அந்நூர் – ஒளி

அத்தியாயம் : 24

வசனங்களின் எண்ணிக்கை: 64

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. (இது) ஓர் அத்தியாயம். இதை நாமே அருளி, இ(திலுள்ள சட்டத்)தைக் கடமையாக்கியுள்ளோம். இதில் நீங்கள் சிந்திப்பதற்காகத் தெளிவான வசனங்களை அருளியுள்ளோம்.
2. விபச்சாரம் செய்தவள், விபச்சாரம் செய்தவன் ஆகிய இருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில் அவர்கள்மீது உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரையும் தண்டிக்கும்போது இறைநம்பிக்கையாளர்களில் ஒரு சாரார் பார்க்கட்டும்.353
3. விபச்சாரம் செய்தவன், ஒரு விபச்சாரியையோ அல்லது இணைவைப்பவளையோ தவிர்த்து வேறு எவரையும் மணமுடிக்க மாட்டான். (அதுபோல) விபச்சாரி, விபச்சாரம் செய்த ஒருவனையோ அல்லது இணைவைப்பவனையோ தவிர்த்து வேறு எவரையும் மணமுடிக்க மாட்டாள். இது, இறைநம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது.354
4. கற்புள்ள பெண்கள்மீது விபச்சாரக் குற்றம் சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளை யார் கொண்டு வரவில்லையோ அவர்களை எண்பது கசையடிகளால் அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்காதீர்கள். அவர்களே பாவிகள்.
5. இதன்பின்னர் பாவ மன்னிப்புக் கோரி, சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர! அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
6. தம் மனைவியர்மீது விபச்சாரக் குற்றம் சுமத்தி, அவர்களுக்குத் தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாதபோது, ‘தான் உண்மையாளர்களில் உள்ளவன்’ என்று அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்வதே அவர்களில் ஒருவருடைய சாட்சியமாகும்.355
7. ஐந்தாவது (சத்தியமானது), ‘தான் பொய்யர்களில் ஒருவனாக இருந்தால் தன்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்பதாகும்.
8. ‘அவன் பொய்யர்களில் உள்ளவன்’ என்று அவள் நான்கு முறை அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து சாட்சியமளிப்பது அவளை விட்டும் தண்டனையைத் தடுத்து விடும்.
9. ஐந்தாவதாக, ‘அவன் உண்மையாளர்களில் ஒருவனாக இருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்’ என்(று அவள் சாட்சியளிப்)பதாகும்.
10. உங்கள்மீது அல்லாஹ்வின் அருளும், அவனது கருணையும் இல்லாதிருந்து, மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இல்லாதிருந்தால் (நீங்கள் அழிந்திருப்பீர்கள்.)
11. உங்களில் ஒரு கூட்டத்தினரே அவதூறைக் கொண்டு வந்தவர்கள். அதனை உங்களுக்குத் தீங்கு என எண்ணாதீர்கள்! மாறாக, அது உங்களுக்கு நன்மையாகும். அவர்களிலுள்ள ஒவ்வொருவருக்கும் அவர் சம்பாதித்த பாவம் உண்டு. இந்த விஷயத்தில் அவர்களில் யார் பெரும் பங்காற்றினானோ அவனுக்குக் கடும் தண்டனை உண்டு.356
12. நீங்கள் இதைக் கேள்விப்பட்டபோது, இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தம்மைப் (போன்ற பிற இறைநம்பிக்கையாளர்களைப்) பற்றி நல்லெண்ணம் கொண்டு, “இது பகிரங்கமான அவதூறு” என்று கூறியிருக்கக் கூடாதா?
13. அவர்கள் இதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா? (அப்படி) அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வராதபோது அவர்களே அல்லாஹ்விடம் பொய்யர்கள்.
14. இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், கருணையும் உங்களுக்கு இல்லையாயின், நீங்கள் எதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தீர்களோ அதற்காகக் கடும் வேதனை உங்களைப் பிடித்திருக்கும்.
15. உங்கள் நாவுகளால் அதனைப் பரப்பியதையும், எதனைப் பற்றி உங்களுக்கு அறிவில்லையோ அதனை உங்கள் வாய்களால் கூறியதையும் எண்ணிப் பாருங்கள்! அதனை இலேசானதாகக் கருதினீர்கள். ஆனால் அல்லாஹ்விடம் அது மிகக் கடுமையானது.
16. நீங்கள் அதனைச் செவியுற்றபோது, “(இறைவா!) நீ தூயவன்! இதைப் பற்றிப் பேசுவது நமக்குத் தகுதியானதல்ல! இது பெரும் அவதூறு” என்று கூறியிருக்க வேண்டாமா?
17. நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் இதுபோன்ற செயலை ஒருபோதும் (இனி) மீண்டும் செய்யக் கூடாதென அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகிறான்.
18. அல்லாஹ் உங்களுக்கு வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.
19. இறைநம்பிக்கையாளர்களிடம் மானக்கேடான செயல் பரவ வேண்டும் என யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உள்ளது. அல்லாஹ் அறிகிறான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
20. உங்கள்மீது அல்லாஹ்வின் அருளும், அவனது கருணையும் இல்லாதிருந்து, மேலும், அல்லாஹ் கருணையாளனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இல்லாதிருந்தால் (நீங்கள் அழிந்திருப்பீர்கள்.)
21. இறைநம்பிக்கை கொண்டோரே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! (அப்படி) எவரேனும் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினால், (அவர்களுக்கு) அவன் மானக்கேடானவற்றையும் தீயதையுமே ஏவுகிறான். உங்கள்மீது அல்லாஹ்வின் அருளும், அவனது கருணையும் இல்லையாயின் உங்களில் எவரும் ஒருபோதும் தூய்மையடைந்திருக்க முடியாது. எனினும் அல்லாஹ், தான் நாடியோரைத் தூய்மைப்படுத்துகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; நன்கறிந்தவன்.
22. உங்களில் பொருளும், வசதியும் உடையோர், உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (தர்மங்களைக்) கொடுக்காமல் இருப்பதற்காகச் சத்தியம் செய்ய வேண்டாம். அவர்கள் மன்னித்து, விட்டுவிடட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டுமென நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.357
23. இறைநம்பிக்கை கொண்ட, கபடமற்ற, கற்புள்ள பெண்கள்மீது விபச்சாரக் குற்றம் சுமத்துவோர் இவ்வுலகிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் கடும் தண்டனை உண்டு.358
24. அவர்கள் செய்துகொண்டிருந்தவை பற்றி அந்நாளில் அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும்.359
25. அந்நாளில் அவர்களுக்குரிய நியாயமான கூலியை, அவர்களுக்கு அல்லாஹ் நிறைவாக வழங்குவான். அல்லாஹ் தெளிவாக விளக்கும் உண்மையாளன் என்பதை அறிந்து கொள்வார்கள்.
26. கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும், கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் உரியவர்கள். நல்ல பெண்கள் நல்ல ஆண்களுக்கும், நல்ல ஆண்கள் நல்ல பெண்களுக்கும் உரியவர்கள். அவர்கள் கூறுவதை விட்டும் இவர்கள் தூய்மையானவர்கள். இவர்களுக்கே மன்னிப்பும் கண்ணியமான உணவும் உண்டு.
27. இறைநம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகளல்லாத வேறு வீடுகளில் (நுழைவதாயின்) அங்குள்ளவர்களுக்கு நீங்கள் ஸலாம் கூறி, அனுமதி பெறாமல் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் நீங்கள் நல்லுணர்வு பெறலாம்.360
28. அங்கு யாரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி வழங்கப்படாதவரை அங்கு நுழையாதீர்கள்! “திரும்பிச் செல்லுங்கள்!” என்று உங்களிடம் கூறப்பட்டால் திரும்பிச் சென்று விடுங்கள். இதுவே உங்களுக்குத் தூய்மையானது. அல்லாஹ், நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
29. (யாரும்) வசிக்காத, உங்கள் பொருள் இருக்கக்கூடிய வீடுகளில் நீங்கள் நுழைவது உங்கள்மீது குற்றமில்லை. அல்லாஹ், நீங்கள் வெளிப்படுத்துவதையும் மறைப்பதையும் நன்கறிவான்.
30. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும். இதுவே அவர்களுக்குத் தூய்மையானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.361
31. இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்! அவர்கள், (சாதாரணமாக) வெளியில் தெரிவதைத் தவிர தமது அலங்காரத்தில் வேறு எதையும் வெளிப்படுத்த வேண்டாம். தமது தலைமுக்காடுகளைத் தமது மேற்சட்டைகளின்மீது போட்டுக் கொள்ளட்டும். அவர்கள் தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களின் தந்தையர், தமது மகன்கள், தமது கணவர்களின் மகன்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் மகன்கள், தமது சகோதரிகளின் மகன்கள், தம்(மைப் போன்ற) பெண்கள், தமது அடிமைகள், ஆண்களில் (பெண்கள்மீது) விருப்பமில்லாத பணியாளர்கள், பெண்களின் அந்தரங்க உறுப்புகளைப் பற்றி அறியாத சிறுவர்கள் ஆகியோரைத் தவிர மற்றவர்களிடம் அவர்கள் தமது அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். தமது அலங்காரத்தில், தாம் மறைத்துள்ளவை அறியப்பட வேண்டும் என்பதற்காகத் தமது கால்களால் அடி(த்து நட)க்க வேண்டாம். இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அனைவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்!362
32. உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், உங்கள் ஆண் – பெண் அடிமைகளிலுள்ள நல்லவர்களுக்கும் மணம் முடித்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வசதியளிப்பான். அல்லாஹ் விசாலமானவன்; நன்கறிந்தவன்.
33. திருமணம் செய்ய வசதியில்லாதவர்களுக்கு, அல்லாஹ் தன் அருளிலிருந்து வசதியளிக்கும்வரை அவர்கள் கற்புநெறியைப் பேணி நடந்து கொள்ளட்டும். உங்கள் அடிமைகளில் விடுதலை ஆவணம் கோருவோரிடம் நன்மை இருப்பதாக நீங்கள் அறிந்தால் அவர்களுக்கு விடுதலை ஆவணம் எழுதிக் கொடுத்து (விடுவித்து) விடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள். கற்பு நெறியை விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை, இவ்வுலக வாழ்வின் அற்பப் பொருளை நாடி விபச்சாரத்திற்கு வற்புறுத்தாதீர்கள்! யாரேனும் அவர்களை வற்புறுத்தினால், அவ்வாறு வற்புறுத்தப்பட்ட பின் அப்பெண்களை அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; நிகரிலா அன்பாளன்.363
34. தெளிவுபடுத்தும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று விட்டவர்களின் எடுத்துக்காட்டையும், இறையச்சமுடையோருக்கு அறிவுரையையும் உங்களிடம் அருளியுள்ளோம்.
35. அல்லாஹ் வானங்களுக்கும் பூமிக்கும் ஒளியாக இருக்கிறான். அவனது ஒளிக்கு எடுத்துக்காட்டு, ஒரு மாடத்தைப் போன்றதாகும். அதில் ஒரு ஒளிவிளக்கு இருக்கிறது. அவ்விளக்கு ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் இருக்கிறது. அக்குடுவை, மின்னும் நட்சத்திரத்தைப் போன்றது. அது கிழக்கையோ மேற்கையோ சாராத, பாக்கியமிக்க ஸைத்தூன் மரத்திலிருந்து எரிக்கப்படுகிறது. அதில் நெருப்பு தீண்டாவிட்டாலும் அதன் எண்ணெயே ஒளி வீச முற்படும். (இவ்வாறு) ஒளிக்கு மேல் பேரொளியாக இருக்கிறது. அல்லாஹ், தான் நாடியோருக்குத் தனது ஒளியின் பக்கம் வழிகாட்டுகிறான். அல்லாஹ், மனிதர்களுக்கு இந்த எடுத்துக்காட்டுகளைக் கூறுகிறான். அல்லாஹ், அனைத்தையும் நன்கறிந்தவன்.364
36. அல்லாஹ், இறையில்லங்கள் எழுப்பப்படுவதற்கும், அவற்றில் அவனது பெயர் நினைவுகூரப்படுவதற்கும் ஆணையிட்டுள்ளான். அங்கு காலையிலும், மாலையிலும் (மனிதர்கள்) அவனைப் போற்றுகின்றனர்.
37. (அவ்வாறு போற்றும்) மனிதர்களான அவர்களின் கவனத்தை அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையை நிலைநிறுத்துவதிலிருந்தும், ஸகாத் கொடுப்பதிலிருந்தும் வியாபாரமோ, கொடுக்கல் வாங்கலோ திருப்பிவிடாது. உள்ளங்களும், பார்வைகளும் நிலைதடுமாறும் ஒருநாளுக்கு அவர்கள் அஞ்சுவார்கள்.
38. அவர்கள் செய்தவற்றுக்கு அல்லாஹ் அழகிய கூலியை வழங்குவதற்கும், அவன் தனது அருளிலிருந்து அதிகப்படியாக வழங்குவதற்கும் (இவ்வாறு போற்றுகின்றனர்.) அல்லாஹ், தான் நாடியோருக்கு கணக்கின்றிக் கொடுக்கிறான்.
39. இறைமறுப்பாளர்களின் செயல்கள் பாலைவனத்தின் கானல் நீரைப் போலாகும். தாகத்திலிருப்பவன் அதைத் தண்ணீர் என்றே கருதுவான். இறுதியில் அவன் அதை அடையும்போது அங்கு எதையும் காண மாட்டான். அங்கு அல்லாஹ்வையே காண்பான். அப்போது (அல்லாஹ்) அவனது கணக்கை (அல்லாஹ்) நிறைவு செய்வான். அல்லாஹ் விசாரிப்பதில் விரைவானவன்.
40. அல்லது ஆழ்கடலின் இருள்களைப் போன்றதாகும். அலை அதைச் சூழ்ந்துள்ளது. அதற்கு மேலும் அலை உள்ளது. அவ்வலைக்கு மேல் மேகம் உள்ளது. (அதன்மீது) ஒன்றின் மேல் ஒன்றாகப் பல இருள்கள் உள்ளன. அவன் தனது கையை வெளிப்படுத்தினால் அவனால் அதைக் காண முடியாது. அல்லாஹ், யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.
41. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவையும், இறக்கைகளை விரித்த நிலையில் பறவைகளும் அல்லாஹ்வைப் போற்றுவதை நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் தமது தொழுகையையும், தமது போற்றுதலையும் அறிந்துள்ளன. அல்லாஹ், அவை செய்வதை நன்கறிந்தவன்.
42. அல்லாஹ்வுக்கே வானங்கள், பூமியின் ஆட்சி உரியது. அல்லாஹ்விடமே மீளுதல் உள்ளது.
43. அல்லாஹ்வே மேகத்தை இழுத்துச் சென்று, பின்னர் அதனை ஒருங்கிணைத்துப் பின்னர் அதனை அடர்த்தியாக ஆக்குவதை நீர் சிந்திக்கவில்லையா? அதன் நடுவிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் பார்க்கிறீர். வானிலுள்ள (மேகங்களால் ஆன) மலைகளிலிருந்து அவனே ஆலங்கட்டி மழையைப் பொழியச் செய்கிறான். தான் நாடியோருக்கு அதை கிடைக்கச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் அதைத் திருப்பி விடுகிறான். அதன் மின்னல் ஒளி பார்வைகளைப் பறிக்க முனைகிறது.
44. அல்லாஹ்வே இரவையும், பகலையும் மாற்றுகிறான். அறிவுடையோருக்கு இதில் படிப்பினை உள்ளது.
45. அல்லாஹ்வே நீரிலிருந்து ஒவ்வொரு உயிர்ப் பிராணியையும் படைத்தான். அவற்றில், தமது வயிற்றால் ஊர்ந்து செல்பவையும் உண்டு. அவற்றில் இரண்டு கால்களால் நடப்பவையும் உண்டு. அவற்றில் நான்கு கால்களால் நடப்பவையும் உண்டு. அல்லாஹ், தான் நாடியதை படைக்கிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் ஆற்றலுடையவன்.
46. நாமே தெளிவுபடுத்தும் வசனங்களை இறக்கினோம். அல்லாஹ், தான் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்.
47. “அல்லாஹ்வையும், தூதரையும் நம்பினோம்; கட்டுப்பட்டோம்” என்று கூறி, அதன் பின்னர் அவர்களில் ஒருசாரார் புறக்கணித்து விடுகின்றனர். அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் அல்ல!
48. அவர்களுக்கிடையே தூதர் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அவர்கள் அழைக்கப்பட்டால், அப்போது அவர்களில் ஒரு சாரார் புறக்கணிக்கின்றனர்.
49. உண்மை அவர்களின் பக்கம் இருந்தால் அவரிடம் கட்டுப்பட்டவர்களாக வருகின்றனர்.
50. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறதா? அல்லது அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? அல்லது அல்லாஹ்வும், அவனது தூதரும் தமக்கு அநியாயம் செய்துவிடுவார்கள் என அஞ்சுகிறார்களா? அவ்வாறல்ல! இவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
51. அவர்களுக்கிடையே தூதர் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அவர்கள் அழைக்கப் பட்டால் “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்று கூறுவதே இறைம்பிக்கையாளர்களின் பதிலாக இருக்கும். அவர்கள்தான் வெற்றியாளர்கள்.
52. யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனைப் பயந்து நடக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.
53. (நபியே!) நீர் அவர்களுக்கு ஆணையிட்டால் அவர்கள் (போர் செய்யப்) புறப்படுவதாக அல்லாஹ்வின்மீது உறுதியாகச் சத்தியம் செய்கின்றனர். “சத்தியம் செய்யாதீர்கள்! நல்ல முறையில் கட்டுப்படுவதே (சிறந்தது). அல்லாஹ், நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்” என்று கூறுவீராக!
54. “அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! தூதருக்கும் கட்டுப்படுங்கள்!” என்று கூறுவீராக! நீங்கள் புறக்கணித்தால், அவருக்குச் சுமத்தப் பட்டதே அவர்மீது கடமை. உங்களுக்குச் சுமத்தப்பட்டதே உங்கள்மீது கடமை. நீங்கள் அவருக்குக் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர்மீது வேறு எதுவும் இல்லை.
55. உங்களில் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்வோருக்கு, அவர்களின் முன்னோரிடம் ஆட்சியதிகாரத்தை வழங்கியது போல் அவர்களுக்கும் பூமியில் ஆட்சியதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிலைப்படுத்துவதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின் (அதை) அவர்களுக்குப் பாதுகாப்பு நிலையாக மாற்றுவதாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் எனக்கு எதையும் இணையாக்காமல் என்னையே வணங்குவார்கள். இதன்பிறகு (என்னை) யார் மறுக்கிறார்களோ அவர்களே பாவிகள்.
56. தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுங்கள்! தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!
57. இறைமறுப்பாளர்கள் இப்பூமியில் தப்பித்துக் கொள்வார்கள் என எண்ணாதீர்! அவர்களின் தங்குமிடம் நரகம். சேருமிடத்தில் அது மிகக் கெட்டது.
58. இறைநம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவமடையாதவர்களும் (வீட்டிற்குள் வருவதற்கு) மூன்று வேளைகளில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும். (அவை) ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னரும், உங்கள் (மேலதிக) ஆடைகளை நீங்கள் களைந்திருக்கும் நண்பகல் நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகும். இவை உங்களுக்குரிய அந்தரங்கமான மூன்று (வேளைகள்) ஆகும். இவற்றுக்குப் பின் (அனுமதியின்றி வருவது) உங்கள் மீதோ, அவர்கள் மீதோ குற்றமில்லை. அவர்கள் உங்களைச் சுற்றிவருவோர். நீங்கள் ஒருவரையொருவர் சார்ந்துள்ளீர்கள். இவ்வாறே அல்லாஹ், உங்களுக்கு வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.
59. உங்களில் சிறுவர்கள் பருவமடைந்து விட்டால், அவர்களும் தமக்கு முன்னுள்ளவர்கள் அனுமதி கோருவது போன்றே அனுமதி கோர வேண்டும். இவ்வாறே அல்லாஹ், தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.
60. திருமணத்தில் நாட்டமில்லாத வயோதிகப் பெண்கள் அலங்காரத்தை வெளிப்படுத்தாமல் தமது (மேலதிக) ஆடைகளைக் களைந்திருப்பது அவர்கள்மீது குற்றமில்லை. கற்புநெறியைப் பேணுவது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
61. உங்கள் வீடுகள், உங்கள் தந்தையரின் வீடுகள், உங்கள் அன்னையரின் வீடுகள், உங்கள் சகோதரர்களின் வீடுகள், உங்கள் சகோதரிகளின் வீடுகள், உங்கள் தந்தையின் சகோதரர்களின் வீடுகள், உங்கள் தந்தையின் சகோதரிகளின் வீடுகள், உங்கள் தாயின் சகோதரர்களின் வீடுகள், உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகள் ஆகியவற்றிலோ, எவற்றின் சாவிகளை உங்கள் கைவசம் வைத்திருக்கிறீர்களோ அவற்றிலோ, உங்கள் நண்பர்களிடத்திலோ உணவு உண்பது உங்கள்மீது குற்றமில்லை. (உங்களுடன் உணவருந்துவதில்) குருடர்மீது குற்றமில்லை. ஊனமுற்றவர்மீதும் குற்றமில்லை. நோயாளியின்மீதும் குற்றமில்லை. நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ உண்பதும் உங்கள்மீது குற்றமில்லை. நீங்கள் வீடுகளுக்குள் நுழைந்தால், அல்லாஹ்வின் தூய, பாக்கியமிக்க ஸலாம் எனும் முகமனை உங்கள்மீது கூறிக் கொள்ளுங்கள். இவ்வாறே நீங்கள் சிந்திப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.365
62. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பியவர்களே இறைநம்பிக்கையாளர்கள். அவர்கள், (தூதராகிய) அவருடன் ஒரு பொதுக் காரியத்திற்காக(க் கூடி) இருக்கும்போது, அவரிடம் அனுமதி பெறும்வரை (அங்கிருந்து) வெளியேற மாட்டார்கள். (நபியே! அவ்வாறு) உம்மிடம் அனுமதி கோருபவர்களே அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பியவர்கள். எனவே, அவர்கள் தமது காரியத்திற்காக உம்மிடம் அனுமதி கோரினால், அவர்களில் நீர் விரும்பியோருக்கு அனுமதியளிப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருவீராக! அல்லாஹ் மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
63. உங்களில் ஒருசிலர், வேறுசிலரை அழைப்பதைப் போல் உங்களுக்கிடையே இத்தூதரின் அழைப்பை ஆக்கி விடாதீர்கள்! உங்களில் (அவரது அவையிலிருந்து) ஒளிந்து கொண்டு நழுவிச் செல்வோரை அல்லாஹ் அறிவான். அவரது கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்குச் சோதனை ஏற்படுவதையோ, அல்லது துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.
64. அல்லாஹ்வுக்கே வானங்களிலும், பூமியிலும் உள்ளவை சொந்தம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அவனே அறிவான். அவர்கள் அவனிடம் மீட்டுக் கொண்டு வரப்படும் நாளில், அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.