அத்தியாயம் : 45
வசனங்களின் எண்ணிக்கை: 37
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. ஹா, மீம்.
2. மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
3. வானங்களிலும், பூமியிலும் இறைநம்பிக்கையாளர்களுக்குச் சான்றுகள் உள்ளன.
4. அவன் உங்களைப் படைத்ததிலும், உயிரினங்களைப் பரவச் செய்த திலும், உறுதியாக நம்புகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகள் இருக்கின்றன.
5. இரவு, பகல் மாறிமாறி வருவதிலும், அல்லாஹ் வானிலிருந்து இறக்கிய மழையிலும், அதன்மூலம் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிப்பதிலும், காற்றுகளை மாறிமாறி வீசச் செய்வதிலும் சிந்திக்கின்ற சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன.
6. இவை அல்லாஹ்வின் வசனங்களாகும். உண்மையைக் கொண்டுள்ள இவற்றை உமக்கு ஓதிக் காட்டுகிறோம். அல்லாஹ்வுக்கும், அவனது வசனங்களுக்கும் பிறகு எந்தச் செய்தியைத்தான் இவர்கள் நம்பப் போகிறார்கள்?
7. பாவியான, பெரும் பொய் கூறும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்.
8. அவன், தனக்கு எடுத்துரைக்கப்படும் அல்லாஹ்வின் வசனங்களைச் செவியுறுகிறான். பின்னர் அவற்றைக் காதுகோளாததைப் போல் கர்வம் கொண்டு (இறைமறுப்பில்) பிடிவாதமாக இருக்கின்றான். எனவே, அவனுக்குக் துன்புறுத்தும் வேதனையைப் பற்றி நற்செய்தி கூறுவீராக!
9. நமது வசனங்களில் எதையாவது அவன் அறிந்தால் அதைக் கேலிப் பொருளாக எடுத்துக் கொள்கிறான். இவர்களுக்குத்தான் இழிவு தரும் வேதனை உண்டு.
10. அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது. அவர்கள் சம்பாதித்தவையும், அல்லாஹ்வையன்றிப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவையும் அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது. அவர்களுக்குக் கடும் வேதனையும் உண்டு.
11. இது நேர்வழியாகும். தமது இறைவனின் வசனங்களை மறுப்போருக்குத் தண்டனையாக துன்புறுத்தும் வேதனை உள்ளது.
12. அல்லாஹ்வின் ஆணைப்படி கடலில் கப்பல் செல்வதற்காகவும், நீங்கள் அவனது அருளைத் தேடுவதற்காகவும், நன்றி செலுத்துவதற்காகவும் அவனே உங்களுக்காகக் கடலை வசப்படுத்தினான்.
13. வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தையும் தன்னிடமிருந்து உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் சான்றுகள் உள்ளன.
14. (நபியே!) இறைநம்பிக்கையாளர்களிடம் நீர் கூறுவீராக! அல்லாஹ்வின் (தண்டனை) நாட்களை நம்பாதவர்களை அவர்கள் பொருட்படுத்தாது விட்டு விடட்டும். ஏனெனில் ஒரு சமுதாயத்தினர் செய்து கொண்டிருந்தவற்றுக்கு அவன் கூலி வழங்குவான்.
15. யார் ஒரு நற்செயல் செய்கிறோரோ அது அவருக்கே (நல்லது). யார் தீமை செய்கிறாரோ அது அவருக்கே எதிரானது. பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டுக் கொண்டு வரப்படுவீர்கள்.
16. இஸ்ராயீலின் தலைமுறைகளுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் வழங்கினோம். மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றிலிருந்து உணவளித்தோம். அவர்களை அகிலத்தாரைவிட மேம்படுத்தினோம்.
17. அவர்களுக்கு மார்க்க விஷயத்தில் தெளிவான சான்றுகளை வழங்கினோம். அவர்களுக்கு அறிவு வந்தபிறகும் தமக்கிடையிலான பொறாமையால் கருத்து வேறுபாடு கொண்டனர். அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அதில் மறுமை நாளில் அவர்களுக்கிடையே உமது இறைவன் தீர்ப்பளிப்பான்.
18. (நபியே!) பின்னர் ஒரு மார்க்க வழிமுறையில் உம்மை ஆக்கியுள்ளோம். எனவே அதைப் பின்பற்றுவீராக! அறியாதவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்!
19. அவர்கள் அல்லாஹ்விடமிருந்து உம்மைச் சிறிதும் காப்பாற்ற மாட்டார்கள். அநியாயக்காரர்களில் ஒருசிலர், வேறுசிலருக்கு உற்ற நண்பர்களாக உள்ளனர். அல்லாஹ்வே இறையச்சமுடையோரின் பாதுகாவலன்.
20. இது மனிதர்களுக்கு ஆதாரங்களாகவும், உறுதியாக நம்பும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
21. இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோரைப் போன்று இவர்களையும் ஆக்கி விடுவோம் எனத் தீமை செய்வோர் எண்ணிக் கொண்டார்களா? (தீமை செய்யும்) அவர்கள் வாழ்வதும், சாவதும் சமமே! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகக் கெட்டது.
22. அல்லாஹ் வானங்களையும், பூமியையும் நியாயமான காரணத்துடனே படைத்துள்ளான். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்குரிய கூலி கொடுக்கப்படுவதற்காகவே (இவ்வாறு படைத்தான்.) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
23. தனது சுய விருப்பத்தைக் கடவுளாக எடுத்துக் கொண்டவனைப் பார்த்தீரா? (அவனது நிலை) அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு விட்டான். அவனது செவியிலும், உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவனது பார்வையின்மீது திரையை ஏற்படுத்தி விட்டான். அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? 467
24. “இது, நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறில்லை. நாம் மரணிக்கிறோம்; உயிரோடும் இருக்கிறோம். காலத்தைத் தவிர வேறெதுவும் நம்மை அழிக்கவில்லை” என்று அவர்கள் கூறுகின்றனர். இதுபற்றி அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை. அவர்கள் ஊகம் செய்வோர் தவிர வேறில்லை.
25. அவர்களிடம் நமது வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டால் “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் முன்னோரை (உயிர்ப்பித்துக்) கொண்டு வாருங்கள்” என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களின் வாதமாக இருப்பதில்லை.
26. “அல்லாஹ்வே உங்களை உயிர்ப்பிக்கிறான். பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். பின்னர் ஐயமற்ற மறுமை நாளில் உங்களை ஒன்றுதிரட்டுவான்” என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்வதில்லை.
27. வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மறுமை நிகழும் நாளான அன்று பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.
28. நீர் ஒவ்வொரு சமுதாயத்தையும் முழங்காலிட்டவர்களாகக் காண்பீர். ஒவ்வொரு சமுதாயமும் தமது பதிவேட்டை நோக்கி அழைக்கப்படுவார்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே இன்று கூலி கொடுக்கப்படுவீர்கள்.
29. இது உங்களைப் பற்றிய உண்மையைப் பேசும் நமது பதிவேடு. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பதிவு செய்வோராகவே இருந்தோம்.
30. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோரை அவர்களின் இறைவன் தனது அருளில் நுழையச் செய்வான். அதுவே தெளிவான வெற்றியாகும்.
31. இறைமறுப்பாளர்களிடம் “எனது வசனங்கள் உங்களுக்கு எடுத்துரைக்கப்படவில்லையா? நீங்கள் கர்வம் கொண்டு, குற்றவாளிகளின் கூட்டமாக இருந்தீர்கள்” (என்று கூறப்படும்)
32. “அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. மறுமை நாள் பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை” என்று கூறப்பட்டபோது “மறுமை நாள் என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. (அது) கற்பனை என்றே நினைக்கிறோம். நாங்கள் உறுதி கொள்வோர் இல்லை” என்று கூறினீர்கள்.
33. அவர்கள் செய்த தீமைகள் (அங்கு) அவர்களுக்கு வெளிப்பட்டு விடும். அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
34, 35. “உங்களுடைய இந்நாளின் சந்திப்பை நீங்கள் மறந்ததைப் போன்று இன்று நாமும் உங்களை மறந்து விட்டோம். உங்களின் தங்குமிடம் நரகம். உங்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை. நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களைக் கேலியாகக் கருதியதே இதற்குக் காரணம். உலக வாழ்வும் உங்களை ஏமாற்றி விட்டது” என்று கூறப்படும். அவர்கள் இன்று நரகிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள். அவர்கள் பொருந்திக் கொள்ளப்படவும் மாட்டார்கள்.
36. வானங்களின் இறைவனும், பூமியின் இறைவனும், அகிலத்தாரின் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
37. வானங்களிலும், பூமியிலும் பெருமைகள் அனைத்தும் அவனுக்கே உரியன. அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.468