அந்நஹ்ல் – தேனீ

அத்தியாயம் : 16

வசனங்களின் எண்ணிக்கை: 128

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டது. எனவே நீங்கள் அதற்காக அவசரப்படாதீர்கள்! அவன் தூயவன்; அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் உயர்ந்தவன்.
2. “என்னைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை; எனக்கே அஞ்சுங்கள்!’ என எச்சரிக்குமாறு தன் அடியார்களில் தான் நாடியோர்மீது, தனது கட்டளையான இறைச்செய்தியைக் கொண்டு அவன் வானவர்களை இறக்கி வைக்கிறான்.
3. வானங்களையும், பூமியையும் நியாயமான காரணத்துடனே அவன் படைத்துள்ளான். அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் அவன் உயர்ந்தவன்.
4. அவன் மனிதனை விந்துத் துளியிலிருந்து படைத்தான். ஆனால் இப்போது மனிதன் பகிரங்கமாகத் தர்க்கம் செய்கிறான்.
5. அவனே கால்நடைகளைப் படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கதகதப்பு(ள்ள கம்பளியு)ம் வேறுபல பயன்களும் உள்ளன. மேலும் அவற்றிலிருந்து நீங்கள் சாப்பிடுகிறீர்கள்.
6. நீங்கள் மாலையில் திரும்பி வரும்போதும், காலையில் ஓட்டிச் செல்லும்போதும் அவற்றில் உங்களுக்கு ஓர் அழகு இருக்கிறது.
7. அவை, நீங்கள் மிகவும் சிரமப்பட்டுச் சென்றடையும் ஊருக்கு உங்கள் சுமைகளைச் சுமந்து செல்கின்றன. உங்கள் இறைவன் கருணையாளன்; நிகரிலா அன்பாளன்.
8. குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் சவாரி செய்வதற்காகவும் அலங்காரமாகவும் (படைத்துள்ளான்). அவன், நீங்கள் அறியாதவற்றையும் படைப்பான்.
9. நேர்வழி காட்டுவது அல்லாஹ்வையே சார்ந்துள்ளது. வழிகளில் கோணலானதும் உண்டு. அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் நேர்வழியில் செலுத்தியிருப்பான்.
10. அவனே வானிலிருந்து மழையை இறக்கினான். அதில் உங்களுக்குக் குடிநீரும் உண்டு. அதில் நீங்கள் மேய்ப்பதற்கான தாவரங்களும் உள்ளன.
11. அதன் மூலம் பயிர்கள், ஸைத்தூன், பேரீச்சை, திராட்சைகள் மற்றும் அனைத்து வகை கனிகளையும் உங்களுக்காக முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
12. உங்களுக்காக இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான். அவனது ஆணையால் நட்சத்திரங்களும் வசப்படுத்தப்பட்டுள்ளன. சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.
13. அவன் உங்களுக்காக மாறுபட்ட நிறங்களைக் கொண்டவையாகப் பூமியில் படைத்தவற்றையும் (வசப்படுத்தினான்.) இதில், படிப்பினை பெறும் சமுதாயத்திற்குச் சான்று உள்ளது.
14. நீங்கள் கடலிலிருந்து புத்தம் புதிய இறைச்சியை உண்பதற்காகவும், அதிலிருந்து நீங்கள் அணியும் ஆபரணங்களைத் தேடி எடுப்பதற்காகவும் அவனே கடலை வசப்படுத்தியுள்ளான். அதில் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் கப்பல்களையும் நீர் காண்கிறீர். அவனது அருளை நீங்கள் தேடுவதற்கும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவ்வாறு வசப்படுத்தினான்).
15, 16. பூமி உங்களுடன் அசையாதிருப்பதற்காக அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும், நீங்கள் வழியறிந்து கொள்வதற்காகப் பாதைகளையும், அடையாளங்களையும் ஏற்படுத்தினான். நட்சத்திரத்தின் மூலமும் அவர்கள் வழியறிந்து கொள்கின்றனர்.
17. படைப்பவன், (எதையும்) படைக்காதவனைப் போன்றவனா? சிந்திக்க மாட்டீர்களா?
18. அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் கணக்கிட முடியாது. அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
19. நீங்கள் மறைப்பதையும் பகிரங்கப்படுத்துவதையும் அல்லாஹ் அறிகிறான்.
20, 21. அல்லாஹ்வையன்றி அவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்ல! எப்போது (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.
22. உங்களுடைய கடவுள் ஒரே கடவுள்தான்! யார் மறுமையை நம்பவில்லையோ அவர்களின் உள்ளங்கள் மறுப்பவையாக உள்ளன. அவர்கள் கர்வம் கொண்டவர்கள்.
23. அவர்கள் மறைப்பதையும் பகிரங்கப்படுத்துவதையும் உண்மையாகவே அல்லாஹ் அறிகிறான். அவன், கர்வம் கொண்டோரை நேசிக்க மாட்டான்.
24. “உங்கள் இறைவன் எதை இறக்கினான்?” என அவர்களிடம் கேட்கப் பட்டால் “முன்னோரின் கட்டுக் கதைகள்” என்று பதிலளிக்கின்றனர்.
25. இதன் விளைவாக, மறுமை நாளில் அவர்கள் தமது பாவச் சுமைகளை முழுமையாகவும், அறிவின்றி அவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச் சுமைகளையும் சேர்த்துச் சுமப்பார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் எதைச் சுமக்கிறார்களோ அது மிகக் கெட்டது.
26. இவர்களுக்கு முன்சென்றோரும் சதி செய்தனர். அப்போது அவர்களின் கட்டடங்களின் அடித்தளங்களில் அல்லாஹ் (வேதனையைக் கொண்டு) வந்தான். எனவே, அவர்கள்மீது அவர்களின் மேலிருந்து முகடு இடிந்து விழுந்தது. அவர்கள் அறியாத விதத்தில் அவர்களிடம் தண்டனை வந்தது.
27. பிறகு, அவன் அவர்களை மறுமை நாளில் இழிவுபடுத்துவான். “எனக்கு (நீங்கள் ஏற்படுத்திய) இணையாளர்கள் எங்கே? அவர்கள் விஷயத்தில்தான் நீங்கள் (இறைநம்பிக்கையாளர்களைப்) பகைத்துக் கொண்டிருந்தீர்கள்” என்று அவன் கேட்பான், “இன்றைய தினம் இழிவும் தீங்கும் இறைமறுப்பாளர்கள்மீதுதான்” என அறிவு வழங்கப்பட்டோர் கூறுவார்கள்.
28, 29. தமக்கே அநியாயம் செய்து கொண்டோரை வானவர்கள் கைப்பற்றுவார்கள். அப்போது அவர்கள், “நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை” எனச் சமாதானத்தைக் கோருவார்கள். “அவ்வாறல்ல! நீங்கள் செய்து கொண்டிருந்ததை அல்லாஹ்வே நன்கறிந்தவன். நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள்! அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். கர்வம் கொண்டோரின் தங்குமிடம் மிகக் கெட்டது” (என்று கூறப்படும்.)
30. “உங்கள் இறைவன் எதை இறக்கினான்?” என இறையச்சமுடையோரிடம் கேட்கப்பட்டது. “நல்லதை!” என்று அவர்கள் பதிலளித்தனர். நன்மை செய்தோருக்கு இவ்வுலகில் நன்மை உண்டு. மறுமையின் வீடே மிக மேலானது. இறையச்சமுடையோருக்கான வீடு மிகச் சிறந்தது.280
31. அவர்கள் நிலையான சொர்க்கங்களில் நுழைவார்கள். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அங்கு அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும். அல்லாஹ், இறையச்சமுடையோருக்கு இவ்வாறே கூலி வழங்குவான்.
32. நல்லோரான அவர்களை வானவர்கள் கைப்பற்றுவார்கள். “உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்காக சொர்க்கத்தில் நுழையுங்கள்!” என்று கூறுவார்கள்.
33. அவர்களிடம் வானவர்கள் வருவதையோ, உமது இறைவனின் ஆணை வருவதையோ தவிர (வேறெதையும்) எதிர்பார்க்கிறார்களா? இவர்களுக்கு முன்பிருந்தோரும் இவ்வாறே செய்தனர். அவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் செய்யவில்லை. மாறாக அவர்கள் தமக்கே அநியாயம் செய்து கொண்டனர்.
34. எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்த தீமைகள் அவர்களை வந்தடைந்தன. அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
35. “அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி நாங்களும், எங்கள் முன்னோரும் எதையும் வணங்கியிருக்க மாட்டோம்; எந்த ஒன்றையும் அவனன்றி (நாங்களாகவே) தடை செய்திருக்க மாட்டோம்” என இணைவைப்போர் கூறுகின்றனர். இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தோரும் செய்தனர். தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர தூதர்கள்மீது வேறு ஏதேனும் உண்டா?
36. “அல்லாஹ்வை வணங்குங்கள்! ஷைத்தான்களை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்!” என்று ஒவ்வாரு சமுதாயத்திற்கும் தூதரை அனுப்பினோம். அ(ச்சமுதாயத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியோரும் உள்ளனர்; அவர்களுள் வழிகேடு உறுதியானவர்களும் உள்ளனர். எனவே, நீங்கள் பூமியில் பயணம் செய்து, பொய்யெனக் கூறியோரின் முடிவு எப்படி ஆனது என்பதைக் கவனியுங்கள்!
37. (நபியே!) அவர்கள் நேர்வழி அடையவேண்டும் என நீர் பேராசைப் பட்டாலும், அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட்டானோ அவரை நேர்வழியில் செலுத்த மாட்டான். அவர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை.
38. “மரணித்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான்” என அல்லாஹ்வின்மீது மிக உறுதியாகச் சத்தியம் செய்கின்றனர். அவ்வாறல்ல! (இது) அவன் தன்மீது கடமையாக்கிக் கொண்ட உண்மையான வாக்குறுதி. எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
39. அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவற்றை அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவும், தாங்கள் பொய்யர்களாக இருந்ததை இறைமறுப்பாளர்கள் அறிந்து கொள்வதற்காகவும் (அவர்களை உயிர்ப்பித்து எழுப்புவான்.)
40. ஒரு பொருளை நாம் (படைக்க) நாடினால் அதற்கு நமது கட்டளையானது, ‘ஆகிவிடு!’ என்று நாம் கூறுவதுதான். உடனே அது ஆகிவிடும்.
41. தமக்கு அநியாயம் செய்யப்பட்ட பின், அல்லாஹ்வுக்காக ஹிஜ்ரத் செய்தவர்களை இவ்வுலகில் அழகிய முறையில் குடியேறச் செய்வோம். அவர்கள் அறிவோராக இருந்தால் மறுமையின் கூலி மிகப் பெரியது.
42. அவர்கள் பொறுமையை மேற்கொள்வார்கள்; தமது இறைவன்மீதே நம்பிக்கை வைப்பார்கள்.
43, 44. (நபியே!) உமக்கு முன்னர் ஆண்களுக்கே நாம் வேத அறிவிப்பை வழங்கி, தெளிவான சான்றுகளுடனும் ஏடுகளுடனும் அவர்களைத் தூதர்களாக அனுப்பினோம். நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேத) அறிவுடையோரிடம் கேளுங்கள்! மனிதர்களுக்காக அருளப்பட்டதை நீர் அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை அருளினோம்.
45, 46. தீய செயல்களுக்காக சூழ்ச்சி செய்வோரை, அல்லாஹ் பூமியில் புதையச் செய்துவிடுவான் என்பதிலோ, அவர்கள் அறியாத விதத்தில் அவர்களுக்குத் தண்டனை கிடைத்து விடும் என்பதிலோ, அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும் போதே அவர்களைப் பிடித்து விடுவான் என்பதிலோ, அச்சமற்று இருக்கிறார்களா? அவர்கள் தப்பிப்போர் அல்ல!
47. அல்லது பயத்தில் இருக்கும்போதே அவர்களைப் பிடித்து விடுவான் என்பதில் (அச்சமற்று இருக்கிறார்களா?) எனினும் உங்கள் இறைவன் கருணையாளன்; நிகரிலா அன்பாளன்.
48. அவர்கள் அல்லாஹ் படைத்துள்ள பொருட்களை பார்க்க வில்லையா? அவற்றின் நிழல்கள் வலது, இடது புறங்களில் சாய்ந்து, தாழ்ந்த நிலையில் அல்லாஹ்வுக்குப் பணிகின்றன.
49. வானங்களிலும், பூமியிலும் உள்ள உயிரினங்களும் வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்கின்றனர். (வானவர்களான) அவர்கள் கர்வம் கொள்ள மாட்டார்கள்.
50. அவர்கள் தமக்கு மேலுள்ள தமது இறைவனுக்கு அஞ்சுவார்கள்; ஏவப்படுவதைச் செய்வார்கள்.
51. “இரண்டு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்! அவன் ஒரே கடவுள்தான். எனவே எனக்கே அஞ்சுங்கள்!” என்று அல்லாஹ் கூறுகிறான்.
52. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவை அவனுக்கே உரியவை. அவனுக்கே நிரந்தரமாக வழிபாடும் உரியது. அல்லாஹ்வை அல்லாதோரையா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?
53. உங்களிடமுள்ள எந்த அருட்கொடையும் அல்லாஹ்விடமிருந்தே வந்ததாகும். (அதன்) பிறகு, உங்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகிறீர்கள்.
54. அவன் அத்துன்பத்தை உங்களை விட்டும் நீக்கினால் உங்களில் ஒருசாரார் தமது இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.
55. அவர்களுக்கு நாம் வழங்கியதில் நன்றி மறந்ததே இதற்குக் காரணம். சுகம் அனுபவியுங்கள்! (மறுமையில்) அறிந்து கொள்வீர்கள்.
56. நாம் அவர்களுக்கு வழங்கியதில் ஒரு பங்கை, தாம் அறியாதவற்(றைக் கடவுளாக்கி அவற்)றுக்காக ஏற்படுத்துகின்றனர். அல்லாஹ்வின்மீது சத்தியமாக! நீங்கள் புனைந்து கூறிக்கொண்டிருந்தவை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
57. அல்லாஹ்வுக்குப் பெண் குழந்தைகளை ஏற்படுத்துகின்றனர். அவன் தூயவன். ஆனால் தாங்கள் விரும்பக் கூடியதை (ஆண் குழந்தைகளை)த் தமக்காக ஆக்கிக் கொள்கின்றனர்.
58. அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை (பிறந்திருப்பது) பற்றி நற்செய்தி கூறப்பட்டால், அவன் துக்கமடைந்து, அவனது முகம் கருத்துப் போய் விடுகிறது.
59. அவனுக்கு எதைக் கொண்டு நற்செய்தி கூறப்பட்டதோ (அதைக் கெட்டதாகக் கருதி) அதன் தீங்கால் மக்களை விட்டும் ஒளிந்து கொள்கிறான். அதை இழிவுடன் வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் புதைத்துவிடுவதா? (என நினைக்கிறான்.) அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் முடிவு செய்வது மிகக் கெட்டது.
60. கெட்ட தன்மை என்பது மறுமையை நம்பாதோருக்குரியதாகும். உயர்ந்த தன்மை அல்லாஹ்வுக்கே உரியது. அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
61. மனிதர்கள் செய்யும் அநியாயத்திற்காக அவர்களை (உடனுக்குடன்) அல்லாஹ் பிடிப்பதாக இருந்தால், எந்த உயிரினத்தையும் பூமியில் விட்டு வைத்திருக்க மாட்டான். எனினும் அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணைவரை கால அவகாசம் வழங்குகிறான். அவர்களுக்கான தவணை வந்து விட்டால் சற்று நேரம் கூடப் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
62. அவர்கள் வெறுக்கக்கூடியவற்றை அல்லாஹ்வுக்குரியதாக ஆக்குகின்றனர். (இதனால்) தங்களுக்கு நன்மை கிடைக்கும் என அவர்களின் நாவுகள் பொய்யை வர்ணிக்கின்றன. உண்மையாகவே அவர்களுக்கு நரகம்தான்; (அதற்கு) அவர்கள் விரைவாகக் கொண்டு செல்லப்படுவார்கள்.
63. அல்லாஹ்வின்மீது சத்தியமாக! உமக்கு முன்னிருந்த சமுதாயங்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். அம்மக்களின் செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அலங்கரித்துக் காட்டினான். எனவே, இன்றைய தினம் அவனே அவர்களின் நேசராவான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.
64. (நபியே!) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டதை, நீர் அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், இறைநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் இவ்வேதத்தை உமக்கு அருளியுள்ளோம்.
65. அல்லாஹ்வே வானிலிருந்து மழையைப் பொழிவித்து, அதன்மூலம் பூமியை, அது இறந்த பின்பு உயிர்ப்பிக்கிறான். செவியேற்கும் மக்களுக்கு இதில் சான்று உள்ளது.
66. கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அவற்றின் வயிறுகளில் சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையில் உள்ளவற்றிலிருந்து கலப்படமற்ற, அருந்துவோருக்கு இனிய பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம்.
67. பேரீச்சை மற்றும் திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும் நல்ல உணவையும் எடுக்கிறீர்கள். சிந்திக்கும் மக்களுக்கு இதில் சான்று உள்ளது.
68, 69. “நீ மலைகளிலும், மரங்களிலும், அவர்கள் கட்டுகின்றவற்றிலும் கூடுகளைக் கட்டிக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளி(ன் மலர்களி)லிருந்தும் சாப்பிடு! எளிதாக்கப்பட்ட உனது இறைவனின் பாதைகளில் செல்” என உமது இறைவன் தேனீக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து வெவ்வேறு நிறங்களில் பானம் வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு நிவாரணம் உள்ளது. சிந்திக்கும் மக்களுக்கு இதில் சான்று உள்ளது.281
70. அல்லாஹ் உங்களைப் படைத்தான். பின்னர் அவன் உங்களைக் கைப்பற்றுவான். உங்களில் தள்ளாத வயதுவரை கொண்டு செல்லப்படுவோரும் உள்ளனர். இதன் காரணமாக, அவர்கள் விபரம் தெரிந்த பின்னர் (நினைவு தடுமாறி) எதையும் அறியாதோராகி விடுகின்றனர். அல்லாஹ் நன்கறிந்தவன்; ஆற்றல் மிக்கவன். 282
71. அல்லாஹ், உங்களில் சிலரைவிட வேறு சிலரைப் பொருளாதாரத்தில் சிறப்பித்துள்ளான். இவ்வாறு சிறப்பிக்கப்பட்டோர் தம்மிடமுள்ள பொருளாதாரத்தைத் தம் அடிமைகளிடம் வழங்கி, அதில் அவர்களை(த் தமக்கு)ச் சமமாக ஆக்கி விடுவதில்லை. (இவ்வாறிருக்க) அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையா மறுக்கின்றனர்?
72. அல்லாஹ், உங்களிடமிருந்தே உங்களுக்கு மனைவியரை ஏற்படுத்தினான். உங்கள் மனைவியர் மூலமாக உங்களுக்குப் பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளையும் ஏற்படுத்தினான். உங்களுக்குத் தூயவற்றை உணவாக அளித்தான். அவர்கள் பொய்யானதை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை மறுக்கின்றனரா?
73. அவர்கள், அல்லாஹ்வையன்றி வானங்கள் மற்றும் பூமியிலிருந்து தமக்கு உணவளிக்கச் சிறிதும் அதிகாரமில்லாதவற்றையும், சக்தியில்லாதவற்றையும் வணங்குகின்றனர்.
74. எனவே, அல்லாஹ்வுக்கு உவமைகளைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
75. (பிறருக்கு) உரிமையாக்கப்பட்ட, எதற்கும் சக்தியில்லாத ஓர் அடிமையையும், நம்மிடமிருந்து ஒருவருக்கு அழகிய வாழ்வாதாரத்தை நாம் வழங்கி, அதிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவளிக்கும் அவரையும் அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். இவர்கள் (இருவரும்) சமமாவார்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிவதில்லை.
76. அல்லாஹ் இரு மனிதர்களை எடுத்துக்காட்டாகக் கூறுகிறான். அவ்விருவரில் ஒருவன் எதற்கும் சக்தியில்லாத ஊமை. அவன் தனது எஜமானனுக்குச் சுமையாக இருக்கிறான். அவர், அவனை எங்கு அனுப்பி வைத்தாலும் எந்த நன்மையையும் கொண்டு வரமாட்டான். இவனும், நேரான பாதையில் இருந்தவாறு நீதியை ஏவும் மற்றொருவனும் சமமாவார்களா?
77. வானங்களிலும், பூமியிலும் மறைவானவை (பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது. உலகம் அழியும் நேரம் நிகழ்வது, கண் இமைப்பதைப் போன்றோ, அல்லது அதைவிட நெருக்கத்திலோ ஏற்பட்டு விடும். ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
78. உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து, நீங்கள் எதையும் விளங்காமல் இருந்த நிலையில் அல்லாஹ் உங்களை வெளிப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களுக்குச் செவிப் புலனையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான்.
79. அவர்கள் வான்வெளியில் வசப்படுத்தப்பட்டதாக உள்ள பறவைகளைப் பார்க்கவில்லையா? அவற்றை (விழாமல்) தடுத்து வைத்திருப்பவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. இறைநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.
80. அல்லாஹ், உங்கள் வீடுகளை உங்களுக்கு நிம்மதியளிப்பதாக ஆக்கியுள்ளான். கால்நடைகளின் புறத்தோல்களிலிருந்து உங்களுக்குக் குடில்களையும் ஏற்படுத்தியுள்ளான். அவற்றை நீங்கள் பயணிக்கும் காலத்திலும், தங்கியிருக்கும் காலத்திலும் இலகுவாகக் கையாள்கிறீர்கள். செம்மறியாட்டு முடிகள், ஒட்டக முடிகள், வெள்ளாட்டு முடிகள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும், குறிப்பிட்ட காலம்வரை பயன்பாட்டையும் ஏற்படுத்தினான்.
81. அல்லாஹ், தான் படைத்தவற்றிலிருந்து உங்களுக்கு நிழல்களை உண்டாக்கினான். மலைகளில் உங்களுக்கு மறைவிடங்களை அமைத்தான். உங்களுக்காக, வெப்பத்தில் உங்களைப் பாதுகாக்கும் சட்டைகளையும், உங்கள் போர்களில் உங்களைப் பாதுகாக்கும் ஆடைகளையும் உண்டாக்கினான். இவ்வாறே நீங்கள் பணிந்து நடப்பதற்காக உங்களுக்குத் தனது அருட்கொடையை முழுமைப்படுத்துகிறான்.
82. அவர்கள் புறக்கணித்தால், தெளிவாக எடுத்துரைப்பதே உமக்குக் கடமையாகும்.
83. அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையை அறிகின்றனர். பின்னர் அவற்றை மறுத்து விடுன்றனர். அவர்களில் அதிகமானோர் இறைமறுப்பாளர்கள்.
84. அந்நாளில் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை எழுப்புவோம். பின்னர் இறைமறுப்பாளர்கள் (சாக்குப்போக்கு கூற) அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அவர்கள் பொருந்திக் கொள்ளப்பட மாட்டார்கள்.
85. அநியாயக்காரர்கள் வேதனையைப் பார்க்கும்போது, அவர்களுக்கு அது குறைக்கப்பட மாட்டாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.
86. இணை வைத்தவர்கள் தமது இணைக் கடவுள்களைப் பார்க்கும்போது, “எங்கள் இறைவனே! உன்னையன்றி நாங்கள் அழைத்துக் கொண்டிருந்த எங்கள் இணைக் கடவுள்கள் இவர்கள்தான்” என்று கூறுவார்கள். அப்போது அவர்கள் “நீங்கள் பொய்யர்களே!” என்று இவர்களுக்குப் பதிலளிப்பார்கள்.
87. அன்றைய தினம் அவர்கள் அல்லாஹ்விடம் சரணடைவார்கள். அவர்கள் பொய்யாக உருவாக்கியவை அவர்களை விட்டும் மறைந்துவிடும்.
88. யார் (இறைவனை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தார்களோ அவர்கள் குழப்பம் செய்து கொண்டிருந்ததால் அவர்களுக்கு வேதனைக்கு மேல் வேதனையை அதிகரிப்போம்.
89. அந்நாளில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சாட்சியாளரை அவர்களிலிருந்தே எழுப்புவோம். மேலும் இவர்களுக்குச் சாட்சியாக (நபியே!) உம்மைக் கொண்டு வருவோம். இவ்வேதத்தை ஒவ்வொன்றுக்கும் தெளிவான விளக்கமாகவும், நேர்வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் உமக்கு அருளியுள்ளோம்.
90. நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு வழங்குமாறும் அல்லாஹ் ஆணையிடுகிறான். மானக் கேடானவை, தீமை, வரம்பு மீறுதல் ஆகியவற்றை விட்டும் அவன் (உங்களைத்) தடுக்கிறான். நீங்கள் படிப்பினை பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
91. நீங்கள் உடன்படிக்கை செய்வதாயின், அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்! நீங்கள் அல்லாஹ்வை உங்களுக்குப் பொறுப்பாளனாக்கியுள்ள நிலையில், சத்தியங்களை உறுதிப்படுத்திய பின் அவற்றை முறிக்காதீர்கள்! அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை அறிகிறான்.
92. ஒரு சமுதாயத்தவர், இன்னொரு சமுதாயத்தவரைவிடப் பெரும்பான்மையாக இருப்பதால் (இவர்களுக்கு ஆதரவாக) உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையே மோசடியாக்கி, (அவற்றை முறித்து விடாதீர்கள். இதன் மூலம்) நூலை நூற்று, அது உறுதியான பின் அதைத் தனித்தனியாகப் பிரித்து விட்டவளைப் போல் நீங்கள் ஆகிவிடாதீர்கள்! இதைக் கொண்டு உங்களை அல்லாஹ் சோதிக்கிறான். நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதனை அவன் மறுமை நாளில் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான்.
93. அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயத்தினராக ஆக்கியிருப்பான். எனினும், தான் நாடியவர்களை அவன் வழிகேட்டில் விடுகிறான்; மேலும், தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான். நீங்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்.
94. உங்கள் சத்தியங்களை, உங்களுக்கிடையே மோசடியாகப் பயன்படுத்தாதீர்கள்! அவ்வாறு செய்தால், (உங்கள்) பாதம் நிலைபெற்ற பின் அது சறுக்கி விடும். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் நீங்கள் தடுத்ததால் துன்பத்தை அனுபவிப்பீர்கள். உங்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
95. அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! நீங்கள் அறிவோராக இருந்தால் அல்லாஹ்விடம் இருப்பதே உங்களுக்கு மிகச் சிறந்தது.
96. உங்களிடம் இருப்பது தீர்ந்துவிடும்; அல்லாஹ்விடம் இருப்பதே நிலைத்திருக்கும். பொறுமையாளர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்காக அவர்களுக்குரிய கூலியை வழங்குவோம்.
97. ஆணோ, பெண்ணோ, யார் இறைநம்பிக்கையாளராக இருந்து, நற்செயல் செய்கிறாரோ அவரை நல்வாழ்வு வாழ வைப்போம். அவர்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்காக அவர்களுக்குரிய கூலியை வழங்குவோம்.
98. நீர் குர்ஆனை ஓதினால் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக!
99, 100. இறைநம்பிக்கை கொண்டு, தமது இறைவனையே முற்றிலும் சார்ந்திருப்போர்மீது ஷைத்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவனது அதிகாரமெல்லாம் அவனைப் பொறுப்பாளனாக்கிக் கொண்டோரிடமும், இறைவனுக்கு இணைவைப்போரிடமும் மட்டும்தான்.
101. ஒரு வசனத்திற்கு ஈடாக வேறொரு வசனத்தை நாம் மாற்றினால் “நீர் புனைந்து கூறுபவர்தான்!” என்று கூறுகின்றனர். தான் எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன். எனினும் அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
102. (நபியே!) “இறைநம்பிக்கை கொண்டோரை உறுதிப்படுத்தவும், முஸ்லிம்களுக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் உமது இறைவனிடமிருந்து (ஜிப்ரீல் எனும்) ரூஹுல் குதுஸ் உண்மையுடன் இதை இறக்கி வைத்தார்” என்று கூறுவீராக!
103. “இதை (இவருக்குக்) கற்றுக் கொடுப்பது ஒரு மனிதர்தான்” என்று அவர்கள் கூறுவதை அறிவோம். அவர்கள் யாருடன் தொடர்புபடுத்துகிறார்களோ அவரது மொழியோ அரபு அல்லாத மொழியாகும். ஆனால் இது தெளிவான அரபு மொழியாகும்.
104. அல்லாஹ்வின் வசனங்கள்மீது நம்பிக்கை கொள்ளாதவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
105. அல்லாஹ்வின் வசனங்கள்மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள்தான் பொய்யைப் புனைந்துரைப்பார்கள். அவர்களே பொய்யர்கள்.
106. அல்லாஹ்வை நம்பிய பின்னர், அவனை மறுப்போர் (தண்டனைக்குரியோர்); எவரது உள்ளம் இறைநம்பிக்கையால் நிம்மதியடைந்துள்ள நிலையில் நிர்பந்திக்கப்படுகிறார்களோ அவர்களைத் தவிர! எனினும் இறைமறுப்பிற்காக உள்ளத்தை விரிவடையச் செய்தோர்மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது. அவர்களுக்குக் கடும் வேதனையும் உண்டு.
107. ஏனெனில் அவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்வை நேசித்தார்கள். இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
108, 109. அவர்களுடைய உள்ளங்கள், செவிப் புலன், பார்வைகள் ஆகியவற்றின்மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களே (மறுமை பற்றி) அலட்சியமாக இருப்பவர்கள். அவர்கள்தான் உண்மையாகவே மறுமையில் நஷ்டமடைந்தோர்.
110. சோதனைக்குள்ளாக்கப்பட்ட பிறகு ஹிஜ்ரத் செய்து, பின்னர் போரிட்டுப், பொறுமையை மேற்கொண்டோருக்கு (உதவிட) உமது இறைவன் இருக்கிறான். இதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
111. அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தனக்காக வாதிடுவதற்கு வருவான். ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
112. ஓர் ஊரை அல்லாஹ் எடுத்துக்காட்டாகக் கூறுகிறான். அது பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் இருந்தது. அதற்குரிய வாழ்வாதாரம் எல்லா இடங்களிலிருந்தும் தாராளமாக அங்கு வந்து சேர்ந்தது. ஆனால் அதுவோ அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த மறந்தது. எனவே அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக, அதற்குப் பசி, பயம் என்ற ஆடையை அல்லாஹ் அனுபவிக்கச் செய்தான்.
113. அவர்களிடம் அவர்களிலிருந்தே ஒரு தூதர் வந்தார். அவரைப் பொய்யரெனக் கூறினர். எனவே அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தபோது அவர்களை வேதனை பிடித்துக் கொண்டது.
114. அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றில் அனுமதிக்கப்பட்ட, நல்லதை உண்ணுங்கள்! நீங்கள் அவனையே வணங்குவோராக இருந்தால் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்!
115. தாமாகச் செத்தவை, (ஓட்டப்பட்ட) இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்குப் பெயர் கூறப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். விரும்பிச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப்படுவோரை அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
116. அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுவதற்காக, “இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது” என உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுவோர் வெற்றிபெற மாட்டார்கள்.
117. (இவ்வுலகிலுள்ளது) அற்ப இன்பம்தான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
118. (நபியே!) இதற்கு முன் உமக்கு நாம் எடுத்துக் கூறியவற்றை, யூதர்களுக்குத் தடை செய்திருந்தோம். அவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை. மாறாக, அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டனர்.
119. யார் அறியாமையால் தீமை செய்துவிட்டு, அதன்பின்னர் பாவ மன்னிப்புக் கோரி, தம்மைச் சீர்திருத்திக் கொள்கிறாரோ அவர்களுக்கு (மன்னித்தருள) உமது இறைவன் இருக்கிறான். இதற்குப் பிறகு உமது இறைவன் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
120. இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குப் பணிபவராகவும், சத்திய நெறியில் நிற்பவராகவும் இருந்தார். அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.
121. அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்தார். அவன், அவரைத் தேர்ந்தெடுத்து, நேரான பாதையில் செலுத்தினான்.
122. இவ்வுலகில் அவருக்கு நல்லதை வழங்கினோம். மறுமையில் அவர் நல்லவர்களில் உள்ளவர்.
123. (நபியே!) “சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!“ என்று உமக்கு அறிவித்தோம். அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.
124. சனிக்கிழமை (தண்டனைக்குரியதாக) ஆக்கப்பட்டதெல்லாம் அ(ந்த நாளின் புனிதத்தை மதிப்ப)தில் முரண்பாடு கொண்டவர்களுக்குத் தான். அவர்கள் எதில் முரண்பட்டுக் கொண்டிருந்தார்களோ அதுபற்றி மறுமை நாளில் அவர்களுக்கிடையே உமது இறைவன் தீர்ப்பளிப்பான்.
125. உமது இறைவனின் பாதையை நோக்கி விவேகத்துடனும், அழகான அறிவுரையைக் கொண்டும் அழைப்பீராக! அவர்களுடன் சிறந்த முறையில் விவாதிப்பீராக! தனது பாதையை விட்டும் வழி தவறியவர் யார் என்பதை உமது இறைவனே நன்கறிந்தவன். நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிந்தவன்.
126. நீங்கள் தண்டித்தால், நீங்கள் எந்த அளவு துன்புறுத்தப்பட்டீர்களோ அதே அளவு தண்டியுங்கள்! நீங்கள் பொறுத்துக் கொண்டால் பொறுமையாளர்களுக்கு அது மிகச் சிறந்தது.283
127. (நபியே!) பொறுமையை மேற்கொள்வீராக! அல்லாஹ்வின் உதவியைக் கொண்டே தவிர நீர் பொறுமையாக இருக்க முடியாது. அவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்! அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளால் மனநெருக்கடிக்கு ஆளாகி விடாதீர்!
128. அல்லாஹ், இறையச்சமுடையோருடனும் நன்மை செய்வோருடனுமே இருக்கிறான்.