அத்தியாயம் : 63
வசனங்களின் எண்ணிக்கை: 11
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. (நபியே!) நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்தால் “நீர் அல்லாஹ்வின் தூதர்தான் என நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறுகின்றனர். நீர் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதை அவன் அறிவான். “நயவஞ்சகர்கள் பொய்யர்களே!” என அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.566
2. அவர்கள் தமது சத்தியங்களை ஒரு கேடயமாக எடுத்துக் கொண்டனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகக் கெட்டது.
3. அவர்கள் இறைநம்பிக்கை கொண்டபின் மறுத்ததே இதற்குக் காரணம். அவர்களின் உள்ளங்களில் முத்திரை இடப்பட்டு விட்டது. எனவே அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
4. நீர் அவர்களைப் பார்த்தால், அவர்களின் உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்பட வைக்கும். அவர்கள் பேசினால் அவர்களின் பேச்சை நீர் செவிதாழ்த்திக் கேட்பீர். அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகளைப் போன்றவர்கள். (அவர்கள் செவியுறும்) ஒவ்வொரு சப்தத்தையும் தமக்கு எதிராகவே கருதுகின்றனர். அவர்களே எதிரிகள். எனவே அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பீராக! அவர்களை அல்லாஹ் அழித்து விடுவான். அவர்கள் எவ்வாறு திசைதிருப்பப்படுகின்றனர்?
5. “வாருங்கள்! அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவார்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் தமது தலைகளைத் திருப்பிக் கொள்கின்றனர். (நபியே!) கர்வம் கொண்டு புறக்கணிப்போராக அவர்களை நீர் காண்பீர்.
6. (நபியே!) நீர் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடினாலும் அல்லது பாவ மன்னிப்புத் தேடாவிட்டாலும் அவர்களுக்குச் சமமே! அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். பாவிகளான கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
7. அவர்கள் எத்தகையோரென்றால், “அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்கள் (அவரை விட்டுப்) பிரிந்து செல்லும்வரை அவர்களுக்காக நீங்கள் செலவிடாதீர்கள்” என்று கூறுகின்றனர். வானங்கள், பூமியின் செல்வக் களஞ்சியங்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனினும் நயவஞ்சகர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
8. “நாங்கள் மதீனாவிற்குத் திரும்பினால் அங்கிருக்கும் கண்ணிய மானவர்கள், இழிவானவர்களை வெளியேற்றிவிடுவர்” என அவர்கள் கூறுகின்றனர். கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், இறைநம்பிக்கை கொண்டோருக்கும் உரியதாகும். எனினும் நயவஞ்சகர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள்.
9. இறைநம்பிக்கை கொண்டோரே! உங்கள் செல்வங்களும், உங்கள் பிள்ளைகளும் அல்லாஹ்வை நினைவுகூர்வதை விட்டும் உங்கள் கவனத்தைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறு யார் செய்கிறாரோ அவர்களே நஷ்டமடைந்தோர்.
10. உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்பே உங்களுக்கு நாம் வழங்கியதிலிருந்து செலவிடுங்கள்! (மரணவேளை வந்து விட்டால்) “என் இறைவனே! சிறிது காலம் எனக்கு நீ அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தர்மம் செய்து, நல்லோர்களில் ஆகிவிடுவேனே!” என்று அப்போது அவன் கூறுவான்.
11. எவருக்கும் அவரது தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்றிந்தவன்.