ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜகவின் செயற்குழு கூட்டத்தில் இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார்.
அவர் இதை மட்டும் சொல்லவில்லை. இத்துடன் வாரிசு அரசியலை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
பாவம் அமித்ஷா. வாரிசு அரசியலை எதிர்த்து பேசத்துணிந்த அவருக்கு மதவாத அரசியலைப் பற்றி பேச முடியவில்லை.
அது மட்டுமின்றி வாரிசு அரசியல் என்று தொடர்ந்து முழக்கமிட்டு அதிலிருந்து தன்னைப் பரிசுத்தவானாக காட்டிக் கொள்ள பாஜக முயல்கிறது.
ஆனால் உண்மை அதுவல்ல. பாஜகவிலும் வாரிசு அரசியல் தலை விரித்தாடவே செய்கிறது.
தங்களது வாரிசுகளை அரசியல் களத்தில் இறக்கிப் பதவிகளை பெறும் வேலையை இதரக் கட்சிகளை போலவே பாஜகவும் கனஜோராக செய்கிறது.
பாஜகவின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக உள்ள அனுராக் தாக்கூர் யார்? இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் என்பவரின் மகன் தானே. இது வாரிசு அரசியல் இல்லையா?
முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் மகன் தான் தற்போதைய ஜோதிராதித்ய சிந்தியா. இவர் தற்போது பிஜேபியின் விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார்.
அவ்வளவு ஏன்? பாஜகவின் முக்கிய தலைவரான ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் அரசியல் களத்தில் இல்லையா? உ.பி சட்டசபையில் எம்.எல்.ஏவாக இருப்பதுடன் மாநில பாஜகவில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார் தானே?
வருண் காந்தி மக்களவை எம்.பி.யாக உள்ளார். அவரது தாய் மேனகா காந்தியும் அரசியல்வாதி தானே?
இப்படி பாஜகவில் வாரிசு அரசியல்வாதிகளின் பட்டியல் பெரிய அளவில் உள்ளது. இந்த நிலையில் வாரிசு அரசியலை மக்கள் வெறுத்து விட்டார்கள் என்று பேச அமித்ஷா வெட்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது தங்கள் கட்சியில் உள்ள வாரிசு அரசியல்வாதிகளின் பட்டியலை நினைவில் கொண்டு இது பற்றி பேச வேண்டும்.
அடுத்து அவர் சொன்ன விஷயம் அடுத்த நாற்பது வருடத்திற்கு பாஜக சகாப்தம் தான் என்று பெருமை பேசியுள்ளார்.
இப்படிப் பெருமை பேசிய பல கட்சிகள் மற்றும் தலைவர்கள் அடையாளமே இல்லாமல் போன வரலாறு உலகமெங்கிலும் நிறையவே உண்டு.
நூறு வருடத்திற்கு எங்களை எதுவும் செய்ய முடியாது என்று மார்தட்டிய அதிமுகவின் இன்றைய நிலையை விளக்கி சொல்லத்தேவையில்லை.
ஆனால் அமித்ஷாவால் நூறு வருடம் என்று கூட சொல்லமுடியவில்லை. அவர்களே சுமார் முப்பது முதல் நாற்பது வருடங்கள் என்று சொல்கிறார்கள் என்றால் இதுவே இந்தக் கருத்தில் அவர்களுக்கு பெரிய நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது.
இன்றைக்கு பாஜக இருப்பதை விட பல மடங்கு அதிகமாக வலிமை பெற்றிருந்த நிலை காங்கிரசுக்கும் இருந்தது. தமிழகத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலமும் உண்டு. ஆனால் தற்போது என்ன நிலை என்பதை அனைவரும் அறிவோம்.
எதுவும் நிலையானது அல்ல. மாற்றம் ஒன்றே மாறாதது.
இந்தக் காட்சியும் மாறும். காங்கிரசை விட அதலபாதாளத்தில் தள்ளப்படும் நிலையை வெகுவிரைவில் பாஜக அடையலாம்.
அமித்ஷா அவர்களின் பேச்சில் கவனிக்கத்தக்க இன்னொரு முக்கிய அம்சம் உண்டு.
தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் வெகு விரைவில் பாஜக ஆட்சிக்கு வருமாம். மஹராஷ்ட்ராவில் செய்ததைப் போல, புதுச்சேரியில் செய்ததைப் போல குதிரை பேரத்தில் இறங்க இருப்பதை தான் இவ்வாறு சொல்கிறார்.
கடந்த சில ஆண்டுகளில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ளனர் இவர்கள்.
பாஜகவிற்கு மக்கள் வாக்களிக்காத நிலையில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியதன் மூலம் அந்த மாநிலத்தில் பாஜகவின் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். வாக்களித்த மக்களை முட்டாளாக்கி ஜனநாயகத்தைக் கேலி செய்துள்ளனர்.
இப்போது இவர்களின் அதிகார வெறி தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு என்று திரும்பி உள்ளது. அதைத்தான் அமித்ஷா அவர்களின் பேச்சு வெளிப்படுத்துகிறது.
எனவே இந்த மாநில முதல்வர்கள் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். ஏனெனில் அதிகார வெறி பிடித்த பாஜக ஜனநாயகத்தைக் கடித்துக் குதறத் தயாராக இருக்கிறது.