அத்தியாயம் : 57
வசனங்களின் எண்ணிக்கை: 29
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. வானங்கள், பூமியில் உள்ளவை அல்லாஹ்வைப் போற்றுகின்றன. அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
2. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்க வைக்கிறான். ஒவ்வொரு பொருளின்மீதும் அவன் ஆற்றலுடையவன்.
3. அவனே ஆரம்பமானவன்; இறுதியானவன்; வெளிப்படையானவன்; மறைவானவன். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.534
4. அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின்மீது அமர்ந்தான். பூமிக்குள் நுழைவனவற்றையும், அதிலிருந்து வெளிப்படுவனவற்றையும், வானிலிருந்து இறங்குவதையும், அதில் ஏறிச்செல்பவைகளையும் அவன் அறிவான். நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடனே இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
5. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அல்லாஹ்விடமே அனைத்துக் காரியங்களும் கொண்டு வரப்படும்.
6. அவனே இரவைப் பகலில் நுழைக்கிறான்; பகலை இரவில் நுழைக்கிறான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் நன்கறிந்தவன்.
7. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புங்கள்! அவன் உங்களை உரிமையாளர்களாக ஆக்கியுள்ளவற்றிலிருந்து செலவிடுங்கள்! உங்களில் இறைநம்பிக்கை கொண்டு செலவிடுவோருக்குப் பெரும் கூலி இருக்கிறது.
8. உங்கள் இறைவனை நம்புமாறு உங்களைத் தூதர் அழைத்துக் கொண்டிருக்கும் நிலையிலும், உங்களிடம் அவன் வாக்குறுதி வாங்கியிருக்கும் நிலையிலும், நீங்கள் அல்லாஹ்வை நம்பாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் இறைநம்பிக்கை கொண்டோராக இருந்தால் (அல்லாஹ்வையே முழுமையாக நம்புங்கள்.)
9. அவன் உங்களை இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு செல்வதற்காகத் தனது அடியார்மீது தெளிவான வசனங்களை அருள்கிறான். உங்கள்மீது அல்லாஹ் கருணையுள்ளவன்; நிகரிலா அன்பாளன்.
10. வானங்கள், பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாக இருக்கும் நிலையில், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? உங்களில் யார் (மக்கா) வெற்றிக்கு முன் செலவு செய்து, போரிட்டார்களோ அவர்களுக்கு (எவரும்) சமமாக முடியாது. அதற்குப்பின் செலவு செய்து, போரிட்டவர்களைவிட அவர்களே மிகப் பெருந் தகுதியுடையவர்கள். எனினும் இவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.535
11. அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் கொடுப்பவர் யார்? அதை அவருக்கு அவன் பன்மடங்காகப் பெருகச் செய்கிறான். அவருக்குக் கண்ணியமான கூலியும் இருக்கிறது.
12. (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் நீர் காணும் நாளில், அவர்களின் ஒளி அவர்களுக்கு முன்புறத்திலும், வலதுபுறங்களிலும் விரைந்து கொண்டிருக்கும். “இன்று உங்களுக்குரிய நற்செய்தி சொர்க்கங்களாகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி” (என்று கூறப்படும்.)
13. அந்நாளில் நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் “எங்களைப் பாருங்கள்! உங்களின் ஒளியிலிருந்து நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்” என்று இறைநம்பிக்கை கொண்டோரிடம் கோருவார்கள். அதற்கு “நீங்கள் உங்கள் பின்புறமாகத் திரும்பிச் சென்று ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்” என்று கூறப்படும். அப்போது அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும். அதற்கு வாசலும் இருக்கும். அதன் உட்பகுதியில் அருளும், அதன் வெளிப்பகுதியில் வேதனையும் இருக்கும்.
14. “(உலகத்தில்) நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என இறைநம்பிக்கை கொண்டோரை அழைத்து (நயவஞ்சகர்கள்) கேட்பார்கள். “உண்மைதான்! எனினும், உங்களையே நீங்கள் வழிகெடுத்துக் கொண்டீர்கள்; (எங்களுக்குக் கேடு நேர்வதை) எதிர் பார்த்தீர்கள்; சந்தேகப்பட்டீர்கள். அல்லாஹ்வின் ஆணை வரும்வரை பேராசைகள் உங்களை ஏமாற்றி விட்டன. மேலும், ஏமாற்றுபவ(னான ஷைத்தா)னும் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட்டான்” என்று (இறைநம்பிக்கையாளர்கள்) பதிலளிப்பார்கள்.
15. இன்று உங்களிடமிருந்தோ, இறைமறுப்பாளர்களிடமிருந்தோ எந்த ஈட்டுத் தொகையும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நரகமே உங்களின் இருப்பிடம். அதுவே உங்களுக்கு மிகத் தகுதியானது. அது, சேருமிடத்தில் கெட்டது.
16. அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காகவும், (அவனிடமிருந்து) இறங்கிய உண்மைக்காகவும், இறைநம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் பணியும் நேரம் இன்னும் வரவில்லையா? அவர்கள், தமக்கு முன் வேதம் வழங்கப்பட்டோரைப் போன்று ஆகிவிட வேண்டாம். அவர்களுக்கு நீண்ட காலமாகி விட்டதால் அவர்களின் உள்ளங்கள் கடினமாகி விட்டன. அவர்களில் பெரும்பாலோர் பாவிகளே!536
17. பூமி இறந்த பின்னர் அல்லாஹ்வே அதை உயிர்ப்பிக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் சிந்திப்பதற்காக உங்களுக்குச் சான்றுகளைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.
18. தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் கொடுப்போருக்கும் அது பன்மடங்காகப் பெருக்கப்படும். அவர்களுக்குக் கண்ணியமான கூலியும் உண்டு.
19. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பியவர்களே தமது இறைவனிடம் உண்மையாளர்களும், சாட்சியாளர்களும் ஆவர். அவர்களுக்குரிய கூலியும், ஒளியும் அவர்களுக்கு உண்டு. யார் (நம்மை) மறுத்து, நமது வசனங்களைப் பொய்யெனக் கூறினார்களோ அவர்களே நரகவாசிகள்.
20. அறிந்து கொள்ளுங்கள்! இவ்வுலக வாழ்க்கை என்பது விளையாட்டும், வீணும், அலங்காரமும், உங்களுக்கிடையே பெருமைபேசிக் கொள்வதும், செல்வங்களையும், பிள்ளைகளையும் அதிகரித்துக் கொள்வதும்தான். (இதற்கு எடுத்துக்காட்டு) ஒரு மழையைப் போன்றாகும். அதன் (மூலம்) பயிர்கள் நன்கு வளர்ந்து விவசாயிகளைக் கவர்ந்தது. பின்னர், அது உலர்ந்து, மஞ்சள் நிறமாவதைக் காண்கிறீர். பின்னர் அது சருகாகி விடுகிறது. மறுமையில் (இறைமறுப்பாளருக்குக்) கடும் தண்டனையும், (இறைநம்பிக்கையாளருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், பொருத்தமும் கிடைக்கிறது. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் இன்பத்தைத் தவிர வேறில்லை.
21. உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், சொர்க்கத்தை நோக்கியும் முந்திச் செல்லுங்கள்! அதன் அளவு வானம், பூமியைப் போல் விரிந்து பரந்தது. அது அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பியோருக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ளது. இது அல்லாஹ்வின் அருளாகும். அவன், தான் நாடியோருக்கு அதை வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
22. இப்பூமியில் அல்லது உங்கள்மீது எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் நாம் அதைப் படைப்பதற்கு முன்பே அது மூலப் பதிவேட்டில் இல்லாமல் இல்லை. இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகும்.537
23. இ(வ்வாறு விதியை ஏற்படுத்தியிருப்ப)தற்குக் காரணம், உங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்காக நீங்கள் கவலைப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்குக் கொடுத்ததில் நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவுமே ஆகும். அகந்தையும், கர்வமும் கொண்ட எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
24. அவர்கள் எத்தகையோரெனில், தாமும் கஞ்சத்தனம் செய்து, மக்களையும் கஞ்சத்தனம் செய்யத் தூண்டுகிறார்கள். யாரேனும் புறக்கணித்தால் அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.
25. நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பி வைத்தோம். மனிதர்கள் நீதியை நிலைநாட்டுவதற்காக அ(த்தூது)வர்களுடன் வேதத்தையும், தராசையும் இறக்கினோம். இரும்பையும் நாமே இறக்கினோம். அதில் கடும் வலிமையும், மனிதர்களுக்குப் பயன்களும் உள்ளன. மேலும், தனக்கும் தனது தூதர்களுக்கும் மறைவாக உதவி செய்வோர் யார் என்பதை அல்லாஹ் வெளிப்படுத்துவதற்காகவே (வேதத்தையும் தராசையும் இறக்கினான்.) அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன்.
26. நூஹையும், இப்ராஹீமையும் நாம் தூதர்களாக அனுப்பி வைத்தோம். அவ்விருவரின் தலைமுறையில் நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம். அவர்(களின் தலைமுறை)களில் நேர்வழி நடப்போரும் உள்ளனர்; எனினும் அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே உள்ளனர்.
27. பின்னர், அவர்களின் அடிச்சுவடுகளில் நம் தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பினோம். மர்யமின் மகன் ஈஸாவையும் பின்தொடரச் செய்தோம். அவருக்கு இன்ஜீலையும் வழங்கினோம். அவரைப் பின்பற்றியவர்களின் உள்ளங்களில் கழிவிரக்கத்தையும், கருணையையும் ஏற்படுத்தினோம். அவர்களாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதை அவர்கள்மீது நாம் விதியாக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடுவதையே (விதியாக்கினோம்.) அவர்கள் அ(த்துறவறத்)தையும் கடைப்பிடிக்க வேண்டிய முறைப்படி கடைப்பிடிக்கவில்லை. எனவே, அவர்களில் இறைநம்பிக்கை கொண்டோருக்கு, அவர்களுக்கான கூலியை வழங்கினோம். எனினும் அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே உள்ளனர்.
28. இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! அவனது தூதரையும் நம்புங்கள்! அவன் தனது அருளை உங்களுக்கு இருமடங்காக வழங்குவான். உங்களுக்கு ஒளியையும் ஏற்படுத்துவான். அந்த ஒளியில் நீங்கள் நடப்பீர்கள். மேலும் உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.538
29. அல்லாஹ்வின் அருளில் எதன்மீதும் தமக்கு ஆற்றல் இல்லை என்பதையும், அல்லாஹ்வின் கையிலேயே அருள் உள்ளது என்பதையும், தான் நாடியோருக்கு அதை வழங்குகிறான் என்பதையும் வேதமுடையோர் அறிய வேண்டும் என்பதற்காகவே (இதை அறிவிக்கிறான்.) அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.