அத்தியாயம் : 54
வசனங்களின் எண்ணிக்கை: 55
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.513
1. உலக அழிவு நேரம் நெருங்கி விட்டது; சந்திரன் பிளந்து விட்டது.514
2. அவர்கள் எந்தச் சான்றினைக் கண்டாலும் புறக்கணித்து விடுகின்றனர். மேலும், “இது தொடர்ச்சியாக நடக்கும் சூனியமே” என்று கூறுகின்றனர்.
3. அவர்கள் பொய்யெனக் கூறிச் சுய விருப்பங்களைப் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு செயலும் நிகழக் கூடியதே!
4. அவர்களிடம் அச்சுறுத்தும் செய்திகள் வந்துவிட்டன.
5. (அவை) தேர்ந்த ஞானமுடையவை. ஆனால் (அவர்களுக்கு இந்த) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.
6, 7. எனவே, அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! (அவர்களுக்கு) வெறுப்பூட்டும் ஒரு விஷயத்திற்காக அழைப்பாளர் அழைக்கும் நாளில் அவர்களின் பார்வைகள் கீழ்நோக்கி இருக்கும். பரவிச் செல்லும் வெட்டுக் கிளிகளைப் போல் மண்ணறைகளிலிருந்து வெளிப்படுவார்கள்.
8. (அவர்கள்) அழைப்பாளரை நோக்கி விரைந்தோடுவார்கள். “இது கடினமான நாள்” என்று இறைமறுப்பாளர்கள் கூறுவார்கள்.
9. இவர்களுக்கு முன் நூஹின் சமுதாயத்தினர் பொய்யெனக் கூறினர். நமது அடியாரை ஏற்க மறுத்துப் பைத்தியக்காரர் என்றும் கூறினர். மேலும் அவர் விரட்டியடிக்கப்பட்டார்.
10. “நான் தோற்று விட்டேன். எனவே எனக்கு உதவுவாயாக!” என்று தமது இறைவனிடம் அவர் இறைஞ்சினார்.
11. கொட்டித் தீர்க்கும் மழையைக் கொண்டு வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டோம்.
12. பூமியில் நீரூற்றுகளைப் பாய்ந்தோடச் செய்தோம். நிர்ணயிக்கப்பட்ட செயலுக்காக (வானம், பூமியின்) தண்ணீர் ஒன்று சேர்ந்தது.
13. பலகைகளையும், ஆணிகளையும் கொண்ட (மரக்கலத்)தில் அவரைச் சுமந்து சென்றோம்.
14. அது நமது கண்முன்னே ஓடியது. (தீயவர்களால்) புறக்கணிக்கப் பட்டவருக்கு வெகுமதியாக (இதைச் செய்தோம்.)
15. அதை ஒரு சான்றாக விட்டுவைத்துள்ளோம். சிந்திப்போர் உண்டா?
16. எனது தண்டனையும், எச்சரிக்கைகளும் எப்படி இருந்தன?
17. குர்ஆனை விளங்குவதற்கு நாம் எளிதாக்கியுள்ளோம். சிந்திப்போர் உண்டா?
18. ஆது சமுதாயத்தினர் பொய்யெனக் கூறினர். எனவே எனது தண்டனையும், எச்சரிக்கைகளும் எப்படி இருந்ததன?
19. நீடித்த துயரம் மிகுந்த நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் சூறாவளியை அனுப்பினோம்.515
20. அது, அடியோடு பிடுங்கப்பட்ட பேரீச்ச மரங்களைப் போன்று மனிதர்களைப் பிடுங்கியது.
21. எனது தண்டனையும், எச்சரிக்கைகளும் எப்படி இருந்தன?
22. குர்ஆனை விளங்குவதற்கு நாம் எளிதாக்கியுள்ளோம். சிந்திப்போர் உண்டா?
23. ஸமூது சமுதாயத்தினர் எச்சரிக்கைகளைப் பொய்யெனக் கூறினர்.
24. “நம்மைச் சார்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவது? அவ்வாறாயின் நாம் வழிகேட்டிலும், பைத்தியத்திலும் ஆகி விடுவோம்” என்று கூறினர்.
25. “நம்மிடையே இவருக்குத்தான் அறிவுரை வழங்கப்பட்டதா? அவ்வாறல்ல! இவர் ஆணவம் கொண்ட பெரும் பொய்யர்” (என்றனர்.)
26. ஆணவம் கொண்ட பெரும் பொய்யர் யார் என்பதை அவர்கள் நாளை அறிந்து கொள்வார்கள்.
27. அவர்களைச் சோதிப்பதற்காக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்புவோம். எனவே, நீர் அவர்களைக் கண்காணித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக!
28. அவர்களுக்கிடையே தண்ணீர் பங்கிடப்பட்டுள்ளது என்பதை அவர்களுக்கு அறிவித்து விடுவீராக! நீரருந்தும் ஒவ்வொருவரும் (தமக்கென ஒதுக்கப்பட்ட நாளில்) வரவழைக்கப்பட வேண்டும்.
29. ஆனால் அவர்கள் தமது தோழனை அழைத்தனர். அவன் அ(ந்த ஒட்டகத்)தைப் பிடித்து அறுத்து விட்டான்.
30. எனவே எனது தண்டனையும், எச்சரிக்கைகளும் எப்படி இருந்தன?
31. நாம் அவர்கள்மீது ஒரேஒரு பெரும் சப்தத்தைத்தான் அனுப்பினோம். உடனே அவர்கள் வேலியமைப்பவனின் சருகுகளைப் போன்று ஆகிவிட்டனர்.
32. குர்ஆனை விளங்குவதற்கு நாம் எளிதாக்கியுள்ளோம். சிந்திப்போர் உண்டா?
33. லூத்தின் சமுதாயத்தினர் எச்சரிக்கைகளைப் பொய்யெனக் கூறினர்.
34. நாம் அவர்கள்மீது கல்மழையைப் பொழிவித்தோம். லூத்தின் குடும்பத்தாரைத் தவிர! அவர்களை அதிகாலை நேரத்தில் காப்பாற்றினோம்.
35. இது நமது அருளாகும். நன்றி செலுத்துவோருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.
36. அவர்களுக்கு நமது பிடியைப் பற்றி (லூத்) எச்சரித்தார். ஆனால் அவர்களோ அந்த எச்சரிக்கைகளில் சந்தேகம் கொண்டனர்.
37. (தமது தீய செயலுக்காக) அவரது விருந்தினரை அவரிடம் வேண்டினார்கள். எனவே அவர்களின் பார்வைகளைப் பறித்தோம். “எனது தண்டனையையும், எச்சரிக்கைகளையும் அனுபவியுங்கள்!” (என்று கூறினோம்.)
38. அவர்களை அதிகாலையில் உறுதியான வேதனை தாக்கியது.
39. எனது தண்டனையையும், எச்சரிக்கைகளையும் அனுபவியுங்கள்!
40. குர்ஆனை விளங்குவதற்கு நாம் எளிதாக்கியுள்ளோம். சிந்திப்போர் உண்டா?
41. ஃபிர்அவ்னுடைய கூட்டாத்தாருக்கும் எச்சரிக்கைகள் வந்தன.
42. நமது சான்றுகள் அனைத்தையும் அவர்கள் பொய்யெனக் கூறினர். எனவே அவர்களை ஆற்றல்மிக்க, மிகைத்தவனின் பிடியாகப் பிடித்தோம்.
43. அவர்களைவிட உங்களிலுள்ள இறைமறுப்பாளர்கள் சிறந்தவர்களா? அல்லது வேதங்களில் உங்களுக்கு(த் தண்டனையிலிருந்து) ஏதேனும் விதிவிலக்குள்ளதா?
44. “நாங்கள் வெற்றியடையும் கூட்டத்தினர்” என்று கூறுகின்றனரா?
45. அக்கூட்டத்தினர் தோற்கடிக்கப்பட்டுப் புறமுதுகிட்டு ஓடுவார்கள்.516
46. மேலும் மறுமையே இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். அந்த நேரம் மிக மோசமானதும், கசப்பானதுமாகும்.
47. குற்றவாளிகள் வழிகேட்டிலும், அறிவிழந்தும் உள்ளனர்.
48. அவர்கள் முகங்குப்புற நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில் “நரக நெருப்பின் தீண்டுதலைச் சுவையுங்கள்!” (என்று கூறப்படும்.)517
49. ஒவ்வொரு பொருளையும் (குறிப்பிட்ட) அளவின்படியே படைத்துள்ளோம்.518
50. நமது கட்டளை, கண் இமைப்பது போன்ற ஒன்றுதான்.
51. உங்களில் பல கூட்டத்தினரை நாம் அழித்துள்ளோம். சிந்திப்போர் உண்டா?
52. அவர்களின் ஒவ்வொரு செயலும் பதிவேடுகளில் உள்ளது.
53. ஒவ்வொரு சிறிய, பெரிய விஷயமும் எழுதப்பட்டுள்ளது.
54, 55. இறையச்சமுடையோர் ஆற்றல்மிக்க அரசனுக்கு அருகில், உண்மையான இருப்பிடமாகிய சொர்க்கங்களிலும், ஆறுகளிலும் இருப்பார்கள்.