அல்ஹாக்கா – உறுதியாக நிகழக்கூடியது

அத்தியாயம் : 69

வசனங்களின் எண்ணிக்கை: 52

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. உறுதியாக நிகழக் கூடியது.
2. உறுதியாக நிகழக் கூடியது என்றால் என்ன?
3. உறுதியாக நிகழக் கூடியது என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
4. திடுக்கிடச் செய்யும் அந்நிகழ்வை ஸமூது சமுதாயமும், ஆது சமுதாயமும் பொய்யெனக் கூறினர்.
5. ஸமூது சமுதாயத்தினர் கடும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
6. ஆது சமுதாயத்தினர் வேகமாக வீசும் கடும் குளிர் காற்றால் அழிக்கப்பட்டனர்.585
7. அதனைத் தொடர்ச்சியாக ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் அவர்கள்மீது வீசச் செய்தான். அக்கூட்டத்தினர் அடியோடு பிடுங்கப்பட்ட பேரீச்சை மரங்களைப் போல் அங்கு வீழ்ந்து கிடப்பதை நீர் காண்பீர்.
8. அவர்களில் யாரேனும் எஞ்சியிருப்பதைக் காண்கிறீரா?
9. ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்பிருந்தோரும், தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊராரும் பாவத்தைச் செய்து வந்தனர்.
10. தமது இறைவனின் தூதருக்கு அவர்கள் மாறு செய்தனர். எனவே அவர்களைக் கடும் பிடியாகப் பிடித்தான்.
11. தண்ணீர் வரம்புகடந்து வந்தபோது உங்(கள் முன்னோர்)களை நாமே கப்பலில் சுமந்து சென்றோம்.
12. அதை உங்களுக்குப் படிப்பினையாக ஆக்குவதற்காகவும், செவி மடுக்கும் காதுகள் அதை(க் கேட்டு) நன்கு புரிந்து கொள்வதற்காகவும் (இதைக் கூறுகிறோம்.)
13, 14, 15. ஒரு தடவை ஸூர் ஊதப்பட்டு, பூமியும், மலைகளும் பெயர்க்கப்பட்டு, ஒரே அடியில் அவ்விரண்டும் தூள்தூளாக்கப்படும் போது, அன்றுதான் (உலகம் அழியும்) நிகழ்வு நடைபெறும்.
16. வானம் பிளந்து, அந்நாளில் அது பலவீனமாகி விடும்.
17. வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அன்று (அவ்வானவர்களில்) எட்டுப் பேர் தமக்கு மேல் உமது இறைவனின் அர்ஷைச் சுமந்து கொண்டிருப்பார்கள்.586
18. அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) நிறுத்தப்படுவீர்கள். உங்களுடைய எந்த ரகசியமும் மறைந்து விடாது.
19, 20. யாருடைய ஏடு அவரது வலது கரத்தில் கொடுக்கப்படுகிறதோ, அவர் “வாருங்கள்! எனது ஏட்டைப் படியுங்கள்! எனது கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என நம்பியிருந்தேன்” என்று அவர் கூறுவார்.587
21, 22. அவர் உயர்ந்த சொர்க்கத்தில் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார்.
23. அதன் பழங்கள் அருகில் இருக்கும்.
24. கடந்து சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவற்றின் காரணமாக மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்!
25, 26, 27, 28, 29. யாருடைய ஏடு, அவனது இடதுகரத்தில் கொடுக்கப்படுகிறதோ அவன், “எனது ஏடு கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! எனது கேள்வி கணக்கு என்ன என்பதைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லையே! (மீண்டும் உயிர்ப்பிக்கப்படாமல்) மரணமே இறுதி முடிவாக ஆகியிருக்கக் கூடாதா? எனது செல்வம் எனக்குப் பயனளிக்கவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே!” என்று கூறுவான்.
30. அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கிடுங்கள்!
31. பின்னர் அவனை நரகத்தில் தள்ளுங்கள்!
32. பின்னர் எழுபது முழம் நீளத்தைக் கொண்ட சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்!
33. மகத்துவமிக்க அல்லாஹ்வை அவன் நம்பாதவனாக இருந்தான்.
34. ஏழைகளுக்கு உணவளிக்குமாறு அவன் தூண்டவில்லை.
35. இன்று அவனுக்கு இங்கு நண்பன் யாருமில்லை.
36. சீழைத் தவிர வேறு எந்த உணவும் இல்லை.
37. பாவிகளைத் தவிர வேறெவரும் அதை சாப்பிட மாட்டார்கள்.
38, 39. நீங்கள் பார்ப்பவற்றின்மீதும், பார்க்காதவற்றின்மீதும் சத்தியம் செய்கிறேன்.
40. இது கண்ணியமிக்க தூதரின் கூற்றாகும்.
41. இது கவிஞரின் கூற்றல்ல! நீங்கள் குறைவாகவே நம்புகிறீர்கள்.
42. இது குறிசொல்பவனின் கூற்றுமல்ல! நீங்கள் குறைவாகவே சிந்திக்கிறீர்கள்.
43. (இது) அகிலங்களின் இறைவனால் அருளப்பட்டதாகும்.
44, 45, 46, 47. இவர் சில கூற்றுகளை நம்மீது இட்டுக்கட்டிக் கூறியிருந்தால் வலது கரத்தால் அவரைப் பிடித்து, அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம். அவரை விட்டும் (அதைத்) தடுப்போர் உங்களில் எவருமில்லை.
48. இறையச்சமுடையோருக்கு இது அறிவுரையாகும்.
49. உங்களில் (இதைப்) பொய்யெனக் கூறுவோரும் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
50. இது, இறைமறுப்பாளர்களுக்குப் பெரும் கவலையாகவே இருக்கும்.
51. இது உறுதியான உண்மையாகும்.
52. எனவே மகத்துவமிக்க உமது இறைவனின் பெயரைப் போற்றுவீராக!