அத்தியாயம் : 73
வசனங்களின் எண்ணிக்கை: 20
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. போர்வை போர்த்தியிருப்பவரே!
2, 3, 4. இரவில் நின்று தொழுவீராக! (தூங்குவதற்குரிய) குறைவான நேரத்தைத் தவிர! அதில் பாதி அல்லது அதைவிட சற்றுக் குறைத்துக் கொள்வீராக!596 அல்லது அதைவிட அதிகப்படுத்திக் கொள்வீராக! குர்ஆனை அழகிய முறையில் நிதானமாக ஓதுவீராக!597
5. உமக்கு ஒரு கனத்த சொல்லை வழங்குவோம்.
6. இரவில் எழு(ந்து தொழு)வது, (மனதை) ஒருமுகப்படுத்துதற்கு உறுதியானதும், ஓதுவதைச் செவ்வையாக்குவதும் ஆகும்.
7. (நபியே!) பகலில் நீர் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது.
8. உமது இறைவனின் பெயரை நினைவுகூர்வீராக! அவனிடமே முழுமையாக ஒதுங்கி விடுவீராக!
9. (அவனே) கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இறைவன். அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. எனவே, அவனையே பொறுப்பாளனாக எடுத்துக் கொள்வீராக!
10. (நபியே!) அவர்கள் கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக! அவர்களை விட்டு அழகிய முறையில் முற்றிலும் விலகி விடுவீராக!
11. என்னையும், பொய்யெனக் கூறும் இந்த சுகவாசிகளையும் விட்டுவிடுவீராக! சிறிதுகாலம் அவர்களுக்கு அவகாசம் அளிப்பீராக!
12, 13. பிணைக்கப்படும் விலங்குகளும், நரகமும், தொண்டையில் சிக்கிக் கொள்ளும் உணவும், துன்புறுத்தும் வேதனையும் நம்மிடம் உள்ளன.
14. பூமியும், மலைகளும் அதிர்ந்து, சரிந்து விழக்கூடிய மண்குவியலைப் போல் மலைகள் ஆகிவிடும் நாளை (நினைவுகூர்வீராக!)
15. ஃபிர்அவ்னிடம் ஒரு தூதரை நாம் அனுப்பியது போன்றே, உங்களுக்குச் சாட்சியாளரான ஒரு தூதரை உங்களிடமும் அனுப்பியுள்ளோம்.
16. அத்தூதருக்கு ஃபிர்அவ்ன் மாறு செய்தான். எனவே அவனை மிகக் கடுமையாகப் பிடித்தோம்.
17. நீங்கள் (நம்மை) மறுத்தால், குழந்தைகளையும் நரைத்தோராக மாற்றிவிடும் நாளில் உங்களை எப்படித் தற்காத்துக் கொள்வீர்கள்? 598
18. அ(ந்நாள் நிகழ்வ)தன் காரணமாக வானம் பிளந்து விடும். அவனது வாக்குறுதி நிறைவேறக் கூடியதாக உள்ளது.
19. இது ஓர் அறிவுரையாகும். யார் விரும்புகிறாரோ அவர் தமது இறைவனை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்ளட்டும்.
20. (நபியே!) நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தினரும், இரவில் மூன்றில் இரு பகுதிக்குக் குறைவாகவும், அதில் பாதியளவும், அதில் மூன்றில் ஒரு பகுதியும் தொழுகையில் ஈடுபடுகிறீர்கள் என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் நிர்ணயிக்கிறான். நீங்கள் அதைத் துல்லியமாகக் கணக்கிட முடியாது என்பதை அறிந்துள்ளான். எனவே உங்களை அவன் மன்னித்து விட்டான். குர்ஆனிலிருந்து உங்களால் இயன்றதை ஓதுங்கள்!599 உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்யும் சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடும் சிலரும் இருப்பார்கள் என்பதையும் அறிந்துள்ளான். எனவே அதிலிருந்து இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலைநிறுத்துங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் கொடுங்கள்! உங்களுக்காக நன்மையிலிருந்து எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் மிகச் சிறந்ததாகவும், மகத்தான கூலியாகவும் பெற்றுக் கொள்வீர்கள். அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்! அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.600