மின் கட்டண உயர்வை தவிர்க்க முடியாது என்கிறார்களே?

மக்கள் மீது சுமைகளை விதிக்கும் ஒவ்வொரு அரசும் இது போன்று சொல்வது வாடிக்கையாகி விட்டது.
தமிழகத்தில் மக்களைக் கடுமையாக பாதிக்கும் வகையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் பல வருடங்களாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று காரணம் கூறுவது கட்டண உயர்வை நியாயப்படுத்துவது போல தோன்றினாலும் இதில் உள்ள மற்ற அநியாயங்களை புறந்தள்ளி விட முடியாது.
முன்பு எத்தனை யூனிட் பயன்படுத்தப்பட்டது என்று ஒவ்வொரு மாதமும் ரீடிங் செய்யும் நிலை இருந்தது.
ஒரு மாதத்திற்கு 100 யூனிட் வரை கட்டணம் கிடையாது என்று சலுகையும் இருந்தது.
இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனளித்தது.
பிரிட்ஜ், வாஷிங்மிஷின், ஏசி போன்ற நவீன சாதனங்கள் இல்லாத ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து வீடுகளில் மாதத்திற்கு 100 யூனிட்டிற்குள்ளாகவே பயன்பாடு இருந்ததால் அரசின் இச்சலுகையை அனுபவித்து வந்தனர்.
ஆனால் தற்போது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ரீடிங் செய்கிறார்கள்.
மாதத்திற்கு 60 முதல் 90 யூனிட் வரை பயன்படுத்தி வந்த மக்கள் மாதாமாதம் ரீடிங் செய்யும் போது கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
ஆனால் இரண்டு மாதத்திற்கு சேர்த்து ரீடிங் செய்யும் போது 120 முதல் 180 யூனிட் வரை பயன்படுத்தியிருப்பார்கள்.
எனவே அரசின் 100 யூனிட் வரை இலவசம் எனும் சலுகையை அதிகமான மக்கள் இழக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
அதாவது முன்பு ஒரு மாதத்திற்கு 100 யூனிட் வரை இலவசம் என்றிருந்த நடைமுறையை இப்போது இரண்டு மாதத்திற்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று மாற்றி விட்டார்கள்.
சலுகை அறிவிப்பது போல அறிவித்து விட்டு அதை மக்களிடம் இருந்து பறிக்கும் தந்திர வேலையாகவே இதைக் கருத வேண்டும்.
எந்த அரசு செய்தாலும் மக்களை வஞ்சிக்கும் இச்செயலை ஏற்க முடியாது.
இதில் இன்னொரு விதத்திலும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
தற்போது உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தின் படி இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் பயன்படுத்தினால் 55 ரூபாய் முன்பை விட உயர்த்தப்பட்டுள்ளது.
அதுவே 500 யூனிட் பயன்படுத்துவோராக இருந்தால் முந்தைய கட்டணத்தை விட சுமார் 600 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இப்படி ஒரேயடியாக விலையேற்றம் செய்வது எளிய மக்களால் தாங்க இயலாத காரியமாகும். எந்தக் காரணத்தைக் கொண்டும் இச்செயலை நியாயப்படுத்த முடியாது.
அது தவிர மாதாமாதம் ரீடிங் செய்யாமல் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ரீடிங் செய்வதால் ஒரு யூனிட் அதிகமாகி விட்டால் கூட பெருந்தொகை அதிகமாக செலுத்த வேண்டியதாகி விடுகிறது.
500 யூனிட் பயன்படுத்தினால் 1725 ரூபாய்
501 யூனிட் பயன்படுத்தினால் 2300 ரூபாய்
1 யூனிட் அதிகமாகி விட்டதால் சுமார் 575 ரூபாய் அதிகமாக கட்ட வேண்டியதாகிறது.
இதுவும் ஒருவித பகல் கொள்ளையாகவே தெரிகிறது.
ஒருவர் இரண்டு மாதத்திற்கு 1000 யூனிட் பயன்படுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
இப்போது புதிய கட்டண உயர்வின் படி சுமார் 6000 ரூபாய் கட்ட வேண்டும்.
இரண்டு மாதத்தில் பயன்படுத்தும் மொத்த யூனிட்டுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வதாலேயே இவ்வளவு அதிக தொகை ஏற்படுகிறது.
அதுவே மாதாந்திர ரீடிங் முறை என்றால் 500,- 500 யூனிட்டுகளாக பிரிந்து விடும்.
இப்போது 500 யூனிட்டுகளுக்கு புதிய கட்டண உயர்வுப்படி 1725 ரூபாய் கட்ட வேண்டும்.
அப்படியெனில் 2 மாதத்திற்கு 1000 யூனிட் பயன்படுத்தினால் மாதாந்திர ரீடிங் அடிப்படையில் மாதத்திற்கு 1725 வீதம் இரண்டு மாதத்திற்கு 3450 ரூபாய் தான் ஆகும்.
பெரும் தொகை மக்களுக்கு மிச்சமாகும்.
ஆனால் இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மக்களை கசக்கிப் பிழியும் வகையில் மின்வாரியம் தொடர்ந்து செயல்படுகிறது.
எனவே மாதாந்திர ரீடிங் முறையை தமிழக அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும்.
ஒரு மாதத்திற்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை எந்த வஞ்சகமும் இன்றி மக்களுக்கு வழங்க வேண்டும்.
மின்சார கட்டண உயர்வும் ரீடிங் செய்வதில் உள்ள குளறுபடிகளும் மக்களுக்கு திமுக அரசு மீது அதிருப்தியையே ஏற்படுத்தி உள்ளது.
சாமானிய மக்களை பிழிந்தெடுத்து விட்டு எவ்வளவு தான் நலத்திட்டங்களை வழங்கினாலும் மக்கள் திருப்தி கொள்ள மாட்டார்கள்.
இதை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.