அல்ஜின் – ஜின் எனும் படைப்பினம்

அத்தியாயம் : 72

வசனங்களின் எண்ணிக்கை: 28

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. “ஜின்களில் ஒரு குழுவினர் (இக்குர்ஆனைச்) செவியுற்று, ‘நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்’ என்று கூறியதாக எனக்கு இறைச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது” என்று (நபியே!) கூறுவீராக!593
2. இது நேர்வழிக்கு வழிகாட்டுகிறது. எனவே அதன்மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டோம்.
3. எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்துவிட்டது. அவன் மனைவி, மக்களை எடுத்துக் கொள்ளவில்லை.
4. ஆனால் நம்மிடையே உள்ள மடையன் அல்லாஹ்வின்மீது அநியாயமான கூற்றைக் கூறுபவனாக இருந்தான்.
5. மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வின்மீது பொய்யுரைக்கவே மாட்டார்கள் என்று நாங்கள் கருதிக் கொண்டிருந்தோம்.
6. மனிதர்களில் சில ஆண்கள், ஜின்களிலுள்ள சில ஆண்களிடம் பாதுகாவல் தேடி, அவர்களுக்கு வரம்புமீறலை அதிகப்படுத்தி விட்டனர்.
7. அல்லாஹ், எவரையும் (உயிர்ப்பித்து) எழுப்பவே மாட்டான் என்று நீங்கள் கருதுவது போன்றே அவர்களும் கருதிக் கொண்டிருந்தனர்.
8. நாங்கள் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது பலமான பாதுகாவலர்களாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதைக் கண்டோம்.594
9. அங்கு(ப் பேசப்படுவதைச்) செவியுறுவதற்காகப் பல இடங்களிலும் அமர்ந்து கொண்டிருந்தோம். ஆனால் இப்போது செவியேற்(க முயற்சிப்)பவர், தமக்காகக் காத்திருக்கும் தீப்பிழம்பையே காண்பார்.
10. பூமியில் இருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களுடைய இறைவன், அவர்களுக்கு நல்வழியை நாடியுள்ளானா என்பதை நாங்கள் அறிய மாட்டோம்.
11. நம்மில் நல்லவர்களும் உள்ளனர்; அதற்கு மாற்றமானவர்களும் உள்ளனர். நாம் பல்வேறு வழிமுறைகளில் இருந்தோம்.
12. பூமியில் அல்லாஹ்விடமிருந்து நாம் தப்பிக்க முடியாது என்பதையும், வெருண்டோடினாலும் அவனிடமிருந்து தப்ப முடியாது என்பதையும் உறுதியாக அறிந்து கொண்டோம்.
13. நாங்கள் நேர்வழியைச் செவியுற்றபோது அதை நம்பினோம். எனவே யார் தனது இறைவனை நம்புகிறாரோ அவர் இழப்பு ஏற்படுவற்காகவோ, அநீதி இழைக்கப்படுவதற்காகவோ அஞ்ச மாட்டார்.
14. நம்மில் முஸ்லிம்களும் உள்ளனர்; அநியாயக்காரர்களும் உள்ளனர். இஸ்லாத்தை ஏற்பவர்களே நேர்வழியைத் தேடிக் கொண்டவர்கள்.
15. “அநியாயக்காரர்களோ நரகத்தின் விறகுகளாகி விட்டனர்” (என்றும் ஜின்கள் கூறின.)
16. அவர்கள் (இந்த) மார்க்கத்தில் உறுதியாக இருந்திருந்தால் (வானிலிருந்து) அதிகமான நீரை அவர்களுக்குப் புகட்டியிருப்போம்.
17. அவர்களை இதில் நாம் சோதிக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம். தனது இறைவனின் அறிவுரையைப் புறக்கணிப்பவரைக் கடும் வேதனையில் ஆழ்த்தி விடுவான்.
18. பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். எனவே அல்லாஹ்வுடன் வேறெவரையும் பிரார்த்திக்காதீர்கள்.
19. அல்லாஹ்வின் அடியா(ராகிய இத்தூத)ர் அவனைப் பிரார்த்திப்பதற்காக (தொழுகையில்) நின்றபோது, அவர்கள் கூட்டமாக அவரை நெருங்கி விடுகின்றனர்.595
20. “நான் என் இறைவனிடமே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டேன்” என்று (நபியே!) கூறுவீராக!
21. “நான் உங்களுக்குத் தீமையோ, நன்மையோ செய்ய சக்தி பெற மாட்டேன்” என்றும் கூறுவீராக!
22. “என்னை அல்லாஹ்விடமிருந்து எவரும் காப்பாற்ற முடியாது. அவனையன்றி எந்தப் புகலிடத்தையும் நான் காண மாட்டேன்” என்றும் கூறுவீராக!
23. அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதுச் செய்திகளிலிருந்தும் எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதற்கும் சக்தி பெற மாட்டேன்). அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் யார் மாறு செய்கிறாரோ அவருக்கு நரக நெருப்பே உள்ளது. அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள்.
24. இறுதியில், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை அவர்கள் காணும்போது உதவியாளர்களில் மிகப் பலவீனமானவன் யார் என்பதையும், எண்ணிக்கையில் மிகக் குறைந்தவன் யார் என்பதையும் அறிந்து கொள்வார்கள்.
25. “உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது அருகில் இருக்கிறதா? அல்லது அதற்கு (நீண்ட) காலக் கெடுவை எனது இறைவன் நிர்ணயித்துள்ளானா என்பதை நான் அறிய மாட்டேன்” எனக் கூறுவீராக!
26, 27. அவன் மறைவானவற்றை அறிபவன். தான் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர வேறு எவருக்கும் அவன் மறைத்திருப்பதை வெளிப்படுத்த மாட்டான். தூதருக்கு முன்னும் பின்னும் பாதுகாவலர்களை ஏற்படுத்தியுள்ளான்.
28. தமது இறைவனின் தூதுச் செய்திகளை அவர்கள் எடுத்துரைத்து விட்டதை அவன் வெளிப்படுத்த வேண்டும் என்பதே இதற்குக் காரணம். அவர்களிடம் இருப்பதை அவன் முழுமையாக அறிந்துள்ளான். ஒவ்வொரு பொருளின் எண்ணிக்கையையும் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளான்.