அத்தியாயம் : 27
வசனங்களின் எண்ணிக்கை: 93
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. தா, ஸீன். இவை குர்ஆன் மற்றும் தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
2. இறைநம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இருக்கிறது.
3. அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; ஸகாத்தைக் கொடுப்பார்கள். அவர்கள்தான் மறுமையையும் உறுதியாக நம்புவார்கள்.
4. மறுமையை நம்பாதோருக்கு, அவர்களின் செயல்களை அழகாக்கிக் காட்டியுள்ளோம். எனவே அவர்கள் தடுமாறித் திரிகின்றனர்.
5. அத்தகையோருக்கே கொடிய வேதனை உண்டு. அவர்கள்தான் மறுமையில் மிக நஷ்டமடைந்தவர்கள்.
6. (நபியே!) இந்தக் குர்ஆன், நன்கறிந்த நுண்ணறிவாளனிடமிருந்து உமக்கு வழங்கப்படுகிறது.
7. மூஸா தம் குடும்பத்தாரிடம் “நான் நெருப்பைக் கண்டேன். அதிலிருந்து ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டு வருவேன்; அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக உங்களுக்கு ஒரு தீப்பந்தம் கொண்டு வருகிறேன்” என்று கூறியதை நினைவூட்டுவீராக!
8. அவர் அங்கு வந்தபோது “நெருப்பில் இருப்பவரும், அதைச் சுற்றியிருப்போரும் நற்பேறு பெற்றவர்கள். அகிலங்களின் இறைவனான அல்லாஹ் தூயவன்” என்று கூறப்பட்டது.
9, 10. “மூஸாவே! நானே மிகைத்தவனும் நுண்ணறிவாளனுமான அல்லாஹ். உமது கைத்தடியைப் போடுவீராக!” (என்றும் கூறப்பட்டது) அது பாம்புபோல் நெளிவதைக் கண்டதும், அவர் திரும்பிப் பார்க்காமல் புறங்காட்டி ஓடினார். “மூஸாவே! பயப்படாதீர்! என்னிடம் தூதர்கள் பயப்பட மாட்டார்கள்”
11. “எனினும் அநியாயம் செய்து, பின்னர் தீமைக்குப் பின் (அதை) நன்மையாக மாற்றிக் கொள்பவரை நான் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்”
12. “உமது கையை உம் சட்டையின் கழுத்துப் பகுதியில் நுழைப்பீராக! அது மாசற்ற வெண்மையாக வெளிப்படும். (இவை) ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் நோக்கிய ஒன்பது சான்றுகளில் உள்ளவை. அவர்கள் பாவம் செய்யும் கூட்டத்தினராக உள்ளனர்” (என இறைவன் கூறினான்.)
13. நமது சான்றுகள், பார்க்கின்ற விதத்தில் அவர்களிடம் வந்தபோது “இது பகிரங்கமான சூனியமே!” எனக் கூறினர்.
14. அவர்களின் உள்ளங்கள் அவைகளை உறுதியாக அறிந்தபோதும் அநியாயமாகவும் கர்வமாகவும் மறுத்தனர். குழப்பவாதிகளின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் கவனிப்பீராக!
15. தாவூதுக்கும் சுலைமானுக்கும் கல்வியறிவை வழங்கினோம். அவ்விருவரும், “இறைநம்பிக்கை கொண்ட தன் அடியார்களில் அதிகமானோரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” எனக் கூறினர்.
16. சுலைமான், தாவூதின் வழித்தோன்றல் ஆனார். “மக்களே! பறவைகளின் மொழியை நாங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு பொருளும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட்கொடை” என அவர் கூறினார்.
17. சுலைமானுக்காக ஜின்களிலும், மனிதர்களிலும், பறவைகளிலும் உள்ள அவரது படைகள் திரட்டப்பட்டு, அணிகளாக்கப்பட்டனர்.
18. இறுதியாக, அவர்கள் எறும்புகளின் பள்ளத்தாக்கிற்கு வந்தபோது, “எறும்புகளே! உங்கள் வசிப்பிடங்களுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்! சுலைமானும், அவரது படையினரும் அறியாமல் உங்களை மிதித்து விடக் கூடாது” என ஓர் எறும்பு கூறியது.
19. அதன் கூற்றால் அவர் வியந்து புன்னகைத்தார். “என் இறைவனே! என்மீதும், என் பெற்றோர்மீதும் நீ புரிந்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நற்செயலைச் செய்வதற்கும் எனக்கு வழிகாட்டுவாயாக! உன் கருணையால் என்னை உனது நல்லடியார்களுடன் சேர்த்து வைப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்.
20. அவர் பறவைகளை மேற்பார்வையிட்டார். “ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! என்ன ஆனது? அது மறைந்திருப்பவற்றில் ஆகிவிட்டதா?” என்று கேட்டார்.
21. “அதனைக் கடுமையாக வேதனை செய்வேன்; அல்லது அதனை அறுப்பேன். இல்லையேல் அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வரவேண்டும்” (என்றும் கூறினார்.)
22, 23. சிறிது நேரமே அது (வருவதற்குத்) தாமதமானது. அப்போது (அப்பறவை வந்து), “நீர் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். ‘ஸபா’ எனும் ஊரிலிருந்து உறுதியான செய்தியை உம்மிடம் கொண்டு வந்திருக்கிறேன். அ(வ்வூரைச் சேர்ந்த)வர்களை ஒரு பெண் ஆட்சி செய்யக் கண்டேன். அவளுக்கு ஒவ்வொரு பொருளிலிருந்தும் வழங்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான அரியணையும் இருக்கிறது” என்று கூறியது.
24, 25. “அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்பவர்களாக அவளையும், அவளது சமுதாயத்தினரையும் கண்டேன். அவர்களின் செயலை, அவர்களுக்கு ஷைத்தான் அலங்கரித்துக் காட்டி, அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விட்டான். எனவே அவர்கள் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்வதற்கான நேர்வழியைப் பெற மாட்டார்கள். அவனோ வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்துபவன்; நீங்கள் மறைப்பதையும் பகிரங்கப்படுத்துவதையும் அறிபவன்”
26. “அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) மகத்தான அர்ஷின் இறைவன்” (என்றும் கூறியது.)
27, 28. “நீ உண்மை கூறுகிறாயா? அல்லது பொய்யர்களில் இருக்கிறாயா? என்று பார்ப்போம். எனது இக்கடிதத்தைக் கொண்டு செல்! இதனை அவர்களிடம் போட்டுவிடு! பின்னர் அவர்களை விட்டும் விலகியிருந்து, அவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதைக் கவனி!” என்று (சுலைமான்) கூறினார்.
29. “பெரியோர்களே! கண்ணியமிக்க ஒரு கடிதம் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது” என அவள் கூறினாள்.
30, 31. இது சுலைமானிடமிருந்து வந்துள்ளது. ‘அளவிலா அருளாளனும், நிகரிலா அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (தொடங்குகிறேன்). என்னிடம் ஆணவம் கொள்ளாதீர்கள்! கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்!’ என்று (அதில்) உள்ளது.
32. “பெரியோர்களே! என் விஷயத்தில் எனக்குத் தீர்வு கூறுங்கள்! நீங்கள் முன்னிலையில் இல்லாமல் நான் எந்த விஷயத்தையும் தீர்மானிப்பதில்லை” என்று அவள் கூறினாள்.
33. “நாம் வலிமையானவர்கள்; கடுமையாகப் போரிடக் கூடியவர்கள். ஆனால் (தீர்மானிக்கும்) அதிகாரம் உம்மிடமே உள்ளது. எனவே நீர் என்ன உத்தரவிட வேண்டும் என்பதைச் சிந்தித்துக் கொள்வீராக!” என அவர்கள் கூறினர்.
34, 35. “ஓர் ஊருக்குள் அரசர்கள் நுழைந்தால் அதைப் பாழாக்கி விடுகின்றனர். அவ்வூரிலுள்ள கண்ணியமானவர்களை இழிந்தவர்களாக்கி விடுகின்றனர். அவ்வாறே இவர்களும் செய்வார்கள். அவர்களுக்கு நான் ஓர் அன்பளிப்பை அனுப்பிவைத்து, அத்தூதுவர்கள் என்ன பதிலுடன் திரும்புகிறார்கள் எனப் பார்க்கப் போகிறேன்” என்று அவள் கூறினாள்.
36, 37. சுலைமானிடம் அ(த்தூது)வர் வந்தபோது “எனக்குச் செல்வத்தின் மூலம் நீங்கள் உதவப் போகிறீர்களா? அல்லாஹ் எனக்கு வழங்கியிருப்பது, அவன் உங்களுக்குத் தந்திருப்பதைவிட மிகச் சிறந்தது. மாறாக, நீங்கள்தான் உங்கள் அன்பளிப்பில் பெருமிதம் கொள்ள வேண்டும். அவர்களிடமே திரும்பிச் செல்வீராக! அவர்களால் எதிர்த்து நிற்க முடியாதவாறு படைகளுடன் அவர்களிடம் வரவிருக்கின்றோம். அவர்களைச் சிறுமைப்படுத்தியும், கேவலப்படுத்தியும் அங்கிருந்து வெளியேற்றுவோம்” என்று (சுலைமான்) கூறினார்.
38. “பெரியோர்களே! அவர்கள் கட்டுப்பட்டோராக என்னிடம் வருமுன் அவளது அரியணையை உங்களில் யார் என்னிடம் கொண்டு வருவார்?” என (சுலைமான்) கேட்டார்.
39. ஜின்களைச் சார்ந்த இஃப்ரீத், “உமது இருப்பிடத்திலிருந்து நீர் எழுவதற்கு முன், அதனை உம்மிடம் கொண்டு வருகிறேன். அதற்கு நான் ஆற்றல்மிக்கவன்; நம்பிக்கைக்குரியவன்” என்று கூறியது.
40. வேத அறிவைத் தன்னிடத்தில் கொண்டிருந்த (ஜின்) ஒன்று, “நீர் கண்மூடித் திறப்பதற்கு முன் அதனை உம்மிடம் கொண்டு வருவேன்” எனக் கூறியது. உடனே அந்த அரியணை தன்னருகில் இருப்பதை அவர் கண்டபோது, “இது என் இறைவனின் அருட்கொடை. நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா? என அவன் என்னைச் சோதிப்பதற்காகவே (இதை வழங்கியுள்ளான்.) யார் நன்றி செலுத்துகிறாரோ அவர் தனக்காகவே நன்றி செலுத்துகிறார். யாரேனும் நன்றி மறந்தால் என் இறைவன் தேவைகளற்றவன்; கண்ணியமிக்கவன்” என அவர் கூறினார்.
41. “அவளது அரியணையைக் கண்டறிய முடியாதவாறு மாற்றி விடுங்கள்! அவள் அறிந்து கொள்கிறாளா? அல்லது அறியாதோரில் ஆகிவிடுகிறாளா என்று பார்ப்போம்” எனவும் கூறினார்.
42. அவள் வந்தபோது “உன் அரியணை இப்படித்தான் இருக்குமா?” என்று கேட்கப்பட்டது. “இது அதுபோலவே இருக்கிறது. எங்களுக்கு இதற்கு முன்பே (உங்களைப் பற்றிய) அறிவு வழங்கப்பட்டு விட்டது. எனவே நாங்கள் கட்டுப்பட்டோராக ஆகிவிட்டோம்” என்று அவள் கூறினாள்.
43. அல்லாஹ்வையன்றி அவள் எதை வணங்கிக் கொண்டிருந்தாளோ அதுவே (இறைநம்பிக்கை கொள்வதை விட்டும்) அவளைத் தடுத்தது. அவள் இறைமறுப்பாளர்களின் கூட்டத்தில் இருந்தாள்.
44. “இந்த அரண்மனைக்குள் செல்!” என்று அவளிடம் கூறப்பட்டது. அவள் அதைக் கண்டதும் அதனைத் தடாகம் என நினைத்து, (கீழாடையை விலக்கி) தன் கெண்டைக் கால்களை வெளிப்படுத்தினாள். “இது பளபளக்கும் கண்ணாடிகளால் சமதளமாக்கப்பட்ட மாளிகை” என அவர் கூறினார். “என் இறைவனே! எனக்கே நான் அநியாயம் செய்து விட்டேன். சுலைமானுடன் சேர்ந்து நானும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு விட்டேன்” என்று அவள் கூறினாள்.
45. ஸமூது சமுதாயத்திற்கு, “அல்லாஹ்வை வணங்குங்கள்!” என்று (கூறுமாறு) அவர்களின் சகோதரர் ஸாலிஹைத் தூதராக அனுப்பினோம். அப்போது அவர்கள் தர்க்கித்துக் கொள்ளும் இரு பிரிவுகளாகி விட்டனர்.
46. “என் சமுதாயத்தினரே! நன்மைக்கு முன் தீமையை ஏன் விரைந்து தேடுகிறீர்கள்? நீங்கள் அருள் செய்யப்படுவதற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர மாட்டீர்களா?” என்று கூறினார்.
47. “உம்மையும் உம்முடன் இருப்பவர்களையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம்” என அவர்கள் கூறினர். “நீங்கள் கெட்ட சகுனமாகக் கருதுவது அல்லாஹ்விடம் உள்ளது. மேலும், நீங்கள் சோதிக்கப்படும் சமுதாயமாக இருக்கிறீர்கள்” என அவர் பதிலளித்தார்.
48. அந்நகரில் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் இருந்தனர். அவர்கள் பூமியில் குழப்பம் விளைவித்தனர்; சீர்திருத்தம் செய்யவில்லை.
49. “அவரையும், அவரது குடும்பத்தினரையும் இரவில் தாக்கி விடுவோம். பின்னர், அவரது பொறுப்பாளரிடம் ‘அவரது குடும்பத்தினர் அழிக்கப்பட்டதை நாங்கள் பார்க்கவில்லை. நாங்கள் உண்மையாளர்களே!’ எனக் கூறி விடுவோம்” என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து (தமக்குள்) பேசிக் கொண்டனர்.
50. அவர்கள் பலமாகச் சூழ்ச்சி செய்தனர். அவர்கள் அறியாத விதத்தில் நாமும் பலமாக சூழ்ச்சி செய்தோம்.
51. அவர்களின் சூழ்ச்சியின் முடிவு எப்படி ஆனது என்பதைக் கவனிப்பீராக! அவர்களையும் அவர்களின் கூட்டத்தார் அனைவரையும் அடியோடு அழித்தோம்.
52. இவை, அவர்கள் அநியாயம் செய்ததால் அடியோடு வீழ்ந்து கிடக்கும் அவர்களின் வீடுகளாகும். அறிந்து கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் படிப்பினை உள்ளது.
53. இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சத்துடன் இருந்தவர்களைக் காப்பாற்றினோம்.
54. லூத், தமது சமுதாயத்தினரிடம், “நீங்கள் பார்த்துக் கொண்டே மானக்கேடான காரியத்தைச் செய்கிறீர்களா?” எனக் கூறியதை நினைவூட்டுவீராக!
55. “நீங்கள் பெண்களை விட்டுவிலகி, ஆண்களிடம் இச்சைக்காகச் செல்கிறீர்களா? மேலும் நீங்கள் அறிவில்லாத கூட்டமாக இருக்கிறீர்கள்” (என்றும் கூறினார்.)
56. “உங்கள் ஊரிலிருந்து லூத்தின் குடும்பத்தாரை வெளியேற்றுங்கள்! இவர்களோ அப்பழுக்கற்ற மனிதர்கள்” என்று கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருக்கவில்லை.
57. அவரையும், அவரது குடும்பத்தினைரையும் காப்பாற்றினோம். அவரது மனைவியைத் தவிர. அவள் (வேதனையில்) தங்கி விடுவோரில் உள்ளவள் எனத் தீர்மானித்து விட்டோம்.
58. அவர்கள்மீது (கல்) மழையைப் பொழிந்தோம். எச்சரிக்கப் பட்டோருக்கான அம்மழை மிகவும் கெட்டது.
59. “அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவன் தேர்ந்தெடுத்த அவனது அடியார்கள்மீது ஸலாம் உண்டாகட்டும்! அல்லாஹ் சிறந்தவனா? அல்லது அவர்கள் இணையாக்குபவையா?” என்று கேட்பீராக!
60. (அவர்கள் இணையாக்குபவை சிறந்தவையா?) அல்லது வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்காக வானிலிருந்து தண்ணீரை இறக்கினானே அவனா? அதன் மூலம் வளங்கொழிக்கும் தோட்டங்களை உண்டாக்கினோம். அவற்றில் மரங்களை முளைக்கச் செய்ய உங்களால் முடியாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுள் இருக்கிறானா? எனினும் அவர்கள் (இறைவனுக்குப் படைப்பினங்களைச்) சமமாக்கும் கூட்டமாகவே இருக்கின்றனர்.
61. (அவர்கள் இணையாக்குபவை சிறந்தவையா?) அல்லது பூமியை வாழ்விடமாக்கி, அதற்கிடையே ஆறுகளை ஏற்படுத்தி, அதற்கு உறுதிமிக்க மலைகளையும் அமைத்து, இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுள் இருக்கிறானா? எனினும் அவர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.
62. (அவர்கள் இணையாக்குபவை சிறந்தவையா?) அல்லது துன்பத்திற்கு உள்ளானவன் பிரார்த்திக்கும்போது அவனுக்குப் பதிலளித்து, அத்துன்பத்தை நீக்கி, பூமியில் உங்களைத் தலைமுறைகளாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுள் இருக்கிறானா? நீங்கள் குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.371
63. (அவர்கள் இணையாக்குபவை சிறந்தவையா?) அல்லது தரைத்தளத்திலும், கடலின் இருள்களிலும் உங்களுக்கு வழிகாட்டுபவனா? மேலும், (மழையெனும்) தனது அருளுக்கு முன் நற்செய்தியாகக் காற்றுகளை அனுப்புபவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுள் இருக்கிறானா? அவர்கள் இணையாக்குவதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.
64. (அவர்கள் இணையாக்குபவை சிறந்தவையா?) அல்லது படைப்பைத் துவக்கி, (அது அழிந்த) பின்னர் அதை மறுபடியும் படைப்பவனா? மேலும், வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுள் இருக்கிறானா? “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) கேட்பீராக!
65. “அல்லாஹ்வையன்றி வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவானதை அறிய மாட்டார்கள்; தாம் எப்போது (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவோம் என்பதையும் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!
66. எனினும், மறுமை பற்றிய அவர்களின் அறிவு கீழ்நிலைக்குச் சென்றுவிட்டது. இன்னும், அதில் சந்தேகத்திலேயே உள்ளனர். மேலும் அவ்விஷயத்தில் குருடர்களாகவே இருக்கின்றனர்.
67, 68. “நாமும் நம் முன்னோர்களும் (மண்ணோடு) மண்ணாக ஆகிவிட்டாலும் (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவோமா? இதுவே நமக்கும், இதற்கு முன்பு நம் முன்னோருக்கும் வாக்களிக்கப்பட்டது. இது முன்னோரின் கட்டுக் கதைகளைத் தவிர வேறில்லை” என இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர்.
69. “நீங்கள் பூமியில் பயணித்து, குற்றவாளிகளின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் கவனியுங்கள்!” என்று கூறுவீராக!
70. அவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்! அவர்களின் சூழ்ச்சிகளால் மனநெருக்கடிக்கு ஆளாகி விடாதீர்!
71. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இந்த வாக்குறுதி எப்போது (நிகழும்?)” என அவர்கள் கேட்கின்றனர்.
72. “நீங்கள் அவசரப்படுபவற்றில் சில (வேதனை) உங்களை வந்தடைந்து விடலாம்” என்று கூறுவீராக!
73. மனிதர்கள்மீது உமது இறைவன் அருளுடையவன். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்த மாட்டார்கள்.
74. அவர்களின் உள்ளங்கள் மறைப்பதையும், பகிரங்கப்படுத்துவதையும் உமது இறைவன் நன்கறிவான்.
75. வானத்திலும், பூமியிலும் மறைந்துள்ளவை யாவும் தெளிவான பதிவேட்டில் உள்ளன.
76. இந்தக் குர்ஆன், இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் கருத்து வேறுபாடு கொண்டவற்றில் அதிகமானவற்றை அவர்களுக்கு எடுத்துரைக்கிறது.
77. இது, இறைநம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும் அருளுமாகும்.
78. உமது இறைவன், தனது முடிவின்படி அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான். அவன் மிகைத்தவன்; நன்கறிந்தவன்.
79. அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக! நீர்தான் தெளிவான உண்மையில் இருக்கிறீர்.
80. (நபியே!) மரணித்தோரைச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது. செவிடர்கள் புறக்கணித்துத் திரும்பிச் செல்லும்போது அவர்களையும் உம்மால் (உமது) அழைப்பை செவியேற்கச் செய்ய முடியாது.
81. நீர் குருடர்களையும் அவர்களின் வழிகேட்டிலிருந்து (வெளியேற்றி) நேர்வழியில் செலுத்துபவராக இல்லை. நமது வசனங்களை நம்பி, முஸ்லிம்களாக இருப்பவர்களையே உம்மால் செவியேற்கச் செய்ய இயலும்.
82. (மறுமை பற்றிய) வாக்கு அவர்கள்மீது நிகழும்போது, பூமியில் அவர்களுக்காக ஒரு பிராணியை வெளிப்படுத்துவோம். அவர்களிடம் அது, ‘மக்கள் நம் வசனங்களில் உறுதி கொள்ளாமல் இருந்தார்கள்’ என்பதை எடுத்துரைக்கும்.372
83. ஒவ்வொரு சமுதாயத்திலும் நமது வசனங்களைப் பொய்யெனக் கூறிய கூட்டத்தினரை அந்நாளில் நாம் ஒன்றுதிரட்டுவோம். அப்போது அவர்கள் அணிகளாக்கப்படுவார்கள்.
84. முடிவில், அவர்கள் (இறைவனிடம்) வரும்போது, “எனது வசனங்களை முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவற்றைப் பொய்யெனக் கூறினீர்களா? அல்லது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என அவன் கேட்பான்.
85. அவர்கள் அநியாயம் செய்ததால் அவர்கள்மீது (நமது) வாக்கு உறுதியாகிவிட்டது. அப்போது அவர்களால் பேச முடியாது.
86. நாமே அவர்கள் மனநிம்மதி பெறுவதற்காக இரவையும், பார்ப்பதற்குரியதாகப் பகலையும் ஆக்கினோம் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா? இறைநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.
87. ஸூர் ஊதப்படும் நாளில் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் திடுக்கிட்டு விடுவார்கள். அனைவரும் பணிந்தோராக அவனிடம் வருவார்கள்.373
88. நீர் மலைகளைக் காண்கிறீர். அவற்றை உறுதியானவை என எண்ணுகிறீர். (அந்நாளில்) அவை மேகம் நகர்வதைப் போன்று நகர்ந்து செல்லும். (இது) ஒவ்வொன்றையும் நன்கு கட்டமைத்த அல்லாஹ்வின் செயலாகும். நீங்கள் செய்வதை அவன் நன்கறிந்தவன்.
89. நன்மையைக் கொண்டு வருவோருக்கு அதைவிடச் சிறந்தது உண்டு. அவர்கள் அந்நாளின் திகிலை விட்டும் அச்சமற்று இருப்பார்கள்.
90. தீமையைக் கொண்டு வருவோர் நரகத்தில் முகம் குப்புற வீசப்படுவார்கள். நீங்கள் செய்தவற்றுக்காகவே தவிர (வேறெதற்கும்) கூலி வழங்கப்படுகிறீர்களா?
91, 92. “இந்த (மக்கா) நகரின் இறைவனை வணங்குமாறு நான் பணிக்கப்பட்டுள்ளேன். அவனே இ(ந்நகரத்)தைப் புனிதமாக்கினான். ஒவ்வொரு பொருளும் அவனுக்கே உரியது. நான் முஸ்லிம்களில் ஒருவனாக ஆகி விடுமாறும், குர்ஆனை எடுத்துரைக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளேன்” (என்று கூறுவீராக!) நேர்வழியில் செல்பவர் தனக்காகவே நேர்வழியில் செல்கிறார். யாரேனும் வழிகேட்டில் சென்றால், ‘நான் எச்சரிப்பவர்களில் உள்ளவன்தான்!’ என்று கூறி விடுவீராக!374
93. “அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!” என்று கூறுவீராக! அவன், தன் சான்றாதாரங்களை உங்களுக்குக் காட்டுவான். அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் செய்வதைப் பற்றி உமது இறைவன் கவனமற்றவனாக இல்லை.