அத்தியாயம் : 88
வசனங்களின் எண்ணிக்கை: 26
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. சூழ்ந்து கொள்ளக் கூடியதைப் பற்றிய செய்தி உம்மிடம் வந்ததா? 632
2, 3. அந்நாளில் சில முகங்கள் (இழிவால்) பணிந்திருக்கும். (அவை தவறான வழியில்) செயல்பட்டவை; (அதில்) களைத்துப் போனவை.
4. அவை கொழுந்து விட்டெரியும் நெருப்பில் நுழையும்.
5. (அவற்றுக்குக்) கொதிக்கும் நீரூற்றிலிருந்து புகட்டப்படும்.
6. அவர்களுக்கு முட்செடியைத் தவிர எந்த உணவும் கிடையாது.
7. அது கொழுக்க வைக்காது; பசியையும் தீர்க்காது.
8. அந்நாளில் சில முகங்கள் செழிப்பாக இருக்கும்.
9. தமது செயல்கள் குறித்துத் திருப்தியுடன் இருக்கும்.
10. (அவை) உயர்ந்த சொர்க்கத்தில் இருக்கும்.
11. அங்கு வீணானவற்றைச் செவியுறாது.
12. ஓடிக்கொண்டிருக்கும் நீரூற்று அங்குள்ளது.
13, 14, 15, 16. உயர்ந்த கட்டில்களும், (அடுக்கி) வைக்கப்பட்ட குவளைகளும், வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகளும், விரிக்கப்பட்ட கம்பளங்களும் அங்கு உண்டு.
17, 18, 19, 20. ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதையும், வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும், மலைகள் எவ்வாறு ஊன்றப்பட்டுள்ளன என்பதையும், பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர்கள் சிந்திக்க வேண்டாமா?
21. (நபியே!) அறிவுரை கூறுவீராக! நீர் அறிவுரை கூறுபவர்தான்.633
22. நீர் அவர்கள்மீது பொறுப்பாக்கப்பட்டவர் அல்ல.
23, 24. எனினும் யார் புறக்கணித்து, மறுக்கிறாரோ அவரை மிகப் பெரும் வேதனையால் அல்லாஹ் தண்டிப்பான்.
25. நம்மிடமே அவர்களின் மீளுதல் உள்ளது.
26. பின்னர் அவர்களை விசாரிப்பதும் நமது பொறுப்பாகும்.