அர்ரஹ்மான் – அளவிலா அருளாளன்

அத்தியாயம் : 55

வசனங்களின் எண்ணிக்கை: 78

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1, 2. அளவிலா அருளாளன். அவன் குர்ஆனைக் கற்பித்தான்.
3, 4. மனிதனைப் படைத்து, அவனுக்கு விளக்கத்தையும் கற்பித்தான்.
5. சூரியனும், சந்திரனும் கணக்கீட்டின்படியே உள்ளன.
6. செடி, கொடிகளும், மரங்களும் (அவனுக்கே) பணிகின்றன.
7, 8. அவனே வானத்தை உயர்த்தினான். நிறுவையில் நீங்கள் வரம்பு மீறாதிருக்க தராசையும் ஏற்படுத்தினான்.
9. நீங்கள் நிறுவையில் நடுநிலையை நிலைநாட்டுங்கள்! எடையைக் குறைத்து விடாதீர்கள்!
10. அவன் படைப்பினங்களுக்காகப் பூமியை அமைத்தான்.
11, 12. அதில் பழங்களும், பாளைகள்மிக்க பேரீச்சை மரங்களும், தோல் மூடிய தானியங்களும், நறுமணமுள்ள தாவரங்களும் உள்ளன.
13. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? 519
14, 15. சுட்ட மண்பாண்டத்தைப் போன்ற, ஓசை தரும் களிமண்ணால் மனிதனைப் படைத்தான். நெருப்புப் பிழம்பால் ஜின்னைப் படைத்தான்.520
16. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
17. (அவனே) இரு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன்; இரு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.
18. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
19. அவனே இரு கடல்களை ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
20. அவை, ஒன்றையொன்று மீற முடியாதவாறு அவ்விரண்டிற்குமிடையே ஒரு தடுப்பு அமைந்துள்ளது.
21. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
22. அவ்விரண்டிலிருந்தும் முத்துகளும், பவளங்களும் வெளியாகின்றன.
23. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
24. மலைகளைப் போன்று கடலில் உயர்த்தப்பட்ட கப்பல்கள் அவனுக்குரியதே!
25. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
26. பூமியிலுள்ள அனைவரும் அழியக் கூடியவர்களே!
27. கண்ணியமும், பெருமையுமிக்க உமது இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
28. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
29. வானங்கள், பூமியில் உள்ளவர்கள் அவனிடமே வேண்டுகின்றனர். ஒவ்வொரு நாளும் அவன் இயக்கத்திலேயே இருக்கிறான்.
30. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
31. வலுவான (மனித, ஜின் ஆகிய) இரு கூட்டத்தினரே! (விசாரணை செய்வதற்காக) உங்கள் விஷயத்தில் ஈடுபடுவோம்.
32. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
33. மனித, ஜின் கூட்டத்தினரே! வானங்கள், பூமியின் எல்லைகளைக் கடந்து செல்ல உங்களுக்கு இயலுமானால் கடந்து செல்லுங்கள்! சக்தியைக் கொண்டே தவிர உங்களால் கடந்து செல்ல முடியாது.
34. (மனித, ஜின் இனமான) நீங்கள் இரு சாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
35. உங்கள் இருசாராருக்கும் எதிராக தீப் பிழம்புகளும், புகை மூட்டமும் அனுப்பப்படும். நீங்கள் தற்காத்துக் கொள்ள முடியாது.
36. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
37. வானம் பிளந்து, அது செந்தோலைப் போல் சிவந்த ரோஜா நிறமாகும்போது (உங்கள் நிலை என்னவாகும்?)
38. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
39. அன்று மனிதனிடமோ, ஜின்னிடமோ அவர்களின் பாவங்களைப் பற்றி விசாரித்து அறிய வேண்டியிருக்காது.
40. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
41. குற்றவாளிகள், அவர்களின் அடையாளத்தைக் கொண்டு அறியப்பட்டு, முன்னெற்றி மயிர்க் கற்றைகளும், கால்களும் பற்றிப் பிடிக்கப்படும்.
42. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
43, 44. குற்றாவாளிகள் எதைப் பொய்யெனக் கூறிக்கொண்டிருந்தார்களோ அந்த நரகம் இதுதான். அதற்கும், கடும் கொதிநீருக்குமிடையில் அவர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
45. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
46. தமது இறைவன் முன் நிற்க வேண்டும் என்று அஞ்சி நடந்தவருக்கு இரண்டு சொர்க்கங்கள் உள்ளன.521
47. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
48. அவ்விரண்டு (சொர்க்கங்களு)ம் அடர்த்தியான கிளைகள் உடையவை.
49. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
50. அவ்விரண்டிலும் பொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு நீரூற்றுகள் உள்ளன.
51. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
52. அவ்விரு சொர்க்கங்களின் எல்லாப் பழங்களிலும் இரு வகைகள் உள்ளன.
53. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
54. விரிப்புகளின்மீது அவர்கள் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். அதன் உட்பகுதி கனத்த பட்டுகளால் ஆனது. இரண்டு சொர்க்கங்களின் பழங்கள் (பறிப்பதற்கு) நெருக்கமாக இருக்கும்.
55. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
56. அங்கு நாணப் பார்வையுடைய கன்னியர் இருப்பார்கள். இவர்களுக்குமுன் எந்த மனிதனும், ஜின்னும் அவர்களைத் தீண்டியதில்லை.
57. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
58. அவர்கள் மாணிக்கத்தையும், பவளத்தையும் போன்றிருப்பார்கள்.522
59. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
60. நன்மை (செய்தோரு)க்கு, நன்மையைத் தவிர வேறு கூலி உண்டா?
61. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
62. அவ்விரண்டைத் தவிர வேறு இரு சொர்க்கங்களும் உள்ளன.523
63. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
64. அவ்விரண்டும் அடர்த்தியான பச்சை நிறமுடையவை.
65. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
66. அவ்விரண்டிலும் பொங்கிக் கொண்டிருக்கும் இரு நீரூற்றுகள் உள்ளன.
67. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
68. அவ்விரண்டிலும் பழங்களும், பேரீச்சைகளும், மாதுளைகளும் உண்டு.
69. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
70. அங்கு அழகிய, நற்குணமிக்க பெண்கள் இருப்பார்கள்.
71. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
72. (அவர்கள்) கூடாரங்களில் மறைத்து வைக்கப்பட்ட ஹூர் எனும் கன்னியர்.
73. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
74. இவர்களுக்குமுன் எந்த மனிதனும், ஜின்னும் அவர்களைத் தீண்டியதில்லை.
75. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
76. பச்சை நிறத் தலையணைகளின்மீதும், அழகிய விரிப்புகளின்மீதும் அவர்கள் சாய்ந்திருப்பார்கள்.
77. (மனித, ஜின் இனமான) நீங்கள் இருசாராரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
78. கண்ணியமும், பெருமையுமிக்க உமது இறைவனின் பெயர் பாக்கியம் நிறைந்தது.524