அல்கியாமா – மறுமை நாள்

அத்தியாயம் : 75

வசனங்களின் எண்ணிக்கை: 40

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. நான் மறுமை நாள்மீது சத்தியம் செய்கிறேன்.
2. பழித்துரைக்கும் உள்ளத்தின்மீது சத்தியம் செய்கிறேன்.
3. அவனுடைய எலும்புகளை நாம் ஒன்றுதிரட்டவே மாட்டோம் என மனிதன் நினைக்கிறானா?
4. அவ்வாறல்ல! அவனது விரல் நுனிகளையும் சீரமைக்க ஆற்றலுடையோராவோம்.
5. மாறாக, தனது எதிர்காலத்திலும் பாவம் செய்யவே மனிதன் விரும்புகிறான்.
6. “மறுமை நாள் எப்போது?” என அவன் கேட்கிறான்.
7, 8, 9, 10. பார்வை நிலைகுத்தி, சந்திரன் ஒளியிழந்து, சூரியனும் சந்திரனும் ஒன்றிணைக்கப்படும்போது, “தப்பிக்குமிடம் எங்கே?” என்று அந்நாளில் மனிதன் கேட்பான்.
11. அவ்வாறல்ல! எந்தப் புகலிடமும் இல்லை.
12. அந்நாளில் உமது தங்குமிடம் இறைவனிடமே உண்டு.
13. மனிதன் முற்படுத்தியதும், பிற்படுத்தியதும் அந்நாளில் அவனுக்கு அறிவிக்கப்படும்.
14. மனிதன் தனக்கு எதிரான சாட்சியாளனாகவே இருக்கிறான்.
15. தன் சாக்குப்போக்குகளை அவன் முன்வைத்தாலும் சரியே!
16. இ(க்குர்ஆனை ஓதுவ)தற்கு அவசரப்பட்டு (நபியே!) உமது நாவை அசைக்காதீர்!
17. அதை (உமது உள்ளத்தில்) ஒன்றுசேர்ப்பதும், அதை ஓதச் செய்வதும் நமது பொறுப்பாகும்.602
18. அதை நாம் ஓதும்போது அதன் ஓதுதலைப் பின்தொடர்வீராக!
19. பின்னர் அதை விளக்குவது நமது பொறுப்பாகும்.
20, 21. அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் இவ்வுலகையே விரும்புகிறீர்கள்; மறுமையை விட்டுவிடுகிறீர்கள்.
22, 23. அந்நாளில் சில முகங்கள் ஒளிவீசும்; தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.603
24. மேலும் அந்நாளில் சில முகங்கள் வாடியிருக்கும்.
25. தங்களுக்குப் பேராபத்து ஏற்படுத்தப்படும் என்பதை அவை உறுதியாக அறிந்திருக்கும்.
26, 27, 28, 29, 30. அறிந்து கொள்ளுங்கள்! உயிர் தொண்டைக் குழியை அடையும்போது, “மந்திரிப்பவன் யார்?” என்று கேட்கப்படும்போது, அது பிரிவுதான் என்பதை அவன் உறுதியாக அறிந்து, ஒரு கெண்டைக்கால் மற்றொரு கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்போது, அன்றைய தினம் உமது இறைவனிடமே மீளுதல் உள்ளது.
31. அவன் உண்மையென நம்பவுமில்லை; தொழவுமில்லை.
32. மாறாக, அவன் பொய்யெனக் கூறிப் புறக்கணித்து விட்டான்.
33. பின்னர் கர்வம் கொண்டவனாகத் தனது குடும்பத்தாரிடம் சென்றான்.
34. உனக்கு (அழிவு) நெருங்கி விட்டது. மிக நெருங்கி விட்டது.604
35. பின்னரும் உனக்கு (அழிவு) நெருங்கி விட்டது. மிக நெருங்கி விட்டது.
36. வெறுமனே விட்டு விடப்பட வேண்டுமென மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றானா?
37. செலுத்தப்படும் விந்துத்துளியாக அவன் இருக்கவில்லையா?
38. பின்னர் அவன் சூல்கொண்ட கருமுட்டையாக இருந்தான். (அல்லாஹ்வே) படைத்துச் செம்மைப்படுத்தினான்.
39. அவனிலிருந்து ஆண், பெண் எனும் இணையை உருவாக்கினான்.
40. அ(ந்த இறை)வன் இறந்தோரை உயிர்ப்பிப்பதற்கு ஆற்றல் மிக்கவனாக இல்லையா?