அத்தியாயம் : 67
வசனங்களின் எண்ணிக்கை: 30
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. யாருடைய கையில் அதிகாரம் இருக்கிறதோ அவன் பாக்கியமிக்கவன். ஒவ்வொரு பொருளின்மீதும் அவன் ஆற்றலுடையவன்.
2. உங்களில் அழகிய செயலைச் செய்பவர் யார் என உங்களைச் சோதிப்பதற்காகவே மரணத்தையும், வாழ்வையும் படைத்துள்ளான். அவன் மிகைத்தவன்; மன்னிப்புமிக்கவன்.
3. அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தான். அளவிலா அருளாளனின் படைப்பில் எந்தக் குறைபாட்டையும் காணமாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் விரிசல்களைக் காண்கிறீரா?
4. பின்னர், மீண்டும் இருமுறை பார்ப்பீராக! பார்வை சோர்வடைந்து, தோல்வியுற்றதாக உம்மிடம் திரும்பும்.
5. அருகிலுள்ள வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அவற்றை ஷைத்தான்களுக்கான எறிகற்களாக ஆக்கினோம். கொழுந்துவிட்டெரியும் நரக வேதனையையும் அவர்களுக்குத் தயார்படுத்தியுள்ளோம்.
6. தமது இறைவனை மறுப்போருக்கு நரக வேதனை உண்டு. சேருமிடத்தில் அது கெட்டது.
7. அதில் அவர்கள் போடப்படும்போது அதன் பேரிரைச்சலைக் கேட்பார்கள். அதுவோ கொதித்துக் கொண்டிருக்கும்.
8. அது கோபத்தால் வெடித்துவிட முனையும். அதில் ஒவ்வொரு கூட்டத்தினர் தள்ளப்படும்போதும் அவர்களிடம், “எச்சரிப்பவர் உங்களிடம் வரவில்லையா?” என அதன் காவலர்கள் கேட்பார்கள்.
9. “ஆம்! எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்யரெனக் கூறி, ‘அல்லாஹ் (உங்கள்மீது) எதையும் இறக்கவில்லை. நீங்கள் பெரும் வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்’ என்று கூறினோம்” என்று (நரகவாதிகள்) பதிலளிப்பார்கள்.
10. “நாங்கள் செவியுறுவோராகவோ அல்லது சிந்திப்போராகவோ இருந்திருந்தால் நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம்” எனவும் கூறுவார்கள்.
11. அவர்கள் தமது பாவங்களை ஒப்புக் கொள்வார்கள். எனவே நரகவாசிகளுக்கு அழிவுதான்.
12. தமது இறைவனை மறைவான நிலையில் அஞ்சுவோருக்கு மன்னிப்பும், பெரும் கூலியும் உண்டு.
13. உங்கள் பேச்சை இரகசியமாகப் பேசுங்கள்! அல்லது அதைப் பகிரங்கப்படுத்துங்கள்! அவன், உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிந்தவன்.
14. (உங்களைப்) படைத்தவன் அறிய மாட்டானா? அவனோ நுட்பமானவன். நன்கறிந்தவன்.
15. அவனே உங்களுக்காகப் பூமியை(ப் பயணிப்பதற்கு) எளிதானதாகப் படைத்தான். எனவே அதன் பல பகுதிகளுக்கும் சென்று, அவனது அருட்கொடையிலிருந்து உண்ணுங்கள்! அவனிடமே உயிர்ப்பிக்கப்பட்டுச் செல்லவேண்டியுள்ளது.
16. வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமிக்குள் புதையுறச் செய்து விடுவான் என்பதில் நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது பூமி நடுங்கும்.
17. அல்லது வானத்தில் இருப்பவன், உங்கள்மீது கல்மழையைப் பொழிவிப்பான் என்பதில் நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது என் எச்சரிக்கை எப்படியிருக்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
18. இவர்களுக்கு முன்பிருந்தோரும் பொய்யெனக் கூறினர். அப்போது எனது தண்டனை எப்படி இருந்தது?
19. இறக்கைகளை விரித்தவாறும், மடக்கியவாறும் தமக்கு மேலாகப் பறக்கும் பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (விழாமல்) தடுத்து வைத்திருப்பவன் அளவிலா அருளாளனைத் தவிர யாருமில்லை. அவன் அனைத்துப் பொருட்களையும் பார்ப்பவன்.
20. அளவிலா அருளாளனைத் தவிர உங்களுக்கு உதவும் உங்களுக்கான படையினர் யாரேனும் உள்ளனரா? இறைமறுப்பாளர்கள் ஏமாற்றத்திலேயே உள்ளனர்.
21. அல்லது, தான் அளிக்கும் உணவை அவன் நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவர் யார்? அவ்வாறல்ல! அவர்கள் பெருமையடிப்பதிலும், வெறுப்பிலுமே நீடிக்கின்றனர்.
22. தனது முகம் குப்புற விழுந்தவனாகச் செல்பவன் நேர்வழி பெற்றவனா? அல்லது நேரான வழியில் சீராக நடப்பவனா?
23. “அவனே உங்களை உருவாக்கி, உங்களுக்குச் செவிப் புலனையும், பார்வைகளையும், உள்ளங்களையும் அமைத்தான். நீங்கள் குறைந்தளவே நன்றி செலுத்துகிறீர்கள்” என்று கூறுவீராக!
24. “அவன்தான் உங்களைப் பூமியில் பரவச் செய்தான். அவனிடமே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்” என்றும் கூறுவீராக!
25. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்குறுதி எப்போது (நிறைவேறும்)?” என அவர்கள் கேட்கின்றனர்.
26. “அல்லாஹ்விடமே அந்த அறிவு இருக்கின்றது. நான் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன் மட்டுமே!” என்று (நபியே!) கூறுவீராக!
27. அது நெருங்கி வருவதைக் காணும்போது இறைமறுப்பாளர்களின் முகங்கள் கறுத்து விடும். “நீங்கள் எதைத் தேடிக்கொண்டிருந்தீர்களோ அதுதான் இது” என்று கூறப்படும்.
28. “என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் அல்லாஹ் அழித்து விட்டாலோ அல்லது அவன் எங்களுக்கு அருள்புரிந்தாலோ துன்புறுத்தும் வேதனையிலிருந்து இறைமறுப்பாளர்களைப் பாதுகாப்பவன் யார் என்பதைச் சிந்தித்தீர்களா?” என்று கேட்பீராக!
29. “அவன் அளவிலா அருளாளன். அவனையே நம்பினோம். அவன்மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளோம். பகிரங்க வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்!” என்று கூறுவீராக!
30. “உங்களுடைய தண்ணீர் வற்றிப் போய்விட்டால் பொங்கி வரும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதைச் சிந்தித்தீர்களா?” என்று கேட்பீராக!