அல்முஃமின் – இறைநம்பிக்கையாளர்

அத்தியாயம் : 40

வசனங்களின் எண்ணிக்கை: 85

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. ஹா, மீம்.
2. மிகைத்தவன், நன்கறிந்தவன் அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
3. (அவன்) பாவங்களை மன்னிப்பவன்; பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவன்; தண்டிப்பதில் கடுமையானவன்; அருள் உடையவன். அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. அவனிடமே மீளுதல் உள்ளது.
4. இறைமறுப்பாளர்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கிக்க மாட்டார்கள். அவர்கள் (உல்லாசமாக) நகரங்களில் சுற்றித் திரிவது உம்மை ஏமாற்றிவிட வேண்டாம்.
5. இவர்களுக்கு முன்னர் நூஹுடைய சமுதாயத்தினரும், அவர்களுக்குப் பின்னர் பல கூட்டத்தினரும் பொய்யெனக் கூறினர். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தமது தூதர்களின்மீது தாக்குதல் தொடுக்க நாடினர். பொய்மையால் உண்மையை அழிப்பதற்காகப் பொய்யைக் கொண்டே வாதிட்டனர். எனவே அவர்களைத் தண்டித்தேன். எனது தண்டனை எவ்வாறு இருந்தது?
6. இவ்வாறே ‘அவர்கள் நரகவாதிகள்’ என்ற உமது இறைவனின் வாக்கு இறைமறுப்பாளர்கள்மீது உறுதியாகி விட்டது.
7. அர்ஷைச் சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றி இருப்பவர்களும் தமது இறைவனின் புகழைக் கொண்டு அவனைப் போற்றுகின்றனர். அவனை நம்புகின்றனர். இறைநம்பிக்கை கொண்டோருக்காகப் பாவ மன்னிப்புத் தேடுகின்றனர். “எங்கள் இறைவனே! அருளாலும், ஞானத்தாலும் ஒவ்வொரு பொருளையும் நீ சூழ்ந்திருக்கிறாய். எனவே பாவ மன்னிப்புக் கோரி, உனது பாதையைப் பின்பற்றுவோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையிலிருந்து காப்பாயாக!” (என்று இறைஞ்சுகின்றனர்.)
8, 9. “எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்த நிலையான சொர்க்கங்களில், அவர்களையும், அவர்தம் மூதாதையர், மனைவியர், தலைமுறையினர் ஆகியோரிலுள்ள நல்லோர்களையும் நுழையச் செய்வாயாக! நீயே மிகைத்தவன்; நுண்ணறிவாளன். தீமைகளை விட்டும் அவர்களைக் காப்பாயாக! அந்நாளில் தீமைகளை விட்டும் யாரை நீ பாதுகாத்தாயோ அவர்மீது அருள்புரிந்து விட்டாய். அதுவே மகத்தான வெற்றியாகும்” (என்றும் இறைஞ்சுகின்றனர்.)
10. “இறைநம்பிக்கை கொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் நீங்கள் மறுத்தபோது, உங்கள் உள்ளங்களில் இருந்த கோபத்தைவிட அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையானது” என்று (மறுமையில்) இறைமறுப்பாளர்களை அழைத்துக் கூறப்படும்.
11. “எங்கள் இறைவனே! இருமுறை எங்களை மரணிக்கச் செய்தாய்; இருமுறை எங்களை உயிர்ப்பித்தாய். எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம். எனவே வெளியேறுவதற்கு ஏதேனும் வழி உண்டா?” என்று கேட்பார்கள்.
12. அல்லாஹ்வை மட்டும் அழைக்கப்படும்போது நீங்கள் மறுத்ததும், அவனுக்கு இணை வைக்கப்படும்போது நீங்கள் நம்பியதுமே இதற்குக் காரணம். இப்போது அதிகாரம் உயர்ந்தவனும், மிகப் பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே உரியது.
13. அவனே உங்களுக்குத் தனது சான்றாதாரங்களைக் காட்டுகிறான். உங்களுக்காக வானிலிருந்து உணவையும் இறக்கி வைக்கிறான். (அவனை நோக்கி) மீண்டுவருவோரைத் தவிர வேறெவரும் படிப்பினை பெற மாட்டார்கள்.
14. எனவே, இறைமறுப்பாளர்கள் வெறுத்தாலும் அல்லாஹ்வுக்கே வணக்கத்தை உரித்தாக்கி, அவனிடமே பிரார்த்தியுங்கள்!449
15. (அவன்) தகுதிகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன். சந்திக்கும் நாளைப் பற்றி எச்சரிக்குமாறு, தன் அடியார்களில் தான் நாடியோர்மீது தனது கட்டளையான இறைச் செய்தியை இறக்கி வைக்கிறான்.
16. அந்நாளில் அவர்கள் வெளிப்படுவார்கள். அவர்களின் எந்த விஷயமும் அல்லாஹ்விடம் மறைந்திருக்காது. இன்று ஆட்சி யாருக்குரியது? அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுக்குரியது.
17. ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பாதித்ததற்கான கூலி இன்று வழங்கப்படும். இன்று எவ்வித அநியாயமும் இருக்காது. அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.
18. அருகிலுள்ள நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிப்பீராக! அப்போது இதயங்கள் தொண்டைக்குழிகளை அடைந்துவிடும். அவர்கள் துக்கத்தை அடக்கிக் கொள்வார்கள். அநியாயக்காரர்களுக்கு எந்த நெருங்கிய நண்பனும் இல்லை. ஏற்றுக் கொள்ளத்தக்க பரிந்துரையாளரும் இல்லை.
19. அவன், கண்களின் மோசடிகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அறிகிறான்.
20. அல்லாஹ் நீதியுடன் தீர்ப்பளிக்கிறான். அவனையன்றி அவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் எதுகுறித்தும் தீர்ப்பளிக்க மாட்டார்கள். அல்லாஹ்வே செவியேற்பவன்; பார்ப்பவன்.
21. இவர்கள் பூமியில் பயணித்துத் தமக்கு முன்னிருந்தோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பார்க்க வேண்டாமா? அவர்கள் வலிமையிலும், பூமியில் விட்டுச் சென்ற அடையாளங்களிலும் இவர்களைவிட மேலோங்கியிருந்தனர். அவர்களின் பாவச்செயல்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ்விடமிருந்து அவர்களைப் பாதுகாப்பவர் யாரும் இருக்கவில்லை.
22. அவர்களிடம், அவர்களுக்கான தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது அவர்கள் மறுத்துவிட்டனர் என்பதே இதற்குக் காரணம். எனவே அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அவன் வலிமை மிக்கவன்; தண்டிப்பதில் கடுமையானவன்.
23, 24. ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆதாரத்துடனும் அனுப்பி வைத்தோம். “(இவர்) பெரும் பொய் சொல்லும் சூனியக்காரர்” என்று அவர்கள் கூறினர்.
25. அவர்களிடம் நமது உண்மையை அவர் கொண்டு வந்தபோது, “அவருடன் இறைநம்பிக்கை கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளைக் கொன்று விடுங்கள்! அவர்களின் பெண்களை உயிருடன் வாழ விடுங்கள்!” என்று கூறினர். இறைமறுப்பாளர்களின் சூழ்ச்சி அழியக் கூடியதாகவே இருக்கிறது.
26. “என்னை விட்டு விடுங்கள்! நான் மூஸாவைக் கொல்கிறேன். அவர் தன் இறைவனை அழைக்கட்டும்! அவர் உங்களின் மார்க்கத்தை மாற்றி விடுவார் என்றோ, இப்பூமியில் குழப்பம் விளைவிப்பார் என்றோ நான் அஞ்சுகிறேன்” என ஃபிர்அவ்ன் கூறினான்.
27. “விசாரணை நாளை நம்பாமல் கர்வம் கொள்ளும் ஒவ்வொருவரிடமிருந்தும் என் இறைவனும் உங்கள் இறைவனுமான அவனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்” என்று மூஸா கூறினார்.
28. ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரில் தனது இறைநம்பிக்கையை மறைத்து வைத்திருந்த இறைநம்பிக்கை கொண்ட ஒரு மனிதர், “எனது இறைவன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக ஒரு மனிதரை நீங்கள் கொல்லப் போகிறீர்களா? உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால், அவரது பொய் அவரைச் சார்ந்தது. ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால் அவர் உங்களுக்கு எச்சரிப்பவற்றில் சில உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறிய பெரும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்” என்று கூறினார்.450
29. “என் சமுதாயமே! இன்று பூமியில் மிகைத்தோராக இருக்கும் உங்களிடம் ஆட்சி இருக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் வேதனை நம்மிடம் வந்து விட்டால் அதிலிருந்து நம்மைப் பாதுகாப்பவர் யார்?” (என்றும் அம்மனிதர் கூறினார்.) “நான் (நல்லதென) காண்பதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் காட்டவில்லை. நேரான வழியையே உங்களுக்குக் காட்டுகிறேன்” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
30, 31. “என் சமுதாயமே! (அழிக்கப்பட்ட) பல கூட்டத்தினரின் நாளைப் போன்று, அதாவது நூஹுடைய சமுதாயம், ஆது, ஸமூது, இன்னும் அவர்களுக்குப் பின் வந்தவர்களின் நிலையைப் போன்று உங்களுக்கும் (ஏற்பட்டுவிடும் என) நான் அஞ்சுகிறேன். அடியார்களுக்கு எந்த அநியாயத்தையும் அல்லாஹ் நாட மாட்டான்” என்று இறைநம்பிக்கை கொண்டிருந்த அந்த மனிதர் கூறினார்.
32. “என் சமுதாயமே! ஒருவரையொருவர் (உதவிக்காக) அழைத்துக் கொள்ளும் நாளைப் பற்றி உங்கள் விஷயத்தில் அஞ்சுகிறேன்”
33. “நீங்கள் புறமுதுகிட்டு ஓடும் அந்நாளில் அல்லாஹ்விடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யாருமில்லை. அல்லாஹ், யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவனை நேர்வழியில் செலுத்துபவர் யாருமில்லை”
34. “இதற்கு முன் உங்களிடம் யூஸுஃப் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். உங்களிடம் அவர் எதைக் கொண்டு வந்தாரோ அதில் நீங்கள் ஐயத்திலேயே ஆழ்ந்திருந்தீர்கள். முடிவில் அவர் மரணித்தபோது, “அவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்”என்று கூறினீர்கள். ஐயமுற்று, வரம்பு மீறுபவனை அல்லாஹ் இவ்வாறே வழிகேட்டில் விட்டுவிடுகிறான்”
35. “தம்மிடம் எந்த ஆதாரமும் வராமலேயே அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளில் தர்க்கம் செய்கின்றனர். இது அல்லாஹ்விடமும், இறைநம்பிக்கை கொண்டோரிடமும் மிகவும் வெறுப்பிற்குரியது. இவ்வாறே கர்வம் கொண்டு, அடக்குமுறை செய்யும் ஒவ்வோர் உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்” (என்றும் இறைநம்பிக்கை கொண்ட அந்த மனிதர் கூறினார்).
36, 37. “ஹாமானே! வான்வழிகளான அவ்வழிகளை நான் அடைந்து, மூஸாவின் இறைவனைப் பார்ப்பதற்காக ஓர் உயர்ந்த மாளிகையை எனக்காகக் கட்டுவாயாக! அவர் பொய்யர் என்றே எண்ணுகிறேன்”என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு, அவனது தீய செயல் அழகாக்கப்பட்டு, நேர்வழியிலிருந்து தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னுடைய சூழ்ச்சி அழிவில்தான் இருந்தது.
38. “என் சமுதாயத்தினரே! நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்! நான் உங்களுக்கு நேர்வழியைக் காட்டுகிறேன்” என்று அந்த இறைநம்பிக்கையாளர் கூறினார்.
39. “என் சமுதாயத்தினரே! இவ்வுலக வாழ்க்கை அற்ப இன்பமே! மறுமைதான் நிலையான வீடாகும்”
40. “தீமை செய்தவர் அதுபோன்றதைத் தவிர வேறு கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆணோ, பெண்ணோ யாராயினும் இறைநம்பிக்கை கொண்டுள்ள நிலையில் நற்செயல் செய்தால் அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். அங்கு கணக்கின்றி வழங்கப்படுவார்கள்”
41. “என் சமுதாயத்தினரே! எனக்கென்ன? நான் உங்களை வெற்றியை நோக்கி அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகத்தை நோக்கி அழைக்கிறீர்கள்”
42. “நான் அல்லாஹ்வை மறுத்து, எதைப் பற்றி எனக்கு அறிவில்லையோ அதை அவனுக்கு இணையாக்குவதற்காக என்னை அழைக்கிறீர்கள். ஆனால் நானோ மிகைத்தவனான, மன்னிப்புமிக்கவனை நோக்கி உங்களை அழைக்கிறேன்”
43. “உண்மையாகவே, எதை நோக்கி என்னை அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலோ, மறுமையிலோ அழைக்கப்படுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை; நமது மீளுமிடம் அல்லாஹ்விடமே உள்ளது; வரம்பு மீறுவோர் நரகவாசிகளாவர்”
44. “நான் உங்களுக்குக் கூறுவதை விரைவில் நினைத்துப் பார்ப்பீர்கள். என்னுடைய காரியத்தை நான் அல்லாஹ்விடமே ஒப்படைக்கிறேன். அடியார்களை அல்லாஹ் பார்ப்பவன்” (என்றும் அந்த இறைநம்பிக்கையாளர் கூறினார்.)
45, 46. அவர்கள் செய்த சூழ்ச்சியின் தீங்குகளிலிருந்து அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைக் கொடிய வேதனை சுற்றி வளைத்தது. காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுவார்கள். மறுமை நிகழும் நாளில், “ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைக் கடும் வேதனையில் புகுத்துங்கள்!” (எனக் கூறப்படும்.)451
47. அவர்கள் நரகத்தில் ஒருவருக்கொருவர் தர்க்கம் செய்யும்போது, கர்வம் கொண்டோரை நோக்கிப் பலவீனர்கள், “நாங்கள் உங்களைத்தான் பின்பற்றுவோராக இருந்தோம். எனவே, எங்களை விட்டும் நரகத்தி(ன் வேதனையி)லிருந்து ஒரு பங்கையாவது நீங்கள் தடுக்கக் கூடியவர்களா?” என்று கேட்பார்கள்.
48. “நாம் எல்லோருமே இதில்தான் இருக்கிறோம். அல்லாஹ், தனது அடியார்களுக்கிடையே தீர்ப்பளித்து விட்டான்” என்று கர்வம் கொண்டோர் பதிலளிப்பார்கள்.
49. நரகத்தின் காவலர்களை நோக்கி, “உங்கள் இறைவனிடம் பிரார்த்தியுங்கள்! அவன் ஒரு நாளுக்கேனும் எங்களுக்கு வேதனையை இலேசாக்குவான்” என்று நரகத்திலிருப்போர் கூறுவார்கள்.
50. “உங்களுக்கான தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வரவில்லையா?” என்று (காவலர்கள்) கேட்பார்கள். அதற்கு, “ஆம்!” என்று அவர்கள் கூறுவார்கள். “அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தியுங்கள்!” என்று கூறி விடுவார்கள். இறைமறுப்பாளர்களின் பிரார்த்தனை வழிதவறியதாகவே உள்ளது.
51. இவ்வுலக வாழ்விலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் நமது தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டோருக்கும் உதவி செய்வோம்.
52. அன்று அநியாயக்காரர்கள் கூறும் சாக்குப் போக்கு அவர்களுக்குப் பயனளிக்காது. அவர்கள்மீது சாபம் உண்டாகும். அவர்களுக்கு மோசமான தங்குமிடமிமும் உண்டு.
53. மூஸாவுக்கு நாம் நேர்வழியைக் கொடுத்தோம். இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்.
54. (அது) நேர்வழியாகவும், அறிவுடையோருக்கு அறிவுரையாகவும் இருந்தது.
55. (நபியே!) பொறுமையை மேற்கொள்வீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. உமது பாவத்திற்காக நீர் மன்னிப்புக் கோருவீராக! மாலையிலும், காலையிலும் உமது இறைவனின் புகழைக் கொண்டு போற்றுவீராக!
56. தம்மிடம் எந்த ஆதாரமும் வராமலேயே அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்வோருடைய உள்ளங்களில் ஆதிக்க மனப்பான்மையைத் தவிர வேறில்லை. அதை அவர்கள் அடையப் போவதில்லை. எனவே (நபியே!) அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவனே செவியுறுபவன்; பார்ப்பவன்.
57. மனிதர்களைப் படைப்பதைவிட வானங்களையும், பூமியையும் படைப்பது மிகப் பெரியதாகும். எனினும், (இதனை) மனிதர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்வதில்லை.
58. பார்வையற்றவனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள். இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோரும், தீமை செய்வோரும் சமமாக மாட்டார்கள். குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.
59. உலகம் அழியும் நேரம் வரக்கூடியதே! அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இறைநம்பிக்கை கொள்வதில்லை.
60. “என்னிடம் பிரார்த்தியுங்கள்! நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன். என்னை வணங்குவதை விட்டும் கர்வம் கொள்வோர் இழிவடைந்தோராக நரகத்தில் நுழைவார்கள்” என உங்கள் இறைவன் கூறுகிறான்.452
61. இரவுநேரத்தை, அதில் நீங்கள் மனநிம்மதி பெறுவதற்காகவும், பகற்பொழுதைப் பார்ப்பதற்குரியதாகவும் அல்லாஹ்வே உங்களுக்காக ஏற்படுத்தினான். மனிதர்கள்மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
62. அவனே அல்லாஹ்! உங்கள் இறைவன். அனைத்துப் பொருட்களையும் படைத்தவன். அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. நீங்கள் எங்கே திசை திருப்பப்படுகிறீர்கள்?
63. அல்லாஹ்வின் வசனங்களை மறுத்துக் கொண்டிருந்தோரும் இவ்வாறே திசை திருப்பப்படுகிறார்கள்.
64. அல்லாஹ்தான் உங்களுக்கு பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை மேற்கூரையாகவும் ஆக்கினான். உங்களை வடிவமைத்து, உங்கள் தோற்றங்களை அழகாக்கினான். தூயவற்றிருந்து உங்களுக்கு உணவளித்தான். அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்! அகிலங்களின் இறைவன் அல்லாஹ் பாக்கியமிக்கவன்.
65. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனைத் தவிர எந்தக் கடவுளுமில்லை. அவனுக்கே வணக்கத்தை உரித்தாக்கி, அவனிடம் பிரார்த்தியுங்கள்! அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
66. “என் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகள் என்னிடம் வந்துள்ள நிலையில், அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களா அவர்களை வணங்குவதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளேன். அகிலங்களின் இறைவனுக்கே நான் கட்டுப்பட வேண்டும் எனவும் பணிக்கப்பட்டுள்ளேன்” என்று (நபியே!) கூறுவீராக!
67. அவனே, உங்களை (தொடக்கத்தில்) மண்ணிலிருந்தும், பின்னர் விந்துத் துளியிலிருந்தும், பின்னர் சூல்கொண்ட கருமுட்டையிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறான். அதன் பின்னர், நீங்கள் பருவ வயதை அடைவதற்காகவும், பிறகு வயோதிகர்கள் ஆவதற்காகவும் (உங்களை வாழ வைக்கிறான்). இதற்கு முன்பே உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். குறிப்பிட்ட தவணையை நீங்கள் அடைவதற்காக (விட்டுவைக்கப்படுவோரும் உள்ளனர்.) இதன்மூலம் நீங்கள் விளங்கிக் கொள்வோராக ஆகலாம்.
68. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்க வைக்கிறான். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கும்போது அதற்கு ‘ஆகு’ என்றுதான் கூறுவான். உடனே அது ஆகிவிடும்.
69. அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்வோர் எங்கே திசை திருப்பப்படுகிறார்கள் என்பதை நீர் சிந்திக்கவில்லையா?
70. அவர்களே இவ்வேத்தையும், எதைக் கொண்டு நமது தூதர்களை அனுப்பி வைத்தோமோ அதையும் பொய்யெனக் கூறினர். (இதன் பலனை) அறிந்து கொள்வார்கள்.
71, 72. அவர்களின் கழுத்துகளில் விலங்குகளும் சங்கிலிகளும் இருக்கும். அப்போது கொதிநீருக்குள் இழுத்து வரப்படுவார்கள். பின்னர் நரகத்தில் எரிக்கப்படுவார்கள்.
73, 74. பின்னர், “அல்லாஹ்வையன்றி நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே?” என்று அவர்களிடம் கேட்கப்படும். “அவை எங்களை விட்டும் மறைந்து விட்டன. எனினும், இதற்குமுன் (அல்லாஹ்வையன்றி) எந்த ஒன்றையும் நாங்கள் அழைத்துக் கொண்டிருக்கவில்லை!” எனக் கூறுவார்கள். இவ்வாறே இறைமறுப்பாளர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறான்.
75. நீங்கள் பூமியில் உண்மைக்குப் புறம்பானதைக் கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்ததும், நீங்கள் அகந்தை கொண்டிருந்ததுமே இதற்குக் காரணம்.
76. “நரகத்தின் வாயில்களில் நுழையுங்கள்! அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். கர்வம் கொண்டோரின் தங்குமிடம் மிகக் கெட்டது” (என்று கூறப்படும்.)
77. (நபியே!) பொறுமையை மேற்கொள்வீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. அவர்களுக்கு நாம் வாக்களித்ததில் சிலவற்றை உமக்குக் காண்பித்தாலோ, அல்லது உம்மை நாம் கைப்பற்றி விட்டாலோ அவர்கள் நம்மிடமே மீண்டும் கொண்டு வரப்படுவார்கள்.
78. உமக்கு முன்னரும் தூதர்களை அனுப்பியுள்ளோம். அவர்களில் ஒருசிலரின் வரலாற்றை உமக்கு அறிவித்துள்ளோம். ஒருசிலரின் வரலாற்றை உமக்கு நாம் அறிவிக்கவில்லை. எந்தத் தூதராலும் அல்லாஹ்வின் ஆணையின்றி அற்புதத்தைக் கொண்டு வர முடியாது. அல்லாஹ்வின் ஆணை வரும்போது நீதியுடன் தீர்ப்பளிக்கப்படும். அங்கே பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.
79. நீங்கள் கால்நடைகளில் சவாரி செய்யும்பொருட்டு அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வே படைத்தான். அவற்றிலிருந்து நீங்கள் சாப்பிடுகிறீர்கள்.
80. அவற்றில் உங்களுக்கு (வேறுபல) பலன்களும் உள்ளன. அவற்றின்மீது (சவாரி செய்து) உங்கள் உள்ளங்களிலுள்ள தேவைகளை அடைந்து கொள்வதற்காகவும் (அவற்றைப் படைத்தான்). அவற்றின்மீதும், கப்பல்களிலும் சுமந்து செல்லப்படுகிறீர்கள்.
81. அவன், தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான். அல்லாஹ்வின் சான்றுகளில் எதை மறுப்பீர்கள்?
82. இவர்கள் பூமியில் பயணித்துத் தமக்கு முன்னிருந்தோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பார்க்க வேண்டாமா? அவர்கள் இவர்களைவிட அதிகமானவர்களாகவும், (உடல்) பலத்திலும், பூமியில் விட்டுச் சென்ற அடையாளங்களிலும் வலிமைமிக்கவர்களாகவும் இருந்தனர். அவர்கள் ஈட்டிக் கொண்டிருந்த எதுவும் அவர்களைக் காப்பாற்றவில்லை.
83. அவர்களிடம், அவர்களுக்கான தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது, தம்மிடமுள்ள கல்வியின் காரணத்தால் கர்வம் கொண்டனர். அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது.
84. அவர்கள் நமது தண்டனையைக் கண்டபோது “நாங்கள் அல்லாஹ்வை மட்டும் நம்பிக்கை கொள்கிறோம். அவனுக்கு நாங்கள் இணையாக்கிக் கொண்டிருந்தவற்றை மறுத்து விட்டோம்” என்று கூறினார்கள்.
85. அவர்கள் நமது தண்டனையைக் கண்டபோது, அவர்களின் இறைநம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. இதுவே தனது அடியார்கள் விஷயத்தில் நடந்தேறிய அல்லாஹ்வின் வழிமுறை. அந்நேரத்தில் இறைமறுப்பாளர்கள் நஷ்டமடைந்தனர்.