அத்தியாயம் : 58
வசனங்களின் எண்ணிக்கை: 22
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. (நபியே!) தனது கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடம் முறையிட்ட பெண்ணின் கூற்றை அல்லாஹ் செவியேற்று விட்டான். உங்கள் இருவரின் உரையாடலையும் அல்லாஹ் செவியேற்கிறான். அல்லாஹ் செவியேற்பவன்; பார்ப்பவன்.539
2. உங்களில் தம் மனைவியரைத் தாயுடன் ஒப்பிட்டுக் கூறுவோருக்கு அப்பெண்கள் தாய்மார்களாகிவிட மாட்டார்கள். அவர்களைப் பெற்றவர்களே அவர்களின் தாய்மார்களாவர். அவர்கள் வெறுக்கத்தக்க கூற்றையும், பொய்யையுமே கூறுகின்றனர். அல்லாஹ் பிழை பொறுப்பவன்; மன்னிப்பவன்.
3. யாரேனும் தம் மனைவியரைத் தாயுடன் ஒப்பிட்டுக் கூறிய பின்னர், தான் கூறியதைத் திரும்பப் பெற்றால், அவ்விருவரும் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் ஓர் அடிமையை (அவர்) விடுதலை செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள். அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
4. (அடிமையைப்) பெற்றுக் கொள்ளாதவராக இருந்தால், அவ்விருவரும் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் (அவர்) இரண்டு மாதங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டும். (அதற்கு) இயலாதவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நீங்கள் நம்ப வேண்டும் என்பதே இதற்குக் காரணம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். இறைமறுப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
5. நாம் தெளிவான வசனங்களை அருளிய நிலையில், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் எதிர்ப்பவர்கள் தமக்கு முன்சென்றோர் இழிவுபடுத்தப்பட்டதைப் போல இழிவுபடுத்தப்படுவார்கள். இறைமறுப்பாளர்களுக்கு இழிவு தரும் வேதனை உள்ளது.
6. அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்பும் நாளில் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அறிவிப்பான். அதை அவர்கள் மறந்துவிட்ட நிலையில், அல்லாஹ் கணக்கிட்டு வைத்துள்ளான். ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் கண்காணிப்பவன்.
7. வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? (தமக்குள்) மூவர் இரகசியம் பேசும்போது அவன் நான்காவதாக இருக்கிறான். ஐவர் இரகசியம் பேசும்போது அவன் ஆறாவதாக இருக்கிறான். அதைவிடக் குறைவானவர்களோ, அதிகமானவர்களோ எங்கிருந்தாலும் அவர்களுடன் அவன் இல்லாமலில்லை. பின்னர், அவர்களின் செயல்களைப் பற்றி மறுமை நாளில் அவர்களுக்கு அறிவிப்பான். ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவன்.
8. (நபியே!) இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்களுக்கு எது தடுக்கப்பட்டதோ அதன்பக்கமே மீண்டும் திரும்புகின்றனர். பாவத்தையும், பகைமையையும், இத்தூதருக்கு மாறுசெய்வதையும் பற்றி அவர்கள் இரகசியம் பேசுகின்றனர். அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் உமக்கு வாழ்த்துரையாக்காத சொற்களைக் கொண்டு உமக்கு வாழ்த்துரை கூறுகின்றனர். “நாம் கூறியதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டித்திருக்க வேண்டாமா?” என்றும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். நரகமே அவர்களுக்குப் போதுமானது. அதில் அவர்கள் நுழைவார்கள். அது, சேருமிடத்தில் கெட்டது.541
9. இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் ஒருவருக்கொருவர் இரகசியம் பேசினால் பாவத்தையும், பகைமையைத் தேடியும், தூதருக்கு மாறுசெய்வதையும் பற்றி இரகசியம் பேசாதீர்கள். நன்மையிலும், இறையச்சத்திலும் இரகசியம் பேசிக் கொள்ளுங்கள்! நீங்கள் யாரிடம் ஒன்றுதிரட்டப்படுவீர்களோ அத்தகைய அல்லாஹ்வை அஞ்சுங்கள்!542
10. இறைநம்பிக்கை கொண்டோரைக் கவலையுறச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்து ஏற்படுவதே இரகசியப் பேச்சாகும். அல்லாஹ்வின் நாட்டமின்றி அது அவர்களுக்குச் சிறிதும் தீங்கிழைக்காது. இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைக்கட்டும்.
11. இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களிடம் “சபைகளில் இடம் கொடுங்கள்!” என்று கூறப்பட்டால் நீங்கள் இடம் கொடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு விரிவுபடுத்துவான். “எழுந்துவிடுங்கள்!” என்று கூறப்பட்டால் எழுந்துவிடுங்கள்.543 உங்களில் இறைநம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.544
12. இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேசினால் உங்களின் இரகசியப் பேச்சுக்குமுன் தர்மம் செய்வதை முற்படுத்துங்கள். இதுவே உங்களுக்குச் சிறந்ததும், தூய்மையானதுமாகும். நீங்கள் வசதியற்றோராக இருந்தால் அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
13. (தூதருடன்) நீங்கள் இரகசியம் பேசுவதற்குமுன் தர்மம் செய்வதை முற்படுத்துவதற்கு அஞ்சுகிறீர்களா? அல்லாஹ் உங்களை மன்னித்துவிட்ட நிலையில், நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால் (குற்றமில்லை.) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
14. அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளாகிய கூட்டத்தை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டவர்(களான (நயவஞ்சகர்)களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் உங்களைச் சார்ந்தோரும் அல்ல. அவர்களைச் சார்ந்தோரும் அல்ல. அவர்கள் அறிந்து கொண்டே பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.
15. அவர்களுக்குக் கடும் வேதனையை அல்லாஹ் தயார் படுத்தியுள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகக் கெட்டது.
16. அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக எடுத்துக் கொண்டனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தனர். எனவே, அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
17. அவர்களின் செல்வங்களும், பிள்ளைகளும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைச் சிறிதும் காப்பாற்றாது. அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
18. அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்பும் நாளில், உங்களிடம் செய்ததைப் போன்றே அவனிடமும் சத்தியம் செய்வார்கள். தாம் (சரியான) ஒன்றில் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். அறிந்து கொள்ளுங்கள்! அவர்களே பொய்யர்கள்.545
19. அவர்களை ஷைத்தான் மிகைத்து, அல்லாஹ்வின் நினைவை விட்டும் மறக்கடித்து விட்டான். இவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர். அறிந்து கொள்ளுங்கள்! ஷைத்தானின் கூட்டத்தினரே நஷ்டமடைந்தோர்.
20. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் யார் எதிர்க்கிறார்களோ அவர்களே இழிந்தோரைச் சேர்ந்தவர்கள்.
21. “நானும், எனது தூதர்களுமே வெற்றியடைவோம்” என அல்லாஹ் விதியாக்கி விட்டான். அல்லாஹ் வலிமையானவன்; மிகைத்தவன்.
22. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் எதிர்ப்பவர்கள் தமது பெற்றோராக அல்லது பிள்ளைகளாக அல்லது உடன்பிறந்தோராக அல்லது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பவர்களாக, அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகின்ற சமுதாயத்தினரை நீர் காண மாட்டீர்! இவர்களின் உள்ளங்களில்தான் இறைநம்பிக்கையைப் பதித்துள்ளான். மேலும் (ஜிப்ரீல் எனும்) தனது ரூஹின் மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கங்களில் நுழைவிப்பான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றியாளர்கள்.