அர்ரூம் – ரோமாபுரி

அத்தியாயம் : 30

வசனங்களின் எண்ணிக்கை: 60

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. அலிஃப், லாம், மீம்.
2, 3, 4, 5. பக்கத்து நாட்டில் ரோமாபுரி தோற்கடிக்கப்பட்டு விட்டது. அவர்கள் அத்தோல்விக்குப் பிறகு சில ஆண்டுகளில் வெற்றியடைவார்கள். இதற்கு முன்னரும் பின்னரும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உரியது. அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு அந்நாளில் இறைநம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அவன், தான் நாடியோருக்கு உதவுகிறான். அவன் மிகைத்தவன்; நிகரிலா அன்பாளன்.384
6. (இது) அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ், தனது வாக்குறுதிக்கு மாறுசெய்ய மாட்டான். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
7. அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் வெளித் தோற்றத்தை அறிகின்றனர். ஆனால் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றனர்.
8. அவர்கள் தமக்குள் சிந்திக்கவில்லையா? அல்லாஹ் வானங்கள், பூமி, அவற்றுக்கு இடைப்பட்டவற்றை நியாயமான காரணத்துடனும், நிர்ணயிக்கப்பட்ட தவணையுடனும் படைத்துள்ளான். மனிதர்களில் பெரும்பாலோர் தமது இறைவனைச் சந்திப்பதை மறுக்கின்றனர்.
9. இவர்கள் பூமியில் பயணித்துத் தமக்கு முன்னிருந்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைப் பார்க்க வேண்டாமா? அவர்கள், இவர்களைவிட மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் பூமியைப் பண்படுத்தினர். இவர்கள் அதில் (கட்டடங்களை) நிர்மாணித்ததைவிட அவர்கள் அதிகமாக நிர்மாணித்தனர். அவர்களிடம், அவர்களுக்கான தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் செய்பவனாக இருக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்கே அநியாயம் செய்து கொண்டனர்.
10. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் பொய்யெனக் கூறியும், அவற்றைக் கேலி செய்து கொண்டும் இருந்த தீமைதான், கெட்டதைச் செய்து கொண்டிருந்தவர்களின் இறுதி முடிவாகி விட்டது.
11. அல்லாஹ்வே படைப்பைத் தோற்றுவித்து, (அது அழிந்த) பின்னர் அதை மீண்டும் படைக்கிறான். பின்னர் அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்.
12. மறுமை நிகழ்வு ஏற்படும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கையிழந்து விடுவார்கள்.
13. அவர்களின் இணைக்கடவுள்களிலிருந்து எந்தப் பரிந்துரையாளரும் அவர்களுக்கு இருக்க மட்டார்கள். மேலும் தமது இணைக்கடவுள்களை மறுத்து விடுவார்கள்.
14. அவர்கள் மறுமை நிகழ்வு ஏற்படும் அந்நாளில் பிரிந்து விடுவார்கள்.
15. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தோர் பூஞ்சோலையில் மகிழ்விக்கப்படுவார்கள்.
16. யார் (நம்மை) மறுத்து, நமது வசனங்களையும், மறுமைச் சந்திப்பையும் பொய்யெனக் கூறினார்களோ அவர்கள் வேதனையின் முன் கொண்டு வரப்படுவார்கள்.
17. நீங்கள் மாலை நேரத்தை அடையும்போதும், காலை நேரத்தை அடையும்போதும் அல்லாஹ்வைப் போற்றுங்கள்!
18. வானங்களிலும், பூமியிலும் அவனுக்கே எல்லாப் புகழும்! முன்னிரவு நேரத்திலும், நண்பகல் நேரத்தை அடையும்போதும் (அவனைப் போற்றுங்கள்!)
19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான். பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிக்கிறான். இவ்வாறே நீங்கள் (உயிர்ப்பித்து) வெளிப்படுத்தப்படுவீர்கள்.
20. அவன் மண்ணிலிருந்து உங்களைப் படைத்திருப்பதும், பின்னர் நீங்கள் மனித சமுதாயமாகப் பரவியிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளதாகும்.385
21. நீங்கள் மனைவியரிடம் மனநிம்மதி பெறுவதற்காக அவர்களை உங்களிலிருந்தே உங்களுக்காகப் படைத்திருப்பதும், உங்களுக்கிடையில் அன்பையும், கருணையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளதாகும். சிந்திக்கும் சமுதாயத்தினருக்கு இதில் சான்றுகள் உள்ளன.
22. வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளதாகும். இதில் அறிவுடையோருக்குச் சான்றுகள் உள்ளன.
23. நீங்கள் இரவிலும், பகலிலும் உறங்குவதும், அவனது அருளைத் தேடிக் கொள்வதும் அவனது சான்றுகளில் உள்ளதாகும். செவியேற்கும் சமுதாயத்தினருக்கு இதில் சான்றுகள் உள்ளன.
24. அவன் உங்களுக்கு மின்னலை அச்சமூட்டியும், ஆதரவளிப்பதாகவும் காட்டுவதும், பூமி இறந்த பின்னர் வானிலிருந்து மழையைப் பொழிவித்து அதன்மூலம் பூமியை உயிர்ப்பிப்பதும் அவனது சான்றுகளில் உள்ளதாகும். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.
25. அவனது கட்டளையால் வானமும், பூமியும் நிலைபெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளதாகும். பின்னர் அவன் உங்களை ஒருமுறை அழைத்ததும் உடனே பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்.
26. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை. ஒவ்வொன்றும் அவனுக்கே கட்டுப்படுகின்றன.
27. அவனே படைப்பைத் தொடங்கி, (அது அழிந்த) பின்பு மீண்டும் படைக்கிறான். இது அவனுக்கு மிக எளிதானதே! அவனுக்கே வானங்களிலும், பூமியிலும் உயர்ந்த பண்பு உரியது. அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.386
28. உங்களுக்கு அவன் உங்களிலிருந்தே ஓர் எடுத்துக்காட்டைக் கூறுகிறான். உங்களுக்கு நாம் வழங்கியவற்றில் உங்கள் அடிமைகள் பங்காளிகளாக இருந்து, அதில் (அவர்களுடன்) சமமாக இருப்பீர்களா? உங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் பயப்படுவதைப் போன்று (உங்களுக்குச் சமமாகி விடுவார்கள் என) அந்த அடிமைகளுக்கும் நீங்கள் பயப்படுகிறீர்கள். இவ்வாறே, சிந்திக்கும் சமுதாயத்திற்கு வசனங்களை விவரிக்கிறோம்.
29. எனினும் அநியாயக்காரர்கள் எந்த அறிவுமின்றித் தமது சுயவிருப்பங்களைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவர்களுக்கு நேர்வழி காட்டுபவர் யார்? அவர்களுக்கு உதவியாளர்களும் இல்லை.
30. வாய்மை நெறியில் நின்று, இம்மார்க்கத்தில் உமது முகத்தை நிலைபெறச் செய்வீராக! (இதுவே) அல்லாஹ்வின் இயற்கை மார்க்கமாகும். அதன்மீதே அவன் மனிதர்களைப் படைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் மாறுதல் இல்லை. இதுவே நேரான மார்க்கமாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்வதில்லை.387
31, 32. அவனை நோக்கித் திரும்பியவர்களாக (வாய்மை நெறியில் நில்லுங்கள்!) அவனுக்கே அஞ்சுங்கள்! தொழுகையை நிலைநிறுத்துங்கள்! தம்முடைய மார்க்கத்தைப் பிளவுபடுத்தி, பற்பல பிரிவினராகி விட்டார்களே அந்த இணைவைப்போரில் நீங்கள் ஆகி விடாதீர்கள்! ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்கின்றனர்.
33. மனிதர்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் தமது இறைவனைத் நோக்கித் திரும்பியவர்களாக அவனிடம் பிரார்த்திக்கின்றனர். பின்னர் அவன், தனது அருளை அவர்களைச் சுவைக்கச் செய்தால் உடனே அவர்களில் ஒரு சாரார் தமது இறைவனுக்கு இணைவைக்கின்றனர்.
34. அவர்களுக்கு நாம் வழங்கியதில் அவர்கள் நன்றி மறந்ததே இதற்குக் காரணம். நீங்கள் சுகம் அனுபவியுங்கள்! விரைவில் அறிந்து கொள்வீர்கள்.
35. அல்லது இவர்களுக்கு ஏதேனும் ஆதாரத்தை நாம் இறக்கிவைத்து, அது இவர்கள் இணைவைத்துக் கொண்டிருப்பதைப் பற்றிப் பேசுகிறதா?
36. நாம் மனிதர்களுக்கு அருளைச் சுவைக்கச் செய்யும்போது அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். அவர்களின் கைகள் செய்தவற்றால் அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அப்போது நம்பிக்கையிழந்து விடுகின்றனர்.
37. அல்லாஹ், தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை வாரி வழங்குகிறான்; (நாடியோருக்கு) அளவுடனும் கொடுக்கிறான் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா? இறைநம்பிக்கை கொண்ட சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.
38. உறவினருக்கும், ஏழைக்கும், வழிப்போக்கருக்கும் அவர்களின் உரிமைகளை வழங்குவீராக! அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடுவோருக்கு இதுவே மிகச் சிறந்தது. அவர்களே வெற்றியாளர்கள்.
39. மக்களின் பொருளாதாரங்களிலிருந்து (உங்கள் செல்வம்) பெருகுவதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடத்தில் பெருகாது. ஆனால் அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடி நீங்கள் ஸகாத்தாகக் கொடுத்தால், அவர்களே பன்மடங்காகப் பெருக்கிக் கொண்டவர்கள்.
40. அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். பின்னர் அவனே உங்களுக்கு உணவளித்தான். பிறகு உங்களை மரணிக்க வைப்பான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் எதையேனும் செய்பவர்கள் உங்களுடைய இணைக்கடவுள்களில் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணைவைப்பதை விட்டும் உயர்ந்தவன்.
41. மனிதர்களின் கைகள் செய்த (தீ)வினையின் காரணமாகவே தரையிலும், கடலிலும் குழப்பம் தோன்றியது. அவர்கள் செய்த சில செயல்(களின் விளைவு)களை அவர்களைச் சுவைக்கச் செய்வான் என்பதே இதற்குக் காரணம். இதனால் அவர்கள் மீளக்கூடும்.
42. “நீங்கள் பூமியில் பயணித்து, (உங்களுக்கு) முன்னிருந்தோரின் முடிவு எப்படி ஆனது என்பதைப் பாருங்கள்!” என்று கூறுவீராக! அவர்களில் பெரும்பாலோர் இணைவைப்போராகவே இருந்தனர்.
43. ஒருநாள் வருவதற்கு முன், நேரான மார்க்கத்தில் உமது முகத்தை நிலைநிறுத்துவீராக! அல்லாஹ்விடமிருந்து அதைத் தடுப்பது எதுவுமில்லை. அந்நாளில் அவர்கள் பிரிந்து விடுவார்கள்.
44. யார் (இறைவனை) மறுக்கிறாரோ அவரது இறைமறுப்பு அவருக்கே எதிரானது. நற்செயல் செய்வோர், தங்களுக்காகவே முன்னேற்பாடு செய்து கொள்கிறார்கள்.
45. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்தோருக்குத் தனது அருளிலிருந்து அவன் கூலி வழங்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம். இறைமறுப்பாளர்களை அவன் நேசிப்பதில்லை.
46. நற்செய்தியாகவும், உங்களைத் தனது அருளை சுவைக்கச் செய்வதற்காகவும், அவனது ஆணைப்படி கப்பல்கள் செல்வதற்காகவும், அவனது அருளை நீங்கள் தேடுவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் காற்றுகளை அனுப்புவது அவனது சான்றுகளில் உள்ளதாகும்.
47. (நபியே!) உமக்கு முன்பே தூதர்களை, அவர்களின் சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்கள் தெளிவான சான்றுகளுடன் அம்மக்களிடம் வந்தனர். பாவம் செய்தோருக்குத் தண்டனை வழங்கினோம். இறைநம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நமது கடமையாகி விட்டது.
48. அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான். அவை மேகங்களை நகர்த்திச் செல்கின்றன. பிறகு, தான் நாடியவாறு வானத்தில் பரப்பி, அதைப் பற்பல துண்டுகளாக ஆக்குகிறான். பின்னர், அதற்கு இடையிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் பார்க்கிறீர். அதனைத் தனது அடியார்களில், தான் நாடியோருக்கு அவன் பொழிவித்தால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
49. அது அவர்கள்மீது பொழிவிக்கப்படுவதற்கு முன்னர், ஏற்கனவே நம்பிக்கை இழந்தவர்களாகவே இருந்தனர்.
50. (நபியே!) பூமியை, அது இறந்தபின் அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான் என்று அவனது அருளின் அடையாளங்களைக் கவனிப்பீராக! அவனே இறந்தோரையும் உயிர்ப்பிப்பவன். அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் ஆற்றல் மிக்கவன்.
51. நாம் காற்றை அனுப்பி, அ(தனால் பயிரான)து மஞ்சள் நிறமாக மாறுவதைக் அவர்கள் கண்டால், அதன் பின்னர் நன்றி மறந்தவர்களாகி விடுகின்றனர்.
52. (நபியே!) மரணித்தோரைச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது. செவிடர்கள் புறக்கணித்துத் திரும்பிச் செல்லும்போது அவர்களையும் உம்மால் (உமது) அழைப்பை செவியேற்கச் செய்ய முடியாது.388
53. நீர் குருடர்களையும் அவர்களின் வழிகேட்டிலிருந்து (வெளியேற்றி) நேர்வழியில் செலுத்துபவராக இல்லை. உம்மால், நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருப்பவர்களையே செவியேற்கச் செய்ய இயலும்.
54. அல்லாஹ்வே உங்களைப் பலவீனமாகப் படைத்தான். பின்னர் பலவீனத்திற்குப் பிறகு பலத்தை அளித்தான். பிறகு பலத்திற்குப் பின்னர் பலவீனத்தையும், வயோதிகத்தையும் ஏற்படுத்தினான். அவன், தான் நாடியதைப் படைக்கிறான். அவன் நன்கறிந்தவன்; ஆற்றல் மிக்கவன்.
55. மறுமை நிகழ்வு ஏற்படும் நாளில் குற்றவாளிகள், ‘(இவ்வுலகில்) குறைவான நேரமே தவிர தாங்கள் தங்கியிருக்கவில்லை’ என்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறே அவர்கள் திசை திருப்பப்படுவோராக இருந்தனர்.
56. “அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு, (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாள்வரை நீங்கள் தங்கியிருந்தீர்கள். இதுதான் எழுப்பப்படும் நாள். எனினும் நீங்கள் அறியாதோராக இருந்தீர்கள்” என்று கல்வியறிவும், இறைநம்பிக்கையும் கொடுக்கப்பட்டோர் கூறுவார்கள்.
57. அந்நாளில் அநியாயக்காரர்கள் கூறும் சாக்குப்போக்கு அவர்களுக்குப் பயனளிக்காது. மேலும் அவர்கள் பொருந்திக் கொள்ளப்பட மாட்டார்கள்.
58. (நபியே!) மக்களுக்காக ஒவ்வொரு எடுத்துக்காட்டையும் இந்தக் குர்ஆனில் கூறியுள்ளோம். நீர் அவர்களிடம் ஏதேனும் ஒரு சான்றைக் கொண்டு வந்தால், “நீங்கள் பொய்யர்களைத் தவிர வேறில்லை” என்றே இறைமறுப்பாளர்கள் கூறுவார்கள்.
59. இவ்வாறே அறியாதோரின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
60. (நபியே!) பொறுமையை மேற்கொள்வீராக! அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. உறுதியான நம்பிக்கை கொள்ளாதவர்கள் உம்மைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.