அத்தியாயம் : 56
வசனங்களின் எண்ணிக்கை: 96
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1, 2. (உலகம் அழியும்) நிகழ்வு ஏற்படும்போது, அது நிகழ்வதைப் பொய்யெனக் கூறும் எவரும் இருக்க மாட்டார்.
3. அது (தீயோரைத்) தாழ்த்தி, (நல்லோரை) உயர்த்தக் கூடியது.
4, 5, 6, 7. பூமி பேரதிர்ச்சியாக உலுக்கப்பட்டு, மலைகள் தூள் தூளாக்கப்பட்டு, அவை தூர்த்தப்பட்ட புழுதிக்காடாகி, நீங்கள் மூன்று வகையினராக ஆகிவிடும்போது, (அதைப் பொய்யாக்குபவர் எவரும் இருக்க மாட்டார்.)
8. (முதலாவது பிரிவினர்) வலதுபுறத்தார். வலதுபுறத்தார் என்போர் யார்?
9. (இரண்டாவது பிரிவினர்) இடதுபுறத்தார். இடதுபுறத்தார் என்போர் யார்?
10. (மூன்றாவது பிரிவினர்) முந்திக் கொண்டவர்கள், (மறுமையிலும்) முந்திக் கொண்டவர்களே!
11. அவர்கள் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள்.
12. இன்பங்கள் நிறைந்த சொர்க்கங்களில் இருப்பார்கள்.
13, 14, 15. முன்னுள்ளோரில் ஒரு பெருங் கூட்டத்தினரும், பின்னுள்ளோரில் குறைவானவர்களும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கட்டில்கள்மீது அமர்ந்திருப்பார்கள்.
16. ஒருவரையொருவர் முன்னோக்கி, அவற்றின்மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
17, 18. (மதுரச) ஊற்றின் கோப்பைகள், குவளைகள், கிண்ணங்களுடன் என்றும் இளமை மாறாச் சிறுவர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள்.
19. அ(தை அருந்துவ)தனால் அவர்கள் தலைவலிக்குள்ளாகவோ, மதி மயங்கவோ மாட்டார்கள்.
20, 21. அவர்கள் தேர்ந்தெடுக்கும் பழங்களையும், அவர்கள் விரும்பும் பறவை இறைச்சியையும் (அச்சிறுவர்கள் கொண்டு வருவார்கள்.)525
22, 23, 24. அவர்கள் (நன்மை) செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாக, மறைக்கப்பட்ட முத்துகளைப் போன்ற ஹூருல் ஈன்களும் அங்குண்டு.526
25, 26. அங்கு அவர்கள் வீணானதையோ, பாவமானதையோ செவியுற மாட்டார்கள். மாறாக ஸலாம், ஸலாம் என்ற சொல்லையே (செவியுறுவார்கள்.)
27. வலதுபுறத்தார். வலதுபுறத்தார் என்றால் என்ன? 527
28, 29, 30, 31, 32, 33, 34. முள்ளில்லாத இலந்தை மரத்தின் அருகிலும்,528 அடுக்கடுக்கான குலைகள் தொங்கும் வாழைமரத்தின் அருகிலும், நீட்டப்பட்ட நிழலிலும்,529 ஓடிக்கொண்டிருக்கும் நீரின் அருகிலும், தங்கு தடையின்றித் தாராளமாகக் கிடைக்கும் ஏராளமான பழங்களுக்கு அருகிலும், உயரமான விரிப்புகளிலும் அவர்கள் இருப்பார்கள்.
35. (ஹூருல் ஈன் எனும்) அக்கன்னியரை நாமே சிறப்புப் படைப்பாகப் படைத்துள்ளோம்.
36, 37. அவர்களைக் கன்னியராகவும், (கணவரை) நேசிப்போராகவும், சம வயதுடையோராகவும் ஆக்கியுள்ளோம்.530
38. (இது) வலதுபுறத்தாருக்குரியதாகும்.
39, 40. முன்னுள்ளோரில் ஒரு பெருங்கூட்டத்தினரும், பின்னுள்ளோரில் பெருங்கூட்டத்தினரும் (வலதுபுறத்தார் ஆவர்.)
41. (மற்றொரு பிரிவினர்) இடதுபுறத்தார். இடதுபுறத்தார் என்றால் என்ன?
42, 43, 44. அனல் காற்றிலும், கொதிநீரிலும், கரும்புகையின் நிழலிலும் அவர்கள் இருப்பார்கள். அது குளிர்ச்சியாகவோ, சுகமாகவோ இருக்காது.
45. இதற்கு முன்னர் அவர்கள் சுகவாசிகளாக இருந்து கொண்டிருந்தனர்.
46. அவர்கள் பெரும்பாவத்தின்மீது நிலைத்திருந்தனர்.
47, 48. “நாம் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டாலும் நாமும், முன்சென்ற நமது முன்னோரும் (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவோமோ?” என்று கூறுவோராக இருந்தனர்.
49, 50. “முன்னுள்ளோரும், பின்னுள்ளோரும் குறிப்பிட்ட நாளில் நிர்ணயிக்கப் பட்ட நேரத்தில் ஒன்றுசேர்க்கப்படுவார்கள்” என்று கூறுவீராக!
51. பொய்யெனக் கூறும் வழிகேடர்களே! நீங்கள் தான்,
52. ஸக்கூம் எனும் மரத்திலிருந்து உண்ணக்கூடியவர்கள்!
53. அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.
54. அதற்கும் மேலாகக் கொதிநீரிலிருந்தும் குடிப்பீர்கள்.
55. தாகமுள்ள ஒட்டகம் குடிப்பது போல் குடிப்பீர்கள்.
56. இதுவே தீர்ப்பு நாளில் அவர்களுக்குரிய விருந்தாகும்.
57. நாமே உங்களைப் படைத்தோம். நீங்கள் உண்மையென நம்ப வேண்டாமா?
58. (கருவறைக்குள்) நீங்கள் செலுத்தும் விந்துத் துளியைப் பற்றிச் சிந்தித்தீர்களா?
59. அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கிறோமா?
60, 61. நாமே உங்களுக்கிடையே மரணத்தை விதியாக்கியுள்ளோம். உங்கள் தோற்றங்களை உருமாற்றி, நீங்கள் அறியாத விதத்தில் உங்களை ஆக்கி விடுவதற்கும் நாம் இயலாதோர் அல்ல!
62. (உங்களை அவன்) முதல்முறை படைத்ததை அறிந்துள்ளீர்கள். சிந்திக்க மாட்டீர்களா?
63. நீங்கள் எதை விதைக்கிறீர்கள் என்பதைச் சிந்தித்தீர்களா?
64. அதை நீங்கள் விளைவிக்கிறீர்களா? அல்லது நாம் விளைவிக்கிறோமா?
65. நாம் நாடினால் அதைச் சருகுகளாக மாற்றி விடுவோம். அப்போது நீங்கள் கைச்சேதப்படுவோராக ஆகி விடுவீர்கள்.
66, 67. “நாம் கடனாளியாகி விட்டோம். மேலும், நாம் (பலனை விட்டும்) தடுக்கப்பட்டு விட்டோம்” (என்று கூறுவீர்கள்.)
68. நீங்கள் குடிக்கும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா?
69. அதை மேகத்திலிருந்து நீங்கள் பொழிவிக்கிறீர்களா? அல்லது நாம் பொழிவிக்கிறோமா?
70. நாம் நாடினால் அதை உப்பு நீராக்கியிருப்போம். எனவே நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
71. நீங்கள் பற்ற வைக்கும் நெருப்பைப் பற்றிச் சிந்தித்தீர்களா?
72. அதற்கான மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டாக்கினோமா?
73. நாமே அதை (நரக நெருப்பை) நினைவூட்டுவதாகவும், தேவையுடையோருக்குப் பயனளிப்பதாகவும் ஆக்கினோம்.531
74. எனவே மகத்துவமிக்க உமது இறைவனின் பெயரைப் போற்றுவீராக!
75. நட்சத்திரங்கள் விழக்கூடிய இடங்களின்மீது சத்தியம் செய்கிறேன்.532
76. நீங்கள் அறிந்திருந்தால் இது மகத்தான சத்தியமாகும்.
77. இது கண்ணியமிக்க குர்ஆனாகும்.
78. (இது) பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் உள்ளது.
79. (வானவர்களான) தூயவர்களைத் தவிர வேறு யாரும் அதைத் தொட மாட்டார்கள்.
80. (இது) அகிலங்களின் இறைவனால் அருளப்பட்டதாகும்.
81. இந்தச் செய்தியைப் பற்றியா நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்கள்?
82. உங்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளுக்கு, நீங்கள் பொய்யெனக் கூறுவதையே (ஈடாக) ஆக்குகிறீர்களா?
83, 84. (உயிர்) தொண்டைக் குழியை அடையும்போது (உங்களால் முடிந்தால் அதை மீட்டுக் கொண்டு வந்திருக்கலாமே!) நீங்களோ அந்நேரத்தில் (வெறுமனே) பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.
85. நாமோ உங்களைவிட அவனுக்கு மிக நெருக்கமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்க முடியாது.
86, 87, நீங்கள் கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்றிருக்குமானால், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் அந்த உயிரை மீட்டிருக்கலாமே!
88, 89. அவர் (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்களில் இருந்தால் நிம்மதியும், அருளும், இன்பம் நிறைந்த சொர்க்கமும் உண்டு
90, 91. அவர் வலதுபுறத்தாரில் உள்ளவராக இருந்தால் “வலதுபுறத்தாரிலுள்ள உமக்கு அமைதி உண்டாகட்டும்!” (என்று கூறப்படும்.)
92, 93, 94. அவர் வழிகெட்டுப் பொய்யெனக் கூறுவோரில் உள்ளவராக இருந்தால் கொதிநீர் விருந்தும், நரகத்தில் கருகுவதும் உண்டு!
95. இதுவே உறுதியான உண்மையாகும்.
96. எனவே மகத்துவமிக்க உமது இறைவனின் பெயரைப் போற்றுவீராக!533