அல்கலம் – எழுதுகோல்

அத்தியாயம் : 68

வசனங்களின் எண்ணிக்கை: 52

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. நூன். எழுதுகோல்மீதும், அவர்கள் எழுதுபவற்றின்மீதும் சத்தியமாக!579
2. (நபியே!) உமது இறைவனின் அருளால் நீர் பைத்தியக்காரர் அல்ல!
3. முடிவுறாத கூலி உமக்கு இருக்கின்றது.
4. நீர் மகத்தான நற்குணம் கொண்டவராக இருக்கிறீர்!580
5, 6. உங்களில் யார் பைத்தியக்காரர் என்பதை நீர் காண்பீர்! அவர்களும் கண்டுகொள்வார்கள்.
7. தனது பாதையிலிருந்து வழிதவறியவர் யார் என்பதை உமது இறைவனே நன்கறிந்தவன். நேர்வழியில் இருப்பவர்களையும் அவனே நன்கறிந்தவன்.
8. எனவே, பொய்யெனக் கூறுவோருக்குக் கட்டுப்படாதீர்!
9. நீர் (கொள்கையில்) விட்டுக் கொடுத்தால் அவர்களும் விட்டுக் கொடுப்பதை விரும்புகின்றனர்.
10, 11, 12, 13. அற்பமானவனான, அதிகமாகச் சத்தியம் செய்யும் யாருக்கும் நீர் கட்டுப்படாதீர்! அவன் கோள் மூட்டிக் கொண்டு, குறை கூறித் திரிபவன்; நல்லவற்றைத் தடுப்பவன்; வரம்பு மீறுபவன்; பாவம் செய்பவன்; கடுமையாக நடப்பவன்; இதற்கும் மேலாகப் பழிப்புக்குரியவன்.581
14. அவன் செல்வமும், ஆண்மக்களும் உடையவனாக இருக்கிறான் என்பதற்காக (அவனுக்குக் கட்டுப்படாதீர்!)
15. அவனுக்கு நமது வசனங்கள் எடுத்துரைக்கப்படும்போது, “முன்னோரின் கட்டுக்கதைகள்” என அவன் கூறுகிறான்.
16. அவனுக்கு நாம் மூக்கின்மீது அடையாளமிடுவோம்.
17, 18. தோட்டத்துக்குரியோரைச் சோதித்தது போல் இவர்களையும் சோதித்தோம். அவர்கள், “இன்ஷா அல்லாஹ்” (அல்லாஹ் நாடினால்) என்று கூறாமல், “காலையில் அவற்றை அறுவடை செய்வோம்” என்று சத்தியம் செய்தபோது (அவர்களைச் சோதித்தோம்.)
19. அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில், உமது இறைவனிடமிருந்து சுற்றிவளைக்கக் கூடிய (பேராபத்)து அத்தோட்டத்தைச் சுற்றிவளைத்தது.
20. அது அறுவடை செய்யப்பட்டதைப் போல் (ஒன்றுமில்லாமல்) ஆகி விட்டது.
21, 22. அவர்கள் காலைப் பொழுதை நெருங்கும்போது, “நீங்கள் அறுவடை செய்வோராக இருந்தால் உங்கள் தோட்டத்திற்குக் காலையில் வாருங்கள்” என்று ஒருவரையொருவர் அழைத்தனர்.
23, 24, 25. “இன்று உங்களிடம் எந்த ஏழையும் தோட்டத்திற்குள் நுழைந்துவிட வேண்டாம்” என அவர்கள் ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர். அவர்கள் (தமது) நோக்கத்தின்மீது ஆற்றலுடையோராகவே காலையில் சென்றனர்.
26, 27. அவர்கள் அதைப் பார்த்தபோது, “நாம் வழிதவறி வந்து விட்டோம். இல்லை! இழப்புக்குள்ளாகி விட்டோம்” என்று கூறினர்.
28. “நான் உங்களிடம் கூறவில்லையா? நீங்கள் (அல்லாஹ்வைப்) போற்றியிருக்க வேண்டாமா?” என அவர்களுள் நேர்மையான ஒருவர் கூறினார்.
29. “எங்கள் இறைவன் தூயவன். நாங்கள் அநியாயக்காரர்கள் ஆகி விட்டோம்” என்று அவர்கள் கூறினர்.
30, 31. அவர்கள் பழித்தவர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி, “எங்கள் கேடே! நாம் வரம்பு மீறியவர்களாகி விட்டோம்” என்றனர்.
32. “எங்கள் இறைவன் எங்களுக்கு இதைவிடச் சிறந்ததை மாற்றாகத் தரக்கூடும். எங்கள் இறைவனிடமே நாங்கள் விருப்பம் கொண்டவர்கள்” (என்றும் கூறினர்.)
33. இவ்வாறுதான் வேதனை இருக்கும். அவர்கள் அறிவோராக இருந்திருந்தால் மறுமை வேதனை மிகப் பெரியது.
34. இறையச்சமுடையோருக்குத் தமது இறைவனிடம் இன்பங்கள் நிறைந்த சொர்க்கங்கள் உண்டு.
35. (நமக்குக்) கட்டுப்படுவோரைக் குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்குவோமா?
36. உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?
37, 38. உங்களிடம் ஏதேனும் வேதம் இருக்கின்றதா? நீங்கள் விரும்புவது அதில் உங்களுக்கு உண்டு என வேதத்தில் இருந்து, அதை நீங்கள் படிக்கிறீர்களா?
39. அல்லது நீங்கள் எதைத் தீர்மானிக்கிறீர்களோ அது உங்களுக்கு உண்டு என மறுமை நாள்வரை செல்லுபடியாகும் நமது உடன்படிக்கைகள் உங்களிடம் உள்ளனவா?
40. “இ(வ்வாறு உடன்படிக்கை செய்த)தற்கு அவர்களில் பொறுப்பேற்பவர் யார்?” என அவர்களிடம் நீர் கேட்பீராக!
41. அல்லது அவர்களுக்கு(ப் பொறுப்பேற்கும்) இணைக்கடவுள்கள் உள்ளனரா? அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் தமது கடவுள்களைக் கொண்டு வரட்டும்.
42. கெண்டைக் காலிலிருந்து திரை அகற்றப்பட்டு, அவர்கள் ஸஜ்தா செய்வதற்கு அழைக்கப்படும் நாளில் (அதற்கு) அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்.582
43. அப்போது அவர்களின் பார்வைகள் கீழ்நோக்கி இருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும். அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது ஸஜ்தா செய்வதற்கு அழைக்கப்படுவோராக இருந்(தும் அதை மறுத்)தனர்.
44. என்னையும், இச்செய்தியைப் பொய்யெனக் கூறுவோரையும் விட்டுவிடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் அவர்களைச் சிறிது சிறிதாகப் பிடிப்போம்.
45. நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறேன். எனது சூழ்ச்சி உறுதியானது.
46, 47. அல்லது அவர்களிடம் நீர் ஏதேனும் கூலி கேட்டு, அதனால் அவர்கள் கடனாளியாக்கப்பட்டு விட்டார்களா? அல்லது அவர்களிடம் மறைவானவை (பற்றிய ஞானம்) இருந்து, (அதை) எழுதுகிறார்களா?
48. (நபியே!) உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுமையுடன் இருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் ஆகிவிடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (நம்மிடம்) இறைஞ்சியதை நினைத்துப் பார்ப்பீராக!583
49. அவரது இறைவனின் அருட்கொடை அவரை அடைந்திருக்கா விட்டால் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.
50. அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை நல்லோரில் ஒருவராக ஆக்கினான்.
51. இறைமறுப்பாளர்கள் இந்த அறிவுரையைச் செவியுறும்போது தமது பார்வைகளால் உம்மை வீழ்த்த முனைகின்றனர். “இவர் பைத்தியக்காரர்தான்” என்றும் கூறுகின்றனர்.584
52. இது அகிலத்தாருக்கு அறிவுரையே அன்றி வேறில்லை.