அல்கஸஸ் – வரலாறுகள்

அத்தியாயம் : 28

வசனங்களின் எண்ணிக்கை: 88

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. தா, ஸீம், மீம்.
2. இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
3. இறைநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக, மூஸா மற்றும் ஃபிர்அவ்னின் செய்தியை உண்மையுடன் உமக்கு எடுத்துரைக்கிறோம்.
4. ஃபிர்அவ்ன் அப்பூமியில் கர்வம் கொண்டான். அங்கிருந்தவர்களைப் பல பிரிவினராக்கி, அவர்களில் ஒருசாராரைப் பலவீனப்படுத்தினான். (எவ்வாறெனில்) அவர்களின் ஆண்குழந்தைகளை அறுத்துக் கொன்று, பெண்களை உயிருடன் வாழவிட்டான். அவன் குழப்பம் விளைவிப்போரில் ஒருவனாக இருந்தான்.
5. அப்பூமியில் பலவீனமாக்கப்பட்டோருக்கு நாம் அருள்புரிவதற்கும், அவர்களைத் தலைவர்களாக ஆக்கவும், (அப்பூமிக்குச்) சொந்தக்காரர்களாக ஆக்கவும் விரும்பினோம்.
6. அப்பூமியில் அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்குவதற்கும், அவர்கள் விஷயத்தில் ஃபிர்அவ்ன், ஹாமான் மற்றும் அவ்விருவரின் படையினர் எதை அஞ்சிக் கொண்டிருந்தார்களோ அதை அவர்களுக்குக் காட்டுவதற்கும் (விரும்பினோம்.)
7. மூஸாவின் தாயாரிடம், “இவருக்குப் பாலூட்டுவீராக! நீர் இவர் விஷயத்தில் பயந்தால் அவரை(ப் பெட்டியில் வைத்து)க் கடலில் போட்டு விடுவீராக! பயப்படாதீர்! கவலையும் கொள்ளாதீர். அவரை மீண்டும் உம்மிடம் கொண்டு வந்து சேர்ப்போம். அவரைத் தூதர்களில் ஒருவராக்குவோம்” என்று அறிவித்தோம்.
8. அவர் தங்களுக்கு எதிரியாகவும், துக்கமாகவும் ஆவதற்காகவே ஃபிர்அவ்னின் குடும்பத்தினர் அவரைக் கண்டெடுத்தனர். ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களின் படையினரும் (இவ்விஷயத்தில்) தவறிழைத்தோராகி விட்டனர்.
9. “(இக்குழந்தை) எனக்கும், உமக்கும் கண்குளிர்ச்சியாவார். இவரைக் கொன்று விடாதீர்கள்! இவர் நமக்குப் பயனளிக்கலாம். அல்லது இவரை நாம் மகனாக எடுத்துக் கொள்ளலாம்” என ஃபிர்அவ்னின் மனைவி கூறினார். அவர்கள் (அதன் விளைவை) அறியாதவர்களாக இருந்தனர்.
10. மூஸாவுடைய தாயாரின் உள்ளம் வெறுமையாகி விட்டது. அவரது உள்ளத்தை நாம் உறுதிப்படுத்தியிருக்காவிட்டால் அ(ந்த ரகசியத்)தை வெளிப்படுத்த முனைந்திருப்பார். அவர் இறைநம்பிக்கையாளரில் ஒருவராக ஆவதற்காகவே (இவ்வாறு உறுதிப்படுத்தினோம்.)
11. அவர், அக்குழந்தையின் சகோதரியிடம் “அக்குழந்தையைப் பின்தொடர்ந்து செல்!” என்று கூறினார். எனவே அவர்கள் அறியாதவாறு அவள் தூரத்திலிருந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
12. “பாலூட்டும் பெண்களிடமிருந்து (பால் அருந்தாதவாறு) ஏற்கனவே அவரைத் தடுத்து விட்டோம். “உங்களுக்காக இவரைப் பராமரிக்கும் ஒரு வீட்டாரைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கவா? அவர்கள் இவருக்கு நன்மையை நாடுவார்கள்” என்று கூறினாள்.
13. அவரது தாயாரின் கண்கள் குளிர்ச்சியடைவதற்கும், கவலைப் படாதிருக்கவும், அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது என்பதை அறிந்து கொள்வதற்கும் அவரிடமே மூஸாவைத் திருப்பிக் கொடுத்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.
14. அவர் பருவ வயதை அடைந்து, பக்குவமுற்றதும் அவருக்குக் ஞானத்தையும், கல்வியறிவையும் வழங்கினோம். இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம்.
15. அவ்வூர்வாசிகள் கவனமின்றி இருந்தபோது அவ்வூருக்குச் சென்றார். அங்கு இருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். (அதில்) ஒருவன் மூஸாவின் சமுதாயத்தைச் சார்ந்தவன். மற்றொருவன் அவரது பகைவரில் உள்ளவன். அப்போது அவரது சமுதாயத்தைச் சார்ந்தவன் அவரது பகைவனுக்கு எதிராக அவரிடம் உதவி தேடினான். அவனை மூஸா ஒரு குத்து விட்டார். அவனது காரியத்தை முடித்து விட்டார். “இது ஷைத்தானின் செயல். அவன் பகிரங்கமாக வழிகெடுக்கும் எதிரியாவான்” என்றார்.
16. “என் இறைவனே! எனக்கே நான் அநியாயம் செய்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார். அவரை அவன் மன்னித்தான். அவனே மன்னிப்புமிக்கவன்; நிகரிலான அன்பாளன்.
17. “என் இறைவனே! நீ என்மீது அருள்புரிந்த காரணத்தால் (இனி) குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்கவே மாட்டேன்” என்று கூறினார்.
18. அவர் அந்நகரத்தில் (என்ன நடக்குமோ என) எதிர்பார்த்தவராகப் பயந்து கொண்டிருந்தார். அப்போது, முன்தினம் அவரிடம் உதவி தேடியவன் (மீண்டும்) அவரை உதவிக்கு அழைத்தான். “நீ பகிரங்கமான வழிகேடன்தான்” என அவனிடம் மூஸா கூறினார்.
19. இருவருக்கும் எதிரியாக இருந்தவனை அவர் பிடிக்க எண்ணிய போது “மூஸாவே! நேற்று நீர் ஒருவனைக் கொன்றது போல் என்னையும் கொல்ல நினைக்கிறீரா? நீர் இப்பூமியில் அராஜகம் செய்பவராக இருக்கவே விரும்புகிறீர். நீர் இணக்கம் ஏற்படுத்துபவராக இருக்க விரும்பவில்லை” என்று அவன் கூறினான்.
20. அந்நகரின் எல்லைப்புறத்திலிருந்து ஒரு மனிதர் விரைந்து வந்து, “மூஸாவே! உம்மைக் கொல்வதற்குப் பிரமுகர்கள் ஆலோசனை செய்கின்றனர். எனவே, நீர் வெளியேறி விடுவீராக! நான் உமக்கு நல்லதையே நாடுகிறேன்” என்று கூறினார்.
21. எனவே அவர் (என்ன நடக்குமோ என) எதிர்பார்த்தவராகப் பயந்து அங்கிருந்து வெளியேறினார். “என் இறைவனே! அநியாயக்காரக் கூட்டத்திடமிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக!” என இறைஞ்சினார்.
22. அவர் மத்யன் நகரை நோக்கிச் சென்றபோது “என் இறைவன் எனக்கு நேரான வழியைக் காட்டலாம்” என்று கூறினார்.
23. மத்யன் நகரிலுள்ள நீர்நிலைக்கு அவர் வந்தபோது அங்கு மக்களில் ஒரு கூட்டத்தினர் (கால்நடைகளுக்கு) நீர் புகட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுக்கு அப்பால் பெண்களிருவர் (தமது கால்நடைகளைத்) தடுத்து வைத்திருப்பதையும் கண்டார். “உங்கள் இருவரின் விஷயம் என்ன?” என்று அவர் கேட்டார். “மேய்ப்பர்கள் திரும்பிச் செல்லும் வரை எங்களால் நீர்புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ மிக வயதானவர்” என அவ்விருவரும் கூறினர்.
24. எனவே, அவர் அவ்விருவருக்காகவும் (கால்நடைகளுக்கு) நீர் புகட்டினார். பிறகு நிழலுக்குத் திரும்பி “என் இறைவனே! நீ என்மீது இறக்கியருளும் நன்மையில் நான் தேவையுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.
25. அவ்விருவரில் ஒரு பெண் அவரிடம் வெட்கத்துடன் நடந்து வந்து, “நீர் எங்களுக்காகத் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை வழங்குவதற்காக என் தந்தை உம்மை அழைக்கிறார்” என்று கூறினாள். அவரிடம் வந்து, நடந்த நிகழ்வுகளை அவர் எடுத்துரைத்தபோது “பயப்படாதீர்! அநியாயக்காரக் கூட்டத்தை விட்டும் நீர் தப்பித்து விட்டீர்” என்று கூறினார்.
26. “என் தந்தையே! இவரைப் பணியமர்த்திக் கொள்வீராக! நீர் பணியமர்த்துபவரில் சிறந்தவர் யாரெனில் வலிமையானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருப்பவர்தான்” என அவ்விருவரில் மற்றொரு பெண் கூறினாள்.
27. “நீர் என்னிடம் எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் எனது இவ்விரு மகள்களில் ஒரு பெண்ணை உமக்கு மணமுடித்துத் தர விரும்புகிறேன். நீர் பத்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்தால் உமது விருப்பம். உமக்குச் சிரமமளிக்க நான் விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லோரில் உள்ளவராகக் காண்பீர்” என்று அவர் கூறினார்.
28. “இதுவே எனக்கும், உமக்குமிடையே உள்ளதாகும். இவ்விரு தவணைகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என்மீது எந்தக் குற்றமுமில்லை. நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே சாட்சியாளன்” என்று (மூஸா) கூறினார்.375
29. அந்தத் தவணையைப் பூர்த்தியாக்கிவிட்டு மூஸா தமது குடும்பத்துடன் புறப்பட்டபோது, தூர் மலையின் அருகில் ஒரு நெருப்புத் தழலைக் கண்டு, “காத்திருங்கள்! நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அங்கிருந்து ஏதேனும் செய்தியையோ அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக ஒரு தீப்பந்தத்தையோ உங்களிடம் கொண்டு வருவேன்” என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார்.
30. அவர் அங்கு வந்தபோது, பாக்கியம் பெற்ற பகுதியில் வலதுபுறப் பள்ளத்தாக்கின் ஓரத்திலுள்ள ஒரு மரத்திலிருந்து “மூஸாவே! நானே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்” என அழைக்கப்பட்டார்.
31. “உமது கைத்தடியைப் போடுவீராக!” (என்று கூறப்பட்டது.) அது பாம்புபோல் நெளிவதைக் கண்டதும், அவர் திரும்பிப் பார்க்காமல் புறங்காட்டி ஓடினார். “மூஸாவே! முன்னோக்கி வருவீராக! பயப்படாதீர்! நீர் பாதுகாப்பாக இருக்கிறீர்”
32. “உமது கையை உம் சட்டையின் கழுத்துப் பகுதி வழியாக நுழைப்பீராக! மாசற்ற வெண்மையாக அது வெளிப்படும். பயப்படும் நேரத்தில் உமது இரு கைகளையும் உம்மு(டைய விலாப்புறத்து)டன் சேர்த்துக் கொள்வீராக! இவை ஃபிர்அவ்னுக்காகவும், அவனது பிரமுகர்களுக்காகவும் உம் இறைவனிடமிருந்து வந்துள்ள இரண்டு சான்றுகள். அவர்கள் பாவம் செய்யும் கூட்டத்தினராகவே உள்ளனர்.
33, 34. “என் இறைவனே! நான் அவர்களில் ஒருவரைக் கொலை செய்து விட்டேன். எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என்று பயப்படுகிறேன். என் சகோதரர் ஹாரூன். அவர் என்னைவிடத் தெளிவாகப் பேசுபவர். அவரை என்னுடன் உதவியாளராக அனுப்புவாயாக! அவர் என்னை உண்மைப்படுத்துவார். அவர்கள் என்னைப் பொய்யரெனக் கூறுவார்கள் என நான் பயப்படுகிறேன்” என்று (மூஸா) கூறினார்.
35. “உமது சகோதரர் மூலம் உம் தோள்களைப் பலப்படுத்துவோம். உங்கள் இருவருக்கும் ஆதாரத்தை வழங்குவோம். எனவே நமது சான்றுகளின் காரணமாக அவர்களால் உங்களை நெருங்க முடியாது. நீங்கள் இருவரும், உங்களைப் பின்பற்றியோருமே வெற்றியடைவீர்கள்” என (இறைவன்) கூறினான்.
36. அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளுடன் மூஸா வந்தபோது “இது இட்டுக்கட்டப்பட்ட சூனியத்தைத் தவிர வேறில்லை. முன்சென்ற நமது முன்னோரிடமிருந்து நாம் இதைக் கேள்விப்பட்டதும் இல்லை” என்று அவர்கள் கூறினர்.
37. “என் இறைவன், தன்னிடமிருந்து நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார் என்பதையும், மறுமையின் முடிவு யாருக்குச் சாதகமாக அமையும் என்பதையும் நன்கறிந்தவன். அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
38. “பெரியோர்களே! உங்களுக்கு என்னைத் தவிர வேறு கடவுள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஹாமானே! நான் மூஸாவின் இறைவனைக் காண்பதற்காக, களிமண்மீது நெருப்பை மூட்டி(ச் செங்கலாக்கி), எனக்கோர் உயர்ந்த மாளிகையைக் கட்டித் தருவாயாக! அவரைப் பொய்யரென்றே கருதுகிறேன்” என ஃபிர்அவ்ன் கூறினான்.
39. அவனும், அவனது படையினரும் பூமியில் நியாயமின்றிக் கர்வம் கொண்டனர். மேலும் அவர்கள் நம்மிடம் திரும்பக் கொண்டுவரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டனர்.
40. எனவே அவனையும், அவனது படையினரையும் பிடித்தோம். அவர்களைக் கடலில் வீசினோம். அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனிப்பீராக!
41. அவர்களை நரகத்தை நோக்கி அழைக்கும் தலைவர்களாக ஆக்கினோம். அவர்கள் மறுமை நாளில் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
42. அவர்களை இவ்வுலகில் சாபம் பின்தொடருமாறு செய்தோம். அவர்கள் மறுமை நாளில் பழிக்கப்பட்டவர்களில் இருப்பார்கள்
43. முந்தைய தலைமுறையினரை நாம் அழித்த பிறகு மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். (அது) மக்களுக்குச் சான்றுகளாகவும், நேர்வழியாகவும், அருளாகவும் இருந்தது. இதனால் அவர்கள் படிப்பினை பெறலாம்.
44. (நபியே!) மூஸாவுக்கு நாம் கட்டளைகளை விதியாக்கியபோது (தூர் மலை எனும்) மேற்குப் பகுதியில் நீர் இருக்கவில்லை. பார்த்துக் கொண்டிருந்தோரிலும் நீர் இருக்கவில்லை.
45. எனினும் (அதற்குப் பின்) பல தலைமுறையினரைத் தோற்றுவித்தோம். அவர்களுக்கு வாழ்நாளும் நீண்டிருந்தது. நீர் மத்யன்வாசிகளுக்கு நமது வசனங்களை எடுத்துரைப்பவராக அவர்களுடன் தங்கியிருக்கவில்லை. எனினும், நாமே தூதர்களை அனுப்புவோராக இருந்தோம்.
46. (மூஸாவை) நாம் அழைத்தபோது தூர் மலையின் அருகில் நீர் இருக்கவில்லை. எனினும் உமக்கு முன்பு எச்சரிப்பவர் வராத ஒரு சமுதாயத்தை நீர் எச்சரிப்பதற்காக உமது இறைவனின் அருளாகவே (இதைக் கூறுகிறோம்.) இதனால் அவர்கள் படிப்பினை பெறலாம்.
47. அவர்களின் கைகள் செய்த (தீய) செயல்களால் அவர்களுக்குத் துன்பம் நேர்ந்தால், “எங்கள் இறைவனே! எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்கக் கூடாதா? அவ்வாறாயின் உனது வசனங்களைப் பின்பற்றி, இறைநம்பிக்கையாளர்களில் ஆகியிருப்போம்” என்று அவர்கள் கூறாதிருப்பதற்காகவே (உம்மை அவர்களுக்குத் தூதராக அனுப்பினோம்.)
48. நம்மிடமிருந்து அவர்களுக்கு உண்மை வந்தபோது “மூஸாவுக்கு வழங்கப்பட்டதைப் போன்று இவருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டாமா?” என்று கேட்கின்றனர். அவர்கள் இதற்குமுன் மூஸாவுக்கு வழங்கப்பட்டதை மறுக்கவில்லையா? அவர்கள், “(குர்ஆனும், தவ்ராத்தும்) ஒன்றுக்கொன்று உதவி செய்யக்கூடிய இரண்டு சூனியங்களே!” என்று கூறினர். மேலும், “நாங்கள் ஒவ்வொன்றையும் மறுக்கிறோம்” என்றும் கூறினர்.
49. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அல்லாஹ்விடமிருந்து அவ்விரண்டையும்விட அதிகம் நேர்வழி காட்டக்கூடிய ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள்! அதை நான் பின்பற்றுகிறேன்” என்று (நபியே!) கூறுவீராக!
50. அவர்கள் உமக்குப் பதிலளிக்கவில்லை என்றால், தமது சுயவிருப்பங்களையே பின்பற்றுகின்றனர் என்பதை நீர் அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள நேர்வழியல்லாமல் தனது சுயவிருப்பத்தைப் பின்பற்றுபவனைவிட மிகவும் வழிகெட்டவன் யார்? அநியாயக்காரக் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
51. அவர்கள் சிந்திப்பதற்காக (நமது) இந்தக் கூற்றை அவர்களிடம் நாம் கொண்டு சேர்த்து விட்டோம்.
52. இதற்கு முன்பு யாருக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் இதை நம்புகின்றனர்.
53. (இது) அவர்களிடம் ஓதிக் காட்டப்படும்போது, “நாங்கள் இதை நம்பினோம். இது எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையே! இதற்கு முன்னர் நாங்கள் முஸ்லிம்களாகவே இருந்தோம்” என்று கூறுவார்கள்.
54. அவர்கள் பொறுமையாக இருந்ததால், அவர்களுக்குரிய கூலியை இரண்டு முறை வழங்கப்படுவார்கள். அவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து செலவும் செய்வார்கள்.376
55. அவர்கள் வீணானதைச் செவியுற்றால் அதைப் புறக்கணிப்பார்கள். “எங்களுக்கு எங்கள் செயல்கள்! உங்களுக்கு உங்கள் செயல்கள்! உங்கள்மீது அமைதி ஏற்படட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்” என்று கூறுவார்கள்.
56. (நபியே!) நீர் விரும்பியவர்களை நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது. மாறாக, அல்லாஹ்வே தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். அவனே நேர்வழி பெற்றவர்களை மிக அறிந்தவன்.377
57. “உம்முடன் நாங்களும் இந்த நேர்வழியைப் பின்பற்றினால் எங்கள் நாட்டிலிருந்து சூறையாடப்பட்டு விடுவோம்” என்று அவர்கள் கூறுகின்றனர். நாம் அவர்களுக்குப் பாதுகாப்புமிக்கப் புனிதத் தலத்தைத் தங்குமிடமாக ஆக்கவில்லையா? அதனை நோக்கி எல்லா வகையான பழங்களும் நம்மிடமிருந்து உணவாகக் கொண்டு வரப்படுகின்றன. எனினும் அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.378
58. வசதிமிக்க வாழ்க்கையால் கர்வத்துடன் நடந்து கொண்ட எத்தனையோ ஊர்களை அழித்துள்ளோம். இவை அவர்களின் வசிப்பிடங்கள். அவர்களுக்குப் பின் குறைவாகவே தவிர வேறெவரும் அங்குக் குடியமர்த்தப்படவில்லை. நாமே (அவற்றுக்கு) உரிமையாளர்களாக இருக்கிறோம்.
59. நமது வசனங்களை அவர்களுக்கு எடுத்துரைக்கும் தூதரை, (ஊர்களின் மையமான) தாய் ஊருக்கு அனுப்பாமல் எந்த ஊரையும் உமது இறைவன் அழிப்பவனாக இல்லை. எந்த ஊரையும் அதில் உள்ளவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தாலே தவிர நாம் அழிப்போராக இல்லை.
60. (இங்கு) உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எப்பொருளாயினும் அது, இவ்வுலக வாழ்வின் வசதியும், அலங்காரமுமே ஆகும். அல்லாஹ்விடம் இருப்பதுதான் மிகச் சிறந்ததும் நிலையானதுமாகும். நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
61. நாம் யாருக்கு(ச் சொர்க்கம் எனும்) அழகிய வாக்குறுதி யளித்து அதை அடைய விருக்கின்றாரோ அவர், நாம் இவ்வுலக வாழ்வின் வசதிகளை அளித்து, பின்னர் மறுமை நாளில் (நரகத்திற்குக்) கொண்டு வரப்படுபவனைப் போன்றவரா?
62. அவர்களை இறைவன் அழைக்கும் நாளில் “எனக்கு இணையானவர்களாக நீங்கள் நம்பிக் கொண்டிருந்தவர்கள் எங்கே?” என்று அவன் கேட்பான்.
63. யார்மீது (தண்டனை பற்றிய) வாக்கு உறுதியாகி விட்டதோ அவர்கள் “எங்கள் இறைவனே! இவர்களைத்தான் நாங்கள் வழிகெடுத்தோம். நாங்கள் வழிகெட்டதைப் போல இவர்களையும் வழிகெடுத்தோம். (இப்போது) விலகி உன்னிடம் வந்து விட்டோம். இவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை” என்று கூறுவார்கள்.
64. “உங்களுடைய இணைக் கடவுள்களை அழையுங்கள்!” என்று கூறப்படும். அப்போது அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்களோ இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். இவர்கள் வேதனையைக் காண்பார்கள். இவர்கள் நேர்வழி பெற்றோராக இருந்திருந்தால் (வேதனைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.)
65. அவர்களை இறைவன் அழைக்கும் நாளில் “தூதர்களுக்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள்?” என்று கேட்பான்.
66. அந்நாளில் அவர்களுக்குச் செய்திகள் மறைந்து விடும். எனவே, அவர்கள் ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்.
67. யார் பாவ மன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்கிறார்களோ அவர்கள் வெற்றியடைந்தோர் ஆகலாம்.
68. உமது இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான்; (நாடியதைத்) தேர்ந்தெடுக்கிறான். அவர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை. அல்லாஹ் தூயவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் உயர்ந்தவன்.
69. அவர்களின் உள்ளங்கள் மறைப்பதையும், பகிரங்கப்படுத்துவதையும் உமது இறைவன் அறிகிறான்.
70. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. இவ்வுலகிலும், மறு உலகிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது! அவனுக்கே அதிகாரமும் உரியது! அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
71. (நபியே!) “மறுமை நாள்வரை அல்லாஹ் உங்களுக்கு இரவை நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி வேறு எந்தக் கடவுள் உங்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வருவான் என்பதைச் சிந்தித்தீர்களா? நீங்கள் செவியுற மாட்டீர்களா?” என்று கேட்பீராக!
72. “மறுமை நாள்வரை அல்லாஹ் உங்களுக்குப் பகலை நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி வேறு எந்தக் கடவுள் நீங்கள் மனநிம்மதி பெறும் இரவை, உங்களுக்குக் கொண்டு வருவான் என்பதைச் சிந்தித்தீர்களா? நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?” என்றும் கேட்பீராக!
73. நீங்கள் மனநிம்மதி பெறுவதற்காகவும், அவனது அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் இரவையும், பகலையும் ஏற்படுத்தியது அவனது அருளில் உள்ளதாகும்.
74. அவர்களை இறைவன் அழைக்கும் நாளில் “எனக்கு இணையானவர்களாக நீங்கள் நம்பிக் கொண்டிருந்தவர்கள் எங்கே?” என்று கேட்பான்.
75. ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியாளரை நாம் வெளிப்படுத்தி, “உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்!” என்று கேட்போம். அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வுக்கே உண்மை(யான இறைத்தன்மை) உரியது’ என்பதை அறிந்து கொள்வார்கள். அவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்து விடும்.
76. ‘காரூன்’ மூஸாவின் சமுதாயத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அவர்களிடம் அவன் வரம்பு மீறினான். அவனுக்கு நாம் செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோம். அதன் சாவிகள், பலம் பொருந்திய கூட்டத்தாருக்குப் பாரமாக இருக்கும். அவனிடம், “நீ ஆணவம் கொள்ளாதே! ஆணவக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்” என்று அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!
77. “அல்லாஹ் உனக்கு வழங்கியதில் மறுமை வீட்டைத் தேடிக் கொள்! இவ்வுலகில் உனது பங்கை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு உதவியது போல நீயும் உதவி செய்! பூமியில் குழப்பம் விளைவிக்க விரும்பாதே! குழப்பவாதிகளை அல்லாஹ் நேசிக்க மாட்டான்” (என்றும் கூறினர்.)
78. “என் அறிவுத்திறமைக்காகவே இது எனக்கு வழங்கப்பட்டது” என்று அவன் கூறினான். இவனுக்கு முன்னர், இவனைவிட அதிக வலிமையைக் கொண்ட, (செல்வத்தை) அதிகமாகக் குவித்து வைத்திருந்த பல தலைமுறையினரை அல்லாஹ் அழித்துள்ளான் என்பதை அவன் அறியவில்லையா? அவர்களின் பாவச் செயல்களைப் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.
79. அவன், தன் அலங்காரத்துடன் தனது சமுதாயத்தாரிடம் வந்தான். இவ்வுலக வாழ்வை விரும்புவோர், “காரூனுக்கு வழங்கப்பட்டிருப்பது போன்று நமக்கும் இருந்திருக்க வேண்டுமே! அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று கூறினர்.
80. “உங்களுக்குக் கேடுதான்! இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்தோருக்கு அல்லாஹ்வின் கூலியே மிகச் சிறந்ததாகும். பொறுமையாளர்களைத் தவிர (வேறெவருக்கும்) அது கொடுக்கப்பட மாட்டாது” என்று கல்வியறிவு வழங்கப்பட்டவர்கள் கூறினார்கள்.
81. அவனையும், அவனது வீட்டையும் பூமிக்குள் புதையுண்டு போகுமாறு செய்து விட்டோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவும் எந்தக் கூட்டமும் இருக்கவில்லை. தன்னைத் தற்காத்துக் கொள்பவர்களிலும் அவன் இருக்கவில்லை.
82. நேற்று அவனது இடத்திற்கு ஆசைப்பட்டவர்கள், “நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? அல்லாஹ், தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை வாரி வழங்குகிறான். (நாடியோருக்கு) அளவுடனும் கொடுக்கிறான். அல்லாஹ் நமக்கு அருள்புரிந்திருக்கா விட்டால் நம்மையும் பூமிக்குள் புதையுறச் செய்திருப்பான். நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? நன்றிகெட்டவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறுவோராகி விட்டனர்.
83. இப்பூமியில் கர்வம் கொள்வதையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காகவே அந்த மறுமை வீட்டை உண்டாக்கி வைத்துள்ளோம். இறையச்சமுடையோருக்கு நல்ல முடிவு உள்ளது.
84. யார் நன்மையைக் கொண்டு வருகிறாரோ அவருக்கு அதைவிடச் சிறந்தது உண்டு. யார் தீமையைக் கொண்டு வருகிறார்களோ, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்காகவே தவிர (வேறு) கூலி கொடுக்கப்பட மாட்டார்கள்.
85. (நபியே!) உம்மீது இக்குர்ஆனை விதியாக்கியவன், உம்மை (நீர்) சென்றடைய வேண்டிய இடத்திற்கு (மக்காவுக்கு) மீண்டும் கொண்டு செல்வான். “நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார்? பகிரங்க வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை என்னிறைவன் நன்கறிந்தவன்” என்று கூறுவீராக!379
86. (நபியே!) உமக்கு இவ்வேதம் வழங்கப்படும் என்று நீர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. எனினும் (இது) உமது இறைவனின் அருளாகும். எனவே இறைமறுப்பாளர்களுக்கு உதவியாளராக ஆகிவிடாதீர்!
87. அல்லாஹ்வின் வசனங்கள் உம்மீது அருளப்பட்ட பின் அவற்றிலிருந்து அவர்கள் உம்மைத் தடுத்துவிட வேண்டாம். உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணைவைப்போரில் ஒருவராகி விடாதீர்!
88. அல்லாஹ்வுடன் இணைத்து வேறு கடவுளைப் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. அவனது முகத்தைத் தவிர அனைத்துப் பொருட்களும் அழியக் கூடியதே! அவனுக்கே அதிகாரம் உரியது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.380