அல்லைல் – இரவு

அத்தியாயம் : 92

வசனங்களின் எண்ணிக்கை: 21

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. இரவு மூடிக் கொள்ளும்போது அதன்மீது சத்தியமாக!
2. பகல் ஒளிரும்போது அதன்மீது சத்தியமாக!
3. ஆணையும், பெண்ணையும் படைத்தவன்மீது சத்தியமாக!
4. உங்கள் முயற்சி பலவாறாக உள்ளது.
5, 6, 7. (தர்மம்) கொடுத்து, (அல்லாஹ்வை) அஞ்சி, நல்லவற்றை உண்மையாக்கியவருக்கு எளிதானதை நோக்கி வழிகாட்டுவோம்.643
8, 9, 10. கஞ்சத்தனம் செய்து, புறக்கணித்து, நல்லவற்றைப் பொய்யெனக் கூறியவருக்குச் சிரமமான பாதையையே காட்டுவோம்.
11. அவன் (நரகத்தில்) விழும்போது அவனது செல்வம் அவனைக் காப்பாற்றாது.
12. நேர்வழி காட்டுவது நமது பொறுப்பாகும்.
13. மறுமையும், இம்மையும் நமக்குரியதே!
14. கொழுந்து விட்டெரியும் நரகத்தைப் பற்றி உங்களை எச்சரிக்கிறேன்.
15. பாக்கியமிழந்தவனைத் தவிர யாரும் அதில் நுழையமாட்டார்.
16. அவனே பொய்யெனக் கூறிப் புறக்கணித்தான்.
17. இறையச்சமுடையவர் அதைவிட்டும் தூரமாக்கப்படுவார்.
18. அவர் தூய்மையடைவதற்காகத் தனது செல்வத்தைக் கொடுத்தவர்.
19, 20. யாருக்கும் திருப்பிச் செலுத்த வேண்டிய எந்தக் கைம்மாறும் அவருக்கு இருக்கவில்லை. உயர்ந்தவனாகிய அல்லாஹ்வின் முகத்தை நாடுவதைத் தவிர!
21. விரைவில் அவர் திருப்தியடைவார்.