அத்தியாயம் : 60
வசனங்களின் எண்ணிக்கை: 13
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. இறைநம்பிக்கை கொண்டோரே! எனது பாதையில் போரிடுவதற்காகவும், எனது பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டீர்களாயின் எனது எதிரிகளையும், உங்களது எதிரிகளையும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! நீங்களோ அன்பின் காரணமாக அவர்களிடம் (இரகசியத்தைக்) கொண்டு சேர்க்கிறீர்கள். அவர்கள் உங்களிடம் வந்த உண்மையை மறுத்து விட்டனர். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நீங்கள் நம்பியதற்காக இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகின்றனர். ஆனால் நீங்களோ அவர்களிடம் இரகசியமாக அன்பு செலுத்துகிறீர்கள். நீங்கள் மறைப்பதையும், பகிரங்கப்படுத்துவதையும் நான் அறிகிறேன். உங்களில் இதைச் செய்பவர் நேரான வழியை விட்டு விலகி விட்டார்.554
2. அவர்களுக்கு உங்கள்மீது வாய்ப்பு கிடைத்தால் உங்களுக்கு எதிரிகளாகி விடுவார்கள். தீங்கிழைப்பதற்காக உங்களை நோக்கித் தமது கைகளையும், நாவுகளையும் நீட்டுவார்கள். நீங்கள் இறைமறுப்பாளர்களாக ஆவதையே அவர்கள் விரும்புகின்றனர்.
3. மறுமை நாளில் உங்கள் உறவினர்களோ, உங்கள் பிள்ளைகளோ உங்களுக்குப் பயனளிக்கவே மாட்டார்கள். உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிப்பான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
4. “நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்பும்வரை, உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றை விட்டும் நாங்கள் விலகிக் கொண்டோம். உங்களை மறுத்து விட்டோம். உங்களுக்கும், எங்களுக்குமிடையே என்றென்றும் பகைமையும், வெறுப்பும் ஏற்பட்டு விட்டது” என்று தமது சமுதாயத்தினரிடம் கூறியதில் இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது. “அல்லாஹ்விடமிருந்து உமக்கு (உதவ) எந்த ஒன்றுக்கும் நான் சக்தி பெறாத நிலையில், உமக்காகப் பாவ மன்னிப்புக் கோருவேன்” என்று இப்ராஹீம், தமது தந்தையிடம் கூறியதைத் தவிர! (மற்றவற்றில் முன்மாதிரி உள்ளது.) “எங்கள் இறைவனே! உன்மீதே நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் உன்னிடமே மீண்டு விட்டோம். உன்னிடமே மீளுதல் உள்ளது” (என்று இப்ராஹீம் கூறினார்.)
5. “எங்கள் இறைவனே! எங்களை இறைமறுப்பாளர்களுக்குச் சோதனையாக ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவனே! நீயே மிகைத்தவன்; நுண்ணறிவாளன்” (என்றும் இறைஞ்சினார்.)
6. அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகின்ற உங்களுக்கு அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. யாரேனும் புறக்கணித்தால் அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.
7. உங்களுக்கும், அவர்களுள் நீங்கள் பகைத்தவர்களுக்குமிடையே அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்தக் கூடும். அல்லாஹ் ஆற்றலுடையவன். மேலும், அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
8. மார்க்க விஷயத்தில் உங்களை எதிர்த்துப் போரிடாமலும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருப்போருக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களிடம் நீதியாக நடப்பதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதியாக நடப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.555
9. மார்க்க விஷயத்தில் உங்களை எதிர்த்துப் போரிட்டவர்களையும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றியவர்களையும், உங்களை வெளியேற்றுவதற்காக உதவி செய்தவர்களையும் நீங்கள் நேசர்களாக்கிக் கொள்வதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை நேசர்களாக்கிக் கொள்வோரே அநியாயக்காரர்கள்.
10. இறைநம்பிக்கையாளர்களே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைப் பரிசோதியுங்கள்! அவர்களின் இறைநம்பிக்கையை அல்லாஹ்வே மிக அறிந்தவன். அப்பெண்களை இறைநம்பிக்கை கொண்டவர்கள் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை இறைமறுப்பாளர்களிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள். அப்பெண்கள், இறைமறுப்பாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்ல. அவர்களும் இப்பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்ல. அவர்கள் (இப்பெண்களுக்காகச்) செலவிட்டதை அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நீங்கள் அப்பெண்களுக்கு, அவர்களின் திருமணக் கொடைகளைக் கொடுத்து விட்டால் அவர்களை நீங்கள் மணமுடித்துக் கொள்வது உங்கள்மீது குற்றமில்லை. இறைமறுப்பாளர்களான பெண்களின் திருமண ஒப்பந்தத்தை நீங்கள் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அப்பெண்களுக்காக) நீங்கள் செலவிட்டதை (அவர்களை மணமுடிக்கும் இறைமறுப்பாளர்களிடம்) கேளுங்கள்! (இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்காக) அவர்கள் செலவிட்டதை (உங்களிடம்) கேட்கட்டும். இது அல்லாஹ்வின் தீர்ப்பு. அவன் உங்களுக்கிடையே தீர்ப்பளிக்கின்றான். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.556
11. இறைமறுப்பாளர்களிடம் சென்றுவிட்ட உங்கள் மனைவியரிடமிருந்து (கிடைக்க வேண்டிய தொகையில்) ஏதேனும் ஒருபகுதி உங்களுக்கு(க் கிடைக்க)த் தவறினால், நீங்கள் வெற்றிப் பொருட்களை அடையும்பட்சத்தில் யாருடைய மனைவியர் சென்று விட்டனரோ அவர்களுக்கு, அவர்கள் செலவிட்டதற்கு நிகரானதைக் கொடுத்து விடுங்கள். நீங்கள் யாரை நம்பியிருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்வை. அஞ்சுங்கள்!
12. நபியே! “அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; தமது பெண் குழந்தைகளைக் கொல்வதில்லை; தமது கைகால்களுக்கிடையில் இட்டுக்கட்டி எந்த அவதூறும் கூறுவதில்லை; நன்மையான செயல்களில் உமக்கு மாறு செய்வதில்லை” என்று உம்மிடம் உடன்படிக்கை ஏற்படுத்துவதற்காக இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துவீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருவீராக! அல்லாஹ்வே மன்னிப்புமிக்கவன்; நிகரிலான அன்பாளன்.
13. இறைநம்பிக்கை கொண்டோரே! யார்மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ அந்தக் கூட்டத்தினரை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். மண்ணறைவாசிகள் (உயிர்ப்பிக்கப்படுவதைப்) பற்றி இறைமறுப்பாளர்கள் நம்பிக்கையிழந்திருப்பதைப் போல் மறுமையைப் பற்றி இவர்கள் நம்பிக்கையிழந்துள்ளனர்.