அல்அஹ்ஸாப் – எதிரணிகள்

அத்தியாயம் : 33

வசனங்களின் எண்ணிக்கை: 73

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. நபியே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வீராக! நீர் இறைமறுப்பாளர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் கட்டுப்படாதீர்! அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
2. (நபியே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே பின்பற்றுவீராக! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
3. அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக! பொறுப்பேற்க அல்லாஹ் போதுமானவன்.
4. எந்த மனிதராயினும் அவருக்குள் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் அமைக்கவில்லை. உங்கள் மனைவியரில் யாரை நீங்கள் தாயுடன் ஒப்பிட்டுக் கூறினீர்களோ அவர்களை உங்கள் அன்னையராக அவன் ஆக்கவில்லை. உங்கள் வளர்ப்புப் பிள்ளைகளை உங்கள் புதல்வர்களாகவும் அவன் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்மொழிகளால் நீங்கள் கூறிக் கொள்வதுதான். அல்லாஹ் உண்மையைக் கூறுகிறான். அவனே நேரான வழியில் செலுத்துகிறான்.
5. அவர்களின் (உண்மையான) தந்தையருடன் சேர்த்தே அவர்களை அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் மிக நேர்மையானதாகும், அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் (அவர்கள்) உங்கள் மார்க்கச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களும் ஆவர். நீங்கள் (அறியாமல்) தவறிழைத்தவற்றில் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. மாறாக, உங்கள் உள்ளங்கள் திட்டமிட்டுக் கூறுவதே (குற்றமாகும்), அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.399
6. இறைநம்பிக்கையாளர்களுக்குத் தங்களின் உயிர்களைவிட இந்த நபியே மிக்க மேலானவர். அவருடைய மனைவியர் அவர்களுக்கு அன்னையர் ஆவர். இறைநம்பிக்கையாளர்களையும், ஹிஜ்ரத் செய்தோரையும்விட இரத்த உறவுகளே அல்லாஹ்வின் வேதப்படி ஒருவருக்கொருவர் மிக நெருக்கமானவர்கள். எனினும் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்வது உங்களுக்கு (அனுமதிக்கப்பட்டு) உள்ளது. இது வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.400
7. (நபியே!) நபிமார்களிடமும், உம்மிடமும், நூஹ், இப்றாஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸா ஆகியோரிடமும் நாம் அவர்களுக்கான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டதை நினைத்துப் பார்ப்பீராக! அவர்களிடம் உறுதியான உடன்படிக்கை ஏற்படுத்தினோம்.
8. அந்த உண்மையாளர்களிடம் அவர்களின் உண்மையைப் பற்றி அவன் விசாரிக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம். இறைமறுப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்படுத்தியுள்ளான்.
9. இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்! (எதிரிப்) படைகள் உங்களிடம் வந்தபோது அவர்களுக்கு எதிராக ஒரு காற்றையும், உங்களால் பார்க்க முடியாத படைகளையும் அனுப்பினோம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்.401
10. அந்நேரத்தில் உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் வந்தனர். அப்போது (உங்கள்) கண்கள் சாய்ந்து, இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைந்து விட்டன. அல்லாஹ்வைப் பற்றி பல்வேறு எண்ணங்களை நீங்கள் எண்ணினீர்கள்.402
11. அங்கு இறைநம்பிக்கையாளர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டு, மிகக் கடுமையாக உலுக்கப்பட்டனர்.
12. “அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏமாற்றத்தைத் தவிர வேறெதையும் நமக்கு வாக்களிக்கவில்லை” என்று நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோயுள்ளவர்களும் கூறியதை நினைத்துப் பார்ப்பீராக!
13. அவர்களில் ஒருசாரார், “யஸ்ரிப் வாசிகளே! நீங்கள் நிலைத்து நிற்க முடியாது. எனவே திரும்பிச் செல்லுங்கள்!” என்று கூறியதையும் நினைத்துப் பார்ப்பீராக! அவர்களில் மற்றொரு பிரிவினர், “எங்கள் வீடுகள் பாதுகாப்பற்று உள்ளன” என்று கூறி நபியிடம் (போரிடாதிருக்க) அனுமதி கோரினர். ஆனால் அவையோ பாதுகாப்பாகவே இருந்தன. (எனினும்) அவர்கள் வெருண்டோடுவதையே விரும்பினர்.403
14. அந்நகரின் பல பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராக(ப் படைகள்) ஊடுருவுமாறு செய்யப்பட்டு, பின்னர் குழப்பத்தை ஏற்படுத்துமாறு அவர்களிடம் கேட்கப்பட்டால் அவர்கள் அதைச் செய்தே இருப்பார்கள். சிறிதளவே தவிர அதற்குத் தயங்க மாட்டார்கள்.
15. அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவதில்லை என்று இதற்கு முன்னர் அல்லாஹ்விடத்தில் வாக்குறுதி அளித்திருந்தனர். அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதி விசாரிக்கப்படக் கூடியதாகும்.
16. (நபியே!) “மரணத்திலிருந்தோ அல்லது கொல்லப்படுவதிலிருந்தோ நீங்கள் வெருண்டோடினாலும், (அவ்வாறு) ஓடுவது உங்களுக்குப் பயனளிக்காது. அப்போதும் சிறிது காலமே நீங்கள் சுகபோகம் வழங்கப்படுவீர்கள்” என்று கூறுவீராக!
17. “அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால் அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவன் யார்? அல்லது அவன் உங்களுக்கு அருள் புரிய நாடிவிட்டால் (அதனைத் தடை செய்பவர் யார்?)” என்று கேட்பீராக! அவர்கள் அல்லாஹ்வை யன்றி தங்களுக்குப் பாதுகாவலனையும், உதவியாளனையும் காணமாட்டார்கள்.
18. உங்களில் (போருக்குச் செல்வோரைத்) தடுப்பவர்களையும், “எங்களிடம் வந்துவிடுங்கள்” என்று தமது சகோதரர்களிடம் கூறுவோரையும் அல்லாஹ் அறிவான். குறைவாகவே தவிர அவர்கள் போரிட வருவதில்லை.
19. (அவர்கள்) உங்கள் விஷயத்தில் கஞ்சத்தனமாகவே உள்ளனர். (போர் பற்றிய) அச்சம் ஏற்பட்டால் அவர்கள் மரணத்தால் சூழப்பட்டவரைப் போன்று தமது கண்களைச் சுழற்றிக் கொண்டு உம்மைப் பார்ப்பதைக் காண்பீர். அச்சம் நீங்கி விட்டால் (வெற்றிப்) பொருட்கள்மீது பேராசை கொண்டு கூரிய நாவுகளால் உங்களுக்குத் தொல்லை தருகின்றனர். அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. எனவே அவர்களின் செயல்களை அல்லாஹ் அழித்துவிட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதாகும்.
20. (எதிரிப்) படையினர் இன்னும் பின்வாங்கவில்லை என்று இவர்கள் எண்ணுகின்றனர். அந்தப் படையினர் திரும்பி வந்து விட்டால், (நயவஞ்சகர்களான) இவர்கள் கிராமவாசிகளுடன் தங்கியிருந்து உங்களைப் பற்றிய செய்திகளை விசாரித்துக் கொண்டிருக்கவே விரும்புவார்கள். அவர்கள் உங்களுடன் இருந்திருந்தாலும் குறைவாகவே போரில் ஈடுபட்டிருப்பார்கள்.
21. அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை நன்கு நினைவுகூரும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.404
22. இறைநம்பிக்கையாளர்கள் (எதிரிப்) படைகளைக் கண்டபோது “அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்கு வாக்களித்தது இதுதான். அல்லாஹ்வும், அவனது தூதரும் உண்மையையே உரைத்தனர்” என்று கூறினார்கள். இது அவர்களுக்கு இறைநம்பிக்கையையும், வழிபடுவதையும் அதிகரித்தது.
23. அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உண்மைப்படுத்திய மனிதர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் தமது இலட்சியத்தை நிறைவேற்றியோரும் உள்ளனர். அவர்களில் (அதற்காகக்) காத்திருப்பவர்களும் உள்ளனர். அவர்கள் சிறிதும் (தமது நிலையை) மாற்றிக் கொள்ளவில்லை.405
24. உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்காக அல்லாஹ் கூலி வழங்குவான் என்பதும், அவன் நாடினால் நயவஞ்சகர்களைத் தண்டிப்பான் அல்லது அவர்களை மன்னிப்பான் என்பதுமே இதற்குக் காரணம். அல்லாஹ், மிக்க மன்னிப்பவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.
25. இறைமறுப்பார்களை(ப் போரிலிருந்து) அவர்களின் கோபத்துடனே அல்லாஹ் திரும்பச் செய்தான். அவர்கள் எந்தப் பலனையும் பெறவில்லை. இப்போரில் இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவனாக இருந்தான். அல்லாஹ், ஆற்றல் மிக்கவனாகவும், மிகைத்தவனாகவும் இருக்கிறான்.
26. (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கு உதவி செய்த வேதமுடையோரை, அவர்களின் கோட்டைகளிலிருந்து இறக்கி, அவர்களின் உள்ளத்தில் திகிலை ஏற்படுத்தினான். ஒருசாராரை நீங்கள் கொன்றீர்கள்; மற்றொரு சாராரைச் சிறைப்பிடித்தீர்கள்.
27. அவர்களின் நிலத்தையும், வீடுகளையும், செல்வங்களையும், நீங்கள் அடியெடுத்து வைக்காத நிலப்பரப்பையும் உங்களுக்கு உடைமையாக்கினான். ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
28, 29. நபியே! உமது மனைவியரிடம், “நீங்கள் இவ்வுலக வாழ்வையும், அதன் பகட்டையும் விரும்புவோராக இருந்தால், வாருங்கள்! உங்களுக்கு நான் வாழ்க்கை வசதிகளை அளித்து, அழகிய முறையில் உங்களை மணவிலக்குச் செய்துவிடுகிறேன். நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும். மறுமை வீட்டையும் விரும்புவோராக இருந்தால், உங்களில் நன்மை செய்வோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியை தயார்படுத்தியுள்ளான்” என்று கூறுவீராக!406
30. நபியின் மனைவியரே! உங்களில் யார் பகிரங்கமான மானக்கேடான காரியத்தைச் செய்கிறாரோ, அவருக்கு இருமடங்கு வேதனை தரப்படும். இது அல்லாஹ்வுக்கு மிக எளிதாகும்.
31. உங்களில் யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, நற்செயல் செய்கிறாரோ அவருக்கு இருமடங்கு கூலியைக் கொடுப்போம். அவருக்கு கண்ணியமான உணவைத் தயார்படுத்தியுள்ளோம்.
32. நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களும் (வேறு) யாரையும் போன்றவர்கள் அல்ல! நீங்கள் இறையச்சமுடையோராக இருந்தால் பேச்சில் நளினம் காட்டாதீர்கள்! யாருடைய உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் (தவறான) ஆசை கொள்வான். நல்ல பேச்சையே பேசுங்கள்!
33. உங்கள் வீடுகளில் தங்கியிருங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் அலங்காரத்தை வெளிக்காட்டியது போல் வெளிக்காட்டித் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநிறுத்துங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! (நபியின்) வீட்டாரே! உங்களை விட்டும் அசுத்தத்தைப் போக்கி, உங்களை முற்றிலும் தூய்மைப்படுத்துவதற்கே அல்லாஹ் விரும்புகிறான்.407
34. உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினைவு கூருங்கள்! அல்லாஹ் நுட்பமானவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.
35. முஸ்லிம் ஆண்களும் பெண்களும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும், உண்மை பேசும் ஆண்களும் பெண்களும், பொறுமைமிக்க ஆண்களும் பெண்களும், பணிவைப் பேணும் ஆண்களும் பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தமது கற்புநெறியைப் பேணும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வை அதிகளவு நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மாபெரும் கூலியையும் தயார்படுத்தியுள்ளான்.408
36. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால் தமது அக்காரியத்தில் சுயமாக முடிவு செய்வது இறைநம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தகுதியானதல்ல. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கிறானோ அவன் பகிரங்கமாக வழிகெட்டு விட்டான்.
37. (நபியே!) அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்து, நீரும் அவருக்கு நன்மை செய்தீரோ அவரிடம், “உன் மனைவியை (மணவிலக்குச் செய்யாமல்) உன்னிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்” என்று நீர் கூறியதை நினைத்துப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருப்பதை உமது உள்ளத்தில் மறைத்துக் கொண்டீர். நீர் மனிதர்களுக்கு அஞ்சுகிறீர்! நீர் அஞ்சுவதற்குத் தகுதி மிக்கவன் அல்லாஹ்தான். ஸைத் என்பவர், (மணவிலக்குச் செய்யும்) நோக்கத்தை அவளிடம் நிறைவேற்றிக் கொண்டபோது, அப்பெண்ணை உமக்குத் திருமணம் செய்து வைத்தோம். ஏனெனில், வளர்ப்பு மகன்கள் அவர்களின்­ மனைவியரிடம் (மணவிலக்குச் செய்யும்) நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டு விட்டால், அப்பெண்கள் விஷயத்தில் (மணமுடித்துக் கொள்ள) இறைநம்பிக்கையாளர்களுக்கு எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என்பதற்காகவே (இதைச் செய்தோம்.) அல்லாஹ்வின் கட்டளை நடைபெற்றே தீரும்.409
38. இந்த நபிக்கு அல்லாஹ் விதியாக்கியதில் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. முன் சென்றுவிட்ட (இறைத்தூது)வர்கள் விஷயத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய வழிமுறை இதுதான். அல்லாஹ்வின் ஆணைகள் நிர்ணயிக்கப்பட்ட விதியாக உள்ளது.
39. (தூதர்களான) அவர்கள் அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை எடுத்துரைப்பார்கள். அவனுக்கே அஞ்சுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டார்கள். கணக்கெடுக்க அல்லாஹ் போதுமானவன்.
40. உங்களிலுள்ள ஆண்கள் எவருக்கும் முஹம்மது தந்தையாக இருக்கவில்லை. எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு முத்திரையாகவும் இருக்கிறார். ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.410
41, 42. இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகளவு நினைவு கூருங்கள்! காலையிலும் மாலையிலும் அவனைப் போற்றுங்கள்!
43. உங்களை இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் அவன் கொண்டு செல்வதற்காக உங்கள்மீது அருள்புரிகிறான். அவனது வானவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திக்கின்றனர். அவன் இறைநம்பிக்கையாளர்கள்மீது நிகரிலா அன்பாளனாக இருக்கிறான்.
44. அவர்கள் அவனைச் சந்திக்கும் நாளில் அவர்களின் வாழ்த்து ‘ஸலாம்’ என்பதாகும். அவர்களுக்காக அவன் கண்ணியமிக்க கூலியைத் தயார்படுத்தியுள்ளான்.
45, 46. நபியே! உம்மைச் சாட்சியாளராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், அல்லாஹ்வின் ஆணைப்படி அவன்பக்கம் அழைப்பவராகவும், ஒளி விளக்காகவும் அனுப்பியுள்ளோம்.411
47. இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து பேரருள் இருக்கிறது என அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
48. (நபியே!) இறைமறுப்பாளர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் கட்டுப்படாதீர்! அவர்களின் துன்புறுத்தல்களை அலட்சியம் செய்வீராக! அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைப்பீராக! பொறுப்பேற்க அல்லாஹ் போதுமானவன்.
49. இறைநம்பிக்கை கொண்டோரே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் மணமுடித்து, பின்னர் அவர்களைத் தீண்டுவதற்கு முன் மணவிலக்குச் செய்து விட்டால் உங்களுக்காக நீங்கள் கணக்கிடும் ‘இத்தா’ (காத்திருத்தல்) எதுவும் அப்பெண்கள்மீது கடமையில்லை. எனவே, நீங்கள் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி, அழகிய முறையில் அவர்களை விட்டுவிடுங்கள்!
50. நபியே! நீர் திருமணக் கொடைகளை வழங்கிவிட்ட உமது மனைவியரையும், அல்லாஹ் உமக்கு போர்ச்செல்வமாக வழங்கிய உமது அடிமைப் பெண்களையும், உம்முடன் ஹிஜ்ரத் செய்தவர்களில் உம் தந்தையின் சகோதரரின் புதல்வியரையும், தந்தையின் சகோதரிகளின் புதல்வியரையும், உமது தாயின் சகோதரரின் புதல்வியரையும், தாயின் சகோதரிகளுடைய புதல்வியரையும் (மணமுடித்துக் கொள்ள) உமக்கு அனுமதித்துள்ளோம். இறைநம்பிக்கை கொண்ட ஒரு பெண், தன்னை நபிக்காக அர்ப்பணித்து, நபியும் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் (அவளையும் உமக்கு அனுமதித்துள்ளோம்.) உம்மீது எந்தக் குற்றமும் ஏற்படக் கூடாது என்பதற்காக, இது மற்ற இறைநம்பிக்கையாளர்களுக்கு இல்லாமல் உமக்கு மட்டும் உரிய தனிச் சட்டமாகும். மற்றவர்களின் மனைவியர், அவர்களின் அடிமைப் பெண்கள் விஷயத்தில் அவர்களுக்கு நாம் விதியாக்கியிருப்பதை நன்கறிவோம். அல்லாஹ் மன்னிப்புமிக்கவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.412
51. (நபியே!) அப்பெண்களில் நீர் விரும்பியவரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். நீர் விலக்கி வைத்தவர்களில் யாரையேனும் நீர் விரும்பினால் உம்மீது குற்றமில்லை. இது, அவர்களின் கண்கள் குளிர்ச்சியடைவதற்கும், அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்கும், அவர்களுக்கு நீர் கொடுத்தவற்றில் அவர்கள் ஒவ்வொருவரும் மனநிறைவடைவதற்கும் ஏற்புடையது. உங்கள் அடிமனதில் இருப்பவற்றை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், சகிப்புத் தன்மை மிக்கவனாகவும் இருக்கிறான்.
52. (நபியே!) இதற்குப் பின்னர், அடிமைப் பெண்களைத் தவிர உமக்கு வேறு பெண்கள் (மணமுடிக்க) அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் (மனைவியரான) இவர்களுக்கு ஈடாக வேறு பெண்களை மாற்றிக் கொள்ளவும் உமக்கு அனுமதி இல்லை. ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
53. இறைநம்பிக்கை கொண்டோரே! உணவு உண்பதற்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலே தவிர நீங்கள் நபியின் வீடுகளுக்குள் நுழையாதீர்கள். அது தயாராகி விட்டதைக் கவனிக்காதவர்களாக (அங்குச் செல்லாதீர்கள்!) எனினும் நீங்கள் அழைக்கப்படும்போது உள்ளே நுழையுங்கள்! நீங்கள் உண்டுமுடித்ததும் கலைந்து சென்று விடுங்கள்! பேச்சில் ஆழ்ந்து விடாதீர்கள்! இது நபியை மனச் சங்கடப்படுத்துவதாகும். அவர் உங்களிடம் (சொல்வதற்கு) வெட்கப்படுகிறார். அல்லாஹ் உண்மையைச் சொல்ல வெட்கப்பட மாட்டான்.413 (நபியின் மனைவியரான) அவர்களிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளைக் கேட்டால் திரைக்கு அப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்களுடைய உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் மிகத் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை சிரமப்படுத்துவது உங்களுக்கு ஆகுமானதல்ல! அவருக்குப் பின் அவரது மனைவியரை நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் ஒருபோதும் ஆகுமானதல்ல! இது அல்லாஹ்விடம் மிகக் கடுமையானதாகும்.414
54. நீங்கள் ஏதேனும் ஒன்றை வெளிப்படுத்தினாலும் அல்லது மறைத்தாலும் ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
55. தமது தந்தையர், தமது ஆண்மக்கள், பிறந்த சகோதரர்கள், தமது சகோதரர்களின் மகன்கள், தமது சகோதரிகளின் மகன்கள், தம்(மைப் போன்ற) பெண்கள், தமது அடிமைகள் ஆகியோரின் (முன்னால் திரையின்றி வரும்) விஷயத்தில் நபியின் மனைவியர்மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
56. இந்த நபியின்மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அவனது வானவர்களும் (அவருக்காகப்) பிரார்த்திக்கின்றனர். இறைநம்பிக்கையாளர்களே! அவர்மீது ஸலவாத் சொல்லுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!415
57. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் துன்புறுத்துவோரை இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனையைத் தயார்படுத்தியுள்ளான்.416
58. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாத (தவறு) ஒன்றுக்காகத் துன்புறுத்துபவர்கள் அவதூறையும், அப்பட்டமான பாவத்தையுமே சுமந்து கொண்டனர்.
59. நபியே! தமது தலைமுக்காடுகளைத் தொங்கவிட்டுக் கொள்ளுமாறு உமது மனைவியருக்கும், உமது பெண் மக்களுக்கும், இறைநம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும் கூறுவீராக! அதுவே அவர்கள் அறியப்படுவதற்கும், தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்புடையது. அல்லாஹ் மன்னிப்புமிக்கவனாகவும் நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.417
60, 61. நயவஞ்சகர்களும், தமது உள்ளங்களில் நோயுள்ளவர்களும், மதீனாவில் வதந்திகளைப் பரப்புவோரும் (தமது செயல்களிலிருந்து) விலகாவிட்டால், அவர்களுக்கு எதிராக (நபியே!) உம்மை ஏவி விடுவோம். பிறகு அங்கு அவர்கள் சபிக்கப்பட்டோராகக் குறைந்தளவிலேயே உமக்கு அருகில் வசிப்பார்கள். அவர்கள் எங்குக் காணப்பட்டாலும் பிடிக்கப்பட்டுக் கொன்றொழிக்கப்படுவார்கள்.
62. இதற்கு முன்சென்றோர் விஷயத்தில் (இதுதான்) அல்லாஹ் ஏற்படுத்திய வழிமுறையாகும். அல்லாஹ்வின் வழிமுறையில் எவ்வித மாற்றத்தையும் நீர் காண மாட்டீர்.
63. (நபியே!) மக்கள் உம்மிடம் உலகம் அழியும் நேரத்தைப் பற்றிக் கேட்கின்றனர். “அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது” என்று கூறுவீராக! உலகம் அழியும் நேரம் அருகில் இருக்கலாம் என்பதை உமக்கு எது அறிவிக்கும்?
64, 65. இறைமறுப்பாளர்களை அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் நரகத்தைத் தயார்படுத்தி உள்ளான். அவர்கள் அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். பாதுகாவலனையோ, உதவியாளனையோ காண மாட்டார்கள்.
66. அவர்களின் முகங்கள் நரகத்தில் புரட்டப்படும் அந்நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கும் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே! என்று கூறுவார்கள்.
67, 68. “எங்கள் இறைவனே! எங்களின் தலைவர்களுக்கும், எங்களின் பெரியோர்களுக்கும் கட்டுப்பட்டோம். எங்களை அவர்கள் வழிகெடுத்து விட்டார்கள். எங்கள் இறைவனே! அவர்களுக்கு இருமடங்கு வேதனையைக் கொடுப்பாயாக! மேலும் அவர்களை மிகக் கடுமையாகச் சபிப்பாயாக!” என்று கூறுவார்கள்.
69. இறைநம்பிக்கை கொண்டோரே! மூஸாவுக்குத் தொல்லை கொடுத்தவர்களைப் போல் நீங்கள் ஆகிவிட வேண்டாம். அவர்கள் கூறியவற்றிலிருந்து அல்லாஹ் அவரைத் தூய்மைப்படுத்தினான். அவர் அல்லாஹ்விடம் மதிப்புமிக்கவராக இருந்தார்.418
70. இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நேர்மையான பேச்சையே பேசுங்கள்!
71. அவன் உங்கள் செயல்களை, உங்களுக்குச் சீர்படுத்துவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறாரோ அவர் மகத்தான பெரும் வெற்றியடைந்து விட்டார்.
72. நாம் வானங்களுக்கும், பூமிக்கும், மலைகளுக்கும் இந்த அமானிதத்தை எடுத்துக் காட்டினோம். அதனை அவை சுமக்க மறுத்து, அதற்கு அஞ்சி நடுங்கின. ஆனால் மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநியாயக்காரனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான்.
73. நயவஞ்சகர்களான ஆண்களையும் பெண்களையும், இணைவைக்கும் ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் தண்டிப்பதற்காகவும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் மன்னிப்பதற்காகவுமே (இவ்வாறு எடுத்துக் காட்டினான்.) அல்லாஹ் மன்னிப்புமிக்கவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான்.