அத்தியாயம் : 79
வசனங்களின் எண்ணிக்கை: 46
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. (உயிர்களைக்) கடுமையாகப் பறிக்கின்ற (வான)வர்கள்மீது சத்தியமாக!
2. இலகுவாகப் பறிப்போர்மீது சத்தியமாக!
3. வேகமாக நீந்திச் செல்வோர்மீது சத்தியமாக!
4. விரைவாக முந்திச் செல்வோர்மீது சத்தியமாக!
5. காரியங்களை நிர்வகிப்போர்மீது சத்தியமாக!
6. அந்நாளில் பேரதிர்வை ஏற்படுத்தக்கூடியது அதிர்வை ஏற்படுத்தும்.
7. அடுத்து வரக்கூடியது அதைத் தொடர்ந்து வரும்.
8. அந்நாளில் சில உள்ளங்கள் நடுங்கிக் கொண்டிருக்கும்.
9. அவற்றின் பார்வைகள் கீழ்நோக்கி இருக்கும்.
10, 11, 12. “(உயிர்ப்பிக்கப்பட்டு) முந்தைய நிலைக்கு நாம் திருப்பப்படுவோமா? மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்டாலுமா?” என அவர்கள் கேட்கின்றனர். “அவ்வாறாயின் அது நஷ்டமான திரும்புதலே!” என்றும் கூறுகின்றனர்.
13. அது ஒரேயொரு சப்தம்தான்.
14. உடனே அவர்கள் (உயிர்பெற்றுத்) திறந்த வெளியில் இருப்பார்கள்.
15. மூஸாவைப் பற்றிய செய்தி உம்மிடம் வந்ததா?
16. அவரது இறைவன் ‘துவா’ எனும் தூய பள்ளத்தாக்கில் அவரை அழைத்ததை நினைவுகூர்வீராக!
17, 18, 19. “நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறிவிட்டான். (அவனிடம்) ‘நீ தூய்மை பெற விரும்புகிறாயா? உனது இறைவனை நோக்கி உனக்கு வழிகாட்டுகிறேன். இதனால் நீ (அவனை) அஞ்சுவாய்’ எனக் கூறுவீராக!” (என இறைவன் கூறினான்.)
20. அவனுக்கு அவர் மாபெரும் சான்றினைக் காட்டினார்.
21, 22. அவன் பொய்யெனக் கூறினான்; மாறு செய்தான். பிறகு (குழப்பம் விளைவிக்க) முயன்றவனாகப் பின்வாங்கிச் சென்றான்.
23, 24. (மக்களை) ஒன்றுதிரட்டி அழைத்து, “நான்தான் உங்களின் மேலான இறைவன்” என்று கூறினான்.
25. அவனை அல்லாஹ் மறுமை, இம்மையின் தண்டனையால் பிடித்தான்.
26. அஞ்சுவோருக்கு இதில் படிப்பினை உள்ளது.
27. உங்களைப் படைப்பது கடினமா? அல்லது வானத்தையா? அதை அவனே கட்டமைத்தான்.
28. அதன் முகட்டை உயர்த்தி அதை ஒழுங்குபடுத்தினான்.
29. அதன் இரவை இருளாக்கி, அதன் பகலை வெளிப்படுத்தினான்.
30. பூமியை அதன்பின்னர் விரித்தான்.
31, 32. அதிலிருந்து அதன் தண்ணீரையும், மேய்ச்சல் புல்வெளிகளையும் வெளிப்படுத்தினான். அதில் மலைகளை உறுதியாக்கி வைத்தான்.
33. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்தான்.)
34, 35. மிகப் பெரும் ஆபத்து ஏற்படும்போது, தன் செயல்களைப் பற்றி அந்நாளில் மனிதன் நினைத்துப் பார்ப்பான்.
36. பார்ப்பவர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்.
37, 38. யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ,
39. அவனுக்கு நரகமே தங்குமிடமாகும்.
40, 41. தமது இறைவனுக்கு முன் நிற்கவேண்டும் என்று அஞ்சி, சுய விருப்பத்தை விட்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவருக்கு சொர்க்கமே தங்குமிடமாகும்.
42. “அது எப்போது நிகழும்?” என மறுமை நாளைப் பற்றி உம்மிடம் கேட்கின்றனர்.610
43. அதைப் பற்றிக் கூறுவதற்கு உமக்கு என்ன (ஞானம்) இருக்கிறது?
44. உமது இறைவனிடமே அதன் முடிவு இருக்கிறது.
45. அதனை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிக்கை செய்பவர்தான்.
46. அவர்கள் அதைக் காணும் நாளில், ஒரு மாலை நேரமோ அல்லது அதன் காலை நேரமோ தவிர (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்பது போல் நினைப்பார்கள்.