அல்முஃமினூன் – இறைநம்பிக்கையாளர்கள்

அத்தியாயம் : 23

வசனங்களின் எண்ணிக்கை: 118

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்.
2. அவர்கள் தமது தொழுகையில் பணிவுடன் இருப்பார்கள்.
3. அவர்கள் வீணானவற்றைப் புறக்கணிப்பார்கள்.
4. அவர்கள் ஸகாத்தையும் வழங்குவார்கள்.
5, 6, 7. அவர்கள், தமது மனைவியர் அல்லது அடிமைப் பெண்களைத் தவிர (மற்றவர்களிடம்) தமது கற்புநெறியைப் பேணிக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள். ஆனால் இதற்குப் புறம்பாக யார் (தவறான வழிகளைத்) தேடுகிறார்களோ அவர்களே வரம்பு மீறியவர்கள்.
8. அவர்கள், தம்மை நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றையும், தமது வாக்குறுதியையும் பேணிக் கொள்வார்கள்.
9. அவர்கள் தமது தொழுகைகளில் பேணுதலாக இருப்பார்கள்.
10, 11. அவர்களே ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தைச் சொந்தமாக்கிக் கொள்வோர். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.347
12. மனிதனைக் களிமண்ணின் மூலப்பொருளிலிருந்து படைத்தோம்.348
13. பின்னர் அவனை ஒரு பாதுகாப்புமிக்க இடத்தில் விந்துத் துளியாக ஆக்கி வைத்தோம்.
14. பின்னர் அந்த விந்துத்துளியைச் சூல்கொண்ட கருமுட்டை யாக்கினோம். அதன்பின் அந்தச் சூல்கொண்ட கருமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். பிறகு அச்சதைத்துண்டை எலும்புகளாக உருவாக்கினோம். அவ்வெலும்புகளுக்கு இறைச்சியைப் போர்த்தினோம். பின்னர் அதை வேறொரு படைப்பாகத் தோற்றுவித்தோம். படைப்பாளர்களில் சிறந்தவனான அல்லாஹ் பாக்கியமிக்கவன்.
15. இதன் பின்னர் நீங்கள் மரணிக்கக் கூடியவர்கள் தான்.
16. பிறகு நீங்கள் மறுமை நாளில் (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவீர்கள்.
17. உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைப் படைத்துள்ளோம். இப்படைப்பின் விஷயத்தில் நாம் கவனக் குறைவாக இருக்கவில்லை.
18. நாமே வானிலிருந்து அளவுடன் மழையைப் பொழிவித்து, அதைப் பூமியில் தங்க வைக்கிறோம். நாம் அதைப் போக்குவதற்கும் வலிமையுடையோம்.
19. அதன் மூலம் உங்களுக்காகப் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உற்பத்தி செய்தோம். அவற்றில் உங்களுக்கு ஏராளமான பழங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் சாப்பிடுகிறீர்கள்.
20. தூர் ஸீனாய் மலையில் உற்பத்தியாகும் ஒரு மரத்தையும் (உருவாக்கினோம்.) அது எண்ணெயையும், உணவருந்துவோருக்குக் குழம்புக்குரியதையும் விளைவிக்கின்றது.349
21, 22. (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளில் உள்ளவற்றிலிருந்து (பாலை) உங்களுக்குப் புகட்டுகிறோம். அவற்றில் உங்களுக்கு அதிகளவு பயன்கள் உள்ளன. அவற்றிலிருந்து சாப்பிடவும் செய்கிறீர்கள். அவற்றின்மீதும், கப்பல்களிலும் சுமந்து செல்லப்படுகிறீர்கள்.
23. நூஹை, அவரது சமுதாயத்திடம் தூதராக அனுப்பினோம். “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு எந்தக் கடவுளும் இல்லை. நீங்கள் (அவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று அவர் கேட்டார்.
24, 25. அவரது சமுதாயத்திலிருந்த இறைமறுப்பாளர்களான தலைவர்கள், “இவர் உங்களைப் போன்ற மனிதரைத் தவிர வேறில்லை. இவர் உங்களைவிட மேன்மையடைய விரும்புகிறார். அல்லாஹ் நாடியிருந்தால் வானவர்களை (தூதராக) இறக்கியிருப்பான். முன்சென்ற எங்கள் முன்னோரிடமிருந்து நாங்கள் இதைக் கேள்விப்பட்டதில்லை. இவர் ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. இவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளது. எனவே இவரது விஷயத்தில் சிறிது காலம்வரை பொறுத்திருந்து பாருங்கள்!” எனக் கூறினர்.
26. “என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யரெனக் கூறுவதால் எனக்கு உதவுவாயாக!” என்று (நூஹ்) பிரார்த்தித்தார்.
27. “நமது கண்களுக்கு முன்பாகவும், நமது அறிவிப்பின்படியும் ஒரு கப்பலைக் கட்டுவீராக! நமது கட்டளை வந்து, நீரூற்று பொங்கும்போது, ஒவ்வொன்றிலும் ஆண் – பெண் கொண்ட ஜோடியையும், அவர்களில் யார்மீது வாக்கு முந்தி விட்டதோ அவர்களைத் தவிர உமது குடும்பத்தினரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக! அநியாயக்காரர்களைப் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்” என அவருக்கு அறிவித்தோம்.
28. நீரும், உம்முடன் இருப்போரும் கப்பலில் ஏறி அமர்ந்தவுடன், ‘அநியாயக்காரக் கூட்டத்தாரிடமிருந்து எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ என்று கூறுவீராக!
29. ‘என் இறைவனே! பாக்கியமிக்க இடத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! (பாதுகாப்பாக) இறக்கி வைப்போரில் நீயே மிகச் சிறந்தவன்’ என்றும் கூறுவீராக!
30. இதில் சான்றுகள் உள்ளன. நாம் சோதிப்போராகவே இருக்கிறோம்.
31. அவர்களுக்குப் பின் வேறொரு தலைமுறையைத் தோற்றுவித்தோம்.
32. அவர்களிலிருந்தே அவர்களுக்கு ஒரு தூதரை அனுப்பினோம். “அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. நீங்கள் (அவனை) அஞ்ச மாட்டீர்களா?” (என அத்தூதர் கூறினார்.)
33. அவரது சமுதாயத்தில் (இறைவனை) மறுத்து, இறுதி நாளின் சந்திப்பை யார் பொய்யெனக் கூறினார்களோ, மேலும் இவ்வுலகில் நாம் யாருக்கு சுகபோக வாழ்வை வழங்கினோமோ அத்தகைய தலைவர்கள், “இவர் உங்களைப் போன்ற மனிதரைத் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் பருகுவதையே இவரும் பருகுகிறார்” என்று கூறினர்.
34, 35. “உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் அப்போது நீங்கள் நஷ்டமடைந்தவர்களே! ‘நீங்கள் மரணித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டாலும் நீங்கள் (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவீர்கள்’ என அவர் உங்களுக்கு வாக்களிக்கிறாரா?”
36, 37, 38. “உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி (ஒருபோதும் நிகழாது) தூரமாகி விட்டது; வெகுதூரமாகி விட்டது. இது, நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறில்லை. மரணிக்கிறோம்; உயிரோடும் இருக்கிறோம். நாம் (உயிர்ப்பித்து) எழுப்பப்பட மாட்டோம். இவர் அல்லாஹ்வின்மீது பொய்யை இட்டுக்கட்டும் மனிதரைத் தவிர வேறில்லை. நாங்கள் இவரை நம்பப் போவதில்லை” (என்றும் கூறினர்.)
39. “என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யரெனக் கூறுவதால் எனக்கு உதவுவாயாக!” என்று (தூதர்) பிரார்த்தித்தார்.
40. (அதற்கு இறைவன்,) “சிறிது காலத்தில் அவர்கள் கைச்சேதப் படுவோராக ஆகிவிடுவர்” என்று கூறினான்
41. உண்மையில் அவர்களைப் பெரும் சப்தம் பிடித்துக் கொண்டது. அவர்களைக் கூளங்களாக ஆக்கி விட்டோம். அநியாயக்காரக் கூட்டத்திற்கு அழிவுதான்.
42. அவர்களுக்குப் பின் பல்வேறு தலைமுறைகளைத் தோற்றுவித்தோம்.
43. எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணைக்கு முந்தவும் செய்யாது; பிந்தவும் செய்யாது.
44. பிறகு, நமது தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். எந்த ஒரு சமுதாயத்திற்கும் அதற்குரிய தூதர் வரும்போதெல்லாம் அவரைப் பொய்யரென்றே கூறினர். எனவே அவர்களை ஒருவரையொருவர் (அழிவில்) பின்தொடருமாறு செய்தோம். அவர்களை (வெறும்) செய்திகளாக ஆக்கினோம். இறைநம்பிக்கை கொள்ளாத கூட்டத்திற்கு அழிவுதான்.
45, 46. பின்னர் மூஸாவையும் அவரது சகோதரர் ஹாரூனையும் நமது சான்றுகளுடனும், தெளிவான ஆதாரத்துடனும் ஃபிர்அவ்னிடமும், அவனது பிரமுகர்களிடமும் அனுப்பினோம். அவர்கள் கர்வம் கொண்டனர்; மேலும் ஆணவக்காரக் கூட்டத்தினராக இருந்தனர்.
47. “நம்மைப் போன்ற இ(வ்வி)ரு மனிதர்களை நாம் நம்புவோமா? இவ்விருவரின் சமுதாயத்தினரோ நமக்கு அடிமைகளாக உள்ளனர்” என அவர்கள் கூறினர்.
48. அவ்விருவரையும் அவர்கள் பொய்யரெனக் கூறினர். எனவே அவர்கள் அழிக்கப்பட்டோரில் ஆகிவிட்டனர்.
49. அவர்கள் நேர்வழி அடைவதற்காக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்.
50. மர்யமின் மகனையும், அவரது தாயாரையும் சான்றாக ஆக்கினோம். நிம்மதியும், நீரூற்றும் மிக்க ஓர் உயரமான இடத்தில் அவர்களைத் தங்க வைத்தோம்.
51. தூதர்களே! நல்லவற்றை உண்ணுங்கள்! நற்செயல் செய்யுங்கள்! நீங்கள் செய்வதை நான் நன்கறிபவன்.350
52. இதுவே உங்கள் மார்க்கம்; ஒரே மார்க்கம். நானே உங்கள் இறைவன். எனவே எனக்கே அஞ்சுங்கள்!
53. ஆனால் அவர்கள் தமது (மார்க்க) விஷயத்தில் தமக்கிடையே பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர். ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.
54. அவர்களின் வழிகேட்டிலேயே அவர்களைச் சில காலம்வரை விட்டுவிடுவீராக!
55, 56. அவர்களுக்குச் செல்வத்தையும், பிள்ளைகளையும் நாம் கொடுத்திருப்பதன் மூலம், அவர்களுக்கு நன்மைகளை விரைந்து வழங்குகிறோம் என அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல! அவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள்.
57, 58. தமது இறைவனின் அச்சத்தால் நடுங்குபவர்கள், தமது இறைவனின் வசனங்களை நம்புபவர்கள்,
59, 60, 61. தமது இறைவனுக்கு இணைவைக்காதவர்கள், தம் இறைவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்று அவர்களின் உள்ளங்கள் அஞ்சிய நிலையில் கொடுக்க வேண்டிய (தர்மத்)தைக் கொடுப்பவர்கள் ஆகியோரே நன்மையான காரியங்களில் விரையக் கூடியவர்கள். இவர்களே அதற்கு முந்தக் கூடியவர்கள்.351
62. எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையைப் பேசக் கூடிய ஒரு பதிவேடு உள்ளது. அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
63. ஆனால் அவர்களின் உள்ளங்கள் இதில் அலட்சியமாக உள்ளன. அவர்களிடத்தில் இதுவல்லாத வேறு (தீய) செயல்களும் உள்ளன. அவற்றுக்காகவே அவர்கள் செயல்படுகின்றனர்.
64. முடிவில், அவர்களில் சுகவாசிகளை நாம் வேதனையால் தண்டித்தால் அப்போது அவர்கள் அபயக் குரல் எழுப்புகின்றனர்.
65. இன்றைய தினம் அபயக் குரல் எழுப்பாதீர்கள்! நீங்கள் நம்மிடமிருந்து உதவப்பட மாட்டீர்கள்.
66. 67. உங்களுக்கு எனது வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டன. ஆனால் நீங்களோ பின்வாங்கித் திரும்பிச் சென்று கொண்டிருந்தீர்கள்; ஆணவம் கொண்டு, இரவு நேரங்களில் இதைப் பற்றி வீணான பேச்சுகளைப் பேசினீர்கள்.352
68. அவர்கள் இந்த (வேத) வாக்கைச் சிந்திக்கவில்லையா? அல்லது கடந்து சென்ற அவர்களின் முன்னோரிடம் வராத எதுவும் அவர்களிடம் வந்துவிட்டதா?
69. அல்லது, அவர்கள் தமது தூதரை அறிந்து கொள்ளாமல் அவரை மறுக்கிறார்களா?
70. அல்லது, அவருக்குப் பைத்தியம் என்று கூறுகிறார்களா? அவ்வாறல்ல! அவர்களிடம் உண்மையைத்தான் அவர் கொண்டு வந்துள்ளார். எனினும் அவர்களில் அதிகமானோர் இவ்வுண்மையை வெறுக்கின்றனர்.
71. அவர்களின் விருப்பங்களை இந்த உண்மை பின்பற்றியிருந்தால் வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவையும் சீர்குலைந்து போயிருக்கும். மாறாக, அவர்களுக்கான நற்போதனையை அவர்களிடம் நாம் கொண்டு வந்துள்ளோம். அவர்களோ தம்மிடம் வந்த அப்போதனையைப் புறக்கணிக்கின்றனர்.
72. அல்லது நீர் அவர்களிடம் கூலி கேட்கிறீரா? உமது இறைவனின் கூலியே சிறந்தது. அவனே வழங்குவோரில் சிறந்தவன்.
73. (நபியே!) அவர்களை நேரான வழிக்கு நீர் அழைக்கிறீர்.
74. யார் மறுமையை நம்பவில்லையோ அவர்களே அவ்வழியை விட்டும் விலகிச் செல்பவர்கள்.
75. நாம் அவர்களிடம் கருணை காட்டி, அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கியிருந்தால் அவர்கள் நிலை தடுமாறியவர்களாகத் தமது வரம்பு மீறலிலேயே தொடர்ந்து நீடித்திருப்பார்கள்.
76. அவர்களை வேதனையால் தண்டித்தோம். ஆயினும் அவர்கள் தமது இறைவனுக்குப் பணியவில்லை; தாழ்ந்து பிரார்த்திக்கவுமில்லை.
77. இறுதியில், கடும் வேதனையைக் கொண்ட ஒரு வாசலை அவர்களுக்கு எதிராக நாம் திறந்து விட்டால், அப்போது அதில் அவர்கள் நிராசையடைந்து விடுகின்றனர்.
78. உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், உள்ளங்களையும் அவனே உருவாக்கினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
79. அவன்தான் பூமியில் உங்களைப் பரவச் செய்தான். நீங்கள் அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
80. அவன்தான் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்க வைக்கிறான். அவனிடத்தில்தான் இரவு, பகல் மாறிமாறி வருவதும் உள்ளது. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
81. எனினும், (இவர்களுக்கு) முன்சென்றவர்கள் கூறியவாறே இவர்களும் கூறுகின்றனர்.
82, 83. “நாம் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகி விட்டாலும் உயிர்ப்பித்து எழுப்பப்படுவோமா? நாமும், இதற்கு முன் நமது முன்னோரும் இவ்வாறே வாக்களிக்கப்பட்டிருந்தோம். இது முன்னோரின் கட்டுக்கதைகளைத் தவிர வேறில்லை” என்று அவர்கள் கூறுகின்றனர்.
84. (நபியே!) “நீங்கள் அறிந்திருந்தால், இப்பூமியும் இதில் உள்ளவையும் யாருக்கு உரியவை?” என்று கேட்பீராக!
85. “(அவை) அல்லாஹ்வுக்கே உரியவை!” என்று அவர்கள் பதிலளிப்பார்கள். “நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!
86. “ஏழு வானங்களுக்குச் சொந்தக்காரனும், மகத்தான அர்ஷுக்குச் சொந்தக்காரனும் யார்?” என்று கேட்பீராக!
87. “(அவை) அல்லாஹ்வுக்கே உரியவை!” என அவர்கள் பதிலளிப்பார்கள். “நீங்கள் பயப்பட மாட்டீர்களா?” என்று கேட்பீராக!
88. “ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தையும் தன் கையில் வைத்திருப்பவன் யார்? அவனே பாதுகாக்கிறான்; அவனுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை. நீங்கள் அறிந்திருந்தால் (அவன் யார்?)” என்று கேட்பீராக!
89. “(அவை) அல்லாஹ்வுக்கே உரியவை!” என்று பதிலளிப்பார்கள். “அப்படியானால் நீங்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?” என்று கேட்பீராக!
90. எனினும், நாம் அவர்களிடம் உண்மையைக் கொண்டு வந்தோம். அவர்களோ பொய்யர்களாக உள்ளனர்.
91. அல்லாஹ், (தனக்குப்) பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இருந்ததில்லை. அவ்வாறு இருந்தால் ஒவ்வொரு கடவுளும் தான் படைத்தவற்றுடன் சென்றிருப்பார்கள். மேலும் அவர்களில் ஒருவர், மற்றவரைவிட மேலோங்கியிருப்பார். இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.
92. மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிபவன்; அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் அவன் உயர்ந்தவன்.
93, 94. “என் இறைவனே! அவர்களுக்கு வாக்களிக்கப்படுவதை (வேதனையை) நீ எனக்குக் காட்டுவதாக இருந்தால், என் இறைவனே! அந்த அநியாயக்காரக் கூட்டத்தில் என்னைச் சேர்த்து விடாதே!” என்று (நபியே! நீர்) கூறுவீராக!
95. (நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களிப்பதை உமக்குக் காட்டுவதற்கும் நாம் ஆற்றலுடையோரே!
96. மிக அழகானதைக் கொண்டு தீமையைத் தடுப்பீராக! நாம் அவர்கள் வர்ணிப்பதை நன்கறிவோம்.
97, 98. “என் இறைவனே! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். என் இறைவனே! அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்று கூறுவீராக!
99, 100. இறுதியாக, அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது “என் இறைவனே! நான் விட்டு விட்டதில் நற்செயலைச் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறல்ல! இது அவன் கூறக் கூடிய (வெற்றுச்) சொற்களே! அவர்கள் (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாள்வரை அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பு உள்ளது.
101. ‘ஸுர்’ ஊதப்படும்போது, அன்றைய தினம் அவர்களுக்கிடையே உறவுகள் எதுவும் இருக்காது. அவர்கள் ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
102. யாருக்கு அவரது (நன்மையின்) எடைகள் கனத்துவிட்டதோ அவர்களே வெற்றியாளர்கள்.
103. யாருக்கு அவரது (நன்மையின்) எடைகள் இலேசாகிவிட்டதோ அவர்கள்தான் தமக்குத் தாமே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள்.
104. அவர்களின் முகங்களை நெருப்புச் சுட்டெரிக்கும். அவர்கள் அதில் விகாரமாக இருப்பார்கள்.
105. உங்களுக்கு எனது வசனங்கள் எடுத்துரைக்கப்படவில்லையா? அவற்றை நீங்கள் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தீர்கள்.
106, 107. “எங்கள் இறைவனே! எங்களை, எங்கள் துர்பாக்கியம் மிகைத்து விட்டது. நாங்கள் வழிகெட்ட கூட்டத்தினராக இருந்தோம். எங்கள் இறைவனே! எங்களை இங்கிருந்து வெளியேற்றுவாயாக! நாங்கள் மீண்டும் (பாவம் செய்யத்) திரும்பினால் அப்போது நாங்களே அநியாயக்காரர்கள்” என அவர்கள் கூறுவார்கள்.
108. (அதற்கு இறைவன்,) “இதிலேயே இழிவடைந்திருங்கள்! என்னிடம் பேசாதீர்கள்!” எனக் கூறுவான்.
109. என் அடியார்களில் ஒரு பிரிவினர், “எங்கள் இறைவனே! நாங்கள் இறைநம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை மன்னிப்பாயாக! எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே கருணையாளர்களில் மிக்க மேலானவன்’ என்று கூறிக் கொண்டிருந்தனர்.
110. ஆனால் அவர்கள் (மீதான பகைமை) என் நினைவையே உங்களுக்கு மறக்கச் செய்யும் அளவுக்கு அவர்களைக் கேலியாகக் கருதினீர்கள். நீங்கள் அவர்களைப் பற்றிச் சிரித்துக் கொண்டும் இருந்தீர்கள்.
111. அவர்கள் பொறுமையை மேற்கொண்டதால் இன்று அவர்களுக்குக் கூலி வழங்கி விட்டேன். அவர்களே வெற்றியாளர்கள்.
112. “ஆண்டுகளின் கணக்கில் எவ்வளவு காலம் பூமியில் தங்கியிருந்தீர்கள்?” என அவன் கேட்பான்.
113. அவர்கள், “ஒருநாள் அல்லது ஒருநாளில் சிறிதளவு வாழ்ந்தோம். கணக்கிடக் கூடியவர்களிடம் கேட்பாயாக!” என்று கூறுவார்கள்.
114. “நீங்கள் அறிவோராக இருந்திருந்தால், குறைவான காலமே தங்கியிருந்தீர்கள்” என அவன் கூறுவான்.
115. வீணாகவே உங்களைப் படைத்தோம் என்றும், நீங்கள் நம்மிடம் மீண்டும் கொண்டு வரப்படவே மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?
116. உண்மை அரசனான அல்லாஹ் மிக உயர்ந்தவன். சங்கைக்குரிய அர்ஷின் இறைவனான அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை.
117. அல்லாஹ்வுடன் இணைத்து வேறு கடவுளை யார் பிரார்த்திக்கிறாரோ, அவரிடம் அதுபற்றி எந்த ஆதாரமும் இல்லை. அவரைப் பற்றிய விசாரணை அவரது இறைவனிடமே உள்ளது. இறைமறுப்பாளர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.
118. “என் இறைவனே! மன்னிப்பாயாக! கருணை புரிவாயாக! நீயே கருணையாளர்களில் மிக்க மேலானவன்” என்று கூறுவீராக!