அத்தியாயம் : 4
வசனங்களின் எண்ணிக்கை: 176
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனே ஒரேயொரு மனிதரிலிருந்து உங்களைப் படைத்தான். மேலும் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் வேண்டிக் கொள்கிறீர்கள். இரத்த உறவுகளையும் (துண்டிப்பதை அஞ்சிக் கொள்ளுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.83
2. அநாதைகளின் செல்வங்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்! (அதிலுள்ள) நல்லதற்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள்! அவர்களின் செல்வங்களை உங்கள் செல்வங்களுடன் சேர்த்துச் சாப்பிடாதீர்கள்! அது பெரும் பாவமாக உள்ளது.
3. அநாதைப் பெண்கள் (திருமண) விஷயத்தில் நீங்கள் நேர்மையாக நடக்க முடியாது என்று பயந்தால் மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ திருமணம் செய்து கொள்ளுங்கள்! (அவர்களுக்கிடையே) நீதியாக நடக்கமுடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணோ அல்லது அடிமைப் பெண்ணோ போதும். நீங்கள் நீதி தவறாமல் இருக்க இதுவே மிக நெருக்கமானது.84
4. பெண்களுக்கு அவர்களின் திருமணக்கொடைகளை மனப்பூர்வமாகக் கொடுங்கள்! அதிலிருந்து அவர்கள் மனமுவந்து எதையேனும் உங்களுக்குத் தந்தால் அதைத் திருப்தியுடனும் மகிழ்வுடனும் உண்ணுங்கள்!
5. அல்லாஹ் உங்களுக்கு வாழ்வாதாரமாக ஆக்கியுள்ள, உங்களிடமுள்ள செல்வங்களை விபரமறியாதோரிடம் கொடுத்து விடாதீர்கள். அதிலிருந்து அவர்களுக்கு உணவளியுங்கள்! ஆடை அணிவியுங்கள்! இனிய சொற்களையே அவர்களிடம் கூறுங்கள்!
6. அநாதைகளைப் பரிசோதித்து வாருங்கள்! அவர்கள் திருமணப் பருவத்தை அடைந்து, அவர்களிடம் நீங்கள் பக்குவத்தைக் கண்டால், அவர்களின் செல்வங்களை அவர்களிடமே ஒப்படைத்துவிடுங்கள்! அவர்கள் பெரியவர்களாகி (செல்வத்தைத் திருப்பிக் கேட்டு) விடுவர் என்பதற்காக வரம்புமீறி, அவசரமாக அதை உண்ணாதீர்கள்! செல்வந்தராக இருப்பவர் (அதிலிருந்து உண்ணாமல்) தவிர்த்துக் கொள்ளட்டும். ஏழையாக இருப்பவர் நியாயமான முறையில் (அதிலிருந்து) உண்ணட்டும்! அவர்களின் செல்வங்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் விஷயத்தில் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! கணக்கெடுக்க அல்லாஹ் போதுமானவன்.85
7. பெற்றோரும் உறவினரும் விட்டுச் சென்றதில் ஆண்களுக்குப் பங்குண்டு. மேலும், பெற்றோரும் உறவினரும் விட்டுச் சென்றதில் பெண்களுக்கும் பங்குண்டு. அது குறைவாக இருந்தாலும் சரி! கூடுதலாக இருந்தாலும் சரி! இது கடமையாக்கப்பட்ட பங்கீடாகும்.
8. பாகப்பிரிவினையின்போது உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ (அங்கு) வந்துவிட்டால் அவர்களுக்கும் அதிலிருந்து வழங்குங்கள்! அவர்களிடம் நல்ல சொற்களையே கூறுங்கள்!86
9. தமக்குப்பின் பலவீனமான பிள்ளைகளை விட்டுச் சென்றால் அவர்களைப் பற்றிப் பயப்படுவதைப் போல் (மற்றவர்கள் விஷயத்திலும்) அவர்கள் பயந்து கொள்ளட்டும்! அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்! நேர்மையான சொல்லையே அவர்கள் கூறட்டும்!
10. அநாதைகளின் செல்வங்களை அநியாயமாக உண்போர் தமது வயிறுகளில் நெருப்பையே உண்கின்றனர். அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரகத்தில் நுழைவார்கள்.87
11. “(சொத்தில்) இரண்டு பெண்களின் பங்கைப் போன்றது ஓர் ஆணுக்குரியது. பெண் மக்களாகவே (இருவர் அல்லது) இருவருக்கு மேல் இருந்தால் இறந்தவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்குரியது. ஒரேயொரு மகள் மட்டும் இருந்தால் அவளுக்குப் பாதி உண்டு” என உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகிறான். இறந்தவருக்குப் பிள்ளை இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் அவரது தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு உண்டு. அவருக்குப் பிள்ளையின்றி தாய், தந்தை வாரிசானால் (அதில்) மூன்றில் ஒரு பங்கு அவரது தாய்க்கு உரியது. இறந்தவருக்கு உடன்பிறந்தோர் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பங்கு உண்டு. அவர் செய்த மரணசாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பிறகே (பங்கிடப்பட வேண்டும்!). உங்கள் பெற்றோரிலும், பிள்ளைகளிலும் உங்களுக்குப் பயனளிப்பதில் மிக நெருக்கமானவர்கள் யார் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். இது அல்லாஹ்விடமிருந்து விதியாக்கப்பட்டது. அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.88
12. உங்கள் மனைவியருக்குப் பிள்ளை இல்லையென்றால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உரியது. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் நான்கில் ஒரு பங்கு உங்களுக்குரியது. இது அவர்கள் செய்த மரணசாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்பாகும். உங்களுக்குப் பிள்ளை இல்லையென்றால் நீங்கள் விட்டுச் சென்றதில் நான்கில் ஒரு பங்கு மனைவியருக்கு உரியது. உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் எட்டில் ஒரு பங்கு அவர்களுக்குரியதாகும். இது நீங்கள் செய்த மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்பாகும். மகன், தந்தை ஆகிய வாரிசுகள் இல்லாத நிலையில் சொத்தை விட்டுச் சென்ற ஆண் அல்லது பெண்ணுக்கு ஒரு சகோதரன் அல்லது சகோதரி இருந்தால் அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு உண்டு. அவர்கள் இதைவிட அதிக எண்ணிக்கையில் இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் சமமானவர்கள். இது மரண சாசனமாக செய்யப்பட்டதையும், கடனையும் நிறைவேற்றிய பின்னராகும். (இவை யாவும் யாருக்கும்) பாதிப்பு இல்லாத வகையில் (பங்கிடப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் ஆணை. அல்லாஹ் நன்கறிந்தவன். சகிப்புத் தன்மை மிக்கவன்.89
13. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறாரோ அவரைச் சொர்க்கங்களில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.
14. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்து, அவனது வரம்புகளை மீறுகிறானோ அவனை அல்லாஹ் நரகத்தில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவுதரும் வேதனையும் உள்ளது.
15. உங்கள் பெண்கள் மானக்கேடான காரியத்தைச் செய்தால், அவர்களுக்கு எதிராக உங்களில் நான்கு பேரை சாட்சிக்கு அழையுங்கள்! அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்களுக்கு மரணம் ஏற்படும்வரை அல்லது அவர்களுக்கு ஒரு வழியை அல்லாஹ் ஏற்படுத்தும்வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்!90
16. உங்களில் இக்காரியத்தைச் செய்யும் அவ்விருவரையும் தண்டியுங்கள்! அவ்விருவரும் பாவ மன்னிப்புக் கோரி தம்மை திருத்திக் கொண்டால் அவர்களை விட்டுவிடுங்கள்! அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கின்றான்.
17. அறியாமையால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மனந்திருந்திக் கொள்வோரின் பாவ மன்னிப்புக் கோரிக்கையையே அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். அவர்களை அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
18. தீமைகளைச் செய்து கொண்டேயிருந்து, இறுதியில் அவர்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும்போது “இப்போது நான் பாவ மன்னிப்புக் கோருகிறேன்” என்று கூறுவோருக்கும், இறைமறுப்பாளர்களாகவே மரணிப்போருக்கும் பாவ மன்னிப்பு இல்லை. அவர்களுக்கே துன்புறுத்தும் வேதனையைத் தயார்படுத்தியுள்ளோம்.
19. இறைநம்பிக்கை கொண்டோரே! பெண்களைப் பலவந்தமாகச் சொந்தமாக்கிக் கொள்ள உங்களுக்கு அனுமதியில்லை.91 அவர்கள் பகிரங்கமான மானக்கேட்டைச் செய்தாலே தவிர, நீங்கள் அவர்களுக்குக் கொடுத்தவற்றில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்களுடன் அழகிய முறையில் வாழ்க்கை நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், அப்படி நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும்; ஆனால் அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருப்பான்.92
20. நீங்கள் (மணவிலக்குச் செய்த) ஒரு பெண்ணின் இடத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பினால் (மணவிலக்குச் செய்யப்பட்ட) அவளுக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலையே கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்! அநியாயமாகவும், பகிரங்கமான பாவமாகவும் இருக்கும் நிலையில் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாமா?
21. உங்களிடம் அவர்கள் உறுதியான உடன்படிக்கை ஏற்படுத்தி, நீங்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்துவிட்ட நிலையில் எப்படி நீங்கள் அதை எடுத்துக் கொள்ள முடியும்?93
22. உங்கள் தந்தையர் திருமணம் முடித்த பெண்களை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். (இதற்கு) முன்னர் நடந்து முடிந்ததைத் தவிர! அது மானக்கேடானதாகவும், வெறுப்பிற்குரியதாகவும், கெட்ட வழியாகவும் உள்ளது.
23. உங்கள் தாய்மார்கள், உங்கள் மகள்கள், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையின் சகோதரிகள், உங்கள் தாயின் சகோதரிகள், உங்கள் சகோதரனின் மகள்கள், உங்கள் சகோதரியின் மகள்கள், உங்களுக்குப் பாலூட்டிய தாய்மார்கள், உங்கள் பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியரின் (முந்தைய கணவருக்குப் பிறந்த) உங்கள் பொறுப்பில் வளரும் மகள்கள் ஆகியோர் உங்களுக்குத் (திருமணம் செய்யத்) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் அந்த மனைவியருடன் உடலுறவு கொள்ளாவிட்டால் (அவர்களை மணவிலக்குச் செய்துவிட்டு அவர்களின் மகள்களை மணந்து கொள்வதில்) உங்கள்மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த ஆண்மக்களின் மனைவியரும் (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்றிணைத்துக் கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது.) முன்னர் நடந்து முடிந்ததை தவிர. அல்லாஹ் மன்னிப்புமிக்கவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.94
24. உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர மற்ற பெண்களில் கணவன் உள்ளவர்களையும் (திருமணம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.) இவை உங்கள்மீது அல்லாஹ் விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர மற்றவர்களை நீங்கள் விபச்சாரம் செய்வோராக இல்லாமலும், கற்பு நெறியைப் பேணியவர்களாகவும் உங்கள் செல்வங்களைக் கொடுத்துத் (திருமணத்தின் மூலம்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவர்களிடமிருந்து அடையும் இன்பத்திற்காக அவர்களுக்குரிய திருமணக் கொடைகளைக் கட்டாயமாக வழங்கி விடுங்கள். நிர்ணயித்த பின்னர் (திருமணக் கொடையில் மாற்றம் செய்து அதை) நீங்கள் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொண்டால் அதில் உங்கள்மீது குற்றமில்லை. அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.95
25. இறைநம்பிக்கை கொண்ட, சுதந்திரமான பெண்களைத் திருமணம் செய்ய உங்களில் வசதியைப் பெறாதவர், உங்கள் ஆதிக்கத்திலுள்ள, இறைநம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களை(த் திருமணம் செய்யட்டும்.) உங்கள் இறைநம்பிக்கையை அல்லாஹ் நன்கறிந்தவன். நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றியவர்கள்தான். விபச்சாரம் செய்யாத, கள்ளக் காதலர்களை ஏற்படுத்தாத, கற்பொழுக்கமுடைய (அடிமைப்) பெண்களை, அவர்களுடைய எஜமானர்களின் அனுமதி பெற்று திருமணம் செய்யுங்கள்! அவர்களுக்குரிய மணக் கொடைகளை நியாயமான முறையில் அவர்களிடம் வழங்கி விடுங்கள். மணமுடிக்கப்பட்ட பின்பு அவர்கள் விபச்சாரம் செய்தால், சுதந்திரமான கன்னிப் பெண்களுக்குரிய தண்டனையில் பாதியே அவர்களுக்குண்டு. இது, உங்களில் விபச்சாரத்தை அஞ்சுவோருக்குரியது. நீங்கள் பொறுமையை மேற்கொள்வது உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரிலா அன்பாளன்.96
26. உங்களுக்குத் தெளிவுபடுத்தவும், உங்களுக்கு முன் சென்றோரின் நேர் வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களை மன்னிக்கவும் அல்லாஹ் விரும்புகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.
27. உங்களை அல்லாஹ் மன்னிக்க விரும்புகிறான். சுய விருப்பங்களைப் பின்பற்றுபவர்களோ, நீங்கள் (பாவங்களில்) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென விரும்புகின்றனர்.
28. உங்களுக்கு எளிதாக்க அல்லாஹ் விரும்புகிறான். மனிதன் பலவீனமானவனாகப் படைக்கப்பட்டுள்ளான்.
29. இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கிடையே தவறான முறையில் உங்கள் பொருட்களை உண்ணாதீர்கள்! எனினும், ஒருவருக்கொருவர் பொருந்திக்கொண்டு நடைபெறும் வியாபாரத்தின் மூலமாக (உண்ணலாம்). உங்களையே நீங்கள் மாய்த்துக் கொள்ளாதீர்கள்! உங்கள்மீது அல்லாஹ் நிகரிலா அன்பாளனாக இருக்கிறான்.97
30. வரம்பு மீறி, அநியாயமாக இதைச் செய்வோரை நரகத்தில் நுழையச் செய்வோம். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
31. உங்களுக்குத் தடுக்கப்பட்ட பெரும் பாவங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால் உங்கள் தீமைகளை உங்களிடமிருந்து அழித்து விடுவோம். உங்களை கண்ணியமான இடத்தில் நுழையச் செய்வோம்.98
32. உங்களில் சிலரைவிடச் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதில் பேராசைப்படாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கான பங்கு உண்டு. பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்ததற்கான பங்கு உண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளைக் கோருங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
33. பெற்றோரும், உறவினரும் விட்டுச் சென்றவற்றுக்கு(த் தகுதியான) ஒவ்வொருவரையும் வாரிசுகளாக ஆக்கியுள்ளோம். நீங்கள் உடன்படிக்கை செய்தவர்களிடம் அவர்களின் பங்கினைக் கொடுத்து விடுங்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.99
34. ஆண்களே பெண்களை நிர்வகிப்பவர்கள். அவர்களில் ஒருவரைவிட மற்றவரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுவதுமே இதற்குக் காரணமாகும். நல்லொழுக்கமுள்ள பெண்கள் எனப்படுவோர் பணிந்து நடப்போரும், அல்லாஹ் பாதுகாக்கச் சொன்ன விதத்தில் (கணவன்) மறைவாக உள்ள நேரத்தில் (தம்மைப்) பாதுகாத்துக் கொள்வோருமே ஆவர்.100 மனைவியர் மாறுசெய்வதை நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! அவர்களைப் படுக்கைகளில் விலக்கி வையுங்கள்! அவர்களை (இலேசாக) அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக எந்தவொரு வழியையும் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.101
35. அவ்விருவருக்குமிடையில் பிரிவினை ஏற்பட்டு விடும் என்று நீங்கள் பயந்தால் அவனது குடும்பத்தாரிலிருந்து ஒரு நடுவரையும், அவளது குடும்பத்தாரிலிருந்து ஒரு நடுவரையும் அனுப்பி வையுங்கள்! அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால் அல்லாஹ் அவர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவான். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நன்கு தெரிந்தவனாகவும் இருக்கிறான்.
36. அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள்.102 பெற்றோர், உறவினர், அநாதைகள், ஏழைகள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், உடன் இருக்கும் நண்பர்கள், வழிப்போக்கர், உங்கள் அடிமைகள் ஆகியோருக்கு நன்மை செய்யுங்கள்! அகந்தையும், கர்வமும் கொள்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.103
37. யார் கஞ்சத்தனம் செய்து, (பிற) மக்களையும் கஞ்சத்தனம் செய்யுமாறு ஏவி, தமக்கு அல்லாஹ் வழங்கிய அருட்செல்வங்களை மறைக்கிறார்களோ அத்தகைய இறைமறுப்பாளர்களுக்கு இழிவு தரும் வேதனையைத் தயார்படுத்தியுள்ளோம்.
38. அவர்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பாமல் மக்களுக்குக் காட்டுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுகின்றனர். யாருக்கு ஷைத்தான் தோழனாக இருக்கிறானோ அவனே கெட்ட தோழன்.
39. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி, அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவு செய்தால் அவர்களுக்கு என்ன ஆகிவிடப் போகிறது? அவர்களை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
40. அல்லாஹ், அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதனைப் பல மடங்காக்குவான். தன்னிடமிருந்து மகத்தான கூலியையும் வழங்குவான்.104
41. (நபியே!) ஒவ்வொரு சமூகத்திற்கும் நாம் ஒரு சாட்சியைக் கொண்டு வரும்போது, இவர்களுக்கு உம்மைச் சாட்சியாகக் கொண்டு வந்தால் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்? 105
42. யார் (அல்லாஹ்வை) மறுத்து, தூதருக்கு மாறு செய்தார்களோ அவர்கள் அந்நாளில் தங்களுடன் பூமி தரைமட்டமாக்கப்பட்டிருக்கக் கூடாதா? என விரும்புவார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் எந்தச் செய்தியையும் மறைத்துவிட முடியாது.
43. இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பேசுவதை நீங்களே அறிய முடியாதவாறு போதையாக இருக்கும் நிலையில் தொழுகைக்கு நெருங்காதீர்கள்!106 & 108 மேலும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும்வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்! பள்ளியைப்) பாதையாகக் கடந்து சென்றாலே தவிர! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால் அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டியிருந்தால் (தூய்மை செய்ய) தண்ணீர் கிடைக்காதபோது, தூய்மையான மண்ணைக் கொண்டு உங்கள் முகங்களிலும் கைகளிலும் தடவி ‘தயம்மும்’ செய்து கொள்ளுங்கள்!107 அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பு மிக்கவனாகவும் இருக்கிறான்.
44. வேதம் எனும் பாக்கியம் வழங்கப்பட்டோரை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்குகின்றனர். நீங்கள் வழிகெட்டுவிட வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.
45. உங்கள் எதிரிகளை அல்லாஹ் நன்கறிந்தவன்; (உங்களைப்) பாதுகாப்பதற்கு அல்லாஹ் போதுமானவன்; உதவி செய்வதற்கும் அல்லாஹ் போதுமானவன்.
46. சில யூதர்கள், வார்த்தைகளை அதற்குரிய இடங்களிலிருந்து புரட்டுகின்றனர். தம் நாவுகளைச் சுழற்றியும், இம்மார்க்கத்தைக் குறை கூறியும், “செவியுற்றோம்; மாறு செய்தோம்” எனவும், “எங்களுக்குச் செவிசாய்ப்பீராக! ஆனால் உமக்கு நாங்கள் செவிசாய்க்க மாட்டோம்” எனவும் (தவறான பொருளைத் தரும்) “ராஇனா” எனவும் கூறுகின்றனர். மாறாக அவர்கள், “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்றும், ‘செவியேற்பீராக!’ என்றும், “உன்ளுர்னா (எங்களைக் கவனிப்பீராக!)” என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும் அவர்களின் இறைமறுப்பின் காரணமாக அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். எனவே குறைவானோரைத் தவிர இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
47. வேதம் வழங்கப்பட்டோரே! முகங்களைச் சிதைத்து, அதைப் பின்புறமாக நாம் திருப்புவதற்கு முன்பு அல்லது சனிக்கிழமைவாசிகளை நாம் சபித்ததைப் போன்று அவர்களைச் சபிப்பதற்கு முன்பு நாம் அருளியதை நம்புங்கள்! அது உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்துகிறது. அல்லாஹ்வின் ஆணை நடைபெற்றே தீரும்.
48. தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர வேறு எதையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் மிகப் பெரிய பாவத்தை இட்டுக்கட்டி விட்டான்.109
49. தம்மைத் தாமே பரிசுத்தமாகக் கருதுவோரை நீர் பார்க்கவில்லையா? எனினும், தான் நாடியோரை அல்லாஹ்வே பரிசுத்தப்படுத்துவான். அவர்கள் சிறிதளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
50. அவர்கள் அல்லாஹ்வின்மீது பொய்யை எவ்வாறு இட்டுக்கட்டுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! பகிரங்கமான பாவம் என்பதற்கு இதுவே போதுமானது.
51. வேதம் எனும் பாக்கியம் வழங்கப்பட்டோரை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் சிலைகளையும் ஷைத்தானையும் நம்புகின்றனர். “இறைநம்பிக்கையாளர்களைவிட இவர்களே சரியான பாதையில் உள்ளவர்கள்” என இறைமறுப்பாளர்களைப் பற்றிக் கூறுகின்றனர்.
52. இவர்களையே அல்லாஹ் சபித்துவிட்டான். அல்லாஹ் யாரைச் சபித்து விட்டானோ அவனுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணவே மாட்டீர்.
53. அதிகாரத்தில் அவர்களுக்கு ஏதேனும் பங்குள்ளதா? அப்படி இருந்திருந்தால் (அதிலிருந்து) மக்களுக்கு ஓர் இம்மியளவு கூடக் கொடுக்க மாட்டார்கள்.
54. இம்மக்களுக்கு அல்லாஹ் தன் அருளிலிருந்து வழங்கியதற்காக அவர்கள்மீது இவர்கள் பொறாமைப்படுகிறார்களா? இப்ராஹீமுடைய குடும்பத்தாருக்கு வேதத்தையும் ஞானத்தையும் வழங்கினோம். மேலும் அவர்களுக்கு மாபெரும் அரசாட்சியையும் அளித்தோம்.
55. (தூதரான) இவரை நம்பியோரும் அவர்களில் உள்ளனர். இவரைப் புறக்கணிப்போரும் அவர்களில் உள்ளனர். (புறக்கணிப்போருக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே போதுமானது.
56. நமது வசனங்களை மறுப்போரை நரக நெருப்பில் நுழையச் செய்வோம். அவர்களுடைய தோல்கள் கருகும்போதெல்லாம் வேதனையைச் சுவைப்பதற்காக அவர்களுக்கு வேறு தோல்களை மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
57. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோரை சொர்க்கங்களில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய துணைவியரும் உள்ளனர். அடர்ந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்
58. (உங்களை) நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றை அதற்குரியோரிடம் நீங்கள் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும், மக்களுக்கிடையே தீர்ப்பளித்தால் நீதியாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உங்களுக்கு அல்லாஹ் ஆணையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் மிகச் சிறந்த அறிவுரையையே கூறுகிறான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.110
59. இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்களில் அதிகாரமுடையோருக்கும் (கட்டுப்படுங்கள்!) நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோராக இருந்தால் ஏதேனும் ஒரு விசயத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளும்போது அதை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், அழகிய விளக்கமுமாகும்.111
60. உம்மீது அருளப்பட்டதையும், உமக்கு முன்னர் அருளப்பட்டதையும் நம்புவதாகக் கருதிக் கொள்வோரை நீர் பார்க்கவில்லையா? ஷைத்தானை மறுக்க வேண்டும் என்று அவர்களுக்குப் பணிக்கப்பட்டிருந்தும், அவனிடம் தீர்ப்புப் பெறவே அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் ஷைத்தானோ அவர்களைத் தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான்.
61. “அல்லாஹ் அருளியதன் பக்கமும், இத்தூதரின் பக்கமும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால், நயவஞ்சகர்கள் உம்மை முற்றிலும் புறக்கணிப்பதை நீர் காண்பீர்.
62. அவர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் எப்படியிருக்கும்? (துன்பம் ஏற்பட்ட) பின்னர் உம்மிடம் வந்து “நாங்கள் நன்மை செய்வதையும், இணக்கத்தையுமே விரும்புகிறோம்” என அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்வார்கள்.
63. இத்தகையோரின் உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் அறிவான். எனவே அவர்(களது செயல்)களைக் கண்டு கொள்ளாது, அவர்களுக்கு நல்லுரை கூறுவீராக! அவர்களின் உள்ளங்களில் (பதியுமாறு) அவர்களுக்கு ஆழமான அறிவுரையைக் கூறுவீராக!
64. அல்லாஹ்வின் ஆணைப்படி (மக்கள்) கட்டுப்படவேண்டும் என்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை. அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்தபோது உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம் அவர்கள் பாவ மன்னிப்புக் கோரி, தூதரும் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோரியிருந்தால் அல்லாஹ்வை மிக்க மன்னிப்பவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
65. உமது இறைவன்மீது சத்தியமாக! அவர்கள் தமக்கிடையிலான சச்சரவில் உம்மை நீதிபதியாக ஏற்று, (அதன்) பின்னர் நீர் தீர்ப்பளித்ததில் தம் உள்ளங்களில் எவ்வித அதிருப்தியும் கொள்ளாமல் முழுமையாகக் கட்டுப்படும்வரை அவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.112
66. “உங்களையே மாய்த்துக் கொள்ளுங்கள்! அல்லது உங்கள் வீடுகளிலிருந்து வெளியேறுங்கள்!” என்று நாம் அவர்களுக்கு விதித்திருந்தால் அவர்களில் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைச் செய்திருக்க மாட்டார்கள். தமக்கு அறிவுறுத்தப்பட்டதை அவர்கள் செயல்படுத்தியிருந்தால் அதுவே அவர்களுக்கு மிகச் சிறந்ததாகவும், மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.
67. அப்போது, அவர்களுக்கு நம்மிடமிருந்து மகத்தான கூலியை வழங்கியிருப்போம்.
68. அவர்களை நேர்வழியிலும் செலுத்தியிருப்போம்.
69. யார் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுகிறார்களோ அவர்கள், அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிக அழகிய தோழர்கள்.113
70. இது அல்லாஹ்விடமிருந்துள்ள அருட்கொடையாகும். நன்கறிந்தவனான அல்லாஹ்வே போதுமானவன்.
71. இறைநம்பிக்கை கொண்டோரே! (போரின்போது) எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! பல்வேறு பிரிவுகளாகப் புறப்படுங்கள்! அல்லது மொத்தமாகப் புறப்படுங்கள்!
72. (போருக்கு வராமல்) பின்தங்குபவனும் உங்களில் இருக்கிறான். உங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் “நான் அவர்களுடன் கலந்து கொள்ளாமல் இருந்ததால் அல்லாஹ் என்மீது அருள்புரிந்து விட்டான்” என்று அவன் கூறுகிறான்.
73. உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து ஏதேனும் அருள் கிடைத்துவிட்டால் “நான் அவர்களுடன் இருந்திருக்கக் கூடாதா? மாபெரும் வெற்றியடைந்திருப்பேனே!” என்று உங்களுக்கும் அவனுக்குமிடையே எந்த நேசமும் இல்லாதவனைப் போல் கூறுகிறான்.
74. மறுமைக்காக இவ்வுலக வாழ்வை விற்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்! அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்படுவோருக்கு, அல்லது வெற்றி பெறுவோருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.
75. அல்லாஹ்வின் பாதையிலும், பலவீனமான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்காகவும், போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களோ, “எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து எங்களுக்கு ஒரு பாதுகாவலரை ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து எங்களுக்கு ஓர் உதவியாளரையும் ஏற்படுத்துவாயாக!” என்று கூறுகின்றனர்.
76. இறைநம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். இறைமறுப்பாளர்களோ ஷைத்தானின் பாதையில் போரிடுவார்கள். எனவே நீங்கள் ஷைத்தானின் நேசர்களை எதிர்த்துப் போரிடுங்கள்! ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமாகவே உள்ளது.
77. “(போரிடாமல்) உங்கள் கைகளைக் தடுத்துக் கொள்ளுங்கள்! தொழுகையை நிலைநிறுத்துங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்!” என்று கூறப்பட்டோரை நீர் பார்க்கவில்லையா? அவர்களின்மீது போர் கடமையாக்கப்பட்டபோது அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுவதைப் போன்று அல்லது அதைவிட அதிகளவு மக்களுக்குப் பயப்படுகின்றனர். “எங்கள் இறைவனே! எதற்காக எங்கள்மீது போரைக் கடமையாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்குப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா?” எனக் கூறுகின்றனர். “இவ்வுலக இன்பம் சொற்பமானது. இறையச்சமுடையோருக்கு மறுமையே மிகச் சிறந்தது. நீங்கள் சிறிதளவும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்!” என்று கூறுவீராக!114
78. நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதியான கோட்டைகளில் இருந்தபோதிலும் சரியே! அவர்களுக்கு நன்மை ஏற்பட்டால், “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்கின்றனர். அவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடமிருந்தே வந்தது” எனக் கூறுகின்றனர். “அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகிறது” என்று கூறுவீராக! இக்கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? எந்த விஷயத்தையும் இவர்கள் விளங்கிக் கொள்ள முற்படுவதில்லையே?
79. உமக்கு நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்வால் ஏற்பட்டது. உமக்குக் தீங்கு ஏற்பட்டால் அது உம்மாலேயே ஏற்பட்டது. (நபியே!) மனிதகுலத்திற்கு உம்மைத் தூதராக அனுப்பியுள்ளோம். கண்காணிப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
80. யார் இத்தூதருக்குக் கட்டுப்படுகிறோரோ அவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு விட்டார். யார் புறக்கணிக்கிறாரோ அவர்களுக்குப் பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை.115
81. அவர்கள், “கட்டுப்பட்டோம்” எனக் கூறுகின்றனர். உம்மிடமிருந்து வெளியேறி விட்டால் அவர்களில் ஒரு பிரிவினர் தாம் கூறியதற்கு மாற்றமாக இரவில் (சதித்)திட்டம் தீட்டுகின்றனர். அவர்கள் எதை இரவில் திட்டமிட்டார்களோ அதை அல்லாஹ் பதிவு செய்கிறான். அவர்களைப் புறக்கணிப்பீராக! அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைப்பீராக! பொறுப்பேற்க அல்லாஹ் போதுமானவன்.
82. இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து இது வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்.
83. (சமூக) அமைதி அல்லது அச்சம் குறித்த ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால் அதை (ஆராயாமல்) பரப்பி விடுகின்றனர். அதை இத்தூதரிடமும், தங்களில் அதிகாரமுடையவர்களிடமும் கொண்டு சென்றிருந்தால், அவர்களில் ஆராய்ந்து முடிவெடுப்போர் அதை நன்கறிந்து கொள்வர். அல்லாஹ்வின் அருளும் கருணையும் உங்கள்மீது இல்லாதிருந்தால் குறைவானவர்களைத் தவிர நீங்கள் ஷைத்தானைப் பின்பற்றியிருப்பீர்கள்.116
84. (நபியே!) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவீராக! உம்மைத் தவிர (மற்றவருக்காக) நீர் சிரமப்படுத்தப்பட மாட்டீர். இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக! இறைமறுப்பாளர்களின் வலிமையை அல்லாஹ் தடுப்பான். அல்லாஹ் மிக வலிமையானவன்; தண்டிப்பதிலும் மிகக் கடுமையானவன்.
85. யார் நல்ல பரிந்துரை செய்கிறாரோ அவருக்கு அதில் பங்குண்டு. யார் தீய பரிந்துரை செய்கிறாரோ அவருக்கு அதில் பங்குண்டு. ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.117
86. உங்களுக்கு (ஸலாம் எனும்) வாழ்த்து கூறப்பட்டால் அதைவிட அழகிய முறையில் பதில் கூறுங்கள்! அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள்! ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் கணக்கெடுப்பவனாக இருக்கின்றான்.
87. அல்லாஹ், அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. உங்கள் அனைவரையும் மறுமை நாளில் அவன் ஒன்று சேர்ப்பான். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவன் வேறு யார்?
88. நயவஞ்சகர்கள் விஷயத்தில் நீங்கள் இரு பிரிவினராக இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்தவற்றின் காரணமாக அவர்களை அல்லாஹ் புரட்டி விட்டான். அல்லாஹ், யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவனுக்கு நேர்வழி காட்ட விரும்புகிறீர்களா? அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவனுக்கு எந்த வழியையும் நீர் காணமாட்டீர்.118
89. அவர்கள் (அல்லாஹ்வை) மறுத்ததைப் போன்று நீங்களும் மறுத்து, (அவர்களுடன்) நீங்கள் சமமாக வேண்டும் என விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! (போரில்) காணுமிடத்தில் அவர்களைக் கொல்லுங்கள்! அவர்களில் நண்பரையோ, உதவியாளரையோ ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!
90. உங்களுக்கும் எவருக்குமிடையில் உடன்படிக்கை உள்ளதோ அந்த மக்களுடன் சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களை எதிர்த்துப் போரிடவோ, தம் சமூகத்தை எதிர்த்துப் போரிடவோ தமது உள்ளங்களில் சஞ்சலப்பட்டு, உங்களிடம் வந்துவிட்டவர்களையும் தவிர (மற்றவர்களுடன் போரிடுங்கள்!) அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள்மீது அவர்களை ஆதிக்கம் செலுத்த வைத்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களுடன் போரிடாமல் உங்களை விட்டு விலகி, உங்களிடம் சமாதானத்தைக் கோரினால் அவர்களுக்கு எதிராக(ப் போரிட) எந்தவொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.
91. உங்களிடம் அடைக்கலம் பெற்று, தமது சமூகத்தாரிடமும் அடைக்கலம் பெறுவதை விரும்பும் மற்றொரு சாராரையும் காண்பீர்கள். அவர்கள் குழப்பம் செய்வதற்கு எப்போது அழைக்கப்பட்டாலும் அதில் கவிழ்ந்து விடுகிறார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகாமலும், உங்களிடம் சமாதானத்தைக் கோராமலும், தமது கைகளை (தாக்குவதிலிருந்து) தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால் அவர்களைப் பிடியுங்கள்! (போரில்) காணும் இடங்களில் அவர்களைக் கொல்லுங்கள்! இவர்களுக்கு எதிராக(ப் போரிட) தெளிவான ஆதாரத்தை உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம்.
92. தவறுதலாக நிகழ்ந்தாலே தவிர, ஓர் இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்வது மற்றோர் இறைநம்பிக்கையாளருக்கு ஆகுமானதல்ல! இறைநம்பிக்கையாளரைத் தவறுதலாகக் கொலை செய்தவர் (பரிகாரமாக) இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். மேலும் கொல்லப்பட்டவரின் குடும்பத்தார் விட்டுக் கொடுத்தாலே தவிர அவர்களிடம் நஷ்டஈடும் வழங்கப்படவேண்டும். (கொல்லப்பட்ட) அவர் உங்களுக்கு எதிரான சமூகத்திலுள்ள இறைநம்பிக்கையாளராக இருந்தால், இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். உங்களுடன் உடன்படிக்கை செய்த சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தாருக்கு நஷ்டஈடு வழங்கப்படுவதுடன் இறைநம்பிக்கை கொண்ட ஒர் அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதற்கு) வசதியில்லாதவர் அல்லாஹ்விடமிருந்துள்ள மன்னிப்பாக இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
93. யார் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறானோ அவனது கூலி நரகமாகும். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன்மீது அல்லாஹ் கோபம் கொண்டான். மேலும் அவனைச் சபித்து விட்டான். அவனுக்குக் கடும் வேதனையையும் தயார்படுத்தி விட்டான்.119
94. இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் சென்றால் (எதிரி யார் என்பதைத்) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஸலாம் கூறுபவரிடம், இவ்வுலக வாழ்வின் செல்வத்தை அடைவதற்காக “நீ இறைநம்பிக்கையாளன் இல்லை” என்று கூறி(த் தாக்கி)விடாதீர்கள்! அல்லாஹ்விடம் ஏராளமான வெற்றிப்பொருட்கள் உள்ளன. இதற்கு முன்னர் நீங்களும் இந்நிலையில்தான் இருந்தீர்கள். உங்கள்மீது அல்லாஹ் அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான்.120
95. இறைநம்பிக்கையாளர்களில் எவ்விதத் தடங்கலுமின்றி (போருக்குச் செல்லாது) ஊரில் தங்கியிருப்போரும், தமது செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். ஊரில் தங்கியிருப்போரைவிடத் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் போரிடுவோரை பதவியால் அல்லாஹ் சிறப்பித்துள்ளான். இவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்துள்ளான். எனினும் ஊரில் தங்கியிருப்போரைவிடப் போரிடுவோரை மகத்தான கூலியால் அல்லாஹ் சிறப்பித்துள்ளான்.121
96. தன்னிடமுள்ள பதவி, மன்னிப்பு, கருணை ஆகியவற்றாலும் (சிறப்பித்துள்ளான்.) அல்லாஹ் மன்னிப்புமிக்கவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.
97. தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது, “நீங்கள் எந்நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். “நாங்கள் பூமியில் பலவீனமாக்கப்பட்டவர்களாக இருந்தோம்” என்று அவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வின் பூமி விரிந்து பரந்ததாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கலாமல்லவா?” என்று (வானவர்கள்) கேட்பார்கள். இத்தகையோரின் தங்குமிடம் நரகமாகும். சேருமிடத்தில் அது கெட்டது.122
98, 99. எவ்வித சூழ்ச்சியும் செய்ய இயலாத, எந்த வழியும் அறியாத பலவீனமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரைத் தவிர! அவர்களை அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்புமிக்கவனாகவும் இருக்கிறான்.123
100. அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்வோர் பூமியில் ஏராளமான தங்குமிடங்களையும், வசதிகளையும் பெற்றுக் கொள்வர். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நோக்கி ஹிஜ்ரத் செய்தவராகத் தமது வீட்டிலிருந்து புறப்பட்டு, பின்னர் (வழியிலேயே) யாருக்கு மரணம் வந்தடைந்து விட்டதோ அவருக்குரிய கூலி அல்லாஹ்விடம் உறுதியாகி விட்டது. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.
101. பூமியில் பயணம் செய்யும்போது இறைமறுப்பாளர்கள் உங்களைத் தாக்கி விடுவார்கள் என்று நீங்கள் பயந்தால், தொழுகையை சுருக்கிக் கொள்வது உங்கள்மீது குற்றமில்லை. இறைமறுப்பாளர்கள் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாக உள்ளனர்.124
102. (நபியே!) நீர் அவர்களுடன் (போர்க்களத்தில்) இருக்கும்போது அவர்களுக்கு நீர் தொழுகை நடத்தினால், அவர்களில் ஒரு பிரிவினர் உம்முடன் (தொழுகையில்) நிற்கட்டும்! அவர்கள் தமது ஆயுதங்களை எடுத்துக் கொள்ளட்டும். அவர்கள் ஸஜ்தா செய்து விட்டால் உங்களுக்குப் பின்னால் சென்று விடட்டும்! தொழாத மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும்! அவர்களும் தமது ஆயுதங்களுடன் எச்சரிக்கையாக இருந்து கொள்ளட்டும்! உங்கள் ஆயுதங்கள் மற்றும் உடைமைகளில் நீங்கள் கவனக்குறைவாக இருந்தால் உங்கள்மீது ஒரேயடியாக தாக்கி விடலாம் என இறைமறுப்பாளர்கள் விரும்புகின்றனர். மழையால் உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால் அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தால் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைப்பதில் உங்கள்மீது குற்றமில்லை. எச்சரிக்கையாக இருங்கள்! இறைமறுப்பாளர்களுக்கு இழிவு தரும் வேதனையை அல்லாஹ் தயார்படுத்தியுள்ளான்.
103. (போரில்) நீங்கள் தொழுகையை நிறைவேற்றி விட்டால் நின்று கொண்டும், உட்கார்ந்த நிலையிலும், படுக்கையிலும் அல்லாஹ்வை நினையுங்கள்! நீங்கள் அச்சமற்ற நிலையை அடைந்து விட்டால் தொழுகையை (முறைப்படி) நிறைவேற்றுங்கள்! தொழுகை, இறைநம்பிக்கையாளர்கள்மீது நேரம் குறிக்கப்பட்டக் கடமையாகும்.
104. அக்கூட்டத்தினரைத் தேடிச் செல்வதில் தளர்ந்து விடாதீர்கள்! நீங்கள் துன்புற்றால், நீங்கள் துன்புறுவதைப் போன்று அவர்களும் துன்புறுகின்றனர். ஆனால் அவர்கள் ஆதரவு வைக்காததை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் ஆதரவு வைக்கிறீர்கள். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
105. (நபியே!) அல்லாஹ் உமக்குக் காட்டியவாறு மக்களிடையே நீர் தீர்ப்பளிப்பதற்காக உண்மையுடன் இவ்வேதத்தை உமக்கு அருளியுள்ளோம். மோசடிக்காரர்களுக்கு வாதாடுபவராக ஆகி விடாதீர்!
106. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருவீராக! அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.
107. தங்களுக்கே மோசடி செய்து கொண்டோருக்காக நீர் வாதாடாதீர்! பெரும் மோசடிக்காரனாகவும், பாவியாகவும் இருப்பவனை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
108. அவர்கள் மக்களிடமிருந்து மறைந்து கொள்கிறார்கள். ஆனால் அல்லாஹ்விடம் மறைந்துவிட முடியாது. அவன் விரும்பாத பேச்சை அவர்கள் பேசி, இரவில் திட்டம் தீட்டியபோது அவன் அவர்களுடனே இருந்தான். அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
109. கவனத்தில் கொள்ளுங்கள்! நீங்கள்தான் இவ்வுலக வாழ்வில் அவர்களுக்காக வாதாடுகிறீர்கள். ஆனால் மறுமை நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுபவர் யார்? அல்லது அவர்களுக்குப் பொறுப்பேற்பவர் யார்?
110. யார் தீமை செய்துவிட்டு, அல்லது தனக்குத் தானே அநியாயம் செய்து விட்டு, பிறகு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருகிறாரோ அவர் அல்லாஹ்வை மன்னிப்புமிக்கவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் காண்பார்.125
111. யார் பாவம் செய்கிறாரோ அவர் தனக்கு எதிராகவே அதைச் செய்கிறார். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
112. ஒரு தவறோ அல்லது பாவமோ செய்துவிட்டுப் பிறகு அதைக் குற்றமற்றவர்மீது யார் சுமத்துகிறாரோ அவர், அவதூறையும் பகிரங்க பாவத்தையுமே சுமந்து கொண்டார்.
113. (நபியே!) அல்லாஹ்வின் அருளும், கருணையும் உம்மீது இல்லாதிருந்தால் அவர்களில் ஒரு பிரிவினர் உம்மை வழிகெடுக்க முனைந்திருப்பார்கள். அவர்கள் தம்மைத் தாமே வழிகெடுத்துக் கொள்கின்றனர். அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ் உம்மீது வேதத்தையும் ஞானத்தையும் அருளி, நீர் அறியாதவற்றை உமக்குக் கற்றுத் தந்தான். உம்மீதான அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக இருக்கிறது.
114. அவர்களுடைய இரகசியப் பேச்சுக்கள் அதிகமானவற்றில் எந்த நன்மையும் இல்லை. தர்மத்தையும், நற்காரியத்தையும், மக்களிடையே இணக்கம் ஏற்படுத்துவதையும் ஏவியவர்களைத் தவிர! அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்வோருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.
115. தனக்கு நேர்வழி தெளிவான பின்னரும் இத்தூதருக்கு மாறுசெய்து இறைநம்பிக்கையாளர்களின் வழி அல்லாததைப் பின்பற்றுபவரை அவர் செல்லும் வழியிலேயே விட்டு விடுவோம். பின்னர் நரகத்தில் அவரை நுழையச் செய்வோம். சேருமிடத்தில் அது கெட்டது.
116. தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர வேறு எதையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை வைப்பவன் தூரமான வழிகேட்டில் சென்று விட்டான்.
117. அவனை விட்டுவிட்டுப் பெண்(கடவுளர்)களையே அவர்கள் அழைக்கின்றனர். வரம்பு மீறிய ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை.
118, 119. அவனை அல்லாஹ் சபித்தான். “நான் உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை எடுத்துக் கொண்டு அவர்களை வழிகெடுப்பேன். அவர்களிடம் தவறான எண்ணங்களை ஏற்படுத்துவேன். அவர்களுக்கு நான் ஏவுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். மேலும் நான் அவர்களுக்கு ஏவுவேன்; அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளில் மாற்றம் செய்வார்கள்” என்று (ஷைத்தான்) கூறினான். யார் அல்லாஹ்வை விட்டுவிட்டு ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொண்டானோ அவன் தெளிவான நஷ்டத்தை அடைந்து விட்டான்.
120. அவர்களுக்கு அவன் வாக்களித்து, அவர்களிடம் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிறான். அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறெதையும் ஷைத்தான் வாக்களிக்கவில்லை.
121. அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அதிலிருந்து தப்பிச் செல்லுமிடத்தை அவர்கள் காண மாட்டார்கள்.
122. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோரை சொர்க்கங்களில் நுழையச் செய்வோம். அதன் கீழ் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவன் யார்?
123. நீங்கள் விரும்புவது போன்றோ, வேதமுடையோர் விரும்புவது போன்றோ (மறுமை நிகழ்வு) இருக்காது. தீமை செய்பவனுக்கு அதற்கான தண்டனை வழங்கப்படும். அவன் அல்லாஹ்வையன்றி தனக்குப் பாதுகாவலனையோ, உதவியாளனையோ காண மாட்டான்.126
124. ஆணோ அல்லது பெண்ணோ, இறைநம்பிக்கையாளராக இருந்து நற்செயல்கள் செய்தால், அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்கள் சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
125. நன்மை செய்பவராக, தனது முகத்தை அல்லாஹ்வுக்கு அடிபணியச் செய்து, சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றியவரைவிட அழகிய மார்க்கமுடையவர் யார்? இப்ராஹீமை, அல்லாஹ் உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்.127
126. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
127. (நபியே!) பெண்களைப் பற்றி உம்மிடம் விளக்கம் கேட்கின்றனர். “அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு விளக்குவான்” என்று கூறுவீராக! மேலும், அநாதைப் பெண்களுக்கென (திருமணக் கொடையாக) விதிக்கப்பட்டதை அவர்களுக்கு வழங்காமல் அவர்களை நீங்கள் மணமுடிக்க விரும்புவது பற்றியும், சிறுவர்களில் பலவீனமானவர்கள் பற்றியும், அநாதைகள் விஷயத்தில் நீங்கள் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பது பற்றியும் இவ்வேதத்தில் (முன்னரே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான்.128
128. ஒரு பெண், தனது கணவனிடமிருந்து வெறுப்போ அல்லது புறக்கணிப்போ ஏற்படுமெனப் பயந்தால் அவ்விருவரும் தமக்கிடையே சிறந்த முறையில் சமாதானம் செய்து கொள்வது அவர்கள்மீது குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. (இயல்பாகவே) உள்ளங்கள் கஞ்சத்தனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. நீங்கள் நன்மை செய்து, இறையச்சத்துடன் நடந்து கொண்டால் நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.129
129. மனைவியருக்கிடையே நீதமாக நடக்க நீங்கள் விரும்பினாலும் அது உங்களால் அறவே இயலாது. எனினும், அந்தரத்தில் விடப்பட்டவளைப் போல் ஒருத்தியை விட்டுவிட்டு, (மற்றொருத்தியிடம்) முழுமையாகச் சாய்ந்து விடாதீர்கள்! நீங்கள் இணக்கமாகவும், இறையச்சத்துடனும் நடந்து கொண்டால் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.
130. அவ்விருவரும் பிரிந்து விட்டால் ஒவ்வொருவரையும் அல்லாஹ் தனது தாராளத் தன்மையால் போதுமாக்கி வைப்பான். அல்லாஹ் விசாலமானவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
131. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியவை. “அல்லாஹ்வை அஞ்சுங்கள்!” என்று உங்களுக்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டோருக்கும், உங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். நீங்கள் மறுத்தால், வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ் தேவைகளற்றவனாகவும், புகழுக்குரியவனாகவும் இருக்கிறான்.
132. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியவை. பொறுப்பேற்பதில் அல்லாஹ் போதுமானவன்.
133. மனிதர்களே! அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு, மற்றவர்களைக் கொண்டு வருவான். அல்லாஹ் இதற்கு ஆற்றலுடையவனாகவே இருக்கிறான்.
134. இவ்வுலகின் பலனை எவரேனும் விரும்பினால், இம்மை மற்றும் மறுமையின் பலன் அல்லாஹ்விடமே உள்ளது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.
135. இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராக ஆகி விடுங்கள். உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ எதிராக இருந்தாலும் அல்லாஹ்வுக்காகவே சாட்சியாளராகி விடுங்கள். (யாருக்காகச் சாட்சி சொல்கிறீர்களோ அவர்) செல்வந்தராக இருந்தாலோ அல்லது ஏழையாக இருந்தாலோ அவ்விருவருக்கும் (உதவ) அல்லாஹ்வே மிகத் தகுதியானவன். எனவே நீதி செலுத்துவதில் சுய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் மாற்றிக் கூறினாலோ அல்லது (சாட்சி கூற) மறுத்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான்.
136. இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும், அவன் தனது தூதருக்கு அருளிய இவ்வேதத்தையும், இதற்கு முன்னர் அருளிய வேதங்களையும் நம்புங்கள்! அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், இறுதி நாளையும் மறுப்பவர் தூரமான வழிகேட்டில் சென்று விட்டார்.
137. (முதலில்) இறைநம்பிக்கை கொண்டு, (அதன்) பின்பு மறுத்து, மீண்டும் இறைநம்பிக்கை கொண்டு, (அதன்) பின்பு மறுத்து, பின்னர் இறைமறுப்பை யார் அதிகரித்துக் கொண்டார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை; அவர்களைச் சரியான வழியில் செலுத்துபவனாகவும் இல்லை.
138. நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என அவர்களிடம் நற்செய்தி கூறுவீராக!
139. இத்தகையோர் இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு, இறைமறுப்பாளர்களை நேசர்களாக்கிக் கொள்கின்றனர். அவர்களிடம் இவர்கள் கண்ணியத்தைத் தேடுகிறார்களா? கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது.
140. “அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்படுவதையும், அவை கேலி செய்யப்படுவதையும் நீங்கள் செவியுற்றால், அதுவல்லாத வேறு விஷயத்தில் அவர்கள் ஈடுபடும் வரை அவர்களுடன் நீங்கள் அமராதீர்கள்! அப்படிச் செய்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே!” என அவன் இவ்வேத்தில் உங்களுக்கு அருளியுள்ளான். நயவஞ்சகர்கள், இறைமறுப்பாளர்கள் அனைவரையும் நரகத்தில் அல்லாஹ் ஒன்றுசேர்ப்பான்.
141. உங்கள் விஷயத்தில் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு வெற்றி கிடைக்குமென்றால் “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறுகின்றனர். இறைமறுப்பாளர்களுக்கு வெற்றி கிடைத்தால் (அவர்களிடம்) “நாங்கள் உங்களைவிடவும் மிகைத்திருக்கவில்லையா? (அப்படியிருந்தும்) இறைநம்பிக்கை கொண்டோரிடமிருந்து உங்களைப் பாதுகாக்கவில்லையா?” என்று கூறுகின்றனர். அல்லாஹ் உங்களுக்கிடையே மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். இறைநம்பிக்கை கொண்டோருக்கு எதிராக எந்த வழியையும் இறைமறுப்பாளர்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.
142. நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை ஏமாற்றக் கூடியவன். அவர்கள் தொழுகையில் நின்றால் சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவதற்காகவும் நிற்கின்றனர். அவர்கள் மிகக் குறைவாகவே தவிர அல்லாஹ்வை நினைப்பதில்லை.130
143. இவர்களுடனும் இல்லை; அவர்களுடனும் இல்லை. இதற்கிடையில் அவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவனுக்கு எந்த வழியையும் நீர் காண மாட்டீர்.131
144. இறைநம்பிக்கை கொண்டோரே! இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு, இறைமறுப்பாளர்களை நேசர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கே எதிராகத் தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்விடம் ஏற்படுத்த விரும்புகிறீர்களா?
145. நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தளத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணவே மாட்டீர்.
146. பாவ மன்னிப்புக் கோரி, தம்மைச் சீர்திருத்தி, அல்லாஹ்வைப் பற்றிப் பிடித்து, தமது மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதாக்கியோரைத் தவிர! இவர்கள் இறைநம்பிக்கையாளர்களுடன் இருப்பார்கள். அல்லாஹ், இறைநம்பிக்கையாளர்களுக்கு மகத்தான கூலியை வழங்குவான்.
147. நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு, நன்றி செலுத்தினால் உங்களைத் தண்டித்து அல்லாஹ் என்ன செய்யப் போகிறான்? அல்லாஹ் நன்றி பாராட்டுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.
148. அநியாயம் செய்யப்பட்டவரைத் தவிர (மற்றவர்கள்) கெட்ட வார்த்தையைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.132
149. நன்மையை நீங்கள் வெளிப்படையாகச் செய்தாலோ, அதை மறைத்துச் செய்தாலோ அல்லது (மற்றவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலோ அல்லாஹ் மன்னிப்பவனாகவும், ஆற்றல் மிக்கவனாகவும் இருக்கிறான்.
150, 151. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையில் வேறுபாடு காட்ட எண்ணி, “(தூதர்களில்) சிலரை நம்புவோம்; சிலரை மறுப்போம்” என்று கூறி, அதற்கு இடைப்பட்ட ஒரு வழியை உருவாக்க யார் விரும்புகிறார்களோ அவர்களே உண்மையில் இறைமறுப்பாளர்கள். இந்த இறைமறுப்பாளர்களுக்கு இழிவுதரும் வேதனையைத் தயார்படுத்தியுள்ளோம்.
152. யார் அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பி, அவர்களில் எவருக்கிடையிலும் வேறுபாடு காட்டவில்லையோ அவர்களுக்கு, அவர்களின் கூலிகளை அவன் வழங்குவான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.
153. (நபியே!) தங்கள்மீது வானத்திலிருந்து ஒரு வேதத்தை நீர் இறக்க வேண்டும் என வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். அவர்கள் இதைவிடப் பெரியதை மூஸாவிடம் கேட்டனர். “எங்களுக்கு அல்லாஹ்வை நேரடியாகக் காட்டுவீராக!” என்று கூறினர். அவர்களின் அநியாயத்தின் காரணமாக அவர்களை இடிமுழக்கம் தாக்கியது. பிறகு தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் காளைக் கன்றை(க் கடவுளாக) எடுத்துக் கொண்டனர். அதை நாம் மன்னித்தோம். மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தை வழங்கினோம்.
154. அவர்களிடம் உறுதிமொழி வாங்குவதற்காக அவர்களுக்கு மேலே தூர் மலையை உயர்த்தினோம். “நுழைவாயிலில் பணிந்தவர்களாக நுழையுங்கள்!” என்று அவர்களிடம் கூறினோம். “சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்!” என்றும் அவர்களிடம் கூறினோம். மேலும் அவர்களிடமிருந்து கடும் உறுதிமொழியை எடுத்தோம்.
155. தமது உடன்படிக்கையை அவர்கள் முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை மறுத்ததாலும், நபிமார்களை அநியாயமாகக் கொன்றதாலும், “எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று கூறியதாலும் (அவர்களைச் சபித்தோம்.) மேலும் அவர்களின் இறைமறுப்பின் காரணமாக அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டான். எனவே சிலரைத் தவிர அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
156, 157. அவர்களின் இறைமறுப்பாலும், மர்யமின்மீது பயங்கரமான அவதூறை அவர்கள் கூறியதாலும், “அல்லாஹ்வின் தூதரும் மர்யமின் மகனுமாகிய ஈஸா எனும் மஸீஹை நாங்கள்தான் கொன்றோம்” என்ற அவர்களின் கூற்றாலும் (அவர்களைச் சபித்தோம்.) அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; சிலுவையில் அறையவுமில்லை. மாறாக, அவர்களுக்கு (ஈஸாவைப் போன்று) ஒருவர் தோற்றத்தில் ஒப்பாக்கப்பட்டார். இதில் கருத்துவேறுபாடு கொண்டவர்கள் அதுகுறித்து சந்தேகத்திலேயே உள்ளனர். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இதில் எந்த அறிவுமில்லை. உறுதியாக அவர்கள் அவரைக் கொல்லவில்லை.
158. மாறாக, அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
159. (ஈஸாவாகிய) அவர் இறப்பதற்கு முன்னர், வேதமுடையோர் எவரும் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். அவர் மறுமை நாளில் அவர்களுக்குச் சாட்சியாக இருப்பார்.133
160, 161. யூதர்களின் அநியாயத்தாலும், அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரைத் தடுத்ததாலும், வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடுக்கப்பட்டிருந்தும் அதை அவர்கள் வாங்கியதாலும், மக்களுடைய செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நல்லவற்றை அவர்களுக்குத் தடை செய்தோம். அவர்களில் இறைமறுப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயார்படுத்தியுள்ளோம்.
162. எனினும், அவர்களில் கல்வியில் தேர்ந்தவர்கள் மற்றும் இறைநம்பிக்கையாளர்கள் உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன்னர் அருளப்பட்டதையும் நம்புகின்றனர். தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுக்கின்றனர். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகின்றனர். இவர்களுக்கே மகத்தான கூலியை வழங்குவோம்.
163. நூஹுக்கும் அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் வஹீ அறிவித்தது போன்றே (நபியே!) உமக்கும் வஹீ அறிவித்தோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கும், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், சுலைமான் ஆகியோருக்கும் வஹீ அறிவித்தோம். தாவூதுக்கு ஸபூர் வேதத்தை வழங்கினோம்.
164. இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்கு அறிவித்துள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை உமக்கு நாம் அறிவிக்கவில்லை. மூஸாவிடம் உறுதியாக அல்லாஹ் பேசியுள்ளான்.134
165. நற்செய்தி கூறி, எச்சரிக்கை செய்வோராகவே தூதர்கள் (அனுப்பப்பட்டு) உள்ளனர். அத்தூதர்கள் வந்த பிறகு அல்லாஹ்வுக்கு எதிராக எந்த ஆதாரமும் மக்களுக்கு இருக்கக்கூடாது என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
166. எனினும், அல்லாஹ் உமக்கு அருளியதை, தன் ஞானத்தைக் கொண்டே அருளினான் என்பதற்கு அவனே சாட்சியாக இருக்கிறான். வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்.
167. யார் (அல்லாஹ்வை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்களோ அவர்கள் தூரமான வழிகேட்டில் சென்று விட்டனர்.
168, 169. யார் (அல்லாஹ்வை) மறுத்து, அநியாயம் செய்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை; அவர்களுக்கு நரகத்தின் வழியைத் தவிர (வேறு) வழியைக் காட்டுபவனாகவும் இல்லை. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
170. “மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து இத்தூதர் உண்மையுடன் உங்களிடம் வந்துள்ளார். எனவே நம்பிக்கை கொள்ளுங்கள்! (அதுவே) உங்களுக்கு நல்லது. நீங்கள் மறுத்தால், வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
171. வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் எல்லை மீறாதீர்கள்! அல்லாஹ்வின்மீது உண்மையே கூறுங்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது வார்த்தையுமாவார். அந்த வார்த்தையை அவன் மர்யமிடம் போட்டான். அவர் அவனிடமிருந்துள்ள உயிரும் ஆவார். எனவே, அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! “மூன்று (கடவுள்)” என்று கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அதுவே) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் மட்டுமே ஒரே கடவுள். தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்வதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவை. பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்.135
172. மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை விட்டும் பெருமையடிக்க மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதை விட்டும் பெருமையடித்து, கர்வம் கொள்வோர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.
173. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தோருக்கு அவர்களின் கூலிகளை அவன் முழுமையாக வழங்குவான். அவர்களுக்குத் தனது அருளை அதிகப்படுத்துவான். யார் பெருமையடித்து, கர்வம் கொள்கிறார்களோ அவர்களைத் துன்புறுத்தும் வேதனையால் தண்டிப்பான். அல்லாஹ்வையன்றி தமக்கு எந்தப் பாதுகாவலனையும் உதவியாளனையும் அவர்கள் காண மாட்டார்கள்.
174. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டது. மேலும் உங்களுக்குத் தெளிவான ஒளியை இறக்கியுள்ளோம்.
175. யார் அல்லாஹ்வை நம்பி, அவனைப் பற்றிப் பிடிக்கிறாரோ அவரை அவன் தனது கருணையிலும், அருளிலும் நுழையச் செய்வான். அவர்களுக்கு, தன்னிடம் வருவதற்குரிய நேரான வழியைக் காட்டுவான்.
176. (நபியே!) கலாலா பற்றி உம்மிடம் விளக்கம் கேட்கின்றனர். “அல்லாஹ் உங்களுக்கு விளக்குகிறான்” எனக் கூறுவீராக! மகன் இல்லாமல் ஒருவர் மரணித்து, அவருக்கு ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. (ஒரு பெண் மரணிக்கும்போது) அவளுக்கு மகன் இல்லாவிட்டால் அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவ்விருவருக்கும் உண்டு. உடன்பிறந்தோரில் ஆண்களும் பெண்களும் இருந்தால், இரண்டு பெண்களின் பங்கைப் போன்றது ஓர் ஆணுக்குக் கிடைக்கும். நீங்கள் வழிதவறாமல் இருப்பதற்காக அல்லாஹ் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.136