ஆலு இம்ரான் – இம்ரானின் குடும்பத்தினர்
வசனங்களின் எண்ணிக்கை: 200
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. அலிஃப், லாம், மீம்.49
2. அல்லாஹ்! அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. (அவன்) எப்போதும் உயிருடன் இருப்பவன்; நிலைத்திருப்பவன்.
3, 4. உண்மையைக் கொண்ட இவ்வேதத்தை உம்மீது அவன் இறக்கினான். (இது) தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்துகிறது. இதற்கு முன்னர் மக்களுக்கு நேர்வழி காட்டியாக தவ்ராத்தையும் இன்ஜீலையும் இறக்கினான். (வழிகேட்டிலிருந்து நேர்வழியைப்) பிரித்துக் காட்டுவதையும் இறக்கினான். அல்லாஹ்வின் வசனங்களை யார் மறுக்கிறார்களோ அவர்களுக்குக் கடும் வேதனை உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.
5. பூமியிலும் வானத்திலும் அல்லாஹ்வுக்கு எதுவும் மறையாது.
6. கருவறைகளில், தான் நாடியவாறு அவனே உங்களை வடிவமைக்கிறான். மிகைத்தவனும் நுண்ணறிவாளனுமாகிய அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை.
7. (நபியே!) அவனே இவ்வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் தெளிவான கருத்துகளைக் கொண்ட வசனங்கள் உள்ளன. அவையே இவ்வேதத்தின் அடிப்படை. வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட மற்ற வசனங்களும் உள்ளன. தமது உள்ளங்களில் வழிகேடு உள்ளவர்கள், குழப்பத்தை நாடியும் அதற்கு(த் தவறான) விளக்கத்தைத் தேடியும் அதிலுள்ள வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட வசனங்களைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர வேறெவரும் அதன் (உண்மை) விளக்கத்தை அறிய மாட்டார்கள். “இதை நாங்கள் நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை!” என(க் கல்வியில் தேர்ந்த) அவர்கள் கூறுகின்றனர். அறிவுடையவர்களைத் தவிர வேறெவரும் படிப்பினை பெற மாட்டார்கள்.50
8. “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைப் பிறழச் செய்து விடாதே! உன்னிடமிருந்து எங்களுக்கு அருளை வழங்குவாயாக! நீயே கொடை வள்ளல்”
9. “எங்கள் இறைவனே! சந்தேகமே இல்லாத ஒருநாளில் மக்களை நீயே ஒன்று திரட்டுபவன்” (என்று பிரார்த்திப்பார்கள்.) அல்லாஹ், வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான்.
10. இறைமறுப்பாளர்களுக்கு, அவர்களின் செல்வங்களும் பிள்ளைகளும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைச் சிறிதும் காப்பாற்றாது. அவர்களே நரகத்தின் எரிபொருட்கள்.
11. (இவர்களது நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார் மற்றும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலையைப் போன்றது. அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறினார்கள். எனவே அவர்களின் பாவங்களுக்காக அவர்களை அல்லாஹ் பிடித்தான். தண்டிப்பதில் அல்லாஹ் கடுமையானவன்.
12. “நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்; நரகத்தை நோக்கி ஒன்று திரட்டப்படுவீர்கள்; தங்குமிடத்தில் அது கெட்டது” என்று இறைமறுப்பாளர்களிடம் கூறுவீராக!
13. (பத்ருப் போரில்) சந்தித்துக் கொண்ட இரு படைகளிடம் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. ஒன்று, அல்லாஹ்வின் பாதையில் போரிடும் படை; மற்றொன்று, இறைமறுப்பாளர்களின் படை. இவர்கள், (முஸ்லிம்களாகிய) அவர்களைத் தம்மைவிட இரு மடங்காகக் கண்களால் கண்டனர். தான் நாடியோரை அல்லாஹ் தனது உதவியால் பலப்படுத்துகிறான். அறிவுடையோருக்கு இதில் படிப்பினை உள்ளது.
14. பெண்கள், ஆண்மக்கள், சேகரிக்கப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், உயர்ரகக் குதிரைகள், கால்நடைகள், விவசாய நிலங்கள் ஆகிய ஆசைக்குரியவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்வின் இன்பங்கள். அல்லாஹ்விடமே அழகிய தங்குமிடம் உள்ளது.51
15. “இவற்றைவிடச் சிறந்ததை உங்களுக்கு நான் அறிவிக்கவா? இறையச்சமுடையோருக்குத் தமது இறைவனிடம் சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். தூய துணைகளும் அல்லாஹ்வின் பொருத்தமும் உண்டு. அடியார்களை அல்லாஹ் பார்ப்பவன்” என்று (நபியே) கூறுவீராக!
16. “எங்கள் இறைவனே! நாங்கள் இறைநம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என அவர்கள் கூறுவார்கள்.
17. (அவர்கள்) பொறுமையாளர்கள், உண்மையாளர்கள், கட்டுப்பட்டு நடப்பவர்கள், (இறைவழியில்) செலவு செய்பவர்கள், ஸஹர் நேரங்களில் பாவ மன்னிப்புத் தேடுபவர்கள்.
18. “தன்னைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை” என்று நீதியை நிலைநாட்டும் அல்லாஹ் அறிவிக்கிறான். வானவர்களும் கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றனர். மிகைத்தவனும் நுண்ணறிவாளனுமான அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை.
19. அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாம் மட்டுமே! வேதம் வழங்கப்பட்டோரிடம் அறிவு வந்த பிறகும் தமக்கிடையே உள்ள பொறாமையால்தான் கருத்துவேறுபாடு கொண்டனர். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.
20. அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் “என் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து விட்டேன். என்னைப் பின்பற்றியோரும் (பணிந்து விட்டனர்)” எனக் கூறுவீராக! “(அவ்வாறே) நீங்களும் பணிகிறீர்களா?” என்று வேதம் வழங்கப்பட்டோரிடமும் படிப்பறிவற்றோரிடமும் கேட்பீராக! அவர்கள் பணிந்து விட்டால் நேர்வழி பெற்று விட்டனர். அவர்கள் புறக்கணித்தால் எடுத்துரைப்பதே உமக்குக் கடமையாகும். அல்லாஹ், அடியார்களை பார்ப்பவன்.52
21. அல்லாஹ்வின் வசனங்களை மறுத்து, நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்து, மக்களில் நீதியை ஏவுவோரையும் கொலை செய்வோருக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக!
22. இவ்வுலகிலும் மறுமையிலும் அவர்களின் செயல்கள் அழிந்துவிட்டன. அவர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை.
23. வேதம் எனும் பாக்கியம் வழங்கப்பட்டோரை நீர் பார்க்கவில்லையா? அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்வின் வேதத்தை நோக்கி அழைக்கப்பட்ட பின்னரும் அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணித்துத் திரும்பிச் செல்கின்றனர்.
24. இதற்குக் காரணம், “குறிப்பிட்ட நாட்கள் தவிர நரக நெருப்பு எங்களை அறவே தீண்டாது” என்று அவர்கள் கூறியதுதான். அவர்கள் பொய்யாகக் கூறிக் கொண்டிருந்தவை, தமது மார்க்க விஷயத்தில் அவர்களை ஏமாற்றி விட்டது.
25. சந்தேகமே இல்லாத ஒருநாளில் அவர்களை நாம் ஒன்றுதிரட்டும்போது எப்படியிருக்கும்? ஒவ்வொருவருக்கும் அவர்கள் சம்பாதித்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
26. “அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியவரிடம் ஆட்சியைக் கொடுக்கிறாய். நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறிக்கிறாய். நீ நாடியவரைக் கண்ணியப்படுத்துகிறாய். நீ நாடியவரை இழிவுபடுத்துகிறாய். நன்மை யாவும் உன் கைவசமே உள்ளன. ஒவ்வொரு பொருளின்மீதும் நீ ஆற்றலுடையவன்” என்று கூறுவீராக!
27. நீயே பகலில் இரவை நுழைக்கிறாய்; இரவில் பகலை நுழைக்கிறாய்! உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய்! நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்!
28. இறைநம்பிக்கையாளர்கள், இறைநம்பிக்கையாளர்களை விட்டு விட்டு, இறைமறுப்பாளர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். அவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே தவிர யாரேனும் அவ்வாறு செய்தால் அவருக்கு அல்லாஹ்விடம் எந்த ஒன்றும் இல்லை. தன்னைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு எச்சரிக்கிறான். அல்லாஹ்விடமே மீளுதல் உள்ளது.
29. “உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் மறைத்தாலும் அல்லது வெளிப்படுத்தினாலும் அதை அல்லாஹ் அறிகிறான். வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் அவன் அறிகிறான். ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்” என்று கூறுவீராக!
30. ஒவ்வொருவரும் தான் செய்த நன்மையையும், தான் செய்த தீமையையும் தன் முன்னால் காணும் நாளில், தனக்கும் அத்தீமைக்குமிடையில் நீண்ட தூரம் இருக்க வேண்டுமே என விரும்புவார். தன்னைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு எச்சரிக்கிறான். அடியார்களிடம் அல்லாஹ் கருணையுள்ளவன்.
31. “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்போராக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், நிகரிலா அன்பாளன்” என்று (நபியே!) கூறுவீராக!
32. “அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் புறக்கணித்தால் இறைமறுப்பாளர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்” என்றும் கூறுவீராக!
33. ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தினரையும், இம்ரானின் குடும்பத்தினரையும் அகிலத்தாரைவிட அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.
34. அவர்கள் ஒருவருக்கொருவர் வழித்தோன்றலாவர். அல்லாஹ் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
35. “என் இறைவனே! என் வயிற்றில் இருப்பதை உனக்கு அர்ப்பணிக்க நான் நேர்ச்சை செய்துள்ளேன். என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியேற்பவன், நன்கறிந்தவன்” என இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக!
36. குழந்தையை அவர் பெற்றெடுத்தபோது, “என் இறைவனே! நான் பெண் குழந்தையாகப் பெற்று விட்டேன்” என்று கூறினார். அவர் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். “ஆண், பெண்ணைப் போன்று அல்ல! நான் இவருக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து இவருக்கும், இவரது பிள்ளைக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்” (என்றும் கூறினார்.)53
37. மர்யமை அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். நல்ல முறையில் அவரை வளரச் செய்தான். ஸகரிய்யாவை அவருக்குப் பொறுப்பாளராக்கினான். அவர் இருந்த அறைக்குள் ஸகரிய்யா நுழையும் போதெல்லாம் அவரிடம் உணவு இருப்பதைக் கண்டார். “மர்யமே! உமக்கு இது எங்கிருந்து வந்தது?” என்று கேட்டார். “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது. தான் நாடியோருக்கு அல்லாஹ் கணக்கின்றி கொடுக்கிறான்” என்று பதிலளித்தார்.
38. அவ்விடத்திலேயே ஸகரிய்யா தமது இறைவனைப் பிரார்த்தித்தார். “என் இறைவனே! உன்னிடமிருந்து தூய குழந்தையை எனக்குத் தருவாயாக! நீயே பிரார்த்தனையைச் செவியேற்பவன்” என்று கூறினார்.
39. அந்த அறையில் அவர் நின்று தொழுது கொண்டிருந்தபோது, “அல்லாஹ் உமக்கு யஹ்யாவை நற்செய்தியாகக் கூறுகிறான். அவர் அல்லாஹ்வின் வார்த்தையை உண்மைப்படுத்துபவராகவும், தலைவராகவும், கற்புநெறி தவறாதவராகவும், நல்லோரைச் சார்ந்த நபியாகவும் இருப்பார்” என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர்.
40. “என் இறைவனே! நான் முதுமை அடைந்து விட்டேன். என் மனைவியோ மலடியாக இருக்கிறாள். இந்நிலையில் எனக்கு எப்படி மகன் உருவாக முடியும்?” என அவர் கேட்டார். “அவ்வாறுதான்! அல்லாஹ் நாடியதைச் செய்கிறான்” என்று அவன் பதிலளித்தான்.
41. “என் இறைவனே! எனக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்துவாயாக!” என்று அவர் கேட்டார். “மூன்று நாட்கள் மக்களிடம் சைகையாகவே அல்லாது நீர் பேச மாட்டீர் என்பதே உமக்கான அடையாளம். உமது இறைவனை அதிகமாக நினைவு கூர்வீராக! மாலையிலும் காலையிலும் (அவனைப்) போற்றுவீராக!” என அவன் கூறினான்.
42, 43. “மர்யமே! உம்மை அல்லாஹ் தேர்ந்தெடுத்து, தூய்மைப்படுத்தி, உலகிலுள்ள பெண்களைவிடச் சிறப்பித்தான். மர்யமே! உமது இறைவனுக்குக் கட்டுப்படுவீராக! ஸஜ்தா செய்வீராக! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்வீராக!” என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!54
44. (நபியே!) இவை மறைவான செய்திகள். இவற்றை நாம் உமக்கு அறிவிக்கிறோம். அவர்களில் யார் மர்யமுக்கு பொறுப்பேற்பது தொடர்பாகத் தமது எழுதுகோல்களைப் போட்டபோது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. அவர்கள் தர்க்கித்துக் கொண்டபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
45. “மர்யமே! அல்லாஹ் தன்னிடமிருந்து ஒரு வார்த்தையை உமக்கு நற்செய்தியாக அறிவிக்கிறான். அவரது பெயர் ‘மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ்’ என்பதாகும். அவர் இவ்வுலகிலும், மறுமையிலும் மதிப்புமிக்கவர்; (இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் உள்ளவர்” என வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!
46. “அவர் தொட்டில் பருவத்திலும், பெரிய வயதிலும் மக்களிடம் பேசுவார்; நல்லோரிலும் உள்ளவர்” (என்றும் வானவர்கள் கூறினர்.)55
47. “என் இறைவனே! எந்த மனிதனும் என்னைத் தீண்டாத நிலையில் எனக்கு எப்படி மகன் உண்டாக முடியும்?” என்று (மர்யம்) கேட்டார். “அவ்வாறுதான்! அல்லாஹ் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கும்போது அதற்கு ‘ஆகு’ என்றுதான் கூறுவான். உடனே அது ஆகிவிடும்” என்று அவன் கூறினான்.
48. வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் அவருக்குக் கற்றுக் கொடுப்பான்.
49. இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்). “நான் உங்கள் இறைவனின் சான்றுடன் உங்களிடம் வந்துள்ளேன். உங்களுக்காகக் களிமண்ணால் ஒரு பறவையின் வடிவத்தைப் போன்று உருவாக்கி அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் ஆணைப்படி பறவையாக ஆகும். அல்லாஹ்வின் ஆணைப்படி இறந்தவர்களை உயிர்ப்பிப்பேன்; பிறவிக் குருடரையும் தொழுநோயாளியையும் குணப்படுத்துவேன். நீங்கள் உண்பவற்றையும், உங்கள் வீடுகளில் சேமிப்பவற்றையும் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது” (என்று ஈஸா கூறினார்.)
50, 51. “எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துபவனாகவும், உங்களுக்குத் தடைசெய்யப்பட்ட சிலவற்றை உங்களுக்கு அனுமதிப்பதற்காகவும் (அனுப்பப்பட்டுள்ளேன்.) உங்கள் இறைவனின் சான்றுடன் உங்களிடம் வந்துள்ளேன். அல்லாஹ்வை அஞ்சுங்கள்; எனக்குக் கட்டுப்படுங்கள். என் இறைவனும், உங்கள் இறைவனும் அல்லாஹ்தான். எனவே, அவனையே வணங்குங்கள். இதுவே நேரான வழி” (என்றும் கூறினார்.)
52. அவர்களிடமிருந்து இறைமறுப்பை ஈஸா உணர்ந்தபோது “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” என்று கேட்டார். “நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோர். அல்லாஹ்வை நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீர் சாட்சி கூறுவீராக!” என (அவருக்கு) நெருக்கமான தோழர்கள் கூறினர்.
53. “எங்கள் இறைவனே! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரையும் பின்பற்றினோம். எனவே சாட்சி கூறுவோருடன் எங்களையும் பதிவு செய்வாயாக!” (என்று பிரார்த்தித்தனர்.)
54. (ஈஸாவை மறுத்தோர்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். சூழ்ச்சியாளர்களில் அல்லாஹ் சிறந்தவன்.
55. “ஈஸாவே! உம்மை நான் கைப்பற்றி என்னளவில் உயர்த்திக் கொள்வேன். இறைமறுப்பாளர்களிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துவேன். உம்மைப் பின்பற்றுவோரை மறுமை நாள்வரை இறைமறுப்பாளர்களைவிட மேலாக ஆக்குவேன். பிறகு என்னிடமே உங்கள் திரும்புதல் உள்ளது. நீங்கள் எதில் கருத்துவேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதுபற்றி உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை நினைவூட்டுவீராக!
56. இறைமறுப்பாளர்களை இவ்வுலகிலும் மறுமையிலும் கடும் வேதனையால் தண்டிப்பேன். அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை.
57. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோருக்கு அவர்களின் கூலிகளை அவன் முழுமையாக வழங்குவான். அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
58. (நபியே!) உமக்கு நாம் எடுத்துரைக்கும் இவை வசனங்களும் ஞானமிக்க அறிவுரையுமாகும்.
59. அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமைப் போன்றது. அவரை மண்ணால் படைத்து, பின்னர் அவரிடம் ‘ஆகு!’ என்று கூறினான். உடனே அவர் (மனிதப் படைப்பாக) ஆகிவிட்டார்.
60. இவ்வுண்மை உமது இறைவனிடமிருந்து வந்தது. எனவே நீர் சந்தேகிப்போரில் ஆகிவிடாதீர்!
61. உமக்கு ஞானம் வந்த பிறகு இதைப் பற்றி உம்மிடம் யாரேனும் தர்க்கித்தால் “வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைப்போம். பின்னர் பணிந்து பிரார்த்தித்து, பொய்யர்கள்மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்” என்று கூறுவீராக!56
62. இதுவே உண்மை வரலாறு. அல்லாஹ்வைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. அல்லாஹ்வே மிகைத்தவன், நுண்ணறிவாளன்.
63. அவர்கள் புறக்கணித்தால், குழப்பவாதிகளை அல்லாஹ் நன்கறிந்தவன்.
64. “வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; அல்லாஹ்வை விட்டுவிட்டு நம்மில் சிலர், சிலரைக் கடவுளர்களாக ஆக்கக் கூடாது’ என்ற எங்களுக்கும் உங்களுக்குமிடையிலான பொதுவான கோட்பாட்டுக்கு வாருங்கள்” என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் “நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்!” என்று கூறிவிடுங்கள்.57
65. “வேதமுடையோரே! இப்ராஹீமைப் பற்றி ஏன் தர்க்கம் செய்கிறீர்கள்? அவருக்குப் பிறகே தவ்ராத்தும் இன்ஜீலும் அருளப்பட்டன. சிந்திக்க மாட்டீர்களா?”
66. கவனத்தில் கொள்ளுங்கள்! நீங்கள்தான் உங்களுக்குத் தெரிந்த விஷயத்தில் (இதுவரை) தர்க்கம் செய்தீர்கள். உங்களுக்கு எந்த அறிவும் இல்லாத விஷயத்தில் ஏன் தர்க்கம் செய்கிறீர்கள்? அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
67. இப்ராஹீம் யூதராகவோ, கிறித்தவராகவோ இருக்கவில்லை. மாறாக, சத்திய நெறியில் நின்ற முஸ்லிமாகவே இருந்தார். அவர் இணைவைப்போரில் இருக்கவில்லை.
68. இப்ராஹீமின் விஷயத்தில் மக்களிலேயே மிகத் தகுதி படைத்தவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், இறைநம்பிக்கை கொண்டோருமே ஆவர். அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களின் பாதுகாவலன்.
69. வேதமுடையோரில் ஒரு பிரிவினர் உங்களை வழிகெடுக்க விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் தங்களையே வழிகெடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.
70. வேதமுடையோரே! நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் மறுக்கிறீர்கள்?
71. வேதமுடையோரே! நீங்கள் தெரிந்து கொண்டே ஏன் உண்மையைப் பொய்யுடன் கலந்து, உண்மையை மறைக்கிறீர்கள்?
72. “இறைநம்பிக்கை கொண்டோரின்மீது அருளப்பட்டதைப் பகலின் தொடக்கத்தில் இறைநம்பிக்கை கொண்டு, அதன் இறுதியில் மறுத்து விடுங்கள்! இதனால் அவர்கள் (இஸ்லாத்தை விட்டும்) திரும்பி விடுவார்கள்” என வேதமுடையோரில் ஒரு பிரிவினர் கூறுகின்றனர்.
73. “உங்கள் மார்க்கத்தை பின்பற்றியோரைத் தவிர வேறு யாருக்கும், உங்களுக்கு வழங்கப்பட்டதைப் போல் வழங்கப்படும் என்பதையோ, அல்லது உங்கள் இறைவனிடம் அவர்கள் உங்களை மிகைத்து விடுவார்கள் என்பதையோ நீங்கள் ஒப்புக் கொள்ளாதீர்கள்!” (என வேதமுடையோர் கூறுகின்றனர்.) “நேர்வழி என்பது அல்லாஹ்வின் வழியே!” என்று கூறுவீராக! “அருள் அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. தான் நாடியோருக்கு அதை வழங்குகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன்” என்றும் கூறுவீராக!
74. தான் நாடியோரை, தனது அருளுக்கு உரியவர்களாக ஆக்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
75. “நீர் ஒரு குவியலையே நம்பி ஒப்படைத்தாலும் உம்மிடம் திருப்பிக் கொடுப்போரும் வேதமுடையோரில் உள்ளனர். நீர் ஒரு தங்க நாணயத்தை நம்பி ஒப்படைத்தாலும், அவர்களிடம் போய் தொடர்ந்து நின்றாலே தவிர உம்மிடம் திருப்பிக் கொடுக்காதோரும் அவர்களில் உள்ளனர். “படிப்பறிவற்றவர்கள் விஷயத்தில் நம்மைக் குற்றம் காண எந்த வழியுமில்லை” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின்மீது பொய் கூறுகின்றனர்.
76. அவ்வாறில்லை! யார் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, இறையச்சத்துடன் நடக்கிறாரோ, அத்தகைய இறையச்சமுடையோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
77. அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையையும், தமது சத்தியங்களையும் யார் அற்ப விலைக்கு விற்கிறார்களோ அவர்களுக்கு மறுமையில் எந்த பாக்கியமும் இல்லை. மறுமை நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேச மாட்டான்; அவர்களைப் பார்க்க மாட்டான். மேலும் அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.58
78. வேதத்தில் இல்லாததை, வேதத்தில் உள்ளது என நீங்கள் கருத வேண்டும் என்பதற்காக அவர்களில் ஒரு பிரிவினர் வேதத்தைத் தமது நாவுகளால் திரிக்கின்றனர். இது அல்லாஹ்விடமிருந்து வந்தது எனவும் கூறுகின்றனர். ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல! அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின்மீது பொய் கூறுகின்றனர்.
79. எந்த மனிதருக்கும் வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் வழங்கிய பின்னர் “அல்லாஹ்வை விடுத்து எனக்கு அடியார்களாகி விடுங்கள்” என்று மக்களிடம் கூறுவது அவருக்குத் தகாது. மாறாக, “நீங்கள் வேதத்தை கற்றுக் கொடுப்போராகவும், கற்போராகவும் இருப்பதால் இறைவனைச் சார்ந்தோராக ஆகிவிடுங்கள்” (என்றே கூறுவார்.)
80. “வானவர்களையும், நபிமார்களையும் கடவுளர்களாக எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று அவர் உங்களுக்கு ஏவுவதும் தகாது. நீங்கள் முஸ்லிம்களாக ஆன பிறகு, அவர் இறை மறுப்பை உங்களுக்கு ஏவுவாரா?
81. “நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் வழங்கி, பின்னர் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் நீங்கள் அவரைக் கண்டிப்பாக நம்பி, அவருக்கு உதவ வேண்டும்” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து, “ஒப்புக் கொண்டீர்களா? இதன்மீது என் உடன்படிக்கையை எடுத்துக் கொண்டீர்களா?” என்று கேட்டபோது “நாங்கள் ஒப்புக் கொண்டோம்” என்று அவர்கள் கூறினர். “நீங்கள் சாட்சியாக இருங்கள், நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்” என்று அவன் கூறினான்.
82. இதற்குப் பிறகு யார் புறக்கணிக்கிறார்களோ அவர்களே பாவிகள்.
83. அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாததையா அவர்கள் தேடுகிறார்கள்? வானங்கள், பூமியில் உள்ளவை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவனுக்கே கட்டுப்படுகின்றன. அவனிடமே அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.
84. “நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸா, ஈஸா மற்றும் நபிமார்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பினோம். (நபிமார்களான) அவர்களில் எவருக்கிடையிலும் பாகுபாடு காட்ட மாட்டோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்று கூறுவீராக!
85. யாரேனும் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை விரும்பினால் அது அவரிடமிருந்து அறவே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் (ஒருவராக) இருப்பார்.
86. இத்தூதர் உண்மையாளர்தான் என அவர்கள் சாட்சி கூறி, அவர்களிடம் தெளிவான சான்றுகளும் வந்து, இறைநம்பிக்கை கொண்ட பிறகு, மறுத்துவிட்ட கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்? அநியாயக்காரக் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
87. அல்லாஹ், வானவர்கள் மற்றும் மனிதர்கள் ஆகிய அனைவரின் சாபமும் அவர்கள்மீது ஏற்படுவதே அவர்களுக்குரிய கூலியாகும்.
88. (அவர்கள்) அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை குறைக்கப்பட மாட்டாது. அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்பட மாட்டாது.
89. இதன் பின்னர் பாவ மன்னிப்புக் கோரி, சீர்திருத்திக் கொண்டவர்களைத் தவிர! அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.59
90. யார் தமது இறைநம்பிக்கைக்குப் பிறகு மறுத்து, பின்னர் இறைமறுப்பை அதிகரித்துக் கொண்டார்களோ அவர்களின் பாவ மன்னிப்புக் கோரிக்கை அறவே ஏற்கப்பட மாட்டாது. அவர்களே வழிகெட்டவர்கள்.
91. (அல்லாஹ்வை) மறுத்து, இறைமறுப்பாளர்களாகவே மரணித்தவர்கள், பூமி நிறைய தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அவர்களில் எவரிடமிருந்தும் அது அறவே ஏற்கப்பட மாட்டாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை.60
92. உங்களுக்கு விருப்பமானவற்றிலிருந்து (அறவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே முடியாது. நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதை அல்லாஹ் நன்கறிபவன்.61
93. தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னர் எல்லா உணவுகளும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகவே இருந்தது. இஸ்ராயீல் (எனும் யஃகூப்) தன்மீது விலக்கிக் கொண்டவற்றைத் தவிர! “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதைப் படித்துக் காட்டுங்கள்!” என்று (நபியே!) கூறுவீராக!
94. இதன்பிறகு அல்லாஹ்வின்மீது யார் பொய்யை இட்டுக் கட்டுகிறார்களோ அவர்களே அநியாயக்காரர்கள்.
95. “அல்லாஹ் உண்மையைக் கூறியுள்ளான். எனவே, சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். அவர் இணை வைப்போரில் (ஒருவராக) இருக்கவில்லை” என்று கூறுவீராக!
96. மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா (என்ற மக்கா)வில் உள்ளது. அது பாக்கியமிக்கதாகவும் அகிலத்தாருக்கு நேர்வழியாகவும் இருக்கிறது.62
97. அதில் மகாமு இப்ராஹீம் உள்ளிட்ட தெளிவான சான்றுகள் உள்ளன. அதில் நுழைந்தவர் பாதுகாப்பு பெற்றவர் ஆவார். அல்லாஹ்வுக்காக அந்த ஆலயத்தில் ஹஜ் செய்வது, அங்குப் பயணிப்பதற்குச் சக்தி பெற்ற மனிதர்கள்மீது கடமையாகும். யாரேனும் (இதனை) மறுத்தால் அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.63
98. “வேதமுடையோரே! அல்லாஹ்வின் வசனங்களை ஏன் மறுக்கிறீர்கள்? நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் கண்காணிப்பவன்” என்று கூறுவீராக!
99. “வேதமுடையோரே! இறைநம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ்வின் பாதையை விட்டும் ஏன் தடுக்கிறீர்கள்? நீங்கள் அறிந்து கொண்டே அதைக் கோணலாக்க முனைகிறீர்கள். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை” என்று கூறுவீராக!
100. இறைநம்பிக்கை கொண்டோரே! வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் அவர்கள், உங்களின் இறைநம்பிக்கைக்குப் பின்னரும் உங்களை இறைமறுப்பாளர்களாக மாற்றி விடுவார்கள்.
101. அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, அவனது தூதரும் உங்களுடன் இருக்கும் நிலையில் நீங்கள் எப்படி மறுக்கிறீர்கள்? அல்லாஹ்வை பலமாகப் பற்றிக் கொண்டவர் நேர்வழி காட்டப்பட்டு விட்டார்.
102. இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சுங்கள். நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணித்துவிட வேண்டாம்.
103. அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) பகைவர்களாக இருந்தீர்கள். அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையில் இணைப்பை உண்டாக்கினான். எனவே அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். நீங்கள் நரகப் படுகுழியின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற்றினான். இவ்வாறே நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தனது சான்றுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.64
104. நல்லதை நோக்கி அழைத்து, நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருக்கட்டும்! அவர்களே வெற்றியாளர்கள்.
105. தெளிவான சான்றுகள் தம்மிடம் வந்த பிறகும் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தவர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள்! அவர்களுக்குக் கடுமையான வேதனை உண்டு.
106. அந்நாளில் சில முகங்கள் பிரகாசமாகவும், சில முகங்கள் கருத்தும் இருக்கும். யாருடைய முகங்கள் கருத்திருக்குமோ அவர்களிடம் “நீங்கள் இறைநம்பிக்கை கொண்ட பிறகு மறுத்து விட்டீர்களா? நீங்கள் இறைமறுப்பாளர்களாக இருந்ததால் வேதனையைச் சுவையுங்கள்!” (என்று கூறப்படும்.)
107. யாருடைய முகங்கள் பிரகாசமாக இருக்குமோ அவர்கள் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
108. இவை அல்லாஹ்வின் வசனங்கள். (நபியே!) உண்மையைக் கொண்டுள்ள இவற்றை உமக்கு ஓதிக் காட்டுகிறோம். அகிலத்தாருக்கு அநியாயம் செய்வதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
109. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அனைத்துக் காரியங்களும் அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும்.
110. நீங்கள், மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கிறீர்கள். அல்லாஹ்வை நம்புகிறீர்கள்.65 வேதமுடையோர் இறைநம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்கு நன்மையாக இருந்திருக்கும். அவர்களில் இறைநம்பிக்கையாளர்களும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் பாவிகள்.
111. தொல்லை தருவதைத் தவிர அவர்களால் உங்களுக்குத் எந்தத் தீங்கும் செய்யவே முடியாது. அவர்கள் உங்களுடன் போரிட்டால் புறமுதுகு காட்டி ஓடுவார்கள். பிறகு அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
112. அல்லாஹ்வின் பாதுகாப்பும், மனிதர்களின் பாதுகாப்பும் இருந்தாலே தவிர, எங்கே இருந்தபோதும் அவர்கள்மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிட்டார்கள். அவர்கள்மீது வறுமையும் விதிக்கப்பட்டது. அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராகவும், அநியாயமாக நபிமார்களைக் கொலை செய்வோராகவும் இருந்ததே இதற்குக் காரணம். அவர்கள் மாறு செய்து, வரம்பு மீறுபவர்களாக இருந்ததும் இதற்குக் காரணமாகும்.
113. அவர்கள் சமமானவர்களாக இல்லை. வேதமுடையோரில் (நேர்வழியில்) நிலைத்து நிற்கும் ஒரு கூட்டத்தினர், இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகின்றனர்; ஸஜ்தாவும் செய்கின்றனர்.66
114. அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகின்றனர். நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்றனர். நற்காரியங்களில் விரைந்து செல்கின்றனர். அவர்கள் நல்லவர்கள் ஆவர்.
115. அவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அ(தற்கான கூலியைப் பெறுவ)தற்கு மறுக்கப்பட மாட்டார்கள். இறையச்சமுடையோரை அல்லாஹ் நன்கறிந்தவன்.
116. இறைமறுப்பாளர்களுக்கு, அவர்களின் செல்வங்களும் பிள்ளைகளும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைச் சிறிதும் காப்பாற்றாது. அவர்கள் நரகவாசிகள்; அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
117. இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவு செய்வதன் உதாரணம், கடும் குளிரான காற்றைப் போன்றது. தமக்குத் தாமே அநியாயம் செய்துகொண்ட கூட்டத்தாரின் பயிர்களை அது தாக்கி அழித்துவிட்டது. அவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் செய்யவில்லை. மாறாக, அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கின்றனர்.
118. இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களையன்றி மற்றவர்களை நெருங்கிய நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் சிறிதும் குறை வைக்க மாட்டார்கள். நீங்கள் துன்புறுவதை அவர்கள் விரும்புகின்றனர். அவர்களின் வாய்களிலிருந்தே வெறுப்பு வெளிப்பட்டு விட்டது. அவர்களில் உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பதோ மிகப் பெரியது. நீங்கள் சிந்திப்போராக இருந்தால் உங்களுக்கு அடையாளங்களைத் தெளிவுபடுத்தி விட்டோம்.
119. அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள்தான் அவர்களை நேசிக்கிறீர்கள். ஆனால் அவர்கள் உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் அனைத்து வேதங்களையும் நம்புகிறீர்கள். அவர்கள் உங்களைச் சந்திக்கும்போது “நாங்கள் இறைநம்பிக்கை கொண்டோம்” எனக் கூறுகின்றனர். அவர்கள் தனித்திருக்கும் போதோ உங்கள்மீதுள்ள கோபத்தால் விரல் நுனிகளைக் கடிக்கின்றனர். “உங்கள் கோபத்திலேயே சாவுங்கள்! உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்” எனக் கூறுவீராக!
120. உங்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலை தருகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதற்காக அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறையச்சத்துடன் இருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்குச் சிறிதும் பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்தறிபவன்.
121. (நபியே!) இறைநம்பிக்கையாளர்களைப் போருக்கான இடங்களில் நிறுத்துவதற்காக உமது குடும்பத்தாரிடமிருந்து காலையில் நீர் சென்றதை நினைத்துப் பார்ப்பீராக! அல்லாஹ் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
122. உங்களில் இரண்டு பிரிவினருக்கு அல்லாஹ் உதவுபவனாக இருந்த நிலையிலும் அவ்விரு பிரிவினரும் கோழையாகி(ப் பின்வாங்கி)விட எண்ணியதை நினைத்துப் பார்ப்பீராக! இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைக்க வேண்டும்.67
123. பத்ருப் போரில் நீங்கள் பலவீனமாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்கு உதவினான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அலலாஹ்வை அஞ்சுங்கள்.
124. “(வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று இறைநம்பிக்கையாளர்களிடம் நீர் கூறியதை நினைத்துப் பார்ப்பீராக!
125. மேலும், நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறையச்சத்துடன் இருந்தால் அவர்கள் இப்போது திடீரென உங்களிடம் வந்தாலும், அடையாளமிடப்பட்ட ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.
126. உங்களுக்கு நற்செய்தியாகவும், இதனால் உங்கள் உள்ளங்கள் நிம்மதி பெறுவதற்காகவுமே அல்லாஹ் இதைச் செய்தான். உதவி என்பது மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர வேறில்லை.
127. இறைமறுப்பாளர்களில் ஒரு பகுதியினரை அழிப்பதற்காக, அல்லது அவர்களை இழிவுபடுத்தி, அவர்கள் தோல்வியடைந்து திரும்பிச் செல்வதற்காக (இவ்வாறு செய்தான்.)
128. (நபியே! அல்லாஹ்வின்) அதிகாரத்தில் உமக்கு எதுவும் இல்லை. அவன், அவர்களை மன்னிப்பான். அல்லது அவர்களைத் தண்டிப்பான். அவர்கள் அநியாயக்காரர்களே!68
129. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை மன்னிப்பான்; தான் நாடியோரைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
130. இறைநம்பிக்கை கொண்டோரே! பன்மடங்காக வளரும் வட்டியை உண்ணாதீர்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
131. இறைமறுப்பாளர்களுக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ள நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்!
132. அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்.
133. உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், சொர்க்கத்தை நோக்கியும் விரையுங்கள்! அது வானங்கள், பூமியளவுக்கு விரிந்து பரந்தது. அது இறையச்சமுடையோருக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ளது.69
134. அவர்கள் வசதியிலும் வறுமையிலும் செலவிடுவார்கள்; கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்; மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.70
135. அவர்கள் மானக்கேடானதைச் செய்தாலோ, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டாலோ, அல்லாஹ்வை நினைத்துத் தமது பாவங்களுக்காக மன்னிப்புக் கோருவார்கள். பாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யார்? அவர்கள் தெரிந்து கொண்டே, தாங்கள் செய்தவற்றில் நிலைத்திருக்க மாட்டார்கள்.71
136. அவர்களுக்கான கூலி, அவர்களின் இறைவனின் மன்னிப்பும் சொர்க்கங்களும் ஆகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நற்செயல்கள் செய்வோரின் கூலி மிகச் சிறந்தது.
137. உங்களுக்கு முன்னர் பல வழிமுறைகள் கடந்துவிட்டன. நீங்கள் பூமியில் பயணித்து, பொய்யெனக் கூறியோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் கவனியுங்கள்.
138. இது மனிதர்களுக்கு விளக்கமும், இறையச்சமுடையோருக்கு நேர்வழியும் அறிவுரையுமாகும்.
139. மனம் தளராதீர்கள்! கவலைப்படாதீர்கள்! இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் நீங்களே மேலோங்குபவர்கள்.
140. உங்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் அதுபோன்றே அக்கூட்டத்திற்கும் துன்பம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நாட்களை மக்களிடையே நாமே சுழலச் செய்கிறோம். இறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் வெளிப்படுத்தவும், உங்களில் உயிர்த் தியாகிகளைத் தேர்ந்தெடுக்கவும் (இவ்வாறு செய்கிறான்.) அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
141. இறைநம்பிக்கை கொண்டவர்களை, அல்லாஹ் தூய்மைப்படுத்துவதற்காகவும், இறைமறுப்பாளர்களை அழிப்பதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்.)
142. உங்களில் போரிடுவோர் யார் என அல்லாஹ் வெளிப்படுத்திக் காட்டாமலும், பொறுமையாளர்கள் யார் என வெளிப்படுத்திக் காட்டாமலும் நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணிக் கொண்டீர்களா?
143. நீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன் அதை விரும்புவோராக இருந்தீர்கள். இப்போது அதை நீங்கள் கண்கூடாகக் கண்டு விட்டீர்கள்.
144. முஹம்மத் இறைத்தூதர் தவிர வேறில்லை. அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்று விட்டனர். அவர் மரணித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் நீங்கள் பழைய பாதைக்கே திரும்பிச் சென்று விடுவீர்களா? யார் பழைய பாதைக்குத் திரும்பிச் செல்கிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் செய்யவே முடியாது. நன்றி செலுத்துவோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.
145. எந்த உயிரும் அல்லாஹ்வின் நாட்டமின்றி மரணிக்காது. இது நேரம் குறிக்கப்பட்ட விதியாகும். இவ்வுலகின் பலனை விரும்புபவருக்கு அதை வழங்குவோம். மறுமையின் பலனை விரும்புபவருக்கு அதை வழங்குவோம். நன்றி செலுத்துவோருக்குக் கூலி வழங்குவோம்.
146. எத்தனையோ நபிமார்களுடன் இணைந்து ஏராளமான கூட்டத்தினர் போரிட்டுள்ளனர். அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளால் அவர்கள் மனம் தளரவில்லை; பலவீனப்படவில்லை; பணிந்துவிடவும் இல்லை. அல்லாஹ், பொறுமையாளர்களை நேசிக்கிறான்.
147. “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும், எங்கள் செயல்களில் நாங்கள் வரம்பு மீறியவற்றையும் எங்களுக்கு மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!” என்று சொல்வதே அவர்களின் கூற்றாக இருந்தது.
148. அவர்களுக்கு இவ்வுலகின் நன்மையையும் மறுமையின் அழகிய நன்மையையும் அல்லாஹ் வழங்கினான். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
149. இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இறைமறுப்பாளர்களுக்குக் கட்டுப்பட்டால் உங்களின் பழைய பாதைக்கே உங்களைத் திருப்பி விடுவார்கள். எனவே நீங்கள் நஷ்டமடைந்தோராய் மாறி விடுவீர்கள்.
150. எனினும் அல்லாஹ்வே உங்கள் பாதுகாவலன். உதவுவோரில் அவனே மிகச் சிறந்தவன்.
151. அல்லாஹ் எதன்மீது சான்றை இறக்கி வைக்கவில்லையோ அதை அவனுக்கு இணையாக்கியதால் இறைமறுப்பாளர்களின் உள்ளங்களில் திகிலைப் போடுவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். அநியாயக்காரர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.
152. அல்லாஹ்வின் நாட்டப்படி அவர்களை நீங்கள் வேரறுத்தபோது தன் வாக்குறுதியை உங்களுக்கு அவன் உண்மைப்படுத்தினான். இறுதியில் நீங்கள் தைரியமிழந்து, இவ்விஷயத்தில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொண்டீர்கள். நீங்கள் விரும்பியதை அவன் உங்களுக்குக் காட்டிய பிறகும் மாறுசெய்தீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் உள்ளனர். உங்களில் மறுமையை விரும்புவோரும் உள்ளனர். பிறகு உங்களைச் சோதிப்பதற்காக அவர்களை (வெற்றி பெறுவதை) விட்டும் உங்களைத் திருப்பினான். எனினும் உங்களை மன்னித்தான். இறைநம்பிக்கையாளர்கள்மீது அல்லாஹ் அருளுடையவன்.
153. இத்தூதர் உங்களுக்குப் பின்னாலிருந்து உங்களை அழைத்துக் கொண்டிருந்த நிலையில் எவரையும் திரும்பிப் பார்க்காமல் நீங்கள் (மலைமீது) ஏறிக் கொண்டிருந்ததை எண்ணிப் பாருங்கள். உங்களுக்கு (வெற்றி) கிடைக்காமல் போனதற்காகவும், உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காகவும் நீங்கள் கவலைப்படாமலிருக்க, துயரத்திற்கு மேல் துயரத்தை உங்களுக்குக் கொடுத்தான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.72
154. பின்னர், இத்துயரத்திற்குப் பிறகு உங்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும் சிறு தூக்கத்தை வழங்கினான். அது உங்களில் ஒரு பிரிவினரைத் தழுவியது. மற்றொரு பிரிவினரோ தமக்குள் கவலை கொண்டனர். அறியாமைக் கால எண்ணத்தைப் போன்று அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்குப் புறம்பான எண்ணம் கொண்டு, “அதிகாரத்தில் நமக்குச் சிறிதளவேனும் இருக்கிறதா?” என்று கேட்கின்றனர். “அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது” என்று கூறுவீராக! உம்மிடம் வெளிப்படுத்தாததை தமது உள்ளங்களில் மறைக்கின்றனர். “அதிகாரத்தில் நமக்குச் சிறிதளவேனும் இருந்திருந்தால் இங்கே கொல்லப்பட்டிருக்க மாட்டோம்” எனக் கூறுகின்றனர். “நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்தாலும் கொல்லப்பட வேண்டும் என விதிக்கப்பட்டோர், தமது வீழுமிடத்திற்கு வந்தே தீருவர். உங்கள் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளதைத் தூய்மைப்படுத்துவற்காகவும் (இதை ஏற்படுத்தினான்.) உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் நன்கறிந்தவன்” எனக் கூறுவீராக!73
155. இரு படைகளும் சந்தித்த நாளில், உங்களில் புறமுதுகு காட்டியோரை, அவர்களுடைய சில செயல்களின் காரணமாக ஷைத்தானே சறுகச் செய்தான். எனினும் அவர்களை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், சகிப்புத் தன்மை மிக்கவன்.
156. இறைநம்பிக்கை கொண்டோரே! யார் (அல்லாஹ்வை) மறுத்து, இன்னும் பூமியில் பயணம் மேற்கொண்ட அல்லது போராளிகளான தம் சகோதரர்களைப் பற்றி, “அவர்கள் நம்முடன் இருந்திருந்தால் மரணித்திருக்க மாட்டார்கள், கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்” என்றும் கூறினார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்! இதை அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் கவலையாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தான்). அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
157. அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலோ அல்லது மரணித்தாலோ, அல்லாஹ்வின் மன்னிப்பும் அருளும் அவர்கள் எதைச் சேகரித்துள்ளார்ளோ அதைவிட மிகச் சிறந்தது.
158. நீங்கள் மரணித்தாலோ அல்லது கொல்லப்பட்டாலோ அல்லாஹ்விடமே ஒன்று திரட்டப்படுவீர்கள்.
159. (நபியே!) அல்லாஹ்வின் அருளைக் கொண்டே நீர் அவர்களிடம் மென்மையாக நடந்துகொள்கிறீர். கடுகடுப்பானவராகவோ, கடின உள்ளம் கொண்டவராகவோ நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டுப் பிரிந்து சென்றிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவீராக! (உமது) காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! நீர் முடிவெடுத்து விட்டால் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைப்பீராக! நம்பிக்கை வைப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.
160. உங்களுக்கு அல்லாஹ் உதவினால் உங்களை வெல்பவர் யாருமில்லை. அவன் உங்களைக் கைவிட்டால் அதன் பிறகு உங்களுக்கு உதவுபவர் யார்? எனவே இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைக்கட்டும்.
161. மோசடி செய்வது எந்த நபிக்கும் தகுதியானதல்ல! மோசடி செய்தவன், தான் செய்த மோசடியுடன் மறுமை நாளில் வருவான். பிறகு ஒவ்வொருவருக்கும் அவர் சம்பாதித்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.74
162. அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பின்பற்றியவர், அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானவனைப் போல் ஆவாரா? அவன் தங்குமிடம் நரகம். சேருமிடத்தில் அது கெட்டது.
163. அவர்களுக்கு அல்லாஹ்விடம் பல படிநிலைகள் உள்ளன. அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
164. இறைம்பிக்கையாளர்களுக்கு, அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களிடம் அனுப்பி, அல்லாஹ் அருள் புரிந்தான். அவர், அவனது வசனங்களை ஓதிக் காட்டி, அவர்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுத் தருவார். இதற்கு முன் அவர்கள் பகிரங்க வழிகேட்டில் இருந்தனர்.
165. (உஹதில்) உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டபோது, இதைப் போன்று இரு மடங்கு துன்பத்தை நீங்கள் (பத்ரில் அவர்களுக்கு) ஏற்படுத்தியிருந்தும் “இது எப்படி ஏற்பட்டது?” என்று கேட்டீர்கள். “இது உங்களால்தான் ஏற்பட்டது” என்று கூறுவீராக! அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் ஆற்றலுடையவன்.
166, 167. இருபடைகளும் சந்தித்துக் கொண்ட நாளில் அல்லாஹ்வின் நாட்டப்படியே உங்களுக்குத் துன்பம் ஏற்பட்டது. இறை நம்பிக்கையாளர்களை வெளிப்படுத்திக் காட்டவும், நயவஞ்சகர் களை வெளிப்படுத்திக் காட்டவுமே (அவன் இவ்வாறு செய்தான்.) “வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள் அல்லது தடுத்து நிறுத்துங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு “நாங்கள் போரை அறிந்திருந்தால் உங்களைப் பின்தொடர்ந்திருப்போம்” என்று (நயவஞ்சகர்கள்) கூறினர். அன்றைய தினம் அவர்கள் இறைநம்பிக்கையைவிட இறைமறுப்பிற்கே மிக நெருக்கமாக இருந்தார்கள். தமது உள்ளங்களில் இல்லாததை தம் வாய்களினால் கூறுகின்றனர். அவர்கள் மறைப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்.
168. (போருக்குச் செல்லாமல்) தங்கிவிட்ட அவர்கள், (போரில் கொல்லப்பட்ட) தம் சகோதரர்கள் குறித்து “அவர்கள் நமக்குக் கட்டுப்பட்டிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறினர். “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டும் மரணத்தைத் தடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறுவீராக!
169. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தோர் என்று கருதாதீர்கள்! மாறாகத் தமது இறைவனிடம் அவர்கள் உயிருடன் இருக்கின்றனர்; உணவளிக்கப்படுகின்றனர்.75
170. அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியவற்றைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர். தம்முடன் சேராமலிருக்கும் தமக்குப் பின்னுள்ளவர்களைப் பற்றி “அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்” என்றும் மகிழ்கின்றனர்.
171. அல்லாஹ்விடமிருந்து பெற்ற அருள் மற்றும் சிறப்பு குறித்தும், இறைநம்பிக்கையாளர்களின் கூலியை அல்லாஹ் வீணாக்கமாட்டான் என்பது குறித்தும் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
172. (போரில்) அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்ட பிறகும் அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் பதிலளித்தார்கள். அவர்களில் நன்மை செய்து, இறையச்சத்துடன் நடப்போருக்கு மகத்தான கூலி உண்டு.76
173. “மக்கள் உங்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டு விட்டனர். எனவே அவர்களைப் பயந்து கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சிலர் கூறினர். இது அவர்களுக்கு இறைநம்பிக்கையை அதிகரித்தது. “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் பதிலளித்தனர்.
174. அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல், அல்லாஹ்விடமிருந்து பெற்ற அருளுடனும், சிறப்புடனும் திரும்பினர். அவர்கள் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பின்பற்றினார்கள். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
175. ஷைத்தான் தனது நேசர்களின் மூலம் அச்சுறுத்துகிறான். நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்!
176. இறைமறுப்பில் விரைந்து செல்வோர் உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் செய்யவே முடியாது. அவர்களுக்கு மறுமையில் எந்தப் பாக்கியத்தையும் ஏற்படுத்தாமலிருக்க அல்லாஹ் விரும்புகிறான். அவர்களுக்குக் கடுமையான வேதனையும் உள்ளது.
177. இறைநம்பிக்கைக்குப் பதிலாக இறைமறுப்பை விலைக்கு வாங்கியவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் செய்யவே முடியாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
178. இறைமறுப்பாளர்களுக்கு நாம் அவகாசமளிப்பது, தமக்கு நல்லது என அவர்கள் நினைக்க வேண்டாம். அவர்கள் பாவத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவே அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறோம். அவர்களுக்கு இழிவுதரும் வேதனை உள்ளது.
179. நல்லவரிலிருந்து கெட்டவரை அல்லாஹ் வேறுபடுத்திக் காட்டாமல் நீங்கள் (கெட்டவர்களுடன் கலந்து) இருக்கும் நிலையிலேயே இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்கு அறிவிக்கவும் மாட்டான். மாறாக தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புங்கள்! நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சத்துடன் நடந்தால் உங்களுக்கு மகத்தான கூலி உள்ளது.
180. தனது அருளிலிருந்து அல்லாஹ் வழங்கியதில் யார் கஞ்சத்தனம் செய்கிறாரோ, அவர் அது தமக்கு நல்லது என நினைக்க வேண்டாம். மாறாக அவர்களுக்கு அது கெட்டதாகும். அவர்கள் எதைக் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன்மூலம் மறுமை நாளில் அவர்களின் கழுத்தில் மாலையாக மாட்டப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.77
181, 182. “அல்லாஹ்தான் ஏழை, நாங்கள் செல்வந்தர்கள்” என்று கூறியோரின் கூற்றை அல்லாஹ் செவியுற்றான். அவர்கள் கூறியதையும் நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்ததையும் பதிவு செய்வோம். “எரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! உங்கள் கைகள் செய்தவையே இதற்குக் காரணம்” என்று கூறுவோம். அடியார்களுக்கு அல்லாஹ் சிறிதும் அநியாயம் செய்பவனல்ல.
183. “ஒரு பலிப் பிராணியை எங்களிடம் கொண்டு வந்து அதனை நெருப்பு உண்ணும்வரை நாங்கள் எந்தத் தூதரையும் நம்பக் கூடாது என அல்லாஹ் எங்களிடம் உறுதி மொழி எடுத்துள்ளான்” என்று அவர்கள் கூறுகின்றனர். “எனக்கு முன்னர் தூதர்கள் தெளிவான சான்றுளையும், நீங்கள் கேட்டதையும் உங்களிடம் கொண்டு வந்தனர். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை ஏன் கொன்றீர்கள்?” என்று (நபியே!) கேட்பீராக!
184. அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறினால், உமக்கு முன்னர் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், பிரகாசிக்கும் வேதத்தையும் கொண்டு வந்த பல தூதர்கள் பொய்யரெனக் கூறப்பட்டுள்ளனர்.
185. ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்கக்கூடியதே! மறுமை நாளில்தான் உங்களது கூலிகள் முழுமையாகக் கொடுக்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டுச் சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுபவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் இன்பத்தைத் தவிர வேறில்லை.78
186. உங்களின் செல்வங்களிலும் உயிர்களிலும் நீங்கள் சோதிக்கப் படுவீர்கள். உங்களுக்கு முன்பு வேதம் வழங்கப்பட்டோரிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் அதிகளவு புண்படுத்தும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறையச்சத்துடன் நடந்தால் அதுவே உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும்.79
187. “நீங்கள் வேதத்தை மக்களுக்கு விளக்க வேண்டும்; அதை மறைக்கக் கூடாது” என்று வேதம் வழங்கப்பட்டோரிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்தபோது அதனை தமது முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தனர். அதற்காக அற்ப விலையைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் பெற்றுக் கொண்டது கெட்டதாகும்.
188. தாம் செய்தவற்றைக் குறித்து மகிழ்ந்து, தாம் செய்யாதவற்றுக்குப் புகழப்பட வேண்டும் என விரும்புவோர் தண்டனையிலிருந்து தப்பிக்குமிடத்தில் இருக்கிறார்கள் என எண்ணாதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.80
189. வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
190. வானங்கள், பூமியைப் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன.
191. அவர்கள் நின்றவாறும், அமர்ந்தவாறும், படுத்தவாறும் அல்லாஹ்வை நினைக்கின்றனர். வானங்கள், பூமியின் படைப்பைப் பற்றிச் சிந்திக்கின்றனர். “எங்கள் இறைவனே! இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை. நீ தூயவன். எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (என்று கூறுகின்றனர்.)81
192. எங்கள் இறைவனே! நீ யாரை நரகத்தில் நுழையச் செய்கிறாயோ அவரை இழிவுபடுத்தி விட்டாய். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை.
193. எங்கள் இறைவனே! இறைநம்பிக்கை கொள்வதற்காக ‘உங்கள் இறைவனை நம்புங்கள்!’ என்று அழைத்தவரின் அழைப்பை நாங்கள் செவியுற்றோம். எனவே இறைநம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னிப்பாயாக! எங்களை விட்டும் எங்கள் தீமைகளை அழிப்பாயாக! எங்களை நல்லோருடன் கைப்பற்றுவாயாக!
194. எங்கள் இறைவனே! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்குத் தருவாயாக! மறுமை நாளில் எங்களை இழிவுபடுத்தி விடாதே! நீ வாக்குறுதிக்கு மாறுசெய்ய மாட்டாய்!
195. “ஆணோ, பெண்ணோ உங்களில் நல்லறம் செய்தோரின் செயலை வீணாக்க மாட்டேன். உங்களில் ஒருவர் மற்றொருவரிலிருந்து உள்ளவர்களே! ஹிஜ்ரத் செய்தவர்கள், தமது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், எனது பாதையில் துன்புறுத்தப்பட்டவர்கள், போரிட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள் ஆகியோரின் தீமைகளை, அவர்களை விட்டும் அழிப்பேன். கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களில் அவர்களை நுழையச் செய்வேன்” என்று அவர்களின் இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். இது அல்லாஹ்வின் கூலியாகும். அல்லாஹ்விடமே அழகிய கூலி உள்ளது.
196. இறைமறுப்பாளர்கள் நகரங்களில் (உல்லாசமாகச்) சுற்றித் திரிவது உம்மை ஏமாற்றிவிட வேண்டாம்.
197. இது அற்ப இன்பமே! பின்னர் அவர்களின் தங்குமிடம் நரகமாகும். தங்குமிடத்தில் அது கெட்டது.
198. மாறாக, தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் விருந்து. அல்லாஹ்விடம் இருப்பது நல்லோருக்கு மிகச் சிறந்தது.
199. அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்டதையும், தமக்கு அருளப்பட்டதையும் நம்புவோர் வேதமுடையோரில் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்கள். அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்றுவிட மாட்டார்கள். அவர்களுக்கே அவர்களின் இறைவனிடம் நற்கூலி உள்ளது. அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.82
200. இறைநம்பிக்கை கொண்டோரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள்! பொறுமை கொள்வதில் (எதிரிகளை) மிகைத்து விடுங்கள்! உறுதியுடன் இருங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள்.