அல்இன்ஸான் – மனிதன்

அத்தியாயம் : 76

வசனங்களின் எண்ணிக்கை: 31

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. குறிப்பிடத்தக்க ஒரு பொருளாக இல்லாத காலகட்டம் மனிதனுக்கு இருந்ததில்லையா? 605
2. நாம் மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பான விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
3. அவனுக்கு நேரான வழியைக் காட்டியுள்ளோம். அவன் நன்றியுள்ளவனாகவோ, நன்றி மறந்தவனாகவோ இருக்கிறான்.
4. இறைமறுப்பாளர்களுக்குச் சங்கிலிகளையும், விலங்குகளையும், கொழுந்து விட்டெரியும் நரகத்தையும் தயார்படுத்தியுள்ளோம்.
5. நல்லவர்கள் கிண்ணங்களில் அருந்துவார்கள். அதன் கலவை கற்பூரமாகும்.
6. (அது) அல்லாஹ்வின் அடியார்கள் அருந்தும் ஒரு நீரூற்றாகும். அவர்கள் அதைப் பாய்ந்தோடச் செய்வார்கள்.
7. அவர்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுவார்கள். ஒரு நாளுக்காக அஞ்சுவார்கள். அதன் தீங்கு பரவலாக இருக்கும்.606
8. அவன்மீது கொண்ட அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், கைதிகளுக்கும் உணவளிப்பார்கள்.
9, 10. “உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடமிருந்து கூலியையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் இறைவனிடமிருந்து (வரவிருக்கும்) சிரமுமம், கடுமையும் நிறைந்த நாளுக்காக அஞ்சுகிறோம்” (என்று கூறுவார்கள்.)
11. அவர்களை அந்த நாளின் தீங்கிலிருந்து அல்லாஹ் பாதுகாத்தான். அவர்களுக்குப் பொலிவையும், மகிழ்ச்சியையும் வழங்கினான்.
12. அவர்கள் பொறுமையை மேற்கொண்டதால் சொர்க்கத்தையும், பட்டாடையையும் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தான்.
13. அங்குச் சாய்மானங்களில் அவர்கள் சாய்ந்திருப்பார்கள். அங்குச் சூரிய வெப்பத்தையோ, கடும் குளிர்ச்சியையோ காண மாட்டார்கள்.
14. அதன் நிழல்கள் அவர்களுக்கு நெருங்கியவையாக இருக்கும். அதன் பழங்கள் தாழ்ந்த நிலையில் இருக்கும்.
15. வெள்ளிப் பாத்திரங்களும், பளிங்குக் குவளைகளும் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும்.
16. அவை வெள்ளியினாலான பளிங்குகளாகும். அவர்கள் அவற்றைச் சரியான அளவில் நிர்ணயித்துக் கொள்வார்கள்.
17, அங்குக் கிண்ணங்களில் அவர்கள் புகட்டப்படுவார்கள். அதன் கலவை இஞ்சியாகும்.
18. (அது) ஸல்ஸபீல் என்று சொல்லப்படும் அங்குள்ள நீருற்றாகும்.
19. என்றும் (இளமை) நிலைத்திருக்கும் சிறுவர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அ(ச்சிறு)வர்களை நீர் பார்த்தால் பரப்பி வைக்கப்பட்ட முத்துகள் என்றே எண்ணுவீர்!
20. நீர் அங்கு பார்க்கும்போது, இன்பத்தையும், மாபெரும் ஆட்சியையும் காண்பீர்.
21. அவர்கள்மீது பச்சை நிற மெல்லிய பட்டாடைகளும், அடர்த்தியான பட்டாடைகளும் இருக்கும். அவர்களுக்கு வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படும். அவர்களின் இறைவன் பரிசுத்தமான பானத்தை அவர்களுக்குப் புகட்டுவான்.
22. “இதுவே உங்களுக்குரிய கூலியாகும். உங்கள் முயற்சி நன்றி பாராட்டப்படுவதாக இருக்கும்” (என்று கூறப்படும்.)
23. (நபியே!) இக்குர்ஆனை நாமே உம்மீது சிறிது சிறிதாக அருளினோம்.
24. எனவே, உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுமையுடன் இருப்பீராக! அவர்களில் பாவிக்கோ, இறைமறுப்பாளனுக்கோ கட்டுப்படாதீர்!
25. காலையிலும், மாலையிலும் உமது இறைவனின் பெயரை நினைவுகூர்வீராக!
26. இரவின் ஒரு பகுதியில் அவனுக்கு ஸஜ்தா செய்வீராக! இரவில் நீண்ட நேரம் அவனைப் போற்றுவீராக!
27. அவர்கள் இவ்வுலகையே விரும்புகின்றனர். தமக்கு முன்புள்ள கடின (மறுமை) நாளை விட்டுவிடுகின்றனர்.
28. நாமே அவர்களைப் படைத்து, அவர்களின் அமைப்பை உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால் (அவர்களை அழித்துவிட்டு) அவர்களைப் போன்றவர்களை மாற்றாகக் கொண்டு வருவோம்.
29. இது ஓர் அறிவுரையாகும். யார் விரும்புகிறாரோ அவர் தமது இறைவனை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்ளட்டும்.
30. அல்லாஹ் நாடினாலே தவிர நீங்கள் (எதையும்) நாட மாட்டீர்கள். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
31. தான் நாடியோரைத் தன் அருளில் நுழைவிக்கிறான். அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயார்படுத்தியுள்ளான்.