அனைத்து சாதியினரும் அர்ச்சகாராகலாம் எனும் திட்டத்தால் தீண்டாமை ஒழிந்து விடுமா?

தீண்டாமை ஒழிப்பு என்பது வெறும் சட்டங்களினாலோ திட்டங்களினாலோ நடந்து விடக்கூடியது அல்ல. உயர்ந்தவன் தாழ்ந்தவன் எனும் எண்ணம் மக்கள் மனதில் குடியிருப்பதாலேயே தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறுகிறது. எனவே மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
சட்டங்களினால் தீண்டாமையை ஒழிக்கும் முயற்சி பன்னெடுங்காலமாக முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் அதில் அதிக பலனில்லை.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது கோவில்களில் நிலவி வரும் தீண்டாமையை ஒழிக்க கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.
கோவில்களில் உயர்சாதியினர் என கருதப்படுவோர் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்று சிலர் கூறி அதையே நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர்.
பிராமணர்கள் அல்லாத மற்றவர்கள் அர்ச்சகரனால் சிலை தீட்டாகி விடும் என்று கூறுவதால் இந்த வகை தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில் எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது 2006ல் திமுகவினால் சட்டமாக கொண்டு வரப்பட்டது.
இச்சட்டம் சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தும் எண்ணற்ற பிற சாதி அர்ச்சகர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக அர்ச்சகராக முடியாமல் இருப்பதே இச்சட்டத்தின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது.
இச்சட்டத்தின் படி இதுவரை 2 நபர்கள் மட்டுமே அர்ச்சகராக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இச்சட்டத்தினால் முழுவதுமாக தீண்டாமையை ஒழித்து விட முடியாது.
நீதிமன்ற தீர்ப்பின் படி ஆகம விதிகளின் படி தான் அர்ச்சகர் நியமனம் அமைய வேண்டும் என்று உள்ளது. ஒவ்வொரு கோவில்களுக்கும் வேறுபட்ட ஆகமவிதிகள் உண்டு. எங்கள் ஆகம விதிப்படி இந்நியமனம் செல்லாது என்று கூறப்பட்டால் இச்சட்டத்தினால் உள்ள பயன் என்ன?
ஆகம விதிகளின் படி செயல்படும் கோவில்களுக்கு தான் இச்சட்டம் பொருந்தும். கிராமப்புறங்களில் உள்ள ஆகம விதிகளின் படி செயல்படாத எண்ணற்ற கோவில்கள் உள்ளன. அங்கே நிலவும் தீண்டாமையை இச்சட்டத்தினால் நீக்க முடியுமா?
ஒவ்வொரு சாதியினருக்கும் தனிச்சுடுகாடு உள்ளதே அதை இச்சட்டத்தினால் அழித்து விட முடியுமா?
இப்படி தீண்டாமை பல்வேறு வடிவங்களில் உள்ளன. அவற்றை எல்லாம் சட்டத்தின் மூலமாக மட்டுமே அழித்து விட முடியாது.
நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் எனும் உணர்வு மக்கள் மனங்களில் வேரூன்ற வேண்டும்.
மொழியால், மதத்தால், நிறத்தால் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் எனும் எண்ணம் மக்கள் அனைவரது உள்ளங்களில் ஆழமாக பதிந்தால் தான் தீண்டாமையை முழுவதுமாக அகற்ற முடியும்.
திருக்குர்ஆன் இத்தகைய சகோதரத்துவத்தை நோக்கித்தான் மக்களை அழைக்கின்றது.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை யொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
திருக்குர்ஆன் 49 : 13
திருக்குர்ஆனின் அழைப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டு செயல்படுவதாலே முஸ்லிம்களிடத்தில் எந்த தீண்டாமையும் இருப்பதில்லை.
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி முஸ்லிம்கள் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்கு திருக்குர்ஆனின் அறிவுரையே காரணமாகும்.
திருக்குர்ஆனின் இந்த அழைப்பை ஏற்று அதன்படி செயல்பட்டால் மட்டுமே முழுவதுமாக தீண்டாமையை அகற்ற முடியும்.