மதுராவைக் குறித்து பாஜகவினர் அரசியல் செய்கின்றனரே?

டிசம்பர் மாத துவக்கத்தில் உ.பி யின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் ஒரு ட்வீட் செய்திருந்தார். அயோத்தியில் கோயில் கட்டுமான பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. அடுத்து மதுரா தயாராகி வருகிறது என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதை தொடர்ந்து பாபர் மசூதியை இடிக்க பயன்படுத்திய அதே பார்முலாவை அகில இந்திய இந்து மகா சபையினர் பயன்படுத்த முயற்சித்தனர்.
டிசம்பர் 6ம் தேதி அதாவது பாபர் மசூதியை இடித்த அதே தினத்தில் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ள பகுதியில் குழந்தை கிருஷ்ணர் சிலையை வைத்து பூஜை செய்ய திட்டமிட்டனர்.
மதுரா மாவட்ட நிர்வாகம் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கவே பூஜையை வேறொரு பகுதியில் நடத்தினர்.
இவ்வாறு சமீப சில நாள்களாவே அம்மாநில சமூக வலைத்தளங்களில் மதுரா பள்ளிவாசலை குறிவைத்து சட்டத்திற்கு புறம்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
பாபர் மசூதியை இடித்தது போலவே மதுரா பள்ளிவாசலையும் இடித்து தகர்க்க வேண்டும். அங்கு கிருஷ்ணருக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்று பதிவிட்டு மீண்டும் மத மோதலை, கலவரத்தை உருவாக்க அடித்தளமிடுகிறார்கள்.
ஏதோ முகமறியா சாமானியர்கள் இக்கருத்தை கூறுகிறார்கள் என்று நாம் புறந்தள்ள முடியாது.
டிசம்பர் 6 அன்று நாடாளுமன்ற அவையில் பாஜக எம்.பி குஷ்வாகா ஒரு கருத்தை கூறினார்.
வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் போது வழிபாட்டுத்தலங்களுக்கான பாதுகாப்பு சட்டம் ஏன் ரத்து செய்யப்படக்கூடாது என்பது தான் அவர் கூறிய கருத்து.
வழிபாட்டுத்தலங்களுக்கான சட்டம் என்பது சுதந்திர இந்தியாவில் வழிபாட்டுத்தலங்கள் யார் யாருக்குரியதாக இருந்தனவோ அதே நிலை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும் சட்டம் ஆகும்.
இது எங்கள் வழிபாட்டுத்தலம் இருந்த இடம் என்று ஆளாளுக்கு எதையாவது கூறி கலவரத்தை ஏற்படுத்த கூடாது. பிற சமயங்களின் வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்படக் கூடாது என்பதற்காக நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.
தங்கள் மனம் போன போக்கில் மசூதிகளை எல்லாம் இடித்து தள்ளுவதற்கு இந்தச் சட்டம் தடையாக இருப்பதால் அச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூக்குரலிடுகிறார்கள்.
பாஜகவின் மற்றொரு எம்.பி ஹரிநாத் சிங் வழிபாட்டுத்தலங்களுக்கான பாதுகாப்புச் சட்டம் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிரானதாக உள்ளது. கிருஷ்ணர் பிறந்த இடத்தை கைப்பற்றியவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கின்றது என்று அவரும் தன் பங்கிற்கு விஷத்தை கக்கினார்.
ராமர் பிறந்த பூமி, கிருஷ்ணர் பிறந்த பூமி, எங்களுக்கு தான் அந்த நிலம் சொந்தம் என்று தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வெளியில் பேசித்திரிந்த சட்டத்திற்கு புறம்பான கருத்துகளை நாடாளுமன்றத்திலேயே ஒலிக்கத் துவங்கி விட்டார்கள்.
உ.பியில் வெகு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் மதுரா பள்ளிவாசலை குறிவைத்து அடுத்த கலவரத்திற்கு பலமாக அடித்தளம் போடுகிறது பாஜக.
பாபர் மசூதியை இடித்து தகர்த்தது மட்டுமின்றி, சட்டத்தின் அத்தனை கூறுகளையும் குப்பையில் தூக்கி வீசி விட்டு அவ்விடத்தை சங்பரிவார கும்பலிடம் நீதித்துறை வழங்கியது.
பல உயிர்களை காவு வாங்கிய ரத்தக்கறையில் தான் அங்கே தற்போது ராமர் கோவில் கட்டப்படுகிறது.
இப்போது மீண்டும் கலவரத்தை உண்டாக்கி அதில் குளிர்காய, தேர்தல் ஆதாயம் பெற பாஜக முயற்சிக்கின்றது. அதற்காகவே மதுரா பள்ளிவாசலை குறிவைத்து அரசியல் செய்கிறார்கள்.
சட்டத்திற்கு புறம்பான, கலவரப் பேச்சுக்களை ஆரம்பத்திலேயே அடக்கி வைக்க வேண்டும். இதற்கு எதிரான கடும் கண்டங்களை நாடாளுமன்ற எம்.பிக்கள் பதிவு செய்து ஜனநாயகத்தை காக்க முன்வர வேண்டும்.