திமுகவின் இரண்டாண்டு ஆட்சிக்காலம் சிறுபான்மையினருக்கு திருப்தியா

ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என திமுக அரசு கொண்டாடி வருகின்றது. இவ்விரண்டு வருடங்களில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை அக்கட்சி சந்தித்துள்ளன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எதையெல்லாம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியாக அளித்தனரோ அதில் சிலவற்றை நிறைவேற்றி உள்ளனர். இன்னும் சிலவற்றை நிறைவேற்றாமலும் உள்ளனர்.
இந்த 2 வருட ஆட்சியில் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற திட்டங்கள் என்றால் மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுத்திட்டம் ஆகியவற்றைக் கூறலாம்.
புதுமைப்பெண் திட்டம் எனும் பெயரில் மாணவியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் மக்களிடம் வரவேற்ப்பை பெற்றுள்ளன. இது போல இன்னும் சிலவற்றைக் கூடப் பட்டியலிடலாம்.
அதேவேளை இந்த இரண்டு வருட ஆட்சியில் மக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை என்று சொல்லிவிட முடியாது.
குறிப்பாகச் சமீபத்தில் திமுக அரசு கொண்டு வந்த 12 மணிநேர வேலைச்சட்ட மசோதா மூலம் பொதுமக்களிடமும் தொழிலாளர்களிடமும் திமுக அரசு அதிருப்தியைச் சம்பாதித்துள்ளன. மக்கள் எதிர்ப்பினால் அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது என்றாலும் மக்கள் மனதில் திமுக அரசின் மீது கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்கவியலாது.
திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது பரிமாறலாம் என்று அனுமதி வழங்கியதும் அவ்வாறே மக்கள் மனங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் அதுவும் திரும்பப் பெறப்பட்டது.
எதிர்க்கட்சியாக இருக்கும் போது பூரண மதுவிலக்கைப் பற்றிப் பேசுவதும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட்டால் மதுபான விற்பனையை அதிகரிக்கப் புதிது புதிதாக யோசிப்பதுமே தமிழகத்தை ஆளும் கட்சிகளுக்கு வழக்காமாகி விட்டது என்று மக்கள் கருத இடமளித்து விட்டது.
குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியதை எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் என்று கூறினாலும் தற்போது அது எல்லாக் குடும்பத்தலைவிகளுக்கும் அல்ல, தகுதியுள்ள குடும்பத்தலைவிகளுக்கு மட்டும் தான் என்று கூறியிருப்பது பெண்களிடையே கடும் ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது எனலாம்.
தேர்தல் வாக்குறுதியில் பொத்தாம்பொதுவாக கூறிவிட்டு இப்போது தகுதியுள்ள என்று வரையறுப்பது ஏமாற்றும் வேலை என்று மக்கள் பொரிந்து தள்ளுகின்றனர். இதற்கு திமுகவிடம் உரிய பதில் இல்லை.
இதன் மூலம் திமுகவை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதற்கு அது இடமளித்து விட்டது என்பது தான் உண்மை. இது போல மின்சாரக் கட்டண உயர்வு, மாதாந்திர கணக்கீடு நடைமுறைக்கு வராதது உள்ளிட்டவையும் ஏமாற்றத்தில் அடங்குபவையே.
இவையெல்லாம் பொதுவான விஷயங்களாகும்.
சிறுபான்மை மக்களிடையேயும் இந்த இரண்டு வருட ஆட்சியில் திமுக ஆட்சி மீது கணிசமான அதிருப்தி ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.


சிறைவாசி விடுதலை
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீண்ட காலம் சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுதலை செய்வோம் என்று தேர்தல் நேரப் பரப்புரைகளில் திமுக கூறிவந்தது. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களும் கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் போதுமான தீர்வு ஏற்படவில்லை.
குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் என்று தேர்தல் வாக்குறுதியில் பொதுவாகக் கூறிவிட்டு தற்போது தகுதியுள்ள குடும்பத்தலைவிகளுக்கு மட்டும் தான் என்று மாற்றுவதைப் போலவே நீண்ட காலம் சிறையில் வாடும் இஸ்லாமியர் விடுதலை பற்றி முதலில் பேசிவிட்டு தற்போது அனைவரையும் அவ்வாறு விடுதலை செய்ய முடியாது.
பல்வேறு அளவீடுகளின் படி தகுதிகள் பார்த்துத் தான் விடுதலை செய்ய முடியும் என்று மாற்றி பேசியது சிறுபான்மை சமூகத்திற்கு சற்றே நெருடலை உண்டாக்கியது.
நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் கமிஷன் அமைத்ததோடு சரி. அதன் பிறகு அது தொடர்பாக மேலதிகத் தகவல் எதையும் அதிகாரப்பூர்வமாக திமுக அரசு கூறவில்லை. தற்போது வரை கூட கமிஷன் என்னவானது என்பது கூடத் தெரியவில்லை. கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கிறது.
ராஜீவ்காந்தி குற்றவாளிகள் விடுதலையாகி விட்ட நிலையில் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை மட்டும் திமுக ஆட்சியிலும் கேள்விக்குறியாகவே இருப்பது சிறுபான்மை சமூகத்திற்கு சற்றே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஹிஜாப் தடை மீது மௌனம்
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் பர்தா எனும் தலைமுக்காடு அணிய அம்மாநில அரசால் அனுமதி மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து மாணவிகள் உயர்நீதிமன்றம் சென்ற போது மாநில அரசின் தடை செல்லும் என்று தீர்ப்பளித்தது.
பள்ளி, கல்லூரிகளில் எல்லா மதத்தினரும் அவரவர் மத அடையாளங்களுடன் வர அனுமதி இருக்கும் போது முஸ்லிம் மாணவிகளுக்கு மட்டும் அனுமதி மறுப்பது மத சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும். இது பாஜகவின் அருவருப்பான அரசியல் என்பது தான் பலரின் கருத்தாக இருந்தது.
பல்வேறு தலைவர்கள், பிரமுகர்கள் ஹிஜாப் தடை குறித்து ஆழமான கண்டனத்தை வெளிப்படுத்தினர். ஆனால் திமுக அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் வெளிப்படவில்லை.
திமுகவின் சில பிரமுகர்கள் இது பற்றி கருத்து சொன்னாலும் தமிழகத்தின் முதல்வரிடமிருந்து கண்டனம் எதுவும் வராதது முஸ்லிம்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.
வன்மம் கக்கிய கேரளா ஸ்டோரி
கடந்த மே 5 அன்று கேரளா ஸ்டோரி எனும் திரைப்படம் வெளியானது. இது உண்மைக்குப் புறம்பாக முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்திய படம் என்பதை அனைவரும் அறிவர்.
கல்லூரியில் பயிலும் முஸ்லிம் பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் அவர்கள் மத மாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என அவதூறாக முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த படம். எனவே தான் பலரும் இந்தத் திரைப்படத்திற்குத் தடை கோரினர்.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் இத்திரைப்படத்திற்கு எதிராகக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெறுப்பை விதைக்கும் இப்படத்தை அனுமதிக்க முடியாது எனக்கூறினார். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களோ இது குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தமிழகத்தில் பாஜகவின் பொதுச்சரக்குகள் விற்பனையாவது பெரும் ஆபத்து. ஆகவே கேரளா ஸ்டோரி படத்தைத் திரையிடத் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று முஸ்லிம்கள், மனிதநேய வாதிகள் அனைவரும் குரல் கொடுத்தனர்.
ஆனால் திமுக அரசு அந்தக் குரல்கள் எதையும் செவிமடுக்கவில்லை.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக இருந்தது. அப்படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதியாகச் சித்தரிப்பது கண்டு முஸ்லிம்கள் கொதித்தனர். கொந்தளித்தனர். அப்படத்தைத் தடைசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். முஸ்லிம்களின் குரலுக்குச் செவிசாய்த்து விஸ்வரூபம் படத்தை வெளியிட ஜெயலலிதா தடை விதித்தார்.
இதையெல்லாம் முஸ்லிம்கள் நினைவு கூர்ந்து விஸ்வரூபத்திற்குத் தடை விதித்தது போல ஏன் கேரளா ஸ்டோரிக்கு தடை விதிக்கவில்லை என திமுக அரசின் மீது விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.
தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி நூற்றுக்கணக்கான வீடியோக்கள் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பேசியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் முஸ்லிம் சமூகத்தின் மீது அவதூறு பரப்பும் கேரளா ஸ்டோரி படத்திற்கு எவ்விதத் தடையும் இல்லை.
முதல்வரிடமிருந்து ஆதரவான, அரவணைப்பான கருத்தோ கண்டனமோ வெளிவரவில்லை.
அதுமட்டுமின்றி தமிழகக் காவல்துறை பாதுகாப்புடன் கேரளா ஸ்டோரி வெளியாகும் என டிஜிபியின் அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்தது.
இவை எல்லாமும் சேர்த்து திமுக அரசின் மீது சிறிது சிறிதாக முஸ்லிம்களுக்கு அதிருப்தியைக் கட்டமைக்கின்றது.
சிறுபான்மை சமூகத்திற்கு திமுக எதுவும் செய்யவில்லை என்பது முஸ்லிம்களின் வாதமல்ல. இதை அப்படிப் புரிந்து கொள்ளக் கூடாது.
முஸ்லிம்களுக்கு 3.5 இட ஒதுக்கீடு வழங்கியதாகட்டும் சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் இயற்றியதாகட்டும் முஸ்லிம்கள் அதை மறக்கவுமில்லை. மறுக்கவுமில்லை.
அண்மையில் கூட கர்நாடக பாஜக முஸ்லிம்களுக்கு நடைமுறையில் இருந்த 4 சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் கண்டித்து கருத்துகூறி இருந்தார். உண்மையில் இதுபோன்ற செயல்பாடுகளே திமுகவை முஸ்லிம்களிடம் நெருக்கமாக்குகின்றது.
இஸ்லாமியர்களின் உரிமைக்காக எப்போதும் திமுக முதலில் குரல் கொடுக்கும் என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஆகவே தான் முஸ்லிம்கள் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் திமுகவிடமிருந்தும் ஸ்டாலின் அவர்களிடமிருந்தும் எதிர்ப்புக்குரலையும் ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் எதிர்பார்க்கின்றனர்.
இந்த எதிர்பார்ப்பை அதிமுகவிடமோ எடப்பாடியிடமோ முஸ்லிம்கள் துளியும் எதிர்பார்ப்பதில்லை எனில் திமுகவைத் தங்களுக்கு நெருக்கமான கட்சியாக, தங்களுக்கு அரணாக விளங்கும் கட்சியாகப் பெரும்பான்மை முஸ்லிம்கள் பார்க்கின்றனர். ஆகவே தான் திமுகவிடம் உரிமையுடன் உரிய நடவடிக்கையை இத்தகு நேரத்தில் எதிர்பார்க்கின்றனர்.
இரண்டாண்டு ஆட்சிக்காலம் முடிந்தாலும் இனிவரும் காலங்களில் இதை திமுக அரசு உணர்ந்து செயல்பட்டால் அதிருப்திகளைச் சரிசெய்ய முடியும்.
அதுவன்றி எந்நிலை ஏற்பட்டாலும் முஸ்லிம்கள் தங்களிடம் தான் சரணாகதி அடைந்தாக வேண்டும். அவர்களுக்கு வேறு வாய்ப்பே இல்லை என்று நடந்து கொண்டால் காங்கிரசுக்கு நேர்ந்த கதி திமுகவிற்கு நடக்காது என்பதற்கு உத்தரவாதமில்லை.
திமுக அரசு இதைப்புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.