அல்முதஃப்ஃபிஃபீன் – குறைவு செய்வோர்

அத்தியாயம் : 83

வசனங்களின் எண்ணிக்கை: 36

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. (அளவு, நிறுவையில்) குறைவு செய்வோருக்குக் கேடுதான்.619
2. அவர்கள் மக்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்குகின்றனர்.
3. ஆனால் அவர்களுக்கு அளந்தோ அல்லது நிறுத்தோ கொடுக்கும் போது குறைக்கின்றனர்.
4, 5. மாபெரும் ஒரு நாளில் அவர்கள் (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டாமா?
6. அந்நாளில் மக்கள், அகிலங்களின் இறைவன் முன்னிலையில் நிற்பார்கள்.620
7. உண்மையில், தீயவர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் உள்ளது.621
8. ‘ஸிஜ்ஜீன்’ என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
9. (அது) எழுதப்பட்ட பதிவேடு!
10. பொய்யெனக் கூறுவோருக்கு அந்நாளில் கேடுதான்!
11. தீர்ப்பு நாளை அவர்கள் பொய்யெனக் கூறினர்.
12. பாவம் செய்து, வரம்பு மீறும் ஒவ்வொருவனையும் தவிர வேறெவரும் அதைப் பொய்யெனக் கூறமாட்டார்கள்.
13. அவனுக்கு நமது வசனங்கள் எடுத்துரைக்கப்படும்போது, “முன்னோரின் கட்டுக் கதைகள்” என அவன் கூறினான்.
14. அவ்வாறல்ல! அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களின் உள்ளங்களில் கறையாகப் படிந்து விட்டன.622
15. உண்மையில், அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் திரையிடப்படுவார்கள்.
16. பின்னர் அவர்கள் நரகத்தில் நுழைவார்கள்.
17. பின்னர் “நீங்கள் எதைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தீர்களோ அது இதுதான்” என்று கூறப்படும்.
18. உண்மையில், நல்லவர்களின் பதிவேடு ‘இல்லிய்யூனில்’ உள்ளது.
19. ‘இல்லிய்யூன்’ என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
20. (அது) எழுதப்பட்ட பதிவேடு!
21. நெருக்கமான (வான)வர்கள் அதைக் காண்கின்றனர்.
22. நல்லவர்கள் இன்பத்தில் இருப்பார்கள்.
23. கட்டில்களின் மீதிருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
24. அவர்களுடைய முகங்களில் இன்பத்தின் பொலிவை அறிந்து கொள்வீர்.
25. முத்திரையிடப்பட்ட தூய மதுரசம் அவர்களுக்குப் புகட்டப்படும்.
26. அதன் முத்திரை கஸ்தூரியாகும். ஆசைப்படுவோர் இதற்கு ஆசைப்படட்டும்.
27. அதன் கலவை ‘தஸ்னீம்’ ஆகும்.
28. (அது) ஓர் நீரூற்று. அதிலிருந்து (இறைவனுக்கு) நெருக்கமானோர் அருந்துவார்கள்.
29. குற்றம் செய்தவர்கள், இறைநம்பிக்கை கொண்டோரை (இவ்வுலகில்) கேலி செய்வோராக இருந்தனர்.
30. அவர்களைக் கடந்து செல்லும்போது ஒருவருக்கொருவர் கண் ஜாடை செய்து கொண்டிருந்தனர்.
31. தமது குடும்பத்தாரிடம் திரும்பும்போது மகிழ்ச்சியடைந்தவர்களாகத் திரும்பிச் சென்றனர்.
32, 33. (இறைநம்பிக்கை கொண்ட) அவர்களைக் காணும்போது “இவர்களே வழிகேடர்கள்” எனக் கூறினர். அவர்கள்மீது, இவர்கள் கண்காணிப்பாளர்களாக அனுப்பப்படவில்லை.
34. ஆனால், இறைநம்பிக்கை கொண்டோர் அந்நாளில் இறை மறுப்பாளர்களைக் கேலி செய்வார்கள்.
35. கட்டில்களின் மீதிருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
36. “இறைமறுப்பாளர்களுக்கு­­ அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்கான கூலி கொடுக்கப்பட்டதா?” (எனக் கேட்கப்படும்.)