அல்மஆரிஜ் – உயர்வுகள்

அத்தியாயம் : 70

வசனங்களின் எண்ணிக்கை: 44

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. நிகழவிருக்கும் வேதனையைப் பற்றிக் கேட்கக் கூடியவன் கேட்கிறான்.588
2, 3. உயர்வுகளையுடைய அல்லாஹ்விடமிருந்து, இறைமறுப்பாளர் களுக்கு (அது நிகழும்.) அதைத் தடுப்பவன் யாருமில்லை.
4. ஐம்பதாயிரம் ஆண்டுகளின் அளவைக் கொண்ட ஒருநாளில் வானவர்களும், (ஜிப்ரீல் எனும்) ரூஹும் அவனிடம் ஏறிச் செல்வார்கள்.
5. எனவே அழகிய பொறுமையை மேற்கொள்வீராக!
6. அவர்கள் அதைத் தூரத்தில் இருப்பதாகக் கருதுகின்றனர்.
7. நாமோ அதை அருகில் இருப்பதாகக் காண்கிறோம்.
8. அந்நாளில் வானம் உருக்கப்பட்ட உலோகத்தைப் போன்று ஆகிவிடும்.
9. மலைகள் சாயம் பூசப்பட்ட கம்பளியைப் போல் ஆகிவிடும்.
10. எந்த நண்பனும் மற்றொரு நண்பனை விசாரித்துக் கொள்ள மாட்டான்.
11, 12, 13, 14. அவர்கள் ஒருவருக்கொருவர் காண்பிக்கப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு மாற்றாகத் தனது பிள்ளைகளையும், மனைவியையும், சகோதரனையும். தன்னை அரவணைத்து வாழ்ந்த உறவினரையும், பூமியில் உள்ள அனைவரையும் ஈடாகக் கொடுத்து, அது தன்னைக் காப்பாற்ற வேண்டுமெனக் குற்றவாளி விரும்புவான்.
15. அவ்வாறல்ல! அது கொழுந்து விட்டெரியும் நெருப்பாகும்.
16. அது தோலைக் கழற்றி விடும்.
17, 18. அது, புறக்கணித்துத் திரும்பிச் சென்றோரையும், (செல்வத்தைச்) சேகரித்து, (தர்மம் செய்யாமல்) பாதுகாத்துக் கொண்டோரையும் அழைக்கும்.
19. மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். 589
20. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் திடுக்கிடுகிறான்.
21. அவனுக்குச் செல்வம் வரும்போது கொடுக்காமல் தடுத்துக் கொள்கிறான்.
22. தொழுகையாளிகளைத் தவிர!
23. அவர்கள் தமது தொழுகையை நிரந்தரமாகக் கடைப்பிடிப்பார்கள்.
24, 25. அவர்களின் செல்வங்களில் யாசிப்போருக்கும், (யாசிக்காத) ஏழைக்கும் நிர்ணயிக்கப்பட்ட உரிமை உண்டு.
26. அவர்கள் தீர்ப்பு நாளை உண்மையென நம்புவார்கள்.
27. அவர்கள் தமது இறைவனின் தண்டனைக்கு அஞ்சக் கூடியவர்கள்.
28. அவர்களின் இறைவன் தரும் தண்டனை அச்சப்படக் கூடியதாகவே உள்ளது.
29, 30, 31. அவர்கள் தமது மனைவியர் அல்லது அடிமைப் பெண்களைத் தவிர (மற்றவர்களிடம்) தமது கற்பு நெறியைப் பாதுகாத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள். ஆனால் இதற்குப் புறம்பாக யார் (தவறான வழிகளைத்) தேடுகிறார்களோ அவர்களே வரம்பு மீறியவர்கள்.
32. தம்மை நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றையும், தமது வாக்குறுதியையும் அவர்கள் பேணிக் கொள்வார்கள்.
33. அவர்கள் தமது சாட்சியங்களை நிலைநாட்டக் கூடியவர்கள்.
34. அவர்கள் தமது தொழுகையில் பேணுதலாக இருப்பார்கள்.
35. இவர்களே சொர்க்கங்களில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
36, 37. இறைமறுப்பாளர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் கூட்டம், கூட்டமாக வலதுபுறமாகவும், இடதுபுறமாகவும் உம்மை நோக்கி விரைந்தோடி வருகின்றனர்.
38. அவர்களில் ஒவ்வொருவரும் இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் நுழைவிக்கப்பட வேண்டுமென ஆசைப்படுகின்றனரா?
39. அவ்வாறு (நடக்கப்போவது) இல்லை! அவர்கள் அறிந்திருக்கும் பொருளிலிருந்தே அவர்களைப் படைத்தோம்.
40, 41. கிழக்குத் திசைகள் மற்றும் மேற்குத் திசைகளின் இறைவ(னான எ)ன்மீது சத்தியம் செய்கிறேன். (இவர்களை அழித்துவிட்டு) இவர்களைவிடச் சிறந்தவர்களை மாற்றாகக் கொண்டு வருவதற்கு நாம் ஆற்றலுடையோர்தான். நாம் இயலாதோர் அல்ல.
42. வாக்களிக்கப்பட்ட அவர்களின் நாளைச் சந்திக்கும்வரை (வீணானவற்றில்) மூழ்கியிருக்குமாறும், விளையாடுமாறும் அவர்களை விட்டுவிடுவீராக!
43. அடையாளங்களை நோக்கி விரைந்தோடுவோரைப் போன்று அந்நாளில் அவர்கள் மண்ணறைகளில் இருந்து விரைந்து வெளியேறுவார்கள்.
44. அவர்களின் பார்வைகள் அப்போது கீழ்நோக்கியிருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும். இதுதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாளாகும்.