அல்ஜுமுஆ – வெள்ளிக்கிழமை

அத்தியாயம் : 62

வசனங்களின் எண்ணிக்கை: 11

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. வானங்கள், பூமியில் உள்ளவை அல்லாஹ்வைப் போற்றுகின்றன. (அவன்) அரசன்; தூய்மையானவன்; மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.561
2. அவனே படிப்பறிவற்ற சமுதாயத்திற்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர், அவனது வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டி, அவர்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். இதற்கு முன் அவர்கள் பகிரங்க வழிகேட்டில் இருந்தனர்.562
3. இவர்களுடன் இதுவரை சேர்ந்திராத மற்றவர்களுக்காகவும் (இத்தூதரை அனுப்பினான்.) அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
4. இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடியோருக்கு அதை வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
5. தவ்ராத் வழங்கப்பட்டு, பின்னர் அதைக் கடைப்பிடிக்காமல் இருந்தவர்களின் எடுத்துக்காட்டு, புத்தகங்களைச் சுமக்கும் கழுதையைப் போன்றதாகும். அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்திற்கான எடுத்துக்காட்டு மிகக் கெட்டது. அநியாயக்காரக் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
6. “யூதர்களே! மற்ற மனிதர்களைவிட நீங்களே அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்கள் என்று நீங்கள் நம்பினால், (அதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை விரும்புங்கள்!” என்று (நபியே!) கூறுவீராக!563
7. அவர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக அவர்கள் ஒருபோதும் அதை விரும்பவே மாட்டார்கள். அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன்.
8. “எதைவிட்டும் நீங்கள் வெருண்டோடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்தித்தே தீரும். பிறகு, மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிபவனிடம் நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அப்போது உங்களுக்கு அறிவிப்பான்” என்று கூறுவீராக!
9. இறைநம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் (ஜும்ஆ) தொழுகைக்கு நீங்கள் அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காக விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் அறிவோராக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.564
10. தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் நீங்கள் பூமியில் பரவிச் சென்று, அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள். அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
11. (நபியே!) வியாபாரத்தையோ, வீணானதையோ அவர்கள் பார்த்தால், (உரையாற்றிக் கொண்டிருக்கும்) உம்மை நிற்கும் நிலையில் விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். “வீணானதையும், வியாபாரத்தையும்விட அல்லாஹ்விடம் இருப்பதே மிகச் சிறந்ததாகும். உணவளிப்போரில் அல்லாஹ் மிகச் சிறந்தவன்” என்று கூறுவீராக!565