அல்இன்ஷிகாக் – பிளந்துவிடுதல்

அத்தியாயம் : 84

வசனங்களின் எண்ணிக்கை: 25

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. வானம் பிளந்து விடும்போது, 623
2. தனக்கு விதியாக்கப்பட்டவாறு, அது தனது இறைவனின் ஆணைக்குச் செவிசாய்க்கும்போது,
3, 4. பூமி விரிக்கப்படும்போது, தன்னுள் இருப்பவற்றையெல்லாம் எறிந்துவிட்டு, அது காலியாகி விடும்போது.624
5. தனக்கு விதியாக்கப்பட்டவாறு, அது தனது இறைவனின் ஆணைக்குச் செவிசாய்க்கும்போது, (மனிதன் அறிந்து கொள்வான்.)
6. மனிதனே! உனது இறைவனை அடையும்வரை நீ விடாமுயற்சி செய்கிறாய். எனவே, அவனை நீ சந்திப்பாய்.
7, 8. யாருடைய ஏடு அவரது வலதுகரத்தில் வழங்கப்படுகிறதோ, அவர் மிக எளிய முறையில் விசாரணை செய்யப்படுவார்.625
9. அவர் மகிழ்ச்சியுடன் தனது குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்வார்.
10, 11. யாருடைய ஏடு அவனது முதுகுக்குப் பின்புறமாக வழங்கப்படுகிறதோ, அவன் அழிவை வேண்டுவான்.
12. அவன் கொழுந்து விட்டெரியும் நரகத்தில் நுழைவான்.
13. அவன், தனது குடும்பத்தாருடன் (உலகில்) மகிழ்ச்சியாக இருந்தான்.
14. (இறைவனிடம்) அவன் திரும்பிச் செல்லப் போவதில்லை என்று எண்ணிக் கொண்டான்.
15. அவ்வாறல்ல! அவனுடைய இறைவன், அவனைப் பார்ப்பவனாக இருந்தான்.
16, 17, 18. செவ்வானத்தின்மீதும், இரவின்மீதும், அது சேர்த்துக் கொண்டிருப்பவற்றின்மீதும், முழுமையாகும்போதுள்ள சந்திரன்மீதும் சத்தியம் செய்கிறேன்.
19. நீங்கள் (வாழ்வின்) ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்கிறீர்கள்.
20, 21. இறைநம்பிக்கை கொள்ளாமல் இருக்கிறார்களே! அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களிடம் குர்ஆன் ஓதிக் காட்டப்பட்டால் அவர்கள் ஸஜ்தா செய்வதில்லை.626
22. மாறாக, இறைமறுப்பாளர்கள் பொய்யெனக் கூறுகின்றனர்.
23. அவர்கள் மறைத்து வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிவான்.
24. எனவே, அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என நற்செய்தி கூறுவீராக!
25. எனினும், இறைநம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோருக்கு முடிவுறாத கூலி உண்டு!