அல்ஹுஜுராத் – அறைகள்

அத்தியாயம் : 49

வசனங்களின் எண்ணிக்கை: 18

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முன்னர் (கருத்துக் கூற) முந்தாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.487
2. இறைநம்பிக்கை கொண்டோரே! நபியின் குரலுக்கு மேல் உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் உரத்துப் பேசுவதுபோல் அவரிடம் உரத்துப் பேசாதீர்கள்! (இதனால்) நீங்கள் அறியாத விதத்தில் உங்களின் நற்செயல்கள் அழிந்து விடும்.488
3. அல்லாஹ்வின் தூதரிடம் யார் தமது குரலைத் தாழ்த்துகிறார்களோ அவர்களின் உள்ளங்களை இறையச்சத்திற்காக அல்லாஹ் தூய்மைப்படுத்தியுள்ளான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு.
4. (நபியே!) அறைகளுக்கு முன்னாலிருந்து உம்மை உரத்த குரலில் அழைத்தவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்ளாதவர்களே!489
5. நீர் (அறையிலிருந்து) வெளியேறி அவர்களிடம் வரும்வரை அவர்கள் பொறுமையாக இருந்திருப்பார்களாயின் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
6. இறைநம்பிக்கை கொண்டோரே! பாவம் செய்பவன் உங்களிடம் ஏதேனும் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், அறியாமையால் ஒரு கூட்டத்தாருக்கு நீங்கள் தீங்கிழைக்காதிருக்க (அதன் உண்மைத் தன்மையை)த் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். (இல்லையெனில்) நீங்கள் செய்ததற்காக வருந்துவோராக ஆகி விடுவீர்கள்.
7. அறிந்து கொள்ளுங்கள்! உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார். பல விஷயங்களில் அவர் உங்களுக்குக் கட்டுப்பட்டிருந்தால் நீங்கள் கஷ்டத்திற்கு உள்ளாகியிருப்பீர்கள். எனினும், அல்லாஹ் இறைநம்பிக்கையை உங்களின் விருப்பத்திற்குரியதாக ஆக்கினான். அதை உங்கள் உள்ளங்களுக்கு அழகாக்கி வைத்தான். இறை மறுப்பையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாக ஆக்கினான். இத்தகையோரே நேர்வழி பெற்றவர்கள்.
8. (இது) அல்லாஹ்விடமிருந்து பெற்ற சிறப்பும் அருளுமாகும். அல்லாஹ் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.
9. இறைநம்பிக்கை கொண்டவர்களில் இரு தரப்பினர் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவர்களில் ஒரு தரப்பினர் மற்றவர்களிடம் வரம்பு மீறினால், வரம்பு மீறியோர் அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம் மீண்டு வரும்வரை அவர்களுடன் சண்டையிடுங்கள்! அவர்கள் திரும்பிவிட்டால் அவர்களிடையே நடுநிலையுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதியை நிலைநாட்டுங்கள்! நீதியாளர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.490
10. இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே! எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! இதனால் நீங்கள் அருள் வழங்கப்படுவீர்கள்.
11. இறைநம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம், மற்றொரு சமுதாயத்தை ஏளனம் செய்ய வேண்டாம். அவர்கள், இவர்களைவிடச் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும், மற்றப் பெண்களை ஏளனம் செய்ய வேண்டாம். அவர்கள் இவர்களைவிடச் சிறந்தோராக இருக்கலாம். உங்களுக்குள் (ஒருவரையொருவர்) குறை கூறிக் கொள்ளாதீர்கள். (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள். இறைநம்பிக்கைக்குப்பின் தீய பெயர்களைச் சூட்டுவது மிகக் கெட்டது. யார் பாவ மன்னிப்புத் தேடவில்லையோ அவர்களே அநியாயக்கார்கள்.491
12. இறைநம்பிக்கை கொண்டோரே! சந்தேகம் கொள்வதில் அதிகமானவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! சில சந்தேகங்கள் பாவமானவையாகும். (குறைகளைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் சிலர், சிலரைப் பற்றிப் புறம் பேசாதீர்கள். இறந்துவிட்ட தனது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட உங்களில் எவரும் விரும்புவாரா? நீங்கள் அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.492
13. மனிதர்களே! ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே உங்களைப் படைத்துள்ளோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காகவே உங்களைக் கிளைகளாகவும், குலங்களாவும் ஆக்கினோம். உங்களில் இறையச்சம் மிக்கவரே அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவர் ஆவார். அல்லாஹ்வே நன்கறிந்தவன்; எல்லாம் தெரிந்தவன்.493
14. (நபியே!) “இறைநம்பிக்கை கொண்டோம்” எனக் கிராமவாசிகள் கூறுகின்றனர். “நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. மாறாக ‘நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம்’ என்று கூறுங்கள். உங்கள் உள்ளங்களில் இறைநம்பிக்கை நுழையவே இல்லை. நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டால் உங்கள் நற்செயல்களில் எதையும் உங்களுக்குக் குறைத்துவிட மாட்டான்” என்று கூறுவீராக! அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.494
15. அல்லாஹ்மீதும், அவனது தூதர்மீதும் நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித ஐயமும் கொள்ளாமல் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரே இறைநம்பிக்கையாளர்கள். அவர்களே உண்மையாளர்கள்.
16. “வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிந்தவனாக இருக்க, நீங்கள் அவனுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிறீர்களா?” என்று கேட்பீராக! ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவன்.
17. (நபியே!) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை உமக்குச் செய்த உதவியாகக் கருதுகின்றனர். “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை எனக்குச் செய்த உதவியாகக் கருதாதீர்கள்! மாறாக, இறைநம்பிக்கை கொள்வதற்காக உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டியதன் மூலம் அவனே உங்களுக்கு உதவியுள்ளான். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதை அறிந்து கொள்வீர்கள்)” எனக் கூறுவீராக!
18. அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிகிறான். நீங்கள் செய்பவற்றையும் அல்லாஹ் பார்க்கின்றான்.