அல்இன்ஃபிதார் – பிளந்துவிடுதல்

அத்தியாயம் : 82

வசனங்களின் எண்ணிக்கை: 19

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. வானம் பிளந்து விடும்போது, 616
2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது,
3. கடல்கள் பொங்க வைக்கப்படும்போது,
4. மண்ணறைகள் திறக்கப்படும்போது,
5. ஒவ்வொருவரும் தாம் முற்படுத்தியதையும், பிற்படுத்தியதையும் அறிந்து கொள்வர்.
6. மனிதனே! கண்ணியமிக்க உனது இறைவனைப் பற்றி உன்னை ஏமாற்றியது எது?
7. அவனே உன்னைப் படைத்து, ஒழுங்குபடுத்திச் சீராக அமைத்தான்.
8. அவன் விரும்பிய தோற்றத்தில் உன்னை வடிவமைத்தான்.
9. எனினும், தீர்ப்பு நாளை நீங்கள் பொய்யெனக் கூறுகிறீர்கள்.
10, 11. உங்கள்மீது கண்காணிப்பாளர்கள் உள்ளனர். (அவர்கள்) கண்ணியத்திற்குரியவர்கள்; எழுத்தர்கள்.617
12. நீங்கள் செய்வதை அவர்கள் அறிகின்றனர்.
13. நல்லவர்கள் இன்பத்தில் இருப்பார்கள்.
14. தீயவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
15. தீர்ப்புநாளில் அதில் நுழைவார்கள்.
16. அதிலிருந்து அவர்கள் மறைந்துவிட முடியாது.
17. தீர்ப்பு நாள் என்றால் என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
18. பின்னரும், தீர்ப்பு நாள் என்றால் என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
19. அந்நாளில் ஒருவர், மற்றவருக்கு எதையும் செய்வதற்குச் சக்தி பெற மாட்டார்கள். அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது.618