அல்ஹஷ்ர் – படை திரட்டல்

அத்தியாயம் : 59

வசனங்களின் எண்ணிக்கை: 24

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. வானங்கள், பூமியில் உள்ளவை அல்லாஹ்வைப் போற்றுகின்றன. அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
2. வேதமுடையோரில் இறைமறுப்பாளர்களாக இருந்தோரை அவர்களின் வீடுகளிலிருந்து முதல் (படை) திரட்டலில் அவனே வெளியேற்றினான். அவர்கள் வெளியேறுவார்கள் என நீங்கள் நினைக்கவில்லை. அல்லாஹ்விடமிருந்து தமது கோட்டைகள் தம்மைப் பாதுகாக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். அவர்கள் நினைத்துப் பார்க்காத இடத்திலிருந்து அவர்களிடம் அல்லாஹ் வந்தான். அவர்களின் உள்ளங்களில் திகிலை ஏற்படுத்தினான். அவர்கள் தமது கைகளாலும், இறைநம்பிக்கை கொண்டோரின் கைகள் மூலமாகவும் தமது வீடுகளை அழித்துக் கொண்டனர். அறிவுடையோரே! படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள்!
3. நாடு கடத்துவதை அவர்கள்மீது அல்லாஹ் விதித்திருக்கா விட்டால், இவ்வுலகத்திலேயே அவர்களைத் தண்டித்திருப்பான். மேலும் அவர்களுக்கு மறுமையில் நரக வேதனையும் உண்டு.
4. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அவர்கள் மாறுசெய்தனர் என்பதே இதற்குக் காரணம். யாரேனும் அல்லாஹ்வுக்கு மாறு செய்தால் அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் ஆவான்.
5. நீங்கள் (போர்க்களத்தில் எதிரிகளின்) பேரீச்சை மரங்களை வெட்டியது அல்லது நீங்கள் அவற்றை (வெட்டாமல்) வேர்களில் நிற்குமாறு விட்டுவிட்டது அல்லாஹ்வின் நாட்டப்படியும், பாவிகளை அவன் இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவும்தான் நடந்தது.546
6. அவர்களிடமிருந்து அல்லாஹ் தனது தூதருக்கு எதைப் போர்க்களச் செல்வமாகக் கொடுத்தானோ அ(தைக் கைப்பற்றுவ)தற்காக நீங்கள் குதிரையையோ, ஒட்டகத்தையோ ஓட்டிச் செல்லவில்லை. மாறாக, அல்லாஹ்வே தான் நாடியோர்மீது தனது தூதர்களை ஆதிக்கம் செலுத்த வைக்கிறான். ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.547
7. இந்த ஊர்மக்களிடமிருந்து தனது தூதருக்கு அல்லாஹ் வழங்கிய போர்ச்செல்வங்கள் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். உங்களில் செல்வந்தர்களிடையே மட்டும் செல்வம் சுற்றி வரக்கூடியதாக இருக்கக் கூடாது என்பதற்காகவே (இவ்வாறு ஏவுகிறான்.) தூதர் உங்களுக்குக் கொடுத்ததை எடுத்துக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்.548
8. (அச்செல்வம்) தமது வீடுகளையும், உடைமைகளையும் விட்டு வெளியேற்றப்பட்டு ஹிஜ்ரத் செய்து வந்த ஏழைகளுக்கும் உரியதாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும், பொருத்தத்தையும் தேடுகின்றனர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் உதவி புரிகின்றனர். அவர்கள்தான் உண்மையாளர்கள்.549
9. அவர்களுக்கு முன்பே இறைநம்பிக்கையுடன், இவ்வூரில் (மதீனாவில்) வசிப்பவர்கள் தம்மிடம் ஹிஜ்ரத் செய்து வருவோரை நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது பற்றித் தமது உள்ளங்களில் சிறிதும் பொறாமை கொள்ள மாட்டார்கள். அவர்கள் தமக்குத் தேவையிருந்தபோதும் தம்மைவிட (ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்கு) முன்னுரிமை கொடுக்கின்றனர்.550 தம்மிடமுள்ள கஞ்சத்தனத்தை விட்டும் யார் பாதுகாக்கப்படுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.551
10. அவர்களுக்குப் பின்வந்தோர் “எங்கள் இறைவனே! எங்களையும், இறைநம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திக் கொண்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இறைநம்பிக்கை கொண்டோர்மீது எங்கள் உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே! எங்கள் இறைவனே! நீயே கருணை உள்ளவன்; நிகரிலா அன்பாளன்” என்று இறைஞ்சுகின்றனர்.
11. (நபியே!) நயவஞ்கர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் வேதமுடையோரில் இறைமறுப்பாளர்களாக இருக்கும் தமது சகோதரர்களிடம் “நீங்கள் வெளியேற்றப்பட்டால் நாங்களும் உங்களுடன் வெளியேறி விடுவோம். உங்கள் விஷயத்தில் யாருக்கும் ஒருபோதும் கட்டுப்பட மாட்டோம். உங்கள்மீது போர் தொடுக்கப்பட்டால் உங்களுக்கு உதவி செய்வோம்” எனக் கூறுகின்றனர். அவர்கள் பொய்யர்களே என அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
12. அவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுடன் இவர்கள் வெளியேற மாட்டார்கள். அவர்கள்மீது போர் தொடுக்கப்பட்டால் அவர்களுக்கு இவர்கள் உதவி செய்யவும் மாட்டார்கள். (ஒருவேளை) அவர்களுக்கு உதவி செய்தாலும் புறமுதுகு காட்டி ஓடி விடுவார்கள். பின்னர் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
13. அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ்வைவிட உங்களைப் பற்றிய பயம்தான் கடுமையாக உள்ளது. அவர்கள் விளங்கிக் கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.
14. பாதுகாப்பு அரண்களைக் கொண்ட ஊர்களிலிருந்தோ அல்லது மதில்களுக்கு அப்பாலிருந்தோ தவிர அவர்கள் ஒன்றுதிரண்டு உங்களுடன் போரிட மாட்டார்கள். அவர்கள், தமக்கிடையே கொண்டிருக்கும் விரோதம் மிகக் கடுமையானது. அவர்கள் ஒன்றுபட்டிருப்பதாக எண்ணுகிறீர். ஆனால் அவர்களின் மனங்கள் வேறுபட்டிருக்கின்றன. அவர்கள் சிந்திக்காத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.
15. இவர்களுக்குச் சிறிது காலத்திற்குமுன் தமது செயலுக்குரிய விளைவை அனுபவித்தவர்களைப் போல இவர்கள் உள்ளனர். இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
16. (இவர்களின் தன்மை) ஷைத்தானின் தன்மையைப் போன்றதாகும். அவன் மனிதனிடம், “நீ மறுத்துவிடு!” என்று கூறிய சமயத்தில் (அதைக் கேட்டு) அவன் மறுத்தபோது “நான் உன்னை விட்டும் விலகிக் கொண்டேன். அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” என்று (ஷைத்தான்) கூறினான்.
17. எனவே, அவ்விருவரும் நரகத்தில் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள் என்பதே அவர்களின் முடிவாகி விட்டது. அநியாயக்காரர்களுக்கு இதுவே கூலியாகும்.
18. இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! ஒவ்வொருவரும் நாளை(ய மறுமை)க்காகத் தாம் எதை முற்படுத்தியுள்ளோம் என்பதை (எண்ணி)ப் பார்க்கட்டும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.552
19. அல்லாஹ்வை மறந்தோரைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் தம்மையே மறந்துவிடும்படிச் செய்து விட்டான். அவர்களே பாவிகள்.
20. நரகவாசிகளும், சொர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள். சொர்க்கவாசிகளே வெற்றியாளர்கள்.
21. (நபியே!) இந்தக் குர்ஆனை நாம் மலையின்மீது அருளியிருந்தால், அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து, பிளந்துவிடக் கூடியதைப் பார்த்திருப்பீர்! மனிதர்கள் சிந்திப்பதற்காகவே இந்த எடுத்துக்காட்டுகளை அவர்களுக்கு எடுத்துரைக்கிறோம்.
22. அவன்தான் அல்லாஹ்! அவனைத் தவிர வேறு எந்தக் கடவுளுமில்லை. அவன் மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவன். அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்.553
23. அவன்தான் அல்லாஹ்! அவனைத் தவிர வேறுஎந்தக் கடவுளுமில்லை. (அவனே) அரசன், தூய்மையானவன், அமைதியளிப்பவன், அடைக்கலமளிப்பவன், கண்காணிப்பவன், மிகைத்தவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரியவன். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.
24. அவன்தான் அல்லாஹ்! (அவன்) படைப்பாளன்; தோற்றுவிப்பவன்; உருவம் கொடுப்பவன். அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனையே போற்றுகின்றன. அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.