அந்நபா – செய்தி

அத்தியாயம் : 78

வசனங்களின் எண்ணிக்கை: 40

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. அவர்கள் எதைப் பற்றி வினவிக் கொள்கின்றனர்?
2. அந்த மகத்தான செய்தியைப் பற்றித்தான்.
3. அதில்தான் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.
4. அவ்வாறல்ல! அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
5. பின்னரும் அவ்வாறல்ல! அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
6, 7, பூமியை விரிப்பாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?
8. உங்களை இணைகளாகப் படைத்தோம்.
9. தூக்கத்தை உங்களுக்கு ஓய்வளிப்பதாக ஆக்கினோம்.
10. இரவை ஆடையாக ஆக்கினோம்.
11. பகலை வாழ்வதற்குரிய நேரமாக ஆக்கினோம்.
12. உறுதியான ஏழு (வானங்)களை உங்களுக்கு மேல் ஏற்படுத்தினோம்.
13. ஒளிவீசும் விளக்கையும் அமைத்தோம்.
14, 15, 16. தானியத்தையும், தாவரத்தையும், அடர்ந்த தோட்டங்களையும் வெளிப்படுத்துவதற்காக மேகங்களிலிருந்து கொட்டும் மழையைப் பொழிவித்தோம்.
17. தீர்ப்பு நாள் என்பது நிர்ணயிக்கப்பட்ட நேரமாக உள்ளது.
18. ஸூர் ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம், கூட்டமாக வருவீர்கள்.609
19. வானம் திறக்கப்பட்டு, அது பல வாசல்களாகி விடும்.
20. மலைகள் பெயர்க்கப்பட்டு அது கானல் நீராகி விடும்.
21, 22. வரம்பு மீறியோருக்குத் தங்குமிடமாக (ஆவதற்கு) நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
23. அதில் அவர்கள் நீண்ட நெடுங்காலங்களாகத் தங்கியிருப்பார்கள்.
24, 25. கொதிநீரையும், சீழையும் தவிர அங்குக் குளிர்ச்சியையோ, பானத்தையோ சுவைக்க மாட்டார்கள்.
26. இதுவே தகுந்த தண்டனையாகும்.
27. அவர்கள் (மறுமை) விசாரணையை நம்பாதவர்களாக இருந்தனர்.
28. நமது வசனங்களை முற்றிலும் பொய்யெனக் கூறினர்.
29. ஒவ்வொரு விஷயத்தையும் பதிவேட்டில் பதிவு செய்துள்ளோம்.
30. “அனுபவியுங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்த மாட்டோம்” (என்று கூறப்படும்.)
31, 32, 33, 34. இறையச்சமுடையோருக்கு வெற்றியும், தோட்டங்களும், திராட்சைகளும், சம வயது கன்னிப் பெண்களும், (பானங்கள்) நிரம்பிய கிண்ணங்களும் உண்டு.
35. அங்கு அவர்கள் வீணானவற்றையோ, பொய்யையோ செவியுற மாட்டார்கள்.
36. (இது) உமது இறைவனிடமிருந்து (அவர்களின் செயல்களுக்காகக்) கணக்கிட்டு வழங்கப்படும் கூலியாகும்.
37. (அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடைப்பட்ட வற்றுக்கும் இறைவன்; அளவிலா அருளாளன். அவனிடம் பேசுவதற்கு யாரும் அதிகாரம் பெற மாட்டார்கள்.
38. (ஜிப்ரீல் எனும்) ரூஹும், வானவர்களும் அணிவகுத்து நிற்கும் அந்நாளில் அளவிலா அருளாளன் அனுமதியளித்து, நேர்மையாகப் பேசுபவரைத் தவிர வேறுயாரும் பேச மாட்டார்கள்.
39. அது உண்மையான நாள். எனவே யார் விரும்புகிறாரோ அவர் தமது இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளட்டும்.
40. அருகிலுள்ள வேதனையைப் பற்றி உங்களை எச்சரிக்கிறோம். அந்நாளில் தனது கைகள் முற்படுத்தியதை மனிதன் காண்பான். “நான் மண்ணாகவே ஆகியிருக்கக் கூடாதா?” என இறைமறுப்பாளன் கூறுவான்.