அத்தியாயம் : 74
வசனங்களின் எண்ணிக்கை: 56
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1, 2. போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்து, (மக்களை) எச்சரிப்பீராக!601
3. உம் இறைவனைப் பெருமைப்படுத்துவீராக!
4. உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக்கிக் கொள்வீராக!
5. அசுத்தத்தை விட்டும் விலகியிருப்பீராக!
6. அதிகம் பெறுவதை எதிர்பார்த்து உதவி செய்யாதீர்!
7. உம் இறைவனுக்காகப் பொறுமையை மேற்கொள்வீராக!
8, 9, 10. ஸூர் ஊதப்படும்போது, அந்த நாள் இறைமறுப்பாளர்களுக்கு மிகவும் கடுமையான நாள்! (அது) எளிதாக இருக்காது.
11. என்னையும், நான் தனித்தவனாக இருந்து யாரைப் படைத்தேனோ அவனையும் விட்டுவிடுவீராக!
12, 13, 14. அவனுக்கு அதிகமான செல்வத்தையும், அவனுடனே இருக்கும் ஆண்மக்களையும் வழங்கியுள்ளேன். (வாழ்வதற்குத்) தேவையான தயாரிப்புகளை அவனுக்குச் செய்து கொடுத்தேன்.
15. இன்னும் நான் அதிகமாக வழங்க வேண்டும் என அவன் விரும்புகிறான்.
16. அவ்வாறல்ல! அவன் நமது வசனங்கள் விஷயத்தில் (ஏற்க மறுத்து) பிடிவாதக்காரனாக இருந்தான்.
17. அவனைக் கடும் வேதனையில் தள்ளுவேன்.
18. அவன் (இக்குர்ஆனைச்) சிந்தித்து, (அதற்கு எதிராகத்) திட்டம் தீட்டினான்.
19. எனவே அவன் சபிக்கப்பட்டான். எப்படித் திட்டம் தீட்டினான்?
20. மேலும் அவன் சபிக்கப்பட்டான். எப்படித் திட்டம் தீட்டினான்?
21, 22. பின்னரும் சிந்தித்தான்; பிறகு கடுகடுத்தான்; முகம் சுளித்தான்.
23. பின்னர் திரும்பிச் சென்றான்; கர்வம் கொண்டான்.
24, 25. “இது தொன்றுதொட்டுச் சொல்லப்படும் சூனியமே! இது மனிதக் கூற்றைத் தவிர வேறில்லை” என்று அவன் கூறினான்.
26. அவனை ஸகர் எனும் நரகத்தில் நுழையச் செய்வேன்.
27. ஸகர் என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
28. அது (எவரையும்) மீதம் வைக்காது. விட்டுவிடவும் செய்யாது.
29. (அது) உடலைக் கரித்துவிடக் கூடியது.
30. அதன்மீது (வானவர்கள்) பத்தொன்பது பேர் உள்ளனர்.
31. வானவர்களையே நரகத்தின் காவலர்களாக நாம் ஆக்கியுள்ளோம். அவர்களின் எண்ணிக்கையை இறைமறுப்பாளர்களுக்குச் சோதனையாகவே ஆக்கியுள்ளோம். வேதமுடையோர் இதனை உறுதியாக நம்புவதற்காகவும், இறைநம்பிக்கை கொண்டோர் தமது இறைநம்பிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காகவும், வேதக்காரர்களும், இறைநம்பிக்கை கொண்டோரும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்காகவும் (இவ்வாறு செய்தோம்.) “இந்த எடுத்துக்காட்டின் மூலம் அல்லாஹ் என்ன நாடினான்?” என்று உள்ளங்களில் நோயுடையோரும், இறைமறுப்பாளர்களும் கேட்பதற்காகவும் (இவ்வாறு செய்தோம்.) இவ்வாறே அல்லாஹ், தான் நாடியோரை வழிகேட்டில் விட்டுவிடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகின்றான். உமது இறைவனின் படையினரை, அவனைத் தவிர யாரும் அறிய முடியாது. இது மனிதர்களுக்கு அறிவுரையே தவிர வேறில்லை.
32. அதுமட்டுமல்ல! சந்திரன்மீது சத்தியமாக!
33. பின்னோக்கிச் செல்லும்போதுள்ள இரவின்மீது சத்தியமாக!
34. வெளிச்சமாகும்போதுள்ள காலைப்பொழுதின்மீது சத்தியமாக!
35. அ(ந் நரகமான)து மிகப் பெரிய (சோதனைகளில்) ஒன்றாகும்.
36, 37. (அது) உங்களில் (நன்மையில்) முந்தவோ, பிந்தவோ விரும்பும் மனிதர்களை எச்சரிக்கக் கூடியதாகும்.
38. ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றுக்குப் பிணையாக்கப் பட்டுள்ளான்.
39, 40, 41, 42. எனினும் வலதுபுறத்திற்குரியோர் சொர்க்கங்களில் இருப்பார்கள். அவர்கள் குற்றவாளிகளை நோக்கி, “உங்களை நரகத்தில் தள்ளியது எது?” என்று விசாரிப்பார்கள்.
43, 44, 45, 46, 47. அதற்கு “நாங்கள் தொழுகையாளிகளாக இருக்கவில்லை. ஏழைகளுக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை. வீணானவற்றில் மூழ்கிக் கிடந்தோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு மரணம் வரும்வரை (இவ்வாறே இருந்தோம்)” என்று பதிலளிப்பார்கள்.
48. எனவே பரிந்துரை செய்வோரின் பரிந்துரை அவர்களுக்குப் பயனளிக்காது.
49. இந்த அறிவுரையை விட்டும் புறக்கணிப்பவர்களாக இருக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?
50, 51. அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டோடுகின்ற கழுதைகளைப் போல் உள்ளனர்.
52. எனினும், அவர்களுள் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட ஏடுகள் தனக்கு வழங்கப்பட வேண்டும் என விரும்புகிறான்.
53. அவ்வாறல்ல! எனினும் அவர்கள் மறுமையைப் பற்றி அஞ்சுவதில்லை.
54. மேலும், இது ஓர் அறிவுரையாகும்.
55. எனவே, விரும்பியவர் இதில் படிப்பினை பெற்றுக் கொள்ளட்டும்.
56. அல்லாஹ் நாடினாலே தவிர அவர்கள் படிப்பினை பெற மாட்டார்கள். அவனே அஞ்சுவதற்குத் தகுதியானவன். மன்னிப்பை உடையவன்.