அத்தியாயம் : 5 அல்மாயிதா – உணவுத் தட்டு

அத்தியாயம் : 5

வசனங்களின் எண்ணிக்கை: 120

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. இறைநம்பிக்கை கொண்டோரே! உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள்.137 (இவ்வேதத்தில்) எவை உங்களுக்குக் கூறப்படுகின்றனவோ அவற்றைத் தவிர ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும் நீங்கள் இஹ்ராமில் இருக்கும்போது வேட்டையாட அனுமதி இல்லை. தான் விரும்பியதை அல்லாஹ் சட்டமாக்குகிறான்.138
2. இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் ஏற்படுத்திய அடையாளங்கள், புனித மாதம், பலிப் பிராணி, மாலையிடப்பட்ட பலிப் பிராணிகள், தமது இறைவனின் அருளையும், பொருத்தத்தையும் தேடி இந்தப் புனித ஆலயத்தை நாடி வருவோர் ஆகிய(வை தொடர்பாக அல்லாஹ் தடுத்த)வற்றை ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்!139 நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டால் வேட்டையாடிக்கொள்ளுங்கள்! மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் உங்களை யார் தடுத்தார்களோ அந்தச் சமுதாயத்தின்மீதான வெறுப்பு, உங்களை வரம்பு மீறுவதற்குத் தூண்ட வேண்டாம்! நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்! பாவத்திலும் பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.140
3. (தாமாகச்) செத்தவை, (ஓட்டப்பட்ட) இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டவை ஆகியவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிபட்டவை, அடிபட்டவை, (மேலிருந்து) உருண்டு விழுந்தவை, கொம்பால் முட்டப்பட்டவை, வேட்டையாடும் பிராணிகள் கடித்தவை ஆகியவற்றில் (அவை இறக்கும் முன்) நீங்கள் (முறைப்படி) அறுத்தவற்றைத் தவிர (இவற்றில் செத்தவையும்), பலிபீடங்களில் அறுக்கப்பட்டவையும் (தடுக்கப்பட்டுள்ளன.) அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (தடுக்கப்பட்டுள்ளது.) இது பாவச் செயலாகும். இன்று இறைமறுப்பாளர்கள் உங்கள் மார்க்கத்(தை அழித்து விடலாம் என்ப)தில் நம்பிக்கையிழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு நிறைவாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன். பாவச்செயல் செய்யும் எண்ணமின்றிப் பசியால் யாரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டால் அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.141
4. தமக்கு அனுமதிக்கப்பட்டவை எவை என உம்மிடம் கேட்கின்றனர். “தூய்மையானவையும், அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவாறு நீங்கள் பயிற்சியளித்த வேட்டைப் பிராணிகள் வேட்டையாடியவையும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே, அவை உங்களுக்காகப் பிடித்துக் கொண்டு வந்தவற்றை உண்ணுங்கள்!” என்று கூறுவீராக! (வேட்டைக்கு அனுப்பும்போது) அதில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.142
5. இன்றைய தினம், தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் வழங்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதி; உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதியாகும். இறைநம்பிக்கை கொண்ட ஒழுக்கமான பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் வழங்கப்பட்டோரிலுள்ள ஒழுக்கமான பெண்களையும் விபச்சாரமாகவோ, கள்ளக் காதலாகவோ இல்லாமல் அவர்களுக்குரிய திருமணக் கொடைகளைக் கொடுத்து திருமணம் செய்து கொள்வதும் (அனுமதிக்கப்பட்டுள்ளது.) இறைநம்பிக்கையை யார் மறுக்கிறாரோ அவரது நற்செயல்கள் அழிந்து விடும். அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் இருப்பார்.
6. இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்குத் தயாரானால் உங்கள் முகங்களையும், முழங்கைகள்வரை உங்கள் கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளைத் தடவிக் கொள்ளுங்கள்! கணுக்கால்கள்வரை உங்கள் கால்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்!) நீங்கள் குளிப்புக் கடமையானோராக இருந்தால் குளித்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால் அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டியிருந்தால் (தூய்மை செய்யத்) தண்ணீர் கிடைக்காதபோது சுத்தமான மண்ணைக் கொண்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவி ‘தயம்மும்’ செய்து கொள்ளுங்கள்! உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்த அல்லாஹ் விரும்பவில்லை. மாறாக, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருட்கொடையை உங்களுக்கு நிறைவாக்கவுமே விரும்புகிறான்.143
7. அல்லாஹ், உங்கள்மீது புரிந்துள்ள அருட்கொடையையும், உங்களிடம் அவன் எதை உறுதிமொழியாகப் பெற்றானோ அந்த உடன்படிக்கையையும் நினைத்துப் பாருங்கள். அப்போது “செவியுற்றோம், கட்டுப்பட்டோம்” என்று கூறினீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
8. இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்காக (உண்மையை) நிலைநாட்டுவோராகவும், நீதிக்குச் சாட்சி கூறுவோராகவும் ஆகிவிடுங்கள். ஒரு சமுதாயத்தின்மீதுள்ள வெறுப்பு நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செலுத்துங்கள்! அதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
9. யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உள்ளது என அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
10. யார் (நம்மை) மறுத்து, நமது வசனங்களைப் பொய்யெனக் கூறினார்களோ அவர்களே நரகவாசிகள்.
11. இறைநம்பிக்கை கொண்டோரே! ஒரு கூட்டத்தினர் உங்களுக்கு எதிராகத் தமது கைகளை நீட்டத் தீர்மானித்தபோது, அவர்களின் கைகளை உங்களை விட்டும் தடுத்து, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை நினைத்துப் பாருங்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.
12. இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் அல்லாஹ் வாக்குறுதி வாங்கினான். அவர்களில் பன்னிரண்டு தலைவர்களை அனுப்பினோம். “நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தைக் கொடுத்து, என்னுடைய தூதர்களை நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு உதவி புரிந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனும் கொடுத்தால் உங்களை விட்டும் உங்களது தீமைகளை அழிப்பேன். உங்களைச் சொர்க்கங்களில் நுழையச் செய்வேன். அவற்றின்கீழ் ஆறுகள் ஓடும். இதற்குப் பின்னரும் உங்களில் யார் மறுக்கிறாரோ அவர் நேர்வழி தவறிவிட்டார்” என்று அல்லாஹ் கூறினான்.
13. அவர்கள் தமது வாக்குறுதிக்கு மாறு செய்ததால் அவர்களைச் சபித்தோம். அவர்களின் உள்ளங்களை இறுகச் செய்தோம். அவர்கள் (வேத) வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் மாற்றுகின்றனர். அவர்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரையின் ஒரு பகுதியை மறந்தனர். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் ஒரு மோசடியைக் கண்டுகொண்டே இருப்பீர். எனவே அவர்களை மன்னித்து, அலட்சியம் செய்வீராக! நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
14. “நாங்கள் கிறித்தவர்கள்” என்று கூறியோரிடமும் வாக்குறுதி வாங்கினோம். அவர்கள் தமக்குச் சொல்லப்பட்ட அறிவுரையின் ஒரு பகுதியை மறந்தனர். மறுமை நாள் வரை அவர்களுக்கிடையே பகைமையையும் வெறுப்பையும் விதைத்தோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களுக்கு அல்லாஹ் அறிவிப்பான்.
15. வேதமுடையோரே! நமது தூதர் உங்களிடம் வந்துவிட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். மேலும், அதிகமானவற்றைக் கண்டுகொள்ளாது விடுவார். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும் தெளிவான வேதமும் வந்துவிட்டது.
16. தனது பொருத்தத்தைப் பின்பற்றுவோரை இதன் மூலம் அல்லாஹ் அமைதியின் வழிகளில் செலுத்துகிறான். தனது நாட்டப்படி அவர்களை இருள்களிலிருந்து ஒளியை நோக்கிக் கொண்டு செல்கிறான். மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.
17. “அல்லாஹ்தான் மர்யமின் மகன் மஸீஹ்” என்று கூறியோர் இறைமறுப்பாளர்களாகி விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், உலகிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அவர்களைக் காக்க) சிறிதேனும் ஆற்றல் பெற்றவர் யார்?” என்று கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடியதை அவன் படைக்கிறான். அனைத்துப் பொருட்கள்மீதும் அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்.
18. “நாங்கள் அல்லாஹ்வின் புதல்வர்கள், அவனது நேசர்கள்” என்று யூதர்களும் கிறித்தவர்களும் கூறுகின்றனர். “அவ்வாறெனில் உங்கள் பாவங்களுக்காக அவன் ஏன் உங்களைத் தண்டிக்கிறான்? நீங்களும் அவன் படைத்த மனிதர்களே!” என்று கூறுவீராக! தான் நாடியோரை அவன் மன்னிக்கிறான்; மேலும், தான் நாடியோரை அவன் தண்டிக்கிறான். வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே மீளுதல் உள்ளது.
19. வேதமுடையோரே! “நற்செய்தி கூறுபவர், எச்சரிப்பவர் யாரும் எங்களிடம் வரவில்லை” என்று நீங்கள் கூறாதிருப்பதற்காக, தூதர்கள் வராத இடைப்பட்ட காலத்தில் உங்களுக்குத் தெளிவுபடுத்தும் நமது தூதர் உங்களிடம் வந்துள்ளார். நற்செய்தி கூறுபவரும் எச்சரிப்பவரும் உங்களிடம் வந்துவிட்டார். அனைத்துப் பொருட்கள்மீதும் அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்.
20. மூஸா தமது சமுதாயத்தாரிடம், “என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்! உங்களிலிருந்து நபிமார்களை ஏற்படுத்தி, உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கி, அகிலத்தாரில் யாருக்கும் வழங்காததை உங்களுக்கு வழங்கினான்” என்று கூறியதை நினைவூட்டுவீராக!
21. “என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்காக நிர்ணயித்துள்ள இப்புனித பூமியில் நுழையுங்கள்! புறமுதுகு காட்டி ஓடாதீர்கள்! அவ்வாறு செய்தால் நீங்கள் நஷ்டமடைந்தோராக மாறிவிடுவீர்கள்” (என்றும் கூறினார்)
22. “மூஸாவே! அங்கு மிகவும் வலிமை வாய்ந்த கூட்டத்தினர் உள்ளனர். அவர்கள் அங்கிருந்து வெளியேறும் வரை நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அங்கிருந்து வெளியேறினால் நாங்கள் நுழைவோம்” என அவர்கள் கூறினர்.
23. (இவ்வாறு) பயந்து கொண்டிருந்தவர்களில் அல்லாஹ் அருள்புரிந்த இருவர், “அவர்களை எதிர்த்து இவ்வாசலில் நுழையுங்கள்! நீங்கள் அதில் நுழைந்து விட்டால் நீங்களே வெற்றியாளர்கள். நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வின்மீதே முழு நம்பிக்கை வையுங்கள்!” என்று கூறினர்.
24. “மூஸாவே! அங்கே அவர்கள் இருக்கும்வரை நாங்கள் அதில் ஒருபோதும் நுழையவே மாட்டோம். எனவே, நீரும் உமது இறைவனும் சென்று போரிடுங்கள்! நாங்கள் இங்கேயே அமர்ந்து கொள்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.144
25. “என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (யார்மீதும்) எனக்கு அதிகாரம் இல்லை. எனவே, பாவிகளான இக்கூட்டத்திற்கும் எங்களுக்குமிடையில் பிரிவை ஏற்படுத்துவாயாக!” என்று (மூஸா) கூறினார்.
26. “அந்த இடம் அவர்களுக்கு நாற்பது ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பூமியில் (நாடோடிகளாக) அலைந்து திரிவார்கள். பாவிகளான இக்கூட்டத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்!” என்று (இறைவன்) கூறினான்.
27. ஆதமுடைய இரு மகன்களின் உண்மைச் செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருவரும் இறைநெருக்கத்திற்குரிய ஒரு வணக்கத்தைச் செய்தபோது அவர்களில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது; மற்றொருவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவன் “நான் உன்னைக் கொல்வேன்” என்று கூறினான். “அல்லாஹ் ஏற்றுக் கொள்வதெல்லாம் இறையச்சமுடையோரிடமிருந்துதான்” என்று (முதலாமவர்) கூறினார்.145
28, 29. “என்னைக் கொல்ல உனது கையை என்னை நோக்கி நீட்டினாலும், நான் உன்னைக் கொல்ல எனது கையை உன்னை நோக்கி நீட்ட மாட்டேன். அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வை அஞ்சுகிறேன். உனது பாவத்துடன் என்(னைக் கொன்றதால் ஏற்பட்ட) பாவத்தையும் நீ சுமந்து வருவாய் என்றே எண்ணுகிறேன். இதனால் நீ நரகவாசிகளில் ஒருவனாகி விடுவாய். இதுவே அநியாயக்காரர்களுக்கான கூலி” (என்றும் கூறினார்.)
30. எனினும், தன் சகோதரனைக் கொல்லுமாறு அவனது உள்ளம் அவனைத் தூண்டியது. எனவே அவரைக் கொன்றான். இதனால் அவன் நஷ்டமடைந்தோரில் ஒருவனாகி விட்டான்.146
31. அவனுக்குத் தன் சகோதரனின் சடலத்தை எப்படி மறைக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. “கைச்சேதமே! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட இயலாமல் ஆகி விட்டேனே! அப்படி இருந்திருந்தால் என் சகோதரனின் சடலத்தை மறைத்திருப்பேனே!” எனக் கூறி, வருத்தப்படுபவனாக ஆனான்.
32. இதன் காரணமாகவே, “கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் குழப்பம் செய்ததற்காகவோ தவிர, ஒரு மனிதரைக் கொலை செய்தவர் அனைத்து மனிதர்களையும் கொலை செய்தவரைப் போன்றவர் ஆவார்; ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவரைப் போன்றவர் ஆவார்” என இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு விதியாக்கினோம். நமது தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அதன் பின்னரும் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.
33. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் எதிராகப் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்ய முயல்வோருக்கான தண்டனை, அவர்கள் கொல்லப்படுதல் அல்லது சிலுவையில் அறையப்படுதல் அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுதல் அல்லது நாடு கடத்தப்படுதல் ஆகியவையாகும். இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். மறுமையிலும் அவர்களுக்குக் கடும் வேதனை உள்ளது.147
34. நீங்கள் அவர்கள்மீது (தண்டனையளிக்க) ஆற்றல் பெறுவதற்கு முன் திருந்திக் கொள்வோரைத் தவிர! அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், நிகரிலா அன்பாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
35. இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். (வணக்க வழிபாடுகள் மூலம்) அவன் பக்கம் நெருங்கும் வழியைத் தேடிக் கொள்ளுங்கள்! அவனது பாதையில் போரிடுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள்.
36. இறைமறுப்பாளர்களிடம் பூமியிலுள்ள அனைத்தும், அத்துடன் அதைப் போன்று (இன்னொரு மடங்கு)ம் இருந்து, அவற்றை அவர்கள் மறுமை நாளின் வேதனைக்கு ஈடாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உள்ளது.148
37. அவர்கள் நரகத்திலிருந்து வெளியேற எண்ணுவார்கள். ஆனால் அவர்களால் அதிலிருந்து வெளியேற முடியாது. அவர்களுக்கு நிலையான வேதனையும் உள்ளது.
38. திருடன், திருடி ஆகிய இருவரும் செய்த (திருட்டுச்) செயலுக்குக் கூலியாகவும், அல்லாஹ்வின் தண்டனையாகவும் அவர்களின் கைகளை வெட்டி விடுங்கள்! அல்லாஹ் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
39. தான் செய்த அநியாயத்திற்குப் பிறகு பாவ மன்னிப்புக் கோரி, சீர்திருத்திக் கொள்பவரை அல்லாஹ் மன்னிக்கிறான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், நிகரிலா அன்பாளன்.
40. வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியவர்களை அவன் தண்டிக்கிறான்; தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். அனைத்துப் பொருட்கள்மீதும் அல்லாஹ் ஆற்றல் மிக்கவன்.
41. தூதரே! அவர்களின் உள்ளங்கள் இறைநம்பிக்கை கொள்ளாத நிலையில் தமது உதட்டளவில் ‘இறைநம்பிக்கை கொண்டோம்’ என்று கூறுவோரும், யூதர்களும் இறைமறுப்பில் விரைந்து செல்வது உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்கள் பொய்யையே அதிகம் செவியேற்பவர்கள். உம்மிடம் வராத மற்றொரு கூட்டத்திற்காகவே அதிகம் செவியேற்கின்றனர். சொற்களை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றுகின்றனர். “(நீங்கள் விரும்பக்கூடிய) அது உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்! அது உங்களுக்கு வழங்கப்படா விட்டால் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!” என்று கூறுகின்றனர். யாரை அல்லாஹ் குழப்பத்தில் ஆழ்த்த நாடிவிட்டானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து எந்த ஒன்றுக்கும் நீர் சக்தி பெற மாட்டீர். அவர்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்த அல்லாஹ் விரும்பவில்லை. இவ்வுலகில் அவர்களுக்கு இழிவும், மறுமையில் அவர்களுக்குக் கடும் வேதனையும் உள்ளது.149
42. அவர்கள் பொய்யை அதிகம் செவியேற்பவர்கள். தடை செய்யப்பட்டதை அதிகம் உண்பவர்கள். அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பீராக! அல்லது அவர்களைப் புறக்கணிப்பீராக! நீர் அவர்களைப் புறக்கணித்தால் அவர்களால் உமக்குச் சிறிதும் தீங்கிழைக்க முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களுக்கிடையே நீதியாகத் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரையே அல்லாஹ் நேசிக்கிறான்.150
43. அவர்களிடம் அல்லாஹ்வின் சட்டத்தை உள்ளடக்கிய தவ்ராத் இருக்கிறது. இதற்குப் பின்னரும் அவர்கள் புறக்கணிக்கும் நிலையில், உம்மை எப்படி அவர்கள் நீதிபதியாக ஏற்றுக் கொள்வார்கள்? அவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் அல்ல!
44. நேர்வழியும், ஒளியும் கொண்ட தவ்ராத்தை நாமே அருளினோம். (அல்லாஹ்வுக்குக்) கீழ்ப்படிந்த நபிமார்களும், இறைவனைச் சார்ந்தோரும், அறிஞர்களும் அதைக் கொண்டே யூதர்களுக்குத் தீர்ப்பளித்து வந்தனர். ஏனெனில் அவர்கள், அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்குமாறு பணிக்கப்பட்டிருந்தனர். அவர்களே அதற்கு சாட்சிகளாகவும் இருந்தனர். எனவே மக்களுக்குப் பயப்படாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! என் வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! அல்லாஹ் அருளியதைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்களே இறைமறுப்பாளர்கள்.
45. “உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், உடற்காயங்களுக்கு(ச் சம அளவில்) பழிவாங்குதல்” என அதில் அவர்களுக்கு விதியாக்கியிருந்தோம். யாரேனும் அதை (மன்னித்துத்) தர்மமாக விட்டு விட்டால் அது அவருக்குப் பாவப் பரிகாரமாக அமையும். அல்லாஹ் அருளியதைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்களே அநியாயக்காரர்கள்.151
46. அவர்களின் அடிச்சுவடுகளில் மர்யமின் மகன் ஈஸாவைத் தொடரச் செய்தோம். அவர் தனக்கு முன்னிருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக இருந்தார். அவருக்கு, நேர்வழியும் ஒளியும் கொண்ட இன்ஜீலை வழங்கினோம். அது, தனக்கு முன்னிருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாகவும், இறையச்சமுடையோருக்கு நேர்வழிகாட்டியாகவும் அறிவுரையாகவும் இருந்தது.
47. இன்ஜீல் வழங்கப்பட்டோர், அதில் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளிக்கட்டும்! அல்லாஹ் அருளியதைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்களே பாவிகள்.
48. (நபியே!) உண்மையுடன் இவ்வேதத்தை உமக்கு அருளியுள்ளோம். இது தனக்கு முன்னிருந்த வேதத்தை உண்மைப்படுத்துவதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் உள்ளது. அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் உண்மை வந்த பிறகு அதை விடுத்து, அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்! உங்களில் ஒவ்வொருவருக்கும் மார்க்கச் சட்டத்தையும் வழிமுறையையும் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். மாறாக, அவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காகவே (ஒரே சமுதாயமாக்கவில்லை.) எனவே, நன்மைகளில் முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்லவேண்டியுள்ளது. நீங்கள் எவற்றில் கருத்துவேறுபாடு கொண்டிருந்தீர்களோ அவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
49. அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் உம்மைக் குழப்பிவிடாதபடி அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால், அவர்களுடைய சில பாவச் செயல்களின் காரணமாக அவர்களைத் தண்டிக்கவே அல்லாஹ் விரும்புகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் பாவிகளாகவே உள்ளனர்.
50. அறியாமைக் கால தீர்ப்பைத்தான் அவர்கள் விரும்புகிறார்களா? உறுதியாக நம்பும் சமுதாயத்திற்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவன் யார்?
51. இறைநம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும் கிறித்தவர்களையும் பொறுப்பாளர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்களில் சிலர், வேறு சிலருக்குப் பொறுப்பாளர்களாக உள்ளனர். உங்களில் யார் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே! அநியாயக்காரக் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
52. தமது உள்ளங்களில் நோயுள்ளவர்கள், (வேதமுடைய) அவர்களை நோக்கி விரைந்து செல்வதை நீர் காண்பீர். “எங்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படும் என அஞ்சுகிறோம்” என்று கூறுகின்றனர். அல்லாஹ் (உங்களுக்கு) வெற்றியையோ அல்லது தன்னிடமிருந்து ஒரு கட்டளையையோ கொண்டு வரலாம். அப்போது தமது உள்ளங்களில் எதை மறைத்தார்களோ அதற்காக அவர்கள் கவலைப்படுவார்கள்.
53. “நாங்கள் உங்களுடனே இருக்கிறோம்’ என அல்லாஹ்வின்மீது உறுதியாகச் சத்தியம் செய்தவர்கள் இவர்கள்தாமா?” என்று இறைநம்பிக்கை கொண்டோர் (நயவஞ்சகர்களை நோக்கி மறுமையில்) கூறுவார்கள். அவர்களின் நற்செயல்கள் அழிந்து, நஷ்டமடைந்தோராகி விட்டனர்.
54. இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களில் எவரும் தமது மார்க்கத்தை விட்டும் தடம் மாறிவிட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் பணிவாகவும், இறைமறுப்பாளர்களிடம் கடுமையாகவும் இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். பழிப்போரின் பழிப்புக்கு அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடியோருக்கு அதை வழங்குகிறான். அல்லாஹ் விசாலமானவன்; நன்கறிந்தவன்.152
55. அல்லாஹ்வும், அவனது தூதரும், இறைநம்பிக்கை கொண்டோருமே உங்களது பொறுப்பாளர்கள். (இறைநம்பிக்கை கொண்ட) அவர்கள் பணிந்தவர்களாகத் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவார்கள்.
56. யார் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், இறைநம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்டார்களோ அத்தகைய அல்லாஹ்வின் படையினரே வெற்றியாளர்கள்.
57. இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரில் உங்கள் மார்க்கத்தை ஏளனமாகவும் விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரையும், இறைமறுப்பாளர்களையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
58. நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதை அவர்கள் ஏளனமாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் விளங்கிக் கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.
59. “வேதமுடையோரே! அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இதற்கு முன்னர் அருளப்பட்டதையும் நாங்கள் நம்பியதற்காகவே தவிர (வேறெதற்கும்) எங்களைக் குறை கூறுகிறீர்களா? உங்களில் அதிகமானோர் பாவிகளே!” என்று கூறுவீராக!
60. “அல்லாஹ்விடம் இதைவிட மோசமான பலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? யாரை அல்லாஹ் சபித்து, அவர்கள்மீது கோபமுற்று, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் சிலரைப் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வணங்கியோருமே தரங்கெட்டவர்கள்; நேர்வழியிலிருந்து தவறியவர்கள்” என்று கூறுவீராக!153
61. அவர்கள் உங்களிடம் வரும்போது, “இறைநம்பிக்கை கொண்டோம்” என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் இறைமறுப்புடனே நுழைந்தனர்; அதனுடனே வெளியேறியும் விட்டனர். அவர்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.
62. அவர்களில் அதிகமானோர் பாவத்திலும், பகைமையிலும், தடை செய்யப்பட்டதை உண்பதிலும் விரைந்து செல்வதை நீர் காண்பீர். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகக் கெட்டது.
63. அவர்களின் பாவமான பேச்சிலிருந்தும், தடை செய்யப்பட்டதை அவர்கள் உண்பதிலிருந்தும் இறைவனைச் சார்ந்தோரும் அறிஞர்களும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகக் கெட்டது.
64. “அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது” என யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியதால் சபிக்கப்பட்டனர். மாறாக, அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. தான் நாடியவாறு அவன் வழங்குகிறான். உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டது, அவர்களில் அதிகமானோருக்கு வரம்பு மீறுதலையும் இறைமறுப்பையுமே அதிகரிக்கிறது. மறுமை நாள்வரை அவர்களுக்கிடையே பகைமையையும் வெறுப்பையும் விதைத்து விட்டோம். அவர்கள் போர் நெருப்பைப் பற்ற வைக்கும்போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விடுகிறான். அவர்கள் பூமியில் குழப்பம் செய்ய முனைகின்றனர். குழப்பவாதிகளை அல்லாஹ் நேசிக்கமாட்டான்.154
65. வேதமுடையோர் இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சத்துடன் நடந்திருந்தால் அவர்களை விட்டும் அவர்களின் தீமைகளை அழித்து, இன்பங்கள் நிறைந்த சொர்க்கங்களில் அவர்களை நுழையச் செய்திருப்போம்.
66. அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதையும் நிலைநாட்டியிருந்தால், தமக்கு மேலே (வானில்) இருந்தும், தமது கால்களுக்குக் கீழே (பூமியில்) இருந்தும் புசித்திருப்பார்கள். அவர்களில் நேர்மையான சமுதாயத்தினரும் உள்ளனர். (எனினும்) அவர்களில் அதிகமானோர் செய்வது மிகக் கெட்டது.
67. தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துரைப்பீராக! (அவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனது தூதுச் செய்தியை எடுத்துரைத்தவராக மாட்டீர்.155 அல்லாஹ், மனிதர்களிடமிருந்து உம்மைக் காப்பாற்றுவான். இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.156
68. “வேதமுடையோரே! தவ்ராத்தையும் இன்ஜீலையும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையும் நீங்கள் நிலைநாட்டும் வரை நீங்கள் எதிலும் இல்லை” என்று கூறுவீராக! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டது அவர்களில் அதிகமானோருக்கு வரம்பு மீறுதலையும் இறை மறுப்பையுமே அதிகரிக்கிறது. எனவே, இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்காக நீர் கவலைப்படாதீர்!
69. இறைநம்பிக்கை கொண்டோர், யூதர்கள், ஸாபியீன்கள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நற்செயல்கள் செய்தோருக்கு எந்தவிதப் பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
70. இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். அவர்களுக்காகத் தூதர்களையும் அனுப்பினோம். அவர்களின் உள்ளங்கள் (ஏற்க) விரும்பாததை அவர்களிடம் தூதர் கொண்டு வரும்போதெல்லாம் சிலரைப் பொய்யரெனக் கூறினர்; மேலும், சிலரைக் கொலையும் செய்தனர்.
71. (தமக்கு) எந்தச் சோதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். எனவே, அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆனார்கள். பின்னர் அவர்களை அல்லாஹ் மன்னித்தான். (அதன்) பிறகும் அவர்களில் அதிகமானோர் குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆனார்கள். அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
72. “அல்லாஹ்தான் மர்யமின் மகன் மஸீஹ்” என்று கூறியோர் இறைமறுப்பாளர்களாகி விட்டனர். “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! எனது இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டான். அவரது தங்குமிடம் நரகம். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை” என்றே மஸீஹ் கூறினார்.
73. “(கடவுள்கள்) மூன்று பேரில் அல்லாஹ் மூன்றாமவன்” என்று கூறியோர் இறைமறுப்பாளர்களாகி விட்டனர். ஒரே கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால் அவர்களில் (இத்தகைய) இறைமறுப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை ஏற்படும்.
74. அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், நிகரிலா அன்பாளன்.
75. மர்யமின் மகன் மஸீஹ், தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்றுள்ளனர். அவரது தாயார் உண்மையாளர். அவர்கள் இருவரும் உணவு சாப்பிடுவோராக இருந்தனர். அவர்களுக்கு எவ்வாறு சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதை மீண்டும் கவனிப்பீராக!
76. “அல்லாஹ்வை விட்டுவிட்டு, உங்களுக்கு தீமையோ, நன்மையோ செய்ய ஆற்றல் இல்லாதவற்றை வணங்குகிறீர்களா?” என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியேற்பவன், நன்கறிந்தவன்.
77. “வேதமுடையோரே! உண்மைக்குப் புறம்பாக உங்கள் மார்க்கத்தில் எல்லை மீறாதீர்கள்! இதற்கு முன்னர் தாமும் வழிகெட்டு, அதிகமானோரை வழிகெடுத்து, நேர்வழியிலிருந்து தவறிய கூட்டத்தினரின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்கள்!” என்று கூறுவீராக!
78. தாவூத், மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் நாவினால் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலுள்ள இறைமறுப்பாளர்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறு செய்து, வரம்பு மீறுவோராக இருந்ததே இதற்குக் காரணம்.
79. அவர்கள் செய்த தீய செயலை விட்டும் ஒருவரையொருவர் தடுக்காமல் இருந்து வந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகக் கெட்டது.
80. அவர்களில் அதிகமானோர், இறை மறுப்பாளர்களைப் பொறுப்பாளர்களாக எடுத்துக் கொள்வதை நீர் காண்பீர். அவர்கள்மீது அல்லாஹ் கோபம் கொள்ளும் வகையில், அவர்கள் தமக்காக முற்படுத்தி வைத்திருப்பது மிகக் கெட்டது. அவர்கள் வேதனையிலேயே நிரந்தரமாக இருப்பார்கள்.
81. அவர்கள் அல்லாஹ்வையும், இந்நபியையும், அவருக்கு அருளப் பட்டதையும் நம்புவோராக இருந்திருந்தால் (இறைமறுப்பாளர்களான) அவர்களைப் பொறுப்பாளர்களாக ஆக்கியிருக்க மாட்டார்கள். எனினும் அவர்களில் அதிகமானோர் பாவிகள்.
82. மனிதர்களிலேயே யூதர்களும், இணைவைப்போரும் இறைநம்பிக்கை கொண்டோருக்குக் கடும் பகையாக இருப்பதை நீர் காண்பீர். “நாங்கள் கிறித்தவர்கள்” என்று கூறுவோர் இறைநம்பிக்கை கொண்டோருக்கு நேசத்தில் மிக நெருக்கமாக இருப்பதையும் காண்பீர். ஏனெனில் அவர்களில் மத குருமார்களும் துறவிகளும் உள்ளனர்; அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள்.
83. இத்தூதர்மீது அருளப்பட்டதை அவர்கள் செவியுறும்போது, உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடுவதைக் காண்பீர். “எங்கள் இறைவனே! நாங்கள் இறைநம்பிக்கை கொண்டோம். எனவே, எங்களைச் சாட்சி கூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள்.157
84. “அல்லாஹ்வையும், எங்களிடம் வந்துள்ள உண்மையையும் நம்பாமலிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? எங்கள் இறைவன், எங்களை நல்லோரின் கூட்டத்துடன் சேர்ப்பதையே நாங்கள் ஆசைப்படுகிறோம்” (என்றும் கூறுகின்றனர்.)
85. அவர்களின் இந்தக் கூற்றின் காரணமாக அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கங்களைப் பரிசளித்தான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே நன்மை செய்வோருக்கான கூலி.
86. யார் (நம்மை) மறுத்து, நமது வசனங்களைப் பொய்யெனக் கூறினார்களோ அவர்களே நரகவாசிகள்.
87. இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை, தடை செய்யப்பட்டதாக ஆக்காதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.158
88. அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றில் அனுமதிக்கப்பட்ட, நல்லதை உண்ணுங்கள்! நீங்கள் யாரை நம்பியுள்ளீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
89. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக, நீங்கள் உறுதிப்படுத்திச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். (சத்தியத்தை முறித்தால்) அதற்குப் பரிகாரம், உங்கள் குடும்பத்தாருக்கு நீங்கள் உண்ணக் கொடுக்கும் நடுத்தரமான உணவிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளித்தல் அல்லது அவர்களுக்கு ஆடை வழங்குதல் அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்தல் ஆகியவையாகும். (இவற்றைப்) பெற்றுக் கொள்ளாதவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். இதுவே நீங்கள் சத்தியம் செய்து (அதை முறித்து) விட்டால், உங்கள் சத்தியங்களுக்கான பரிகாரம். உங்கள் சத்தியங்களைக் காப்பாற்றுங்கள்! இவ்வாறே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.
90. இறைநம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், சிலைகள், குறி கேட்பதற்கான அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அறுவெறுக்கத்தக்க செயல்களாகும். எனவே அவற்றை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள்.159
91. ஷைத்தான் மதுவின் மூலமும், சூதாட்டத்தின் மூலமும் உங்களுக்கிடையே பகையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி, அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவே நாடுகிறான். எனவே நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? 160
92. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! தூதருக்கும் கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையாக இருங்கள்! நீங்கள் புறக்கணித்தால், தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நமது தூதரின் கடமை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
93. (தடுக்கப்பட்டதிலிருந்து) விலகி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, பின்னரும் இறையச்சத்துடன் நடந்து, இறைநம்பிக்கை கொண்டு, மீண்டும் இறையச்சத்துடன் நடந்து நன்மை செய்தால், (தடுக்கப்படுவதற்குமுன் மது) அருந்தியதற்காக இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோர்மீது எந்தக் குற்றமும் இல்லை. நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.161
94. இறைநம்பிக்கை கொண்டோரே! மறைவான நிலையில் தன்னை அஞ்சுபவர் யார் என்பதை வெளிப்படுத்துவதற்காக (நீங்கள் இஹ்ராமில் இருக்கும்போது) உங்கள் கைகளும், ஈட்டிகளும் (எளிதில்) அடையும் விதத்தில் ஏதேனும் வேட்டைப் பொருளைக் கொண்டு அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதன் பின்னர் யார் வரம்பு மீறுகிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
95. இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் நிலையில் வேட்டை(யாடி) விலங்குகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் யாரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்றதற்கு நிகரான (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடை பரிகாரமாகும். (இது) கஅபாவைச் சென்றடைய வேண்டிய பலிப் பிராணியாகும். அல்லது ஏழைகளுக்கு உணவளிப்பது பரிகாரமாகும். அல்லது அதற்குச் சமமாக நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியான இருவர் இதுபற்றி முடிவெடுப்பார்கள். தனது செயலின் விளைவை அவர் அனுபவிக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம். முன்னர் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான். யார் மீண்டும் செய்கிறாரோ அவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.
96. உங்களுக்கும், பயணிகளுக்கும் பயன்படுவதற்காகக் கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.162 ஆனால் நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் காலங்களில் தரையில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.163
97. ‘கஅபா’ எனும் புனித ஆலயம், புனித மாதங்கள், பலிப் பிராணிகள் மற்றும் மாலையிடப்பட்ட பலிப் பிராணிகள் ஆகியவற்றை அல்லாஹ் மக்களுக்காக நிலையானதாய் ஆக்கியுள்ளான். அல்லாஹ், வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் அறிகிறான் என்பதையும், ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவன் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவே இது (ஏற்படுத்தப்பட்டுள்ளது.)
98. தண்டிப்பதில் அல்லாஹ் கடுமையானவன் என்பதையும், அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், நிகரிலா அன்பாளன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
99. எடுத்துரைப்பதைத் தவிர தூதர்மீது (வேறு) கடமையில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும் மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.
100. கெட்டது அதிகளவு இருப்பது உம்மை வியப்பில் ஆழ்த்தினாலும் “கெட்டதும் நல்லதும் சமமாகாது” என்று கூறுவீராக! அறிவுடையோரே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
101. இறைநம்பிக்கை கொண்டோரே! சிலவற்றைப் பற்றி (நபியிடம்) கேட்காதீர்கள்! அவை உங்களுக்கு அறிவிக்கப்பட்டால் உங்களுக்கு வருத்தமளிக்கும். குர்ஆன் அருளப்படும் சமயத்தில் நீங்கள் அவற்றைப் பற்றிக் கேட்டால் அவை உங்களுக்குத் தெளிவாக்கப்பட்டு விடும். இ(துவரை கேட்ட)வற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; சகிப்புத்தன்மைமிக்கவன்.164
102. உங்களுக்கு முன்னால் ஒரு கூட்டத்தினர் இ(து போன்ற)வற்றைக் கேட்டு, பின்னர் அவற்றை மறுப்போராக மாறிவிட்டனர்.
103. (கால்நடைகளில்) பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் ஆகியவற்றை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. மாறாக, இறைமறுப்பாளர்கள் அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுகின்றனர். அவர்களில் அதிகமானோர் சிந்திக்க மாட்டார்கள்.165
104. “அல்லாஹ் அருளியதன் பக்கமும் தூதரின் பக்கமும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோரை நாங்கள் எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர் எதையும் தெரியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா?
105. இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களையே நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர்வழி நடந்தால் வழிதவறியோர் உங்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்லவேண்டியுள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்ததை அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்.166
106. இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி விட்டால், மரண சாசனம் செய்யும்போது, உங்களிலிருந்து நேர்மையான இருவர் உங்களுக்கிடையே சாட்சியாக இருக்க வேண்டும். நீங்கள் பூமியில் பயணம் செய்யும்போது உங்களுக்கு மரண வேதனை ஏற்பட்டால், உங்களைச் சாராத வேறு இருவர் (சாட்சியாக) இருக்கலாம். நீங்கள் சந்தேகப்பட்டால் அவ்விருவரையும் தொழுகைக்குப் பிறகு தடுத்து வைத்து, “நெருங்கிய உறவினராக இருந்தாலும் (அவர்களிடம்) இதை விலைக்கு விற்க மாட்டோம். அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைக்கவும் மாட்டோம். அவ்வாறு செய்தால் நாங்கள் பாவிகளாகி விடுவோம்” என அவ்விருவரும் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்ய வேண்டும்.167
107. அவ்விருவரும் (சாட்சியத்தில்) குற்றமிழைத்தனர் என்பது கண்டறியப்பட்டால் அவ்விருவருக்குப் பதிலாக, (மரண சாசனத்திற்கு) உரிமை படைத்தவர்களில் (இறந்தவருக்கு) நெருக்கமான இருவர் எழுந்து, “அவ்விருவரின் சாட்சியைவிட எங்கள் சாட்சி மிக உண்மையானது. நாங்கள் வரம்பு மீறவில்லை. அவ்வாறு செய்தால் நாங்கள் அநியாயக்காரர்கள் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்ய வேண்டும்.
108. சாட்சியத்தை அதற்குரிய முறையில் கொண்டு வருவதற்கோ அல்லது மற்றவர்களின் சத்தியங்களுக்குப் பின்னர் (தமது பொய்) சத்தியங்கள் மறுக்கப்பட்டுவிடும் என அவர்கள் பயப்படுவதற்கோ இதுவே மிகவும் ஏற்றது. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! செவிசாயுங்கள். பாவிகளின் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.
109. அல்லாஹ், (தனது) தூதர்களை ஒன்றுசேர்க்கும் நாளில் “உங்களுக்கு என்ன பதிலளிக்கப்பட்டது?” என்று கேட்பான். “எங்களுக்கு எந்த ஞானமும் இல்லை. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன்” என்று (தூதர்கள்) கூறுவார்கள்.
110. “மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும் உமது தாயாருக்கும் நான் செய்த அருளையும், உம்மை (ஜிப்ரீல் எனும்) ரூஹுல் குதுஸ் மூலம் பலப்படுத்தியதை நினைத்துப் பார்ப்பீராக! தொட்டில் பருவத்திலும் பெரிய வயதிலும் நீர் மக்களிடம் பேசினீர். வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் உமக்குக் கற்றுத் தந்ததை நினைத்துப் பார்ப்பீராக! எனது ஆணைப்படி களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தைப் போன்று நீர் வடிவமைத்து அதில் ஊதியபோது அது எனது ஆணைப்படி பறவையாக மாறியதையும், எனது ஆணைப்படி பிறவிக் குருடர் மற்றும் தொழுநோயாளியை நீர் குணப்படுத்தியதையும் நினைத்துப் பார்ப்பீராக! எனது ஆணைப்படி இறந்தவர்களை (உயிருடன்) நீர் வெளிப்படுத்தியதையும் நினைத்துப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் தெளிவான சான்றுகளுடன் நீர் வந்தபோது அவர்களிலுள்ள இறைமறுப்பாளர்கள், ‘இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை’ என்று கூறியபோது அவர்களிடமிருந்து உம்மை நான் காப்பாற்றியதையும் நினைத்துப் பார்ப்பீராக!” என (ஈஸாவிடம்) அல்லாஹ் கூறியதை (நபியே!) நினைவூட்டுவீராக!
111. “என்னையும் எனது தூதரையும் நம்புங்கள்!” என்று (ஈஸாவின்) நெருக்கமான தோழர்களுக்கு நான் அறிவித்தபோது, “நாங்கள் நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீ சாட்சியாக இருப்பாயாக!” என்று அவர்கள் கூறினார்கள்.
112. “மர்யமின் மகன் ஈஸாவே! எங்களுக்காக உணவுப் பாத்திரத்தை வானிலிருந்து இறக்குவதற்கு உமது இறைவன் சக்தி பெறுவானா?” என்று அந்த நெருக்கமான தோழர்கள் கேட்டபோது “நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்!” என்று அவர் கூறினார்.
113. “நாங்கள் அதிலிருந்து உணவருந்தவும், எங்கள் உள்ளங்கள் நிம்மதி பெறுவதற்கும், நீர் எங்களிடம் உண்மையே கூறினீர் என்பதை நாங்கள் அறிந்து, அதற்குச் சாட்சியாளர்களாக ஆவதற்கும் விரும்புகிறோம்” என அவர்கள் கூறினர்.
114. “அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! வானிலிருந்து எங்களுக்கு உணவுப் பாத்திரத்தை இறக்குவாயாக! அது எங்களில் முதலாமவருக்கும் இறுதியானவருக்கும் பெருநாளாகவும், உன்னிடமிருந்து வந்த சான்றாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீ மிகச் சிறந்தவன்” என மர்யமின் மகன் ஈஸா கூறினார்.
115. “நான் அதை உங்களுக்கு இறக்குவேன். அதற்குப் பிறகு உங்களில் யாரேனும் மறுத்தால், அகிலத்தாரில் எவரையும் தண்டித்திராத வேதனையால் அவரைத் தண்டிப்பேன்” என அல்லாஹ் கூறினான்.
116. “மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” என அல்லாஹ் கேட்கும்போது அவர், “நீ தூயவன்! எனக்கு உரிமையில்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்திலிருப்பதை நீ அறிவாய். உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை நன்கறிபவன்” என்று கூறுவார்.168
117, 118. “நீ எனக்கு ஏவியவாறு, ‘என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’ என்பதைத் தவிர எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாய் இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். நீ அவர்களை வேதனை செய்தால் அவர்கள் உன் அடியார்களே! நீ அவர்களை மன்னித்தால் நீயே மிகைத்தவன், நுண்ணறிவாளன்” (என்றும் ஈஸா கூறுவார்.)169
119. “இது உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மை பயனளிக்கும் நாள்” என்று அல்லாஹ் கூறுவான். அவர்களுக்குச் சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். இதுவே மகத்தான வெற்றி.
120. வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ளவற்றின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் ஆற்றல் மிக்கவன்.