அந்நஜ்ம் – நட்சத்திரம்

அத்தியாயம் : 53

வசனங்களின் எண்ணிக்கை: 62

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. நட்சத்திரம் விழுகின்ற சமயத்தில் அதன்மீது சத்தியமாக!
2. (நமது தூதரான) உங்கள் தோழர் வழி தவறவில்லை; தவறான வழியில் செல்லவுமில்லை.
3. அவர் சுய விருப்பத்தின் அடிப்படையில் பேசுவதில்லை.
4. இது (அவருக்கு) அறிவிக்கப்படும் இறைச்செய்தியன்றி வேறில்லை.
5, 6, 7. இதை அழகிய தோற்றமுடைய ஆற்றல் மிக்கவர் (ஜிப்ரீல்) கற்றுக் கொடுத்தார். அவர் உயர்ந்த அடிவானத்தில் இருக்கும் நிலையில் (தமது சுய உருவில்) நேராக நின்றார்.
8, 9. பின்னர் அவர் அருகில் நெருங்கி வந்தார். அது வில்லின் இருமுனையளவோ அல்லது அதைவிட நெருக்கமாகவோ இருந்தது.507
10. அவனது அடியாருக்கு அறிவிக்க வேண்டியவற்றை அறிவித்தார்.
11. அவர் பார்த்ததைப் பற்றி (அவரது) உள்ளம் பொய்யுரைக்கவில்லை.
12. அவர் பார்த்ததைப் பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா?
13, 14. அவர் மற்றொரு முறை ஸித்ரத்துல் முன்தஹா (எனும் இலந்தை மரத்தின்) அருகில் ஜிப்ரீல் இறங்கக் கண்டார்.508
15. அங்குதான் (நல்லோரின்) இருப்பிடமாகிய சொர்க்கம் இருக்கிறது.
16, 17. அந்த இலந்தை மரத்தை எது சூழ்ந்து கொள்ளுமோ அது சூழ்ந்தபோது அவரது பார்வை சாய்ந்து விடவில்லை; எல்லையைக் கடக்கவுமில்லை.
18. அவர், தமது இறைவனின் மிகப் பெரும் சான்றுகளைக் கண்டார்.
19, 20. லாத், உஸ்ஸா (என்ற சிலைகள்) பற்றியும், மூன்றாவதாக மனாத் எனும் மற்றொன்றைப் பற்றியும் சிந்தித்தீர்களா?509
21. உங்களுக்கு ஆண் பிள்ளையும், அவனுக்குப் பெண் பிள்ளையுமா?
22. அவ்வாறாயின், இது மிக அநியாயமான பங்கீடாகும்.
23. இவை நீங்களும், உங்கள் முன்னோரும் சூட்டிக் கொண்ட (வெறும்) பெயர்களைத் தவிர வேறில்லை. இதற்கு எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் அருளவில்லை. அவர்களின் இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேர்வழி வந்து விட்டது. அவர்களோ ஊகத்தையும், உள்ளங்கள் விரும்புவதையுமே பின்பற்றுகின்றனர்.
24. அல்லது மனிதனுக்கு அவன் விரும்பியது கிடைத்து விடுமா?
25. மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே உரியது.
26. மேலும், வானங்களில் எத்தனையோ வானவர்கள் இருக்கின்றனர். அல்லாஹ் விரும்பி, பொருந்திக் கொண்டோருக்கு அவன் அனுமதியளித்தப் பின்னரே தவிர அவர்களின் பரிந்துரை (யாருக்கும்) சிறிதும் பயனளிக்காது.
27. மறுமையை நம்பாதவர்களே வானவர்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுகின்றனர்.
28. இதுபற்றி அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை. அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அந்த ஊகம், உண்மையை அறிவதற்கு ஒருசிறிதும் உதவாது.
29. (நபியே!) நமது அறிவுரையைப் புறக்கணிப்பவனை நீரும் புறக்கணிப்பீராக! அவன் இவ்வுலக வாழ்வையே விரும்புகிறான்.
30. இதுதான் அறிவில் அவர்களின் எல்லையாகும். தனது பாதையை விட்டும் வழிதவறியவன் யார் என்பதை உமது இறைவன் நன்கறிந்தவன். நேர்வழி நடப்போரையும் அவனே நன்கறிந்தவன்.
31. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. தீமை செய்தோருக்கு அவர்களின் செயல்களுக்குரிய கூலியை வழங்குவதற்காகவும், நன்மை செய்தோருக்கு அழகிய கூலியை வழங்குவதற்காகவும் (வானங்களையும் பூமியையும் படைத்தான்.)
32. அவர்கள் சிறுசிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்வார்கள். உமது இறைவன் மன்னிப்பதில் பெருந்தகையாளன்.510 அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்தபோதும், உங்களின் தாய்வயிற்றில் பச்சிளஞ் சிசுக்களாக இருந்தபோதும் உங்களைப் பற்றி அறிவான். எனவே உங்களை நீங்களே தூயவர்களாக எண்ணாதீர்கள். இறையச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிந்தவன்.511
33. நீர் புறக்கணிப்பவனைப் பார்த்தீரா?
34. அவன் குறைவாகக் கொடுத்து விட்டு(ப் பின்னர்) கொடுப்பதை நிறுத்திக் கொண்டான்.
35. அவனிடம் மறைவான ஞானம் இருந்து, (அதன் மூலம்) அவன் அறிந்து கொள்கிறானா?
36, 37, 38, 39. “ஒருவர், பிறரது சுமையைச் சுமக்க மாட்டார். மனிதனுக்கு அவன் முயற்சித்ததைத் தவிர வேறில்லை” என மூஸா, (இறை ஆணையை) நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் இருப்பதைப் பற்றி அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
40. அவனது முயற்சி (மறுமையில்) அவனுக்குக் காட்டப்படும்.
41. பின்னர் அவனுக்கு நிறைவாகக் கூலி வழங்கப்படும்.
42. உமது இறைவனிடமே இறுதியாகச் சேருமிடம் உள்ளது.
43. அவனே சிரிக்கவும் வைக்கிறான்; அழவும் வைக்கிறான்.
44. அவனே மரணிக்க வைக்கிறான்; உயிர்ப்பிக்கிறான்.
45, 46. விந்துத் துளியிலிருந்து, (கருவறையில்) அது செலுத்தப்படும்போது ஆண், பெண் எனும் இணையை அவனே படைத்தான்.
47. மற்றொரு முறை உயிர்ப்பிப்பதும் அவனது பொறுப்பாகும்.
48. அவனே செல்வந்தனாக்குகிறான். (குறைவாக வழங்கி அதைப்) பொருந்திக் கொள்ளுமாறும் செய்கிறான்.
49. (ஒளிவீசும் நட்சத்திரமான) ஷிஃராவுக்கும் அவனே இறைவனாவான்.
50, 51. அவனே முந்தைய ஆது சமுதாயத்தையும், ஸமூது சமுதாயத்தையும் அழித்தான். அவன் விட்டுவைக்கவில்லை.
52. அதற்கு முன் நூஹின் சமுதாயத்தையும் அழித்தவன். அவர்கள் அநியாயம் செய்வோராகவும், வரம்பு மீறுவோராகவும் இருந்தனர்.
53. தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊ(ரான லூத் சமுதாயத்தின)ரையும் அவனே வீழ்த்தினான்.
54. சூழ்ந்து கொள்ளக்கூடியது (வேதனை) அதைச் சூழ்ந்து கொண்டது.
55. (மனிதனே!) உனது இறைவனின் அருட்கொடைகளில் எதை நீ சந்தேகிக்கிறாய்?
56. இவர், முந்தைய எச்சரிக்கையாளர்களிலுள்ள ஓர் எச்சரிக்கையாளரே!
57. நெருங்கக்கூடிய (மறுமை நாளான)து நெருங்கி விட்டது.
58. அதை வெளிப்படுத்துபவர் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை.
59. இந்த செய்தியைப் பற்றி நீங்கள் வியப்புறுகிறீர்களா?
60. அழாமல் சிரித்துக் கொண்டிருக்கிறீர்களா?
61. நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்கள்.
62. அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்யுங்கள்! (அவனை) வணங்குங்கள்! 512