற கட்சிகளால் அதில் பத்தில் ஒரு பங்கு கூட செலவிட முடியவில்லை.
மக்களிடம் கருத்தைக் கொண்டு செல்ல பணம் முக்கிய தேவையாகும். இந்த விஷயத்தில் பாஜக திட்டமிட்டு காய் நகர்த்தி செல்லாக்காசு அறிவிப்பின் மூலம் சாதகமாக்கிக் கொண்டது.
இது பாஜகவின் கருத்துக்கள் மக்களைச் சென்றடைவதில் முன்னேற்றமாக அமைந்தது. பாஜக தான் வெல்லும் என்ற கருத்துத் திணிப்புகளை வெளியிட்டு மக்களின் மூளைகளை மழுங்கடிக்கச் செய்வதிலும் பணத்தின் மூலம் வெற்றி அடைந்தார்கள்.
பரவலான வலைப்பின்னல்
எந்தக் கட்சியாக இருந்தாலும் கட்சித் தலைமையின் பிரச்சாரம் மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டுமானால் ஒவ்வொரு ஊரிலும் கிளைகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு கிளையிலும் வீரியமாகச் செயல்படும் தொண்டர்கள் இருக்க வேண்டும். இது தான் கட்சிகள் வெற்றி பெற முக்கியமானதாகும்.
துடிப்புடன் செயலாற்றக் கூடியவர்கள் எப்போது கிடைப்பார்கள்? ஒரு ஊரில் உள்ள ஒரு கட்சியின் கிளையில் நூறு உறுப்பினர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அக்கிளையின் தலைவராக ஒருவர் தலைமையால் நியமிக்கப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் அவரே தலைவராக்கப்படுகிறார். அவர் தளர்ந்து முதுமை அடைந்தாலும் அவரே தலைவராக்கப்படுகிறார். அவர் செத்த பின் அவரது மகன் தலைவராக்கப்படுகிறார்.
இப்படி இருந்தால் என்ன நடக்கும்? நூறு உறுப்பினர்களும் சிறிது சிறிதாக ஒதுங்கி விடுவார்கள். எவ்வளவு தான் உழைத்தாலும் நமக்கு பதவியோ, லாபமோ, அங்கீகாரமோ கிடைக்காது என்று கருதுவார்கள். எவனோ வாழ்வதற்காக நாம் ஏன் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக பதியும்.
அதே நேரத்தில் அந்த நூறு பேரும் ஆண்டு தோறும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடி அதன் தலைவரைத் தேர்வு செய்யும் நிலை இருந்தால் தலைவர்கள் மாறுவார்கள். கட்சிக்காக உழைத்தவர்கள் முன்னுக்கு வருவார்கள். இதனால் வீரியமாக செயல்படும் தொண்டர்கள் தொடர்ச்சியாக இருப்பார்கள்.
இது போல் மாவட்ட அமைப்புகளுக்கும், மாநில அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டால் ஒவ்வொரு உறுப்பினரும் மாவட்ட நிர்வாகியாக, மாநில நிர்வாகியாக உயர முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு பம்பரமாக வேலை செய்வார்கள்.
இந்த நிலைமை தமிழகத்தில் திமுக கட்சியில் உள்ளது. உட்கட்சி ஜனநாயகம் இருப்பதால் அக்கட்சியில் எல்லா ஊர்களிலும் எல்லாக் காலத்திலும் வீரியமாகச் செயல்படும் தொண்டர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். இருக்கிறார்கள்.
திமுகவுக்கு எதிராக பாரதூரமான குற்றச் சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டாலும் அக்கட்சிக்காக வேலை செய்யும் தொண்டர்கள் இருப்பதால் அவர்களின் எதிர்ப் பிரச்சாரம் மூலம் மக்களை ஓரளவு வென்று எடுப்பார்கள்.
எந்தக் காலத்திலும் 20 முதல் 25 விழுக்காடுக்கு குறையாமல் திமுக வாக்குகளைப் பெற்றுவிடுவதற்கு இதுவே காரணம்.
இது போன்ற நிலை பாஜகவிலும் உள்ளது. மேலும் சித்தாந்த ரீதியாக தயாரிக்கப்பட்ட ஆர் எஸ் எஸ் காரர்கள் பாஜகவின் ஒவ்வொரு கீழ்மட்டத்திலும் அங்கம் வகித்து பம்பரமாகப் பணியாற்றுவார்கள். பாஜகவுக்கு எதிரான கருத்துக்கள் சென்றடையாமல் தடுப்பதிலும், பிரச்சனையைத் திருப்புவதிலும் அவர்கள் பங்காற்றுவார்கள். தங்களின் தலைமை எவ்வளவு தவறு செய்தாலும் அதை அலட்சியப்படுத்தி விட்டு கட்சிக்காக பாடுபடுவார்கள். நாளை பெரிய பதவிகளுக்கும் நம்மால் வர முடியும் என்ற உந்துதல் தான் இதற்குக் காரணம்.
மோடிக்கு எதிராகக் களம் இறங்கும் காங்கிரசில் இந்த நிலைமை அறவே இல்லை. கிளைகளுக்கான கட்டமைப்பு இல்லை, கிளை மாவட்ட நிர்வாகிகள் அக்கட்சி தொண்டர்களால் தேர்வு செய்யப்படுவதில்லை. எல்லாமே நியமனம். எல்லாமே கிழட்டுத் தலைவர்கள். பல முறை தலைவர்களாக இருந்ததால் ஏற்பட்ட மமதை காரணமாக தொண்டர்களை அலட்சியப்படுத்தும் தன்மை.
இதனால் ராகுல் ராகுல் சொல்லும் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல ஊருக்கு ஐம்பது பேராவது இருக்க வேண்டும். ஆனால் காங்கிரசில் அத்தகைய தொண்டர்கள் இல்லை. ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே காங்கிரசில் இருப்பார்கள்.
மோடியை வீழ்த்த எல்லா காரணங்களும் இருந்தும் கட்டமைப்பு இல்லாததால் காங்கிரஸ் கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல ஆட்களில்லை.
மோடி தோற்கடிக்கப்பட நாம் குறிப்பிட்ட காரணங்களை மக்களிடம் கொண்டு சென்று இருந்தால் மோடியால் வெற்றி பெற்றிருக்க முடியாது.
தோற்றுப்போக எல்லாக் காரணங்களும் இருந்தும் பாஜகவை தூக்கிச் சுமக்க வெறிபிடித்த தொண்டர்கள் அக்கட்சிக்கு உள்ளனர்.
கீழே இருந்து மேலே வரை உட்கட்சி ஜன நாயகத்தைக் காங்கிரஸ் கொண்டு வராவிட்டால் மேலும் சரிவுக்கு மேல் சரிவைத் தான் சந்திக்கும்.
உட்கட்சி ஜனநாயகம் இல்லாவிட்டால் செல்வாக்கு மிக்க தலைவர் கட்சிக்கு உழைப்பவர்களை மேலே கொண்டு வர வேண்டும். நம்மையும் நமது தலைமை மேலே கொண்டு வரும் என்ற நம்பிக்கை அக்கட்சியின் அடிமட்டத் தொண்டனுக்கு இருக்க வேண்டும்.
இதற்கு உதாரணமாக ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுகவைச் சொல்லலாம். அக்கட்சியில் ஜனநாயகம் அறவே இல்லை. ஆனால் கிளையிலோ, மாவட்டத்திலோ குறிப்பிட்ட நபரே கோலோச்ச முடியாது.
ஒருவரது செயல்பாடு சரியில்லை என்றால் உடனே அவர் நீக்கப்படுவார். நன்றாகச் செயல்பட்டவர்கள் அந்த இடத்துக்குக் கொண்டு வரப்படுவார்கள். நம்முடைய தலைமை நமது உழைப்பைக் கவனத்தில் கொள்ளும் என்ற நம்பிக்கை அதிமுக தொண்டனுக்கு ஏற்படுவதால் வெறிபிடித்து தேர்தல் பணி செய்வார்கள்.
இதுபோன்ற நிலைமை இந்திரா காலத்தில் காங்கிரசில் இருந்தது. நிஜலிங்கப்பா, காமராஜ் போன்றவர்களைக் கூட இந்திரா தூக்கி எறிந்தார்.
சோனியா, ராகுல் ஆகியோருக்கு இந்த அரசியல் அறவே செட்டாகவில்லை. கீழே என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாதவர்களாக உள்ளனர்.
அகிலேஷின் துரோகம்
முலாயம் சிங் உத்தரப்பிரதேசத்தில் சக்தி வாய்ந்த தலைவராக இருந்தார். அவர் தான் சமாஜ்வாதி கட்சியை உருவாக்கினார். ஆனால் அவரது மகன் அகிலேஷ் யாதவ் கட்சியைக் கைப்பற்றிக் கொண்டார்.
முதல்வராக அவர் இருந்ததால் எல்லா எம்.எல்.ஏக்களும் அவருக்குப் பின்னே நின்றார்கள். பொதுக்குழு உறுப்பினர்களும் நின்றார்கள். தந்தையைத் தூக்கி வீசிவிட்டு கட்சியைக் கைப்பற்றிக் கொண்டார்.
ஆனால் கட்சியின் தொண்டர்கள் இதை ஏற்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலும் அதிமுக தொண்டர்களின் ஆதரவு இல்லை என்பது எப்படி பளிச்சென்று தெரிகின்றதோ அது போல் தான் உபியிலும் இருந்தது.
கட்சியை வளர்த்து உருவாக்கிய தந்தையை வெளியே வீசி விட்டு கட்சியைக் கைப்பற்றிக் கொண்டவர் நேர்மையானவராக இருக்க மாட்டார் என்ற பொதுவான மனிதப் பண்பும் அகிலேசுக்கு எதிராக அமைந்து விட்டது.
தனது ஆதரவாளரான சிலருக்கு மட்டும் முலாயம் பிரச்சாரம் செய்தார். அவர்கள் வெற்றியும் பெற்றனர். மற்ற எந்தத் தொகுதியிலும் முலாயம் பிரச்சாரம் செய்யவில்லை.
இதுவும் பாஜகவுக்கு ஆதரவைப் பெற்றுத் தரக் காரணம்.
பூதாகரமாக்கப்பட்ட முஸ்லிம்கள்
நாம் முன்னர் சுட்டிக்காட்டிய அனைத்துக் காரணங்களையும் முறியடிக்க பாஜக கையாண்ட முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் அவர்களுக்கு அதிகம் கை கொடுத்தது.
உபியில் 24 விழுக்காடு முஸ்லிம்கள் உள்ளனர். அரசின் கணக்குப்படி பார்த்தாலும் 20 விழுக்காடு முஸ்லிம்கள் உள்ளனர். இது இந்துக்களுடன் ஒப்பிடும் போது சிறுபான்மை என்ற போதும் ஒவ்வொரு ஜாதியாகப் பிரித்துப் பார்த்து ஒப்பிட்டால் முஸ்லிம்கள் தான் பெரும்பான்மை இனமாக உள்ளனர்.
யாதவரை விட தலித்களை விட பிராமணர்களை விட ஜாட் இனத்தவர்களை விட முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர்.
இந்த நிலையில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் சேர்த்து 150 க்கு மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். உவைசி கட்சியும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள எல்லா தொகுதிகளிலும் முஸ்லிம்களை நிறுத்தியது.
இதையும் பாஜக சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.
முன்னூறு முஸ்லிம்கள் வேட்பாளர்களாக உள்ளனர். அவர்கள் ஜெயித்தால் முஸ்லிம் ஆதிக்கம் அதிகமாகி விடும். மற்ற சமுதாய மக்களை நசுக்கி விடுவார்கள் என்று இந்துக்களுக்கு மதவெறியைத் தூண்டினார்கள்.
ஆனால் முன்னூறு முஸ்லிம்கள் முன்னூறு தொகுதிகளில் நிறுத்தப்படவில்லை. எண்பது தொகுதிகளில் தான் முன்னூறு பேரும் நிறுத்தப்பட்டார்கள். இது முஸ்லிம்களின் சதவிகிதத்துக்கு குறைவு என்றாலும் வெறிபிடித்த தொண்டர்கள் மூலம் பொய்ப்பிரச்சாரம் செய்து தூண்டி விட்டார்கள். செல்லாநோட்டுப் பிரச்சனையை விட முஸ்லிம்கள் நம்மை ஆள்வதா என்ற மதவெறி நன்றாக எடுபட்டது.
ரம்ஜானைப் போல் தீபாவளிக்கும் முக்கியத்துவம் தருவோம். கபருஸ்தானுக்கு இடம் கொடுப்பது போல் இந்துக்களின் சுடுகாட்டுக்கும் இடம் கொடுப்போம் என்று பிரதமர் மோடியே வெளிப்படையாக மதவெறிப் பிரச்சாரம் செய்தார்.
ரம்ஜானுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்ற உண்மைக்கும், கபருஸ்தானுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை என்ற உண்மைக்கும் எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்து இந்துக்கள் இந்த நாட்டில் எந்த உரிமையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது போல தோற்றத்தை ஏற்படுத்தி வெற்றி கொண்டார்கள்.
உபியிலும், உத்தரகாண்டிலும் இதுதான் முக்கியமாக எடுபட்டது.
பஞ்சாபில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ளதாலும் கோவாவிலும் மனிப்பூரிலும் கிறித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளதாலும் முஸ்லிம்களுக்கு எதிரான இந்தப் பிரச்சாரம் எடுபடவில்லை.
முஸ்லிம்கள் நம்மை மிகைத்து விடுவார்கள் என்பதையே பாஜகவினர் முக்கியமான ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி பெற்று வருகிறார்கள். மதவெறி மிகைத்த வட மானிலங்களில் இனியும் இந்தப் பிரச்சாரம் எடுபடும் என்பதில் சந்தேகமில்லை.
வட இந்திய முஸ்லிம்கள் இனி எந்தத் தேர்தலிலும் பங்கெடுக்க மாட்டோம் என்று முடிவு செய்து உறுதியாக இருந்தால் அப்போது தான் மற்ற பிரச்சனைகள் அடிப்படையில் மக்கள் சிந்திப்பார்கள்.
உவைசியின் மடத்தனம்
ஐந்து மாநில இடைத்தேர்தல் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்ற நிலையில் இதில் பாஜக ஜெயிக்கக் கூடாது என்பதை உவைசி பிரதானமாகக் கருதி இருக்க வேண்டும்.
தேர்தலில் ஒதுங்கி இருக்கலாம்; அல்லது மாயாவதியுடனோ அகிலேசுடனோ கூட்டு வைத்திருக்கலாம்.
அப்படி செய்திருந்தால் முஸ்லிம்களின் வாக்குகள் மூன்றாகப் பிரிந்து முஸ்லிம் தொகுதிகளிலும் பாஜக வென்றிருக்க முடியாது. முஸ்லிம் வாக்குகள் இரண்டாகப் பிரிந்திருந்தால் பாஜகவுக்கு சில தொகுதிகள் குறைந்து இருக்க வாய்ப்பு இருந்தது.
முஸ்லிம்களின் தொகுதிகளில் முஸ்லிம்கள் தோற்றதற்கு உவைசியின் அறியாமை காரணமாகி விட்டது.
இதுபோல் பல காரணங்களால் பாஜக இரு மாநிலங்களில் அதிக இடங்களைப் பெற்றாலும் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் வாங்கிய ஓட்டுக்களை விடவும் குறைவான ஓட்டுக்களையும் குறைவான சதவிகிதத்தையும் தான் பெற்றுள்ளது.
மேலே நாம் சுட்டிக்காட்டிய பலவீனங்களைக் களைந்து விட்டு காங்கிரஸ். பகுஜன், சமாஜ்வாதி கட்சிகள் களமிறங்கினால், நாங்கள் தான் முஸ்லிம் ஆதரவாளர்கள் என்று வெற்றுப் பிரச்சாரம் செய்வதைக் கைவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடியை வீழ்த்துவது எளிதானதே.
ஆனால் இதைப் புரிந்து கொண்டு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நடக்கும் என்று நமக்குத் தோன்றவில்லை.