அல்ஹிஜ்ர் – ஹிஜ்ர் எனும் ஊர்

வசனங்களின் எண்ணிக்கை: 99

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…

1. அலிஃப், லாம், ரா. இவை வேதத்தின் வசனங்களும், தெளிவான குர்ஆனுமாகும்.
2. தாங்கள் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே என்று இறைமறுப்பாளர்கள் சில வேளைகளில் விரும்புவார்கள்.273
3. அவர்கள் உண்ணுமாறும், சுகம் அனுபவிக்குமாறும், பேராசை அவர்களின் கவனத்தைத் திருப்புமாறும் அவர்களை விட்டுவிடுவீராக! அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
4. நாம் எந்த ஊரையும் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட தவணையிலேயே தவிர அழிக்கவில்லை.
5. எந்த ஒரு சமுதாயமும் தமக்குரிய தவணைக்கு முந்தவும் செய்யாது; பிந்தவும் செய்யாது.
6, 7. “(வேத) அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான்! நீர் உண்மையாளராக இருந்தால் வானவர்களை எங்களிடம் கொண்டு வந்திருக்க வேண்டாமா?” என அவர்கள் கேட்கின்றனர்.
8. நாம் நியாயமான காரணத்திற்காகவே தவிர வானவர்களை இறக்குவதில்லை. (இறைமறுப்பாளர்களான) அவர்கள் அப்போது அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.
9. இந்த அறிவுரையை நாமே இறக்கியுள்ளோம்; நாமே இதைப் பாதுகாப்பவர்கள்.
10. (நபியே!) உமக்கு முன்னர் முந்தைய பல கூட்டத்தாருக்கும் தூதர்களை அனுப்பியுள்ளோம்.
11. அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரை அவர்கள் கேலி செய்வோராகவே இருந்தனர்.
12. இவ்வாறே குற்றவாளிகளின் உள்ளங்களில் இதைப் புகுத்துகிறோம்.
13. அவர்கள் இ(வ்வேதத்)தை நம்ப மாட்டார்கள். (தண்டிக்கப்பட்ட) முன்சென்றோரின் வழிமுறை சென்றுள்ளது.
14, 15. நாம் அவர்களுக்காக வானத்தில் ஒரு வாசலைத் திறந்து, அதில் அவர்கள் ஏறிக் கொண்டிருந்தாலும் “எங்கள் கண்கள்தான் மயக்கப்பட்டு விட்டன. இல்லை! நாங்கள் சூனியம் செய்யப்பட்ட கூட்டத்தினர்” என்றே கூறுவார்கள்.
16. நாமே வானில் நட்சத்திரங்களை ஏற்படுத்திப், பார்ப்போருக்காக அவற்றை அழகுபடுத்தினோம்.
17. விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் அவற்றைப் பாதுகாத்தோம்.274
18. எனினும், யார் மறைந்திருந்து செவியேற்கிறானோ அவனைப் பிரகாசமான தீப்பிழம்பு துரத்தும்.
19. பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளை நாட்டினோம். எடை நிர்ணயிக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் அதில் முளைக்கச் செய்தோம்.
20. அதில் உங்களுக்கும், நீங்கள் உணவளிக்காதோருக்கும் வாழ்வாதாரங்களை ஏற்படுத்தினோம்.
21. எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் கருவூலங்கள் நம்மிடம் இல்லாமலில்லை. குறிப்பிட்ட அளவின்படியே அதை இறக்கி வைக்கிறோம்.
22. கருக்கொண்ட காற்றுகளை நாமே அனுப்புகிறோம். பின்னர் வானிலிருந்து மழையைப் பொழிவித்து, அதை உங்களுக்குப் புகட்டுகிறோம். நீங்கள் அதை (மேகத்தில்) சேகரித்து வைப்போராக இல்லை.
23. நாமே உயிர்ப்பிக்கிறோம்; மரணிக்க வைக்கிறோம்; நாமே வாரிசாவோம்.
24. உங்களில் முன் சென்றோரையும் அறிந்துள்ளோம்; பின்வரக்கூடியவர்களையும் அறிந்துள்ளோம்.
25. அவர்களை உமது இறைவனே ஒன்றுதிரட்டுவான். அவன் நுண்ணறிவாளன்; நன்கறிந்தவன்.
26. மாற்றப்பட்ட கருப்புக் களிமண்ணால் மனிதனைப் படைத்தோம்
27. அதற்கு முன்னர், கடும் வெப்பமான நெருப்பால் ஜின்னைப் படைத்தோம்.
28, 29. “மாற்றப்பட்ட கருப்புக் களிமண்ணால் மனிதனைப் படைக்கப் போகிறேன். நான் அவரை முழுமைப்படுத்தி, என் உயிரை அவரில் ஊதுவேன். அப்போது நீங்கள் அவருக்குப் பணிந்து கட்டுப்படுங்கள்!” என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
30, 31. வானவர்கள் அனைவரும் சேர்ந்து பணிந்தனர். இப்லீஸைத் தவிர! அவன் பணிந்தோருடன் ஆவதற்கு மறுத்து விட்டான்.
32. “இப்லீஸே! பணிந்தோருடன் நீ ஆகாமலிருக்க உனக்கு என்ன ஆனது?” என்று (இறைவன்) கேட்டான்.
33. “மாற்றப்பட்ட கருப்புக் களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு நான் பணியப் போவதில்லை” என்று அவன் கூறினான்.
34, 35. “நீ இங்கிருந்து வெளியேறிவிடு! ஏனெனில் நீ விரட்டப்பட்டவன். உன்மீது தீர்ப்பு நாள்வரை சாபம் இருக்கிறது” என்று (இறைவன்) கூறினான்
36. “என் இறைவனே! அவர்கள் (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசமளிப்பாயாக” என்று (இப்லீஸ்) கேட்டான்.
37, 38. “நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக் கொண்ட நாள்வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்” என (இறைவன்) கூறினான்.
39, 40. “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டு விட்டதால், பூமியில் (தீயவற்றை) அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டுவேன். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட உன் அடியார்களைத் தவிர, அனைவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
41. “(தேர்ந்தெடுக்கப்பட்டோரின் வழியான) இதுவே என்னிடம் நேரான வழி” என்று (இறைவன்) கூறினான்.
42. என் அடியார்கள்மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை, உன்னைப் பின்பற்றும் வழிகேடர்களைத் தவிர!
43. அவர்கள் அனைவருக்கும் நரகமே வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
44. அதற்கு ஏழு வாசல்கள் உள்ளன. அவர்களில் ஒவ்வொரு வாசலுக்காகவும் பிரிக்கப்பட்ட ஒரு பகுதியினர் உள்ளனர்.
45. இறையச்சமுடையோர் சொர்க்கங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
46. “அமைதியுடன் அச்சமற்றோராக இதில் நுழையுங்கள்!” (என்று கூறப்படும்.)
47. அவர்களின் உள்ளங்களிலுள்ள குரோதத்தை அகற்றி விடுவோம். அவர்கள் சகோதரர்களாக, கட்டில்களில் ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு இருப்பார்கள்.
48. அவர்களுக்கு அங்கே எவ்வித சிரமமும் ஏற்படாது; அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவோரும் அல்ல!
49, 50. ‘நானே மன்னிப்பு மிக்கவன்; நிகரிலா அன்பாளன்’ என்பதையும், ‘எனது தண்டனையே துன்புறுத்தும் தண்டனை’ என்பதையும் என் அடியார்களிடம் அறிவிப்பீராக!
51. இப்ராஹீமின் விருந்தாளிகளைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக!
52. அவரிடம் அவர்கள் வந்தபோது ஸலாம் கூறினர். “உங்களை(க் கண்டு) நாங்கள் பயப்படுகிறோம்” என்று அவர் கூறினார்.
53. “பயப்படாதீர்! அறிவுள்ள ஆண் குழந்தையை உமக்கு நற்செய்தியாகக் கூறுகிறோம்” என அவர்கள் கூறினர்.
54. “நான் முதுமை அடைந்துவிட்ட நிலையிலா எனக்கு நற்செய்தி கூறுகிறீர்கள்? நீங்கள் எந்த அடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?” என அவர் கேட்டார்.
55. “உண்மையாகவே உமக்கு நற்செய்தி கூறியுள்ளோம். நீர் நிராசையடைந்தோரில் ஒருவராகி விடாதீர்!” என அவர்கள் கூறினர்.
56. “வழிகேடர்களைத் தவிர வேறு யார் தமது இறைவனின் அருளில் நிராசையடைவார்கள்?” என அவர் கூறினார்.
57. “தூதர்களே! உங்கள் விஷயமென்ன?” என்றும் கேட்டார்.
58, 59, 60. “குற்றம் புரியும் ஒரு கூட்டத்தாரிடம் (அவர்களை அழிப்பதற்காக) நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம். எனினும் லூத்தின் குடும்பத்தார் அனைவரையும் காப்பாற்றுவோம், அவரது மனைவியைத் தவிர! அவள் (வேதனையில்) தங்கி விடுவோரில் உள்ளவள் என்று தீர்மானித்து விட்டோம்” என அவர்கள் கூறினார்கள்.
61, 62. லூத்தின் குடும்பத்தாரிடம் அத்தூதர்கள் வந்தபோது, “நீங்கள் அறிமுகமில்லாத கூட்டமாக இருக்கிறீர்கள்!” என்று அவர் கூறினார்.
63, 64, 65. “அப்படியல்ல! அவர்கள் எதில் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தார்களோ அதை உம்மிடம் கொண்டு வந்துள்ளோம். உண்மையுடனே உம்மிடம் வந்துள்ளோம். நாங்கள் உண்மை கூறுவோரே! இரவின் ஒரு பகுதியில் உமது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு புறப்படுவீராக! அவர்களுக்குப் பின்னால் நீர் பின்தொடர்ந்து செல்வீராக! உங்களில் யாரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்! உங்களுக்கு ஆணையிடப்படும் இடத்திற்குச் செல்லுங்கள்!” என அவர்கள் கூறினர்.
66. அவரிடம், “இவர்கள் காலைப் பொழுதை அடையும்போது வேரறுக்கப்படுவார்கள்” என்ற இந்த முடிவைத் தெரிவித்தோம்.
67. அந்த ஊரார் மகிழ்ச்சியடைந்தவர்களாக வந்தனர்.
68, 69. “இவர்கள் என் விருந்தாளிகள். எனவே என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள்” என்று (லூத்) கூறினார்.
70. “உலகத்தார் விஷயத்தில் (தலையிட வேண்டாமென) உம்மை நாங்கள் தடுக்கவில்லையா?” என்று அவர்கள் கேட்டனர்.
71. “நீங்கள் (திருமணம்) செய்வோராக இருந்தால் இதோ எனது புதல்வியர் உள்ளனர்” என்று (லூத்) கூறினார்.
72. (நபியே!) உமது ஆயுளின்மீது சத்தியமாக! அவர்கள் தமது மதிமயக்கத்தில் தடுமாறிக் கொண்டிருந்தனர்.
73. சூரியன் உதிக்கும் நேரத்தை அவர்கள் அடைந்தபோது, அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது.
74. அவ்வூரின் மேற்புறத்தைக் கீழ்ப்புறமாக ஆக்கினோம். சுடப்பட்ட கற்களை அவர்கள்மீது பொழிந்தோம்.
75. ஆய்வு செய்வோருக்கு இதில் சான்றுகள் உள்ளன.
76. அவ்வூர் (நீங்கள் செல்லும்) முக்கிய சாலையில் தான் இருக்கிறது.
77. இறைநம்பிக்கையாளர்களுக்கு இதில் படிப்பினை உள்ளது.
78. (ஷுஐபின் சமுதாயமான) தோப்புவாசிகள் அநியாயம் செய்வோராக இருந்தனர்.
79. எனவே அவர்களைத் தண்டித்தோம். இவ்விரு ஊர்களும் வெளிப்படையான வழியிலேயே இருக்கின்றன.
80. (ஸமூது சமுதாயமான) ஹிஜ்ர்வாசிகள் தூதர்களைப் பொய்யரெனக் கூறினர்.275
81. அவர்களுக்கு நமது சான்றுகளைக் கொடுத்தோம். ஆனால் அவர்கள் அவற்றைப் புறக்கணிப்போராக இருந்தனர்.
82. அவர்கள் அச்சமற்றோராக இருந்த நிலையில், மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டனர்.
83. அவர்கள் காலைப் பொழுதை அடைந்தபோது அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது.
84. அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த எதுவும் அவர்களைக் காப்பாற்றவில்லை.
85. வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் நியாயமான காரணத்துடனே படைத்துள்ளோம். உலகம் அழியும் நேரம் வரக்கூடியதே! எனவே அழகிய முறையில் முற்றிலும் புறக்கணிப்பீராக!
86. உமது இறைவன், அவனே மாபெரும் படைப்பாளன்; நன்கறிந்தவன்.
87. (நபியே!) திரும்பத் திரும்ப ஓதப்படுகின்ற ஏழு வசனங்களையும், மகத்தான குர்ஆனையும் உமக்கு வழங்கியுள்ளோம்.276
88. அவர்களில் பல பிரிவினருக்கும் நாம் வழங்கியுள்ள வாழ்வாதாரங்களின் பக்கம் உமது கண்களை நீட்டாதீர்! அவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்! இறைநம்பிக்கையாளர்களிடம் (பணிவு எனும்) உமது சிறகைத் தாழ்த்துவீராக!
89. “நான் பகிரங்கமாக எச்சரிப்பவன்தான்!” என்று (நபியே) கூறுவீராக!277
90. (வேதத்தைப்) பிரித்து விட்டவர்கள்மீது நாம் இறக்கியது போன்றே (இவர்கள்மீதும் வேதனையை இறக்குவோம்).
91. அவர்கள் வேதத்தைப் பல கூறுகளாக்கி விட்டனர்.278
92, 93. உமது இறைவன்மீது சத்தியமாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி, அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்.
94. உமக்கு ஏவப்பட்டதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைப்பீராக! இணைவைப்போரைப் புறக்கணிப்பீராக!
95. கேலி செய்வோர் விஷயத்தில் உமக்கு நாமே போதுமானவர்கள்.
96. அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை ஏற்படுத்துகிறார்கள். (அதன் விளைவை) அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
97. அவர்களின் கூற்றால் உமது உள்ளம் நெருக்கடிக்குள்ளாவதை நாம் அறிவோம்.
98. எனவே, உமது இறைவனின் புகழைக் கொண்டு போற்றுவீராக! ஸஜ்தா செய்வோரில் ஆகிவிடுவீராக!
99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!279