அர்ரஃது – இடி

அத்தியாயம் : 13

வசனங்களின் எண்ணிக்கை: 43

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. அலிஃப், லாம், மீம், ரா. இவை வேதத்தின் வசனங்களாகும். உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டுள்ள இது உண்மையானது. எனினும் (இதனை) மனிதர்களில் பெரும்பாலோர் நம்புவதில்லை.
2. நீங்கள் பார்க்கும் வகையிலான தூண்களின்றி வானங்களை அல்லாஹ்தான் உயர்த்தியுள்ளான். பின்னர் அர்ஷின்மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தியுள்ளான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைவரை ஓடுகின்றன. அவன் காரியங்களை நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதி கொள்வதற்காகச் சான்றுகளை விவரிக்கிறான்.
3. அவனே பூமியை விரித்து அதில் மலைகளையும், ஆறுகளையும் ஏற்படுத்தினான். அதில் அனைத்துக் கனி (தரும் தாவரங்)களிலும் ஆண், பெண் கொண்ட ஜோடிகளை உருவாக்கினான். இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் மக்களுக்கு இதில் சான்றுகள் உள்ளன.
4. அருகருகே இருக்கும் (நிலப்) பகுதிகள் பூமியில் உள்ளன. (அவற்றில்) திராட்சைத் தோட்டங்களும், பயிர்களும், கிளைகள் படர்ந்த மற்றும் கிளைகள் படராத பேரீச்சை மரங்களும் உள்ளன. ஒரேவிதமான நீர்தான் அவற்றுக்குப் பாய்ச்சப்படுகிறது. ஆனால் அவற்றில் ஒன்றைவிட மற்றொன்றைச் சுவையில் சிறப்பாக்கியுள்ளோம். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.
5. நீர் ஆச்சரியப்படுவீராயின், “நாம் மண்ணாகி விட்டாலும் புதிய படைப்பாக ஆவோமா?” என்ற அவர்களின் கூற்றே ஆச்சரியமானது. அவர்களே தமது இறைவனை மறுத்தவர்கள். இத்தகையோருக்கு அவர்களின் கழுத்துகளில் விலங்குகள் உள்ளன. அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
6. அவர்கள் நன்மைக்கு முன் (வேதனை எனும்) தீமையை உம்மிடம் விரைந்து தேடுகின்றனர். இவர்களுக்கு முன்னரும் எடுத்துக்காட்டுகள் சென்றுள்ளன. மனிதர்களின் அநியாயங்களை உமது இறைவன் மன்னிப்பவன். எனினும் உமது இறைவன் தண்டிப்பதிலும் கடுமையானவன்.
7. “இவருக்கு ஓர் அற்புதம் அவரது இறைவனிடமிருந்து இறக்கப்பட வேண்டாமா?” என இறைமறுப்பாளர்கள் கேட்கின்றனர். (நபியே!) நீர் எச்சரிப்பவர்தான். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிகாட்டி உண்டு.
8. ஒவ்வொரு பெண்ணும் கருவுறுவதையும், கர்ப்பப் பைகள் சுருங்குவதையும், அவை விரிவடைவதையும் அல்லாஹ் அறிவான். அவனிடம் ஒவ்வொரு பொருளும் ஓர் அளவைக் கொண்டுள்ளது.263
9. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன்; மிகப் பெரியவன்; மிக உயர்ந்தவன்.264
10. (அவனைப் பொறுத்தவரை) உங்களில் இரகசியமாகப் பேசுபவரும், சப்தமாகப் பேசுபவரும், இரவில் மறைந்து கொள்பவரும், பகலில் பகிரங்கமாகச் செல்பவரும் சமமே!
11. மனிதனுக்கு முன்னும், பின்னும் தொடரக்கூடிய (வான)வர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் ஆணைப்படி அவனைப் பாதுகாக்கின்றனர். ஒரு சமுதாயத்தினர் தமது நிலையை மாற்றிக் கொள்ளாதவரை அவர்களின் நிலையை அல்லாஹ் மாற்றுவதில்லை. அல்லாஹ், ஒரு சமுதாயத்திற்குத் தீங்கை நாடிவிட்டால் அதைத் தடுப்பது எதுவுமில்லை. அவனையன்றி அவர்களுக்கு எந்தப் பாதுகாவலரும் இல்லை.265
12. மின்னலை அச்சமாகவும், ஆதரவாகவும் அவனே உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகங்களையும் உருவாக்குகிறான்.
13. இடி அவனது புகழைக் கொண்டும், வானவர்கள் அவனது அச்சத்தாலும் அவனைப் போற்றுகின்றனர். அவனே இடி முழக்கங்களை அனுப்புகிறான். தான் நாடியோருக்கு அவற்றின் மூலம் பாதிப்பை ஏற்படுத்துகிறான். அல்லாஹ்வைப் பற்றி அவர்கள் வாக்குவாதம் செய்கின்றனர். அவன் தண்டிப்பதில் கடுமையானவன்.266
14. அவனுக்கே உண்மையான பிரார்த்தனை உரியது. அவனை விட்டுவிட்டு, யாரை இவர்கள் அழைக்கிறார்களோ அவர்கள் சிறிதும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாகவே) ஒருவனது வாயைச் சென்றடையாது என்ற நிலையில், அது தனது வாய்க்குள் செல்வதற்காகத் தனது கைகளை அதை நோக்கி விரித்துக் கொண்டே இருப்பவனைப் போன்று (அவர்களின் நிலை) உள்ளது. (இவ்வாறே) இறைமறுப்பாளர்களின் பிரார்த்தனைகள் வழிதவறியவையாகவே உள்ளன.
15. வானங்களிலும், பூமியிலும் இருப்பவை விரும்பினாலும், விரும்பா விட்டாலும் அவை அல்லாஹ்வுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்கள் காலையிலும், மாலையிலும் (அவனுக்குப் பணிகின்றன.)
16. “வானங்கள், பூமியின் இறைவன் யார்?” என நீர் கேட்பீராக! “அல்லாஹ்” என்று கூறுவீராக! “அவனை விட்டுவிட்டு (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக்கொண்டீர்களா? அவர்கள் தமக்கே எந்த நன்மையும், தீமையும் செய்ய சக்திபெற மாட்டார்கள்” என்று கூறுவீராக! “பார்வையற்றவனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திய இணைக்கடவுள்கள், அவன் படைத்ததைப் போன்று (எதையும்) படைத்து, அதனால் (யாருடைய) படைப்பு (என்பதில்) அவர்களுக்குக் குழம்பி விட்டதா?” என்றும் கேட்பீராக! “அல்லாஹ்வே ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். அவன் தனித்தவன்; அடக்கியாள்பவன்” என்று கூறுவீராக!
17. அவன் வானிலிருந்து மழை பொழியச் செய்கிறான். நீரோடைகள் தத்தமது அளவுக்குத் தக்கபடி ஓடுகின்றன. பொங்கும் நுரையைச் சுமந்தவாறு வெள்ளம் ஓடுகிறது. நகையோ, நுகர்வுப் பொருளோ செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்கும்போதும் அதுபோன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் எடுத்துக்காட்டைக் கூறுகிறான். நுரை வீணாகப் போய் விடுகிறது; ஆனால் மக்களுக்குப் பயனளிப்பதோ பூமியில் தங்கி விடுகிறது. இவ்வாறே அல்லாஹ் எடுத்துக்காட்டுகளை எடுத்துரைக்கிறான்.
18. யார் தமது இறைவனுக்குப் பதிலளிக்கிறார்களோ அவர்களுக்குச் சிறந்த நன்மை உண்டு. யார் அவனுக்குப் பதிலளிக்கவில்லையோ அவர்களிடம் பூமியிலுள்ள அனைத்தும், அதனுடன் அதுபோன்றதும் இருந்தாலும் அதை (அவனது தண்டனைக்கு) ஈடாகக் கொடுத்து விடுவார்கள். அவர்களுக்குக் கடினமான விசாரணை உண்டு. அவர்களின் தங்குமிடம் நரகம். தங்குமிடத்தில் அது கெட்டது.
19. உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டது உண்மையே என்று அறிபவர், (சிந்திக்காத) குருடரைப் போன்று ஆவாரா? அறிவுடையவர்களே படிப்பினை பெறுவர்.
20. அவர்கள் அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றுவார்கள்; ஒப்பந்தத்தை முறிக்க மாட்டார்கள்.
21. (தம்முடன்) சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ் ஆணையிட்ட (இரத்த பந்தத்)தைச் சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் தமது இறைவனுக்கு அஞ்சுவார்கள்; கடினமான விசாரணைக்கும் அஞ்சுவார்கள்.
22. அவர்கள் தமது இறைவனின் பொருத்தத்தை நாடி பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையை நிலைநிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவிடுவார்கள். நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே மறுமையில் நல்முடிவு உண்டு.
23, 24. அவர்களும், அவர்களின் பெற்றோர், மனைவியர், பிள்ளைகள் ஆகியோரில் நல்லோராக இருந்தவர்களும் நிலையான சொர்க்கங்களில் நுழைவார்கள். அவர்களிடம் வானவர்கள் அனைத்து வாசல்களிலிருந்தும் வருவார்கள். “நீங்கள் பொறுமையை மேற்கொண்டதால் உங்கள்மீது அமைதி ஏற்படட்டும்! மறுமையின் முடிவு நல்லதாகி விட்டது (என்று கூறுவார்கள்.)
25. அல்லாஹ்விடம் ஏற்படுத்திய உடன்படிக்கையை உறுதிப்படுத்திய பிறகு யார் அதை முறித்து, சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ் ஆணையிட்ட (இரத்த பந்தத்)தைத் துண்டித்து, பூமியில் குழப்பம் விளைவிக்கிறார்களோ அவர்களுக்கே சாபம் உள்ளது. அவர்களுக்கு மறுமையில் கேடு உள்ளது.
26. அல்லாஹ், தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை வாரி வழங்குகிறான்; (நாடியோருக்கு) அளவுடனும் கொடுக்கிறான். அவர்கள் இவ்வுலக வாழ்வைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் மறுமையுடன் ஒப்பிடுகையில் இவ்வுலக வாழ்வு அற்ப இன்பத்தைத் தவிர வேறில்லை.
27. “இவரது இறைவனிடமிருந்து இவருக்கு ஓர் அற்புதம் இறக்கப்பட வேண்டாமா?” என இறைமறுப்பாளர்கள் கேட்கின்றனர். “தான் நாடியவர்களை அல்லாஹ் வழிகேட்டில் விடுகிறான். மீண்டவருக்குத் தன்னை நோக்கி வழிகாட்டுகிறான்” என்று கூறுவீராக!
28. அவர்களே இறைநம்பிக்கை கொண்டவர்கள். அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன.
29. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோருக்கு நற்பேறுகளும், அழகிய புகலிடமும் உண்டு.
30. (நபியே!) இ(தற்கு முன்பு தூதர்களை அனுப்பிய)துபோன்றே ஒரு சமுதாயத்திற்கு உம்மை நாம் தூதராக அனுப்பியுள்ளோம். இவர்களுக்கு முன்னர் பல சமுதாயங்கள் சென்று விட்டன. உமக்கு நாம் அறிவித்தவற்றை இவர்களுக்கு நீர் எடுத்துரைக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம். இவர்களோ அளவிலா அருளாளனை மறுக்கின்றனர். “அவனே என் இறைவன். அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. அவன்மீதே நம்பிக்கை வைத்துள்ளேன். அவனிடமே என் திரும்புதல் இருக்கிறது” என்று கூறுவீராக!
31. குர்ஆன் மூலமாக மலைகள் பெயர்க்கப்பட்டாலும், அல்லது அதன் மூலம் பூமி துண்டு துண்டாக்கப்பட்டாலும், அல்லது மரணித்தோர் அதன்மூலம் பேச வைக்கப்பட்டாலும் (அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.) எனினும், அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதில் இறைநம்பிக்கை கொண்டோர் தெளிவாகவில்லையா? அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறும்வரை, இறைமறுப்பாளர்களுக்கு அவர்கள் செய்தவற்றின் காரணமாக ஏதேனும் அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்; அல்லது அது அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகில் ஏற்படும். அல்லாஹ், வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான்.
32. (நபியே!) உமக்கு முன்னரும் தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். இறைமறுப்பாளர்களுக்கு நான் அவகாசமளித்துப் பின்னர் அவர்களைப் பிடித்தேன். அப்போது எனது தண்டனை எப்படி இருந்திருக்கும்?
33. ஒவ்வொருவரின் செயலையும் கண்காணிப்பவ(ன், அவ்வாறு கண்காணிக்காதவனைப் போன்றவ)னா? அல்லாஹ்வுக்கு இணை தெய்வங்களை ஏற்படுத்துகின்றனர். “அவற்றைப் பற்றிக் குறிப்பிடுங்கள்! அல்லது பூமியில் அவன் அறியாததை அவனுக்கு அறிவிக்கிறீர்களா? அல்லது வெற்றுப் பேச்சா?” என்று கேட்பீராக! அவ்வாறல்ல! இறை மறுப்பாளர்களுக்கு அவர்களின் சூழ்ச்சி அழகாக்கப்பட்டு, நேர்வழியை விட்டும் தடுக்கப்பட்டு விட்டனர். யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.
34. அவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் வேதனை உள்ளது. மறுமை வேதனையோ மிகக் கடுமையானது. அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுபவர் யாருமில்லை.
35. இறையச்சமுடையோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மையானது, அதன் கீழ் ஆறுகள் ஓடும். அதன் உணவும், அதன் நிழலும் நிரந்தரமானது. இதுவே இறையச்சமுடையோருக்கான முடிவாகும். இறைமறுப்பாளர்களுக்கான முடிவு நரகமாகும்.
36. (நபியே!) யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் உமக்கு அருளப்பட்டதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர். அதில் சிலவற்றை மறுப்போரும் அக்கூட்டங்களில் உள்ளனர். “அல்லாஹ்வையே நான் வணங்க வேண்டும்; அவனுக்கு இணை வைக்கக் கூடாது என்றே நான் பணிக்கப்பட்டுள்ளேன். அவனை நோக்கியே அழைக்கிறேன். அவனிடமே என் திரும்புதல் இருக்கிறது” என்று கூறுவீராக!
37. இவ்வாறே இதனை அரபு மொழியில் அமைந்த சட்டமாக அருளியுள்ளோம். உமக்கு ஞானம் வந்த பிறகு அவர்களின் விருப்பத்தை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து உம்மைப் பாதுகாப்பவரோ, காப்பாற்றுபவரோ யாருமில்லை.
38. (நபியே!) உமக்கு முன்னரும் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், பிள்ளைகளையும் ஏற்படுத்தினோம். அல்லாஹ்வின் ஆணையின்றி எந்தத் தூதராலும் அற்புதத்தைக் கொண்டுவர முடியாது. ஒவ்வொரு தவணைக்கும் ஒரு நிர்ணயம் உள்ளது.
39. தான் நாடியதை அல்லாஹ் நீக்குகிறான். (நாடியதை நீக்காமல்) நிலைக்கச் செய்கிறான். அவனிடமே மூலப் பதிவேடு உள்ளது.
40. அவர்களுக்கு நாம் எச்சரித்ததில் சிலவற்றை உமக்குக் காட்டினாலும் அல்லது (அதற்கு முன்பே) உம்மை நாம் கைப்பற்றினாலும் (அதைப்பற்றிக் கவலைப்படாதீர்!) எடுத்துரைப்பதே உமக்குக் கடமை. விசாரிப்பது நமது பொறுப்பாகும்.
41. நாம் பூமிக்கு வந்து, அதன் விளிம்புகளிலிருந்து அதனைக் குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பை மாற்றுபவர் யாருமில்லை. அவன் விரைந்து கணக்கெடுப்பவன்.
42. இவர்களுக்கு முன்னிருந்தோரும் சூழ்ச்சி செய்தனர். ஆனால் அனைத்து சூழ்ச்சிகளும் அல்லாஹ்விடமே உள்ளன. அவன், ஒவ்வொருவரும் சம்பாதிப்பவற்றை அறிகிறான். மறுமையில் நல்முடிவு யாருக்கு என்பதை இறைமறுப்பாளர்கள் அறிந்து கொள்வார்கள்.
43. (நபியே!) “நீர் தூதராக அனுப்பப்பட்டவர் அல்ல!” என இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர். “எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ் போதுமானவன். வேத அறிவு உள்ளவர்களும் (சாட்சிகளாவர்)” என்று கூறுவீராக!